அண்ணாமலையால் தமிழக பாஜக வளர்ந்துள்ளதா…?

-சாவித்திரி கண்ணன்

அண்ணாமலையால் பாஜக வளர்ந்துள்ளதாகச் சொல்லப்படுவது, அண்ணாமலை திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்பது, அண்ணாமலை இல்லாவிட்டால் பாஜக பலவீனமாகிவிடும் என நம்பப்படுவது…இவை குறித்த ஒரு பாரபட்சமற்ற அலசல்;

அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அகற்றப்படலாம் என்ற பேச்சு தொடர்ந்து வலுப் பெற்று வருகிறது.

அதிமுகவுடன் கூட்டணி கொள்வதற்கு அண்ணாமலை தடையாக  பார்க்கப்படுகிறார் என்பதால் அவர் மாற்றப்படலாம் என்கிறார்கள் சிலர்.

இல்லை, கட்சித் தலைவர் பதவியை துஷ்பிரயோகம் செய்து பலமாக சம்பாதித்து வருகிறார்..என தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களே அவர் மீது மேலிடத்திற்கு புகார் அனுப்பி உள்ளனர்.. என பாஜக கட்சி வட்டாரத்திலேயே சொல்லப்படுகிறது.

அண்ணாமலை தமிழக பாஜக தலைவரான பிறகு தான் தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளது. அண்ணாமலைக்கு ஈடாக வேறெவரும் கட்சியில் இல்லை. அவரை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டால் கட்சி பலவீனமாகிவிடும். அது பாஜகவின் தற்கொலைக்கு ஒப்பாகும் என அண்ணாமலை ஆதரவாளர்கள் பேசுகிறார்கள்!

அண்ணாமலை தொடர்ந்து மக்கள் கவனத்தை கவரும் வண்ணம் அதிரடியாக பேசுகிறார். இந்த வகையில் தமிழக பாஜக தலைவர் என்ற தன்மையில் அவர் மக்களிடையே ஒரு பேசுபடு பொருளாகி உள்ளார் என்பதை மறுக்க முடியாது. ஆனால், இதன் மூலம் பாஜக வளர்ச்சி அடைந்திருப்பது உண்மையாயின், அண்ணாமலை இல்லையென்றாலும் அந்தக் கட்சி தொடர்ந்து முன்னேற வேண்டும். ஆனால், அண்ணாமலை இல்லாவிட்டால் அது கட்சிக்கு பலவீனம். கட்சியின் தற்கொலைக்கு ஒப்பாகும் என்றால், அண்ணாமலையால் கட்சி வளரவில்லை. அண்ணாமலை மட்டுமே வளர்ந்துள்ளார் என்பதே உண்மையாகும்.  பாஜகவின் நட்பு சக்தியாக இருந்த அதிமுகவை வலிந்து எதிரியாக மாற்றியுள்ளது தான் அண்ணாமலையின் சாதனையாகும்.

அண்ணாமலை கட்சிக்குள் வந்த பிறகு எத்தனையெத்தனை முக்கிய தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டனர், எத்தனையெத்தனை பேர் கட்சியில் இருந்து வெளியேறினர்..என்பதை கவனிக்க வேண்டும்.

எத்தனை இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்டத் தலைவர்களை அண்ணாமலை வளர்த்து எடுத்துள்ளார்…! எத்தனை இடங்களில் புதிய கட்சிக் கிளை தொடங்கப்பட்டு கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது..? எத்தனை தளபதிகளை அவர் அடையாளம் காட்டியுள்ளார்..? என்ற கேள்விகள் எதற்கும் பாசிடிவ்வான பதில்கள் இல்லை…எந்த ஒரு கட்சியும் வளர்ந்துள்ளது என்பதற்கு இதுவே அளவுகோலாகும்.

தன்னை நோக்கிய ஒரு ஈர்ப்பை தான் அண்ணாமலை சாத்தியப்படுத்தி உள்ளார். தன்னுடைய சர்ச்சை பேச்சால் அவர் பிரபலமாகிக் கொண்டே வருகிறார் என்பது சந்தேகமேயில்லை. அதே சமயம் அவர் பேசுகின்ற இடங்களுக்கு பணம் தந்தே ஆட்கள் திரட்டி கூட்டி வரப்படுகிறார்கள்.. என்ற யதார்த்தமே, அவர் தலைவராகவில்லை என்பதற்கு அத்தாட்சியாகும்.

அண்ணாமலை கட்சித் தலைவரான பிறகு தான் தமிழகத்தின் பிரபல ரவுடிகள் பலரை பாஜகவில் சேர்த்தார்! இப்படி குற்றப் பின்னணி உள்ளவர்களை கட்சியில் சேர்ப்பது குறித்து அவருக்கு எந்தக் குற்றவுணர்வும் கிடையாது.

அண்ணாமலை சிலரால் கொண்டாடப்படுவதற்கான பிரதான காரணம், ஊழலில் திளைக்கும் திராவிட இயக்க அரசியல்வாதிகளை இவர் அசராமல் எகிறி அடிக்கும் ஸ்டைல் தான்! அதுவும் குறிப்பாக ஊடகங்களும், அதிமுக போன்ற முக்கிய எதிர்கட்சியும் செய்யத் தவறிய சில விமர்சனங்களை ஆள்வோரை நோக்கி அண்ணாமலை வீரியமுடன் செய்வது ஒரு வீச்சை தந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

ஆனால், திமுகவை எதிர்த்து பேசி, விளாசுவது ஒன்றே தலைவனுக்கான தகுதியாக  முடியுமா? மக்கள் பிரச்சினையில் அண்ணாமலைக்கு எந்த அக்கறையும் இல்லை…என்பதை பல அடிப்படையான பிரச்சினைகளில் அவர் கண்டும், காணாமல் கடந்து செல்வதிலும் நாம் அறியலாம். தமிழகத்தில் மணல் குவாரிகளும், கிரானைட் குவாரிகளும் அதிகரிக்கப்பட்டு, இயற்கை வளங்கள் சுரண்டப்படுவது பற்றியோ, டாஸ்மாக் சரக்குகள்  அரசு கணக்கிற்கே வராமல் விற்கப்பட்டு பல்லாயிரம் கோடிகள் ஆளும் குடும்பத்திற்கு போவது பற்றியோ அண்ணாமலை வாய் திறக்க மாட்டார்.

மத்திய அரசின் பற்பல மக்கள் விரோத சட்ட, திட்டங்களை  நியாயப்படுத்தி ஆதரிப்பவர் அண்ணாமலை. ஆனால், ஒரே ஒரு விவகாரத்தில் மட்டும் அவர் சுதாரித்துக் கொண்டு, மக்கள் கருத்தை மத்திய அரசுக்கு புரிய வைத்து நிறுத்தியது மதுரை அரிட்டாப்பட்டியில் ஏற்படவிருந்த டங்ஸ்டன் சுரங்கத்தை தடுத்து நிறுத்தியது மட்டுமே! முதலில் சுரங்கத்தை தீவிரமாக ஆதரித்து அண்ணாமலை மிகப் பெரும் மக்கள் திரண்டு அதை மிக மூர்க்கமாக எதிர்க்கிறார்கள். இதில் பின் வங்குவதைத் தவிர வேறு வழியில்லை என புத்திசாலித்தனமாக பின் வாங்கினார்.

திமுக அரசால் உருவான சில பிரச்சினைகளுக்கு அண்ணாமலை அதிரடி அறிக்கை விடுகிறார். ஆனால், அறிக்கைக்கு பிறகு சம்பந்தப்பட்டவர்களோடு டீலிங் போட்டு, பற்பல ஆதாயங்களைப் பெற்று அடக்கி வாசிக்கிறார்….எனத் தொடர்ந்து கேள்விப்பட்ட வண்ணம் உள்ளேன்.  ”தமிழக பாஜகவில் இந்த மாதிரி மத்திய அரசின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பதவியில் இல்லாமலே  பற்பல பலன்களை பெற்ற ஒரு தலைவர் வேறெவரும் இல்லை…’’   என்று அந்த கட்சியினர் மத்தியிலேயே பேசப்படுகிறது. அண்ணாமலை இலண்டனுக்கு சென்ற சமயத்தில் அவரது நெருங்கிய உறவினர் வீட்டிலேயே மத்திய அமலாக்கத் துறை ரெய்டு நடத்தியது இந்தப் பின்னணியில் தான்.

ஒரே ஊர் என்பதால் ஊழல் மன்னன் செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் ஒரு வெளியில் தெரியாத நெருக்கம் உள்ளது. அந்த வகையில் செந்தில் பாலாஜியிடம் இருந்து பல பொருளாதார ஆதாயங்களை அண்ணாமலை பெற்று வருவதாக கரூர் வட்டாரத்திலேயே பரவலாக பேச்சு உள்ளது. அந்த நன்றிக்கு தான் செந்தில் பாலாஜியின் தம்பியை அமலாக்கத் துறை இன்னும்  பிடிக்க முடியாமல் தேடிக் கொண்டே இருக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளாரா அண்ணாமலை என்ற கேள்வியும் எழுகிறது. ஊழலில் ஊறித் திளைக்கும் திமுக அமைச்சர் எ.வ.வேலுவுக்கும், அண்ணாமலைக்கும் உள்ள நெருக்கம் அனைவருக்குமே தெரியும்.

அண்ணாமலை திமுகவை எதிர்ப்பது போலத் தோற்றம் காட்டுகிறார். ஆனால், உண்மையில் அவர் திமுகவை எதிர்ப்பது போலப் பேசி, ஆளும்  திமுக அரசு மீதான மக்களின் கோபத்திற்கு ஒரு வடிகாலாய் இருந்து, மக்களின் கோபத்தை தணிக்கிறார். அண்ணா பல்கலை மாணவி பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட விவகாரத்தில் தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு உண்மையான குற்றவாளியை அம்பலபடுத்தாமல் விவகாரத்தை எமோஷனலாகப் பேசி திசை திருப்பி விட்டார்.

இந்த காரணத்தாலோ என்னவோ, தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்படக் கூடாது என வெளிநாடுகளில் இருந்து சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்தவர்கள் திமுக ஆதரவாளர்கள் என்ற அதிர்ச்சி உண்மையில்  தெரிய வருகிறது.

சளைக்காமல் அதிரடி காட்டுவது, பொய்யை உண்மையைப் போல அடித்துப் பேசுவது… அநீதியை எதிர்ப்பது போல அறச் சீற்றம் காட்டுவது,  நைச்சியமாகப் பேசுவது, உள்ளத்தில் யாரையும் மதிக்காத ஆணவம், அதே சமயம் பணிவானவர் போல காட்டும் போலித் தோற்றம்…என மிகக் குறுகிய காலகட்டத்தில் அரசியல் அயோக்கியதனங்களில் பல பி.ஹெச்.டி பட்டங்களை வென்றவர் அண்ணாமலை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தன்னைச் சுற்றிலும் 420 களையே அதிகம் வைத்திருப்பவர். இவர் ஒரு அழிவு சக்தி. ஆக்கபூர்வமாக எதையுமே செய்யத் தெரியாதவர். அரவணைக்கும் பண்போ, அறவே கிடையாது. நம்பகத் தன்மை இல்லாதவர்.இதனால், கட்சியிலேயே கூட ஆத்மார்த்த நண்பர்கள் இவருக்கு இல்லை. எனினும், பல படித்த மூடர்களான நூலிபான்கள் இவரை ’ஓகோ’வெனக் கொண்டாடுகின்றனர்.

இவர் கட்சித் தலைவராக இல்லையென்றால், காணாமலாகிவிடுவார்! உண்மையில் அண்ணாமலை பாஜகவிற்கு பலம் போலத் தோற்றமளிக்கும் பலவீனம் தான்!

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time