இஸ்லாமியர்கள் சொத்துக்களை சூறையாடுவதே நோக்கம்!

-ச.அருணாசலம்

பொது சிவில் சட்டத்தை பற்றி பேசும் பாஜக வினர் இஸ்லாமியரை மட்டும் குறி வைத்து வக்பு சட்டத்தை இயற்றுவது ஏன்?பயனாளிகளைப் பொறுத்த வக்பு (Waqf by User) என்ற கோட்பாட்டை மோடி அரசு முற்றிலுமாக நிராகரித்துள்ளது. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனப் பேசும் சங்கிகள், இஸ்லாமிய சமயத்திற்கு ‘தனி சட்டம்’ இயற்றுவது என்ன நியாயம்..?

வக்பு சட்டத் திருத்த மசோதா 2025, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் மீறி நிறைவேற்றப்பட்டது.

இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி எம். பி. பற்றும் அகில இந்திய மஜ்ஜீல் கட்சி தலைவர் ஓவைசியும் உச்ச நீதி மன்றத்தை நாடியுள்ளனர். தி மு க வும் இச்சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

வக்பு என்றால் இஸ்லாமிய நம்பிக்கை கொண்ட எவரும் அல்லாவின் பெயரால் சமய நோக்கங்களுக்காக, தொண்டு நோக்கங்களுக்காக நன்கொடையாக வழங்கப்படும் அசையும் அல்லது அசையா சொத்துக்களாகும்.

சிந்து நதிக்கும் சமுத்திரத்திற்கும் இடையில் உள்ள பகுதி யாவும் எங்களின் புனித பூமி , அங்கு இஸ்லாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடம் இல்லை என்று சாவர்க்கரும், கோல்வால்க்கரும் கூறி வந்ததை நடைமுறைபடுத்தும் சங்கிகள் கூட்டம் ( ஆர் எஸ் எஸ் , பா ஜ க ) இன்று சிறுபான்மையினரை இச்சட்டம் மூலம் சிறுமை படுத்துகிறது என்பது உண்மையா?

இந்த சட்ட திருத்தத்தை, நிலங்களை நிருவகிப்பதில் ‘வெளிப்படைதன்மை, திறமை மற்றும் பொறுப்புக் கூறலை ‘ மேம்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கையாக பிரதமர் மோடி கூறுகிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவை 2013ல் கொணர்ந்த வக்பு சட்ட திருத்தத்தில் உள்ள “குறைபாடுகளை” களையத் தான் இந்த சட்டம் கொண்டுவந்திருக்கிறோம் , 2013ல் வந்த சட்ட திருத்தத்தின் மூலம், யு பி ஏ அரசு தில்லியில் உள்ள 123 அரசு சொத்துக்களை வக்பு வாரியத்திற்கு வழங்கியது என்று உள்துறை அமைச்சர் அமீத் ஷா ஒரு ‘கதையை ‘நாடாளுமன்றத்தில் கூறினார்.

இந்தியாவில் ரயில்வே துறை , ராணுவத்தை அடுத்து அதிக நிலங்களை தன்வசம் வைத்துள்ள அமைப்பு வக்பு நிருவாகம்தான் என்று மோடி அரசு கூறுகிறது.

எனவே, லட்சக்கணக்கான சொத்துக்கள், நிலங்கள் முறைகெட்டு சீரழிவதை தடுக்கத்தான் இந்த சட்டம் கொண்டுவந்தோம் என இவர்கள் கூறுகிறார்கள்.

எத்தனை படித்தாலும் கயவர்களின் புத்தி கவட்டையில்தான் என்பதை போல சங்கிகளின் கவனமெல்லாம் இஸ்லாமியர்கள் மீது இருப்பதேன்?

இந்த முன்னெடுப்பு எந்த மதத்திற்கும் எதிரானது இல்லையாம், சொத்துக்கள் முறைகேடாக சீரழிப்பதை தடுக்கவே இதை ( சட்ட திருத்தத்தை ) கொண்டு வருகிறோம் என சிறுபான்மை விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு  திருவாய் மலர்ந்துள்ளார்.

மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் , 2013 சட்டம் கொடுமையானது (draconian law) என்றும், இன்று நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் மராட்டிய மாநிலத்தில் 2000 முதல் 2014 வரை நடந்துள்ள வக்பு நில மோசடியை தமது அரசு தீவிரமாக ஒடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஏராளமான சொத்துக்கள் சரியாக நிர்வகிக்கப்படாமல், அதன் மதிப்பை இழந்தும், ஊழல் மலிந்தும் சீரழிகின்றதை தடுக்கவே, வக்பு சொத்துக்களை இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் இச்சட்டம் கொண்டுவரப்படுகிறது என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் கலந்தாலோசித்த பிறகே, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் – ஜே பி சி- பரிந்துரைகளின் அடிப்படையில்தான் இச்சட்டம் முன் வைக்கப்படுகிறதாம்!

நல்ல மற்றும் வெளிப்படையான நிருவாகத்திற்காகத்தான் வக்பு கவுன்சிலில் பிற மத்த்தினரை நியமிக்க இச்சட்டத்தில் இடமளித்திருக்கிறார்களாம்.

இஸ்லாமிய மகளிரின் நலன் கருதி இக்குழுக்களில் மகளிரை நியமிக்க இச்சட்டம் வகை செய்கிறதாம்.

அரசு சொத்துக்களையோ அல்லது ஆவணமில்லாத சொத்துக்களை வக்பு சொத்துக்களாக அறிவித்து ஆக்கிரமிப்பு செய்வதை இச்சட்டம் தடுக்கிறதாம்.

இத்தகைய தாவாவிற்கிடமான சொத்துக்களின் உண்மைத்தன்மை யை தீர்மானிப்பது நீதிமன்றம் (சிவில் கோர்ட்) இல்லையாம் , மாவட்ட ஆட்சி தலைவரே இத்தாவாவை தீர்த்து வைப்பாராம், அவரது தீர்ப்பை எதிர்த்து யாரும் நீதிமன்றம் செல்ல முடியாது என்பது இச்சட்டத்தின் முக்கிய அம்சமாகும் . ஆளும் கட்சியினரின் ஐனநாயக ஆர்வமும் பாரபட்சம் காட்டாத நடுநிலைமையும் இதில் தெளிவாக வெளிப்படுகிறதல்லவா?

அடுத்து இந்த சட்டம் நாடாளுமன்ற கூட்டுக்குழு (JPC) பரிந்துரைத்த ஏறத்தாழ 44 திருத்தங்களை நிராகரித்துள்ளது, இந்த 44 திருத்தங்களும் எதிர்கட்சியினரால் முன்மொழியப்பட்டவை ஆகும்; ஆனால் ஆளுங்கட்சியினர் முன்மொழிந்த 14 திருத்தங்களும்

அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது!

இந்த சட்டம் அரசமைப்பு சட்ட பிரிவு 26 A B C and D பிரிவுகளுக்கு எதிராக அமைந்துள்ளது . இப்பிரிவுகள் கூறும் சமய அமைப்புகளால் தங்களது காரியங்களை மேற்பார்வை செய்ய இயலும் (Religious denominations can manage their own affairs) என்ற கூறை மறுத்து அதில் அரசு தலையிட்டு சட்டம் இயற்றி உள்ளது.

அடுத்து , குறிப்பிட்ட ஒரு சமயத்தை குறிவைத்து (இஸ்லாமிய) இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளதால் இச்சட்டம் அரசமைப்பு சட்ட பிரிவு 14 ஐ மீறும் சட்ட வடிவம் என வல்லுனர்கள் கூறுகின்றனர்

பயனாளிகளை பொறுத்த வக்பு (Waqf by User) என்பது ஒரு சொத்து நீண்ட காலமாக ஆவண சாட்சியத்துடனோ அல்லது அவ்வாறில்லாமல் தொடர்ந்து இஸ்லாமிய சமய பயன்பாட்டிலோ, தொண்டு பயன்பாட்டிலோ உள்ள அறக்கட்டளையாக இருந்திருக்க வேண்டும் . இத்தகைய நீண்டகால இஸ்லாமிய சமய மற்றும் தொண்டு பயன்பாட்டில் உள்ள

நிலங்களை வக்பு பை யூசர் என்ற அடிப்படையில் வக்பு சொத்துக்களாக இந்திய வக்பு சட்டம் ஏற்றுக் கொள்கிறது, இதற்கு இந்திய நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்ட அம்சமாகும்.

தற்போதைய திருத்தம் இந்த கோட்பாட்டை முற்றிலும் நிராகரிக்கிறது.

இதன்படி நீண்ட காலமாக இஸ்லாமிய சமயப்பயனிலும், தொண்டு பயனிலும் இருக்கும் சொத்துக்கள் (Waqf by User properties ) வக்பு சொத்துக்களாக அங்கீகரிக்கப்படாது.

அத்தகைய சொத்துக்களுக்கு முறைப்படியான வக்பு ஆவணம் வேண்டும்.

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இத்தகைய சொத்துக்களை இப்புதிய சட்டம் பாதுகாக்கும். ஆனால், அத்தகைய சொத்துக்களின் மீது வேறு எவரும் (தனி நபரோ அல்லது அரசாங்கமோ) உரிமை கொண்டாடாமல் இருக்க வேண்டும், என இச்சட்டம் கூறுகிறது.

வக்பு சொத்துக்கள் குறித்த உரிமை பிணக்குகள் – சுமார் 120 வழக்குகள் நீதிமன்றங்களில் இன்று வரை நிலுவையில் உள்ளன- ,

வக்பு சொத்துக்களின் மீது அரசு உரிமை கொண்டாடுவது

வக்பு சொத்துக்களை பிறர் ஆக்கிரமித்து இருப்பது, உரிமை கொண்டாடுவது போன்ற கோளாறுகளை சரி செய்யாமல், அதற்கு வழி வகுக்காமல் இச்சட்டம் இஸ்லாமியர்களின் உரிமையில் கை வைத்து ‘பயனாளிகளை பொறுத்த வக்பு ‘ சொத்துக்கள் அனைத்தையும் இன்று கேள்விக் குறியாக்கி உள்ளது.

இதனால் நீண்ட நெடுங்கால பயனளிப்பில் உள்ள இந்த வகை இஸ்லாமிய சொத்துக்கள் பிறரால் – குறிப்பாக அரசாங்கத்தினரால் -அபகரிக்கப்படும் அபாயம் உள்ளது . இதற்கு ஏற்றார் போன்ற சங்கிகளின் பொய் பிரச்சாரங்களும், சமூக ஊடக பரிமாற்றங்களும் இது வரை வலைகளை பின்னின.

இனி மோடி அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தின் மூலம் நில அபகரிப்பை நடைமுறை படுத்துவர் என்பதில் யாருக்கும் ஐயம் வேண்டியதில்லை!

இஸ்லாமிய நம்பிக்கை கொண்ட எவரும் நன்கொடையாக வக்பு என்ற நோக்கத்திற்காக சொத்துக்களை அளிக்கலாம் என்ற நிலையில், ஒருவர் ஐந்து ஆண்டு இஸ்லாமியராக வாழ்ந்த பிறகே நன்கொடை தரலாம் என புதிய சட்டம் கூறுகிறது.

வக்பு நில அளவை தீர்மானிக்கும் வக்பு கூடுதல் ஆணையர் அதிகாரம் இன்று மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு சொத்து வக்பு வரம்பிற்கு கீழ் வருமா இல்லையா என்பதை முடிவு செய்யும் வக்பு வாரிய அதிகாரம் திரும்ப பெறப்பட்டுள்ளது.

வக்பு தீர்ப்பாயம் மூன்று உறுப்பினர் என்ற நிலையில் இருந்து இரண்டு உறுப்பினராக குறைக்கப்பட்டு அதன் தீர்ப்பும் மேல்முறையீட்டுக்கு உள்ளாகும் என கூறப்பட்டுள்ளது.

வக்பு சொத்துக்களை குத்தகைதாரர்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு பதிலாக இச்சட்டம் குத்தகைதார்ர்களின் ‘ வரம்பை’ தளர்த்தி வக்பு சொத்துக்களை குத்தகைதார்ர்கள் ஏப்பம்விட புதிய சட்டம் வகை செய்துள்ளது.

இத்தனை கபளீகரங்களையும் வெளிப்படைத்தன்மை என்ற பெயராலும், வக்பு சொத்துக்களை காப்பாற்றுவது என்ற பெயரிலும் அனைத்து பிரிவினருக்கும் குறிப்பாக இஸ்லாமிய மகளிருக்கு உதவுவது என்ற பாசாங்கிலும் மோடி அரசு இந்த பாரபட்சமிக்க சட்டத்தை இயற்றியுள்ளது.

நாடு விடுதலைக்குப்பின் 1954 வக்பு சட்டத்தின் மூலம் மாநில வக்பு வாரியங்கள், ஏற்படுத்தப்பட்டு வக்பு சொத்துக்கள் நிருவகிக்க வழிவகை செய்யபட்டது.

1964ல் மாநில வக்பு வாரியங்களை மேற்பார்வையிட மத்திய வக்பு கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது.

பிறகு இவற்றை மேம்படுத்த 1995ல் புதிய வக்பு சட்டம் இயற்றப்பட்டது, இதன்மூலம் – நீதிமன்றங்களை ஒத்த – அதிகாரங்கொண்ட வக்பு தீர்ப்பாயங்கள் ஏற்படுத்தப்பட்டன. தீர்ப்பாயங்களின் முடிவுகள் இறுதியானதாக நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்ய முடியாதவையாகும்.

2013ல் இச்சட்டம் மீண்டும் திருத்தப்பட்டு 3 உறுப்பினர் அடங்கிய வக்பு தீர்ப்பாயங்கள் ஏற்படுத்தப்பட்டன, அவற்றில் இஸ்லாமிய சட்ட வல்லுனர் ஒருவரும் உறுப்பினராக நியமிக்க வகை செய்யப்பட்டது.

மாநில வக்பு வாரியங்களில் இரண்டு பெண் உறுப்பினர்களை நியமிக்க வகை செய்யப்பட்டது.

வக்பு சொத்துக்களை விற்கவோ தானம் செய்யவோ தடை செய்யப்பட்டது.

வக்பு சொத்துக்களின் குத்தகை காலத்தை மூன்று ஆண்டிலிருந்து முப்பதாக இச்சட்டம் கூட்டி சொத்துக்கள் அதிக பயனடைய வழி செய்யபட்டது.

இப்படி இருக்கும் சட்டத்தை குறை கூறி இஸ்லாமியர்கள் இந்தியாவின் மூன்றாவது பெரிய நில உடமையாளர் என்ற வன்ம பிரச்சாரத்தை சங்கிகள் கடந்த பத்தாண்டுகளாக கட்டவிழத்து விட்டுள்ளனர்.

அரசியல் ஆதாயம் தேட ராமர் கோவில் கை கொடுக்காத நிலையில் தற்போது இஸ்லாமியர்களை பிரித்தாளவே (பஸமண்டா , போக்ரா, அக்கியா என்பதாக) வக்பு சட்ட திருத்தத்தை மோடி கையிலெடுத்துள்ளார்.

இந்த நிலையில் இஸ்லாமியர்களை கருவறுக்க வேண்டும் என சங்கிகளின் எண்ணப் போக்கிற்கேற்ப , அவர்களை சிறுமை படுத்தி அவர்தம் நிலங்களை அபகரித்து. இஸ்லாமியரின் இன்றியமையாத இறை பணிகளிலும் தலையிட்டு குடைச்சல் கொடுப்பதையே நோக்கமாக கொண்டது இச்சட்டம்.

இந்து என்றும் இஸ்லாமியர் என்றும் இச்சமூகத்தை பிளவு படுத்தி, தனது இந்து வாக்கு வங்கியை தனது நிரந்தர கைப்பாவையாக மாற்றுவதை நோக்கமாக கொண்டதே இச்சட்டம்.

ச.அருணாசலம்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

₹
Personal Info

Donation Total: ₹1,000.00 One Time