இது உலக நாடுகளில் எல்லாம் வரவேற்பு பெற்று ஓடிய ஒரு இந்தி திரைப்படம்! உலகின் முக்கிய திரைப்பட விழாக்களில் திரையிடப் பெற்று, பல விருதுகளை பெற்ற இந்த படத்தை இந்தியாவில் திரையிட மறுத்துள்ளது மோடி சர்க்கார். தற்போது ஆஸ்கார் விருதுக்கு இங்கிலாந்து நாட்டால் பரிந்துரைக்கப்பட்ட சந்தோஷ் படத்தை ஏன் திரையிட முடியவில்லை;
இந்தப் படம் ஒரு வட இந்திய கிராமத்தின் நேர்மையான லேடி கான்ஸ்டபிள் சந்திக்கும் பிரச்சினைகளை பற்றி எடுக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் சைனி என்பது இந்தப் பெண்ணின் பெயராகும். இவளுடைய போலீஸ்கார கணவர் ஒரு கலவரத்தில் கொல்லப்பட்டதை அடுத்து சந்தோஷ்க்கு கருணை அடிப்படையில் இந்த வேலை கிடைக்கிறது.
போலீசாக பொறுப்பேற்ற சந்தோஷை சக போலீஸ்காரர்களே, ‘பொம்பளை தானே.. ‘ என அலட்சியமாக நடத்துகிறார்கள். அதுவே, இவளுக்கு தன்னை நிருபிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தருகிறது.
அந்த ஊரில் 15 வயதேயான ஒரு தலித் சிறுமி கொடுமையான பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி கொல்லப்படுகிறாள். அந்த தலித் பெண்ணின் கொலை வழக்கு சந்தோஷ் சைனியிடம் ஒப்படைக்கப்படுகிறது. ‘சும்மா பார்மாலிடிக்கு விசாரணை நடத்திவிட்டு, வழக்கை மூடிவிடச் சொல்லி’ நிர்பந்திக்கபடுகிறாள் சந்தோஷ். ஆனால், உண்மையான குற்றவாளிகளை தண்டித்தே ஆக வேண்டும் எனத் துடிக்கிறாள் அவள்!
அப்போது தான் அவளுக்கு ஒரு விஷயம் உரைக்கிறது. இந்த நாட்டில் இருவித தீண்டாமை இருக்கிறது. ‘ஒரு தரப்பாரை, தீண்டவே கூடாது எனப் புறக்கணித்து நசுக்குவது. மற்றொரு தரப்பாரோ, அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அவர்களை நெருங்கவே முடியாது’ என்பதாகும்.
வட இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை, காவல்துறையின் பாரபட்ச போக்குகள்.. ஆகியவற்றை பற்றி இப் படம் இயல்பாக காட்டிச் செல்கிறது.
உண்மையை வெளிக்கொணரத் துடிக்கும் சந்தோஷ்க்கு பல நெருக்கடிகள் தரப்படுகிறது. அப்போது கீதா சர்மா என்ற பெண்ணியவாதியின் நட்பும் உதவியும் கிடைக்கிறது. அவள் கொல்லப்பட்ட அந்த சிறுமிக்கு நியாயம் பெற்றுத் தந்தாளா..? என்பதே படம் சொல்லும் செய்தியாகும்.
இந்தப் படத்தை தான் திரையிடவே முடியாத வகையில் நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் கத்திரி வைத்து, சின்னாபின்னப்படுத்தி உள்ளது நமது இந்திய திரைப்பட தணிக்கை வாரியம். இதனால் படத்தை அதன் உயிரோட்டத்தை சிதைந்த நிலையில் எப்படி திரையிடுவது என திகைத்து நிற்கிறார்கள் படைப்பாளிகள்.
இந்தியாவின் பல்லாயிரம் கிராமங்களில் இது போன்ற பல சம்பவங்கள் நடந்து கொண்டுள்ளன. அதற்கு நீதி கேட்கும் போராட்டங்களும் நடந்துள்ளன. இது போன்ற சூழல்களில் ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாகவே அரசும், காவல்துறையும் இயங்கி உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது அரிதினும், அரிதாகவே உள்ளது. இந்த யதார்த்தம் ஒரு கலைப் படைப்பாக வரும் போது அரசாங்கம் பதற்றமடைய வேண்டிய அவசியம் தான் என்ன?

இந்தியாவில் இது போன்ற திரைப்படங்கள் எவ்வளவோ வந்துள்ளனவே! இதை ஏன் மறுக்க வேண்டும். இதை எழுதி இயக்கி உள்ளது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் பெண் சந்தியா சூரி என்பவர். தற்போது இவர் இங்கிலாந்தில் வசிக்கிறார். உலக அளவில் வரவேற்பை கண்ட ஒரு படம் என்ற கவனம் இந்தப் படத்திற்கு கிடைத்துள்ளதால் இந்திய மக்களால் கொண்டாடப் படக் கூடிய வாய்ப்பு இந்த படத்திற்கு உள்ளது. போதாக்குறைக்கு இந்தப் படத்தின் கதாநாயகியாக சஹானா கோஸ்வாமி நடிப்பில் நன்றாக வெளுத்து வாங்கியுள்ளார்.
இந்தப் படம் எழுப்பும் கேள்விகள், இது கொடுக்கும் தைரியம் போன்றவை தனது அரசியலுக்கு எதிராக மாறிவிடும். மக்களுக்கு விழிப்புணர்வு கிடைத்துவிடும் என ஒன்றிய பாஜக அரசு நினைப்பது ஆச்சரியமல்ல.
இந்தப் படத்தை திரையிடும் முயற்சிகள் பல மாதங்களாக நடந்து கொண்டுள்ளது. பி.வி.ஆர் பிக்சர்ஸ் தான் இதன் இந்திய விநியோக உரிமையை பெற்றுள்ளது. திரையில் திரையிட முடியாத இந்தப் படத்தை சமூக ஆர்வலர்கள், படைப்பாளிகள் பார்வைக்கேனும் கொண்டு செல்ல வேண்டும் என இயக்குனர் பா.ரஞ்சித் போன்றவர்கள் எடுத்த முயற்சிகளை அரசு நிர்வாகமும், காவல்துறையும் முறியடித்துள்ளன. ஒரு வகையில் இந்த அணுகுமுறை இந்திய அரசின் கோழைத் தனத்தையே காட்டுகிறது எனச் சொல்லலாம்!
Also read
இந்த அநீதியை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லலாமா…? என்ற விவாதங்களும் போய்க் கொண்டுள்ளன. சமீபத்தில் வெளியான மலையாளப் படமான எம்புரான் படத்தை தயாரித்த தயாரிப்பாளரை வருமான வரி சோதனைக்கு ஆளாக்கி அச்சப்படுத்தி உள்ளது மோடி சர்க்கார்.
காஷ்மீர் பைல்ஸ், கேரளா ஸ்டோரி என பொய்யான பிம்பங்களை கட்டமைக்கும் கெடு நோக்கமுள்ள திரைப்படங்களுக்கு ஊக்கம் அளிக்கும் பாஜக அரசாங்கம், மாற்று கருத்துள்ள யதார்த்தமான உண்மைகளை பேசும் திரைப்படங்கள் வரும் போது பதறுவது ஏன்?
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply