தமிழ்நாட்டரசு சொல்லாமல் விட்ட மிகப்பெரிய சாதனைகள்!

-சாவித்திரி கண்ணன்

விளம்பரங்களால் மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்துவிடுவதில்லை. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது குறிப்பிட்ட சில பகுதியினருக்கு  சாத்தியமாகியும், பெரும்பாலான மக்களுக்கு அடைப்படை தேவைகளே நிறைவேறாத நிலைமையிலுமே உள்ளது. அரசுப் பணிகளே அரிதாகி வருகிறது; இதோ, சில மறுக்க முடியாத உண்மைகள்;

சபாஷ்! வாழ்த்துக்கள் முதலமைச்சர் அவர்களே!

இன்றைய தினம் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு உச்சத்தை தொட்டதாக பக்கம், பக்கமாக விளம்பரம் தந்துள்ளீர்கள்..!

இதோ, நீங்கள் சொல்லாமல் விட்ட மு.க. ஸ்டாலின் ஆட்சியின் சாதனைகளை பட்டியல் இட்டுள்ளேன்.

தமிழ்நாட்டின் கடனை நான்கே ஆண்டுகளில் இரட்டிப்பாக்கி, அதாவது 10 லட்சம் கோடி கடனாக உயர்த்தி, அந்தக் கடனுக்கு ஆண்டுக்கு 72,000 கோடிகள் வட்டி கட்டுவது மகத்தான சாதனை!

அரசு பள்ளிகளில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாததோடு, ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப முடியாமை! ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப முடியாமையால் பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தது. இதையே சாக்காக வைத்து பல அரசு பள்ளிகள் இழுத்து மூடப்பட்ட வண்ணம் உள்ள சாதனை!

அரசு கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமை உள்ளது. இதனால், பேராசிரியர் பணி இடங்களையே ஒப்பந்த பணியாக்கி, கெளர விரிவுரையாளர்கள் என ஆண்டுக்கணக்கில் அத்துக் கூலிக்கு வேலைக்கு வைக்கப்பட்டு உள்ளனர்.

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தேவைக்கு ஏற்ப புதிய பேருந்துகளை வாங்காமை, இருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிக்காமை, முக்கிய ரூட்டுகளில் தனியாரை அனுமதிக்கும் போக்கு..என சிறுகச் சிறுக தனியார் மயமாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.!

பல ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றும் ஓட்டு நரையும், நடத்துனரையும் நிரந்தர ஊழியராக்க முடியாமல் ஒப்பந்தக் கூலிகளாக நடத்துவது, போக்குவரத்து தொழிலாளர்களிடம் பிடிக்கப்பட்ட ஓய்வூதிய பணத்தை திருப்பித் தர இயலாமை…!

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் சம்பள உயர்வு கேட்டு தொடர் போராட்டங்கள் நடத்தியும் தர இயலாமை. அரசு மருத்துவ மனைகளில் போதிய , அத்தியாவசிய மருந்து, மாத்திரைகள் இல்லாத அவலம்!

ஆரம்ப சுகாதார மையங்களுக்கு போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை நியமிக்க முடியாத சாதனை.

பல்லாண்டுகளாக பணியாற்றும் செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களை நிரந்தரப்படுத்தாமல் அடிமாட்டுச் சம்பளத்தில் ஒப்பந்த கூலிகளாக சுரண்டுவது.

அரசு ஊழியர்களுக்கு கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை ’அம்போ’வெனவிட்டு நாமம் போட்டது, மிகப் பெரிய சாதனையன்றோ!

பல முக்கிய அரசுத் துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாததோடு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன. முக்கியமான அத்தியாவசிய பணிகளான திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் வினியோகம், சுகாதாரம், போக்குவரத்து, கல்வித் துறை, மின்வாரியம்… என பல துறைகளில் தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள் பல்லாண்டுகளாக அத்துக் கூலிகளாக , அடிமாட்டுச் சம்பளத்திற்கு பாதுகாப்பற்ற சூழலில் பணிபுரியக் கூடிய அவலம்.

மின் உற்பத்தியில் அதானி போன்ற கார்பரேட்களை இறக்கி, அவர்களிடம் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி, மின்சாரத் துறையை ஒன்றரை லட்சம் கோடி கடனளியாக்கி, மின் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியது சாதனை!

நெடுஞ்சாலைப் போடுவதில் நிகரில்லா ஊழல்களை நிகழ்த்தும் எ.வ.வேலு.

சாலை போக்குவரத்து சட்டங்களை கடுமையாக அமல்படுத்தி, அபராதம் என்ற பெயரில் பகல் கொள்ளை நடத்தி, வாகன ஓட்டிகளின் வயிற்றெரிச்சலை வாங்கி கட்டும் சாதனை!

புதுப்புது குவாரிகளை தோற்றுவித்து, ஆற்றோரங்களை பள்ளத்தாக்குகளாக்கி, மலைகளை தரைமட்டமாக்கி, விவசாய நிலங்களை பாழ்படுத்தி, வரலாறு காணாத இயற்கை வளச் சுரண்டல்களை நிகழ்த்தும் துரை முருகன்.

ஏமாற்றப்பட்ட அரசு ஊழியர்கள் எழுச்சி பெற்று நடத்திய போராட்டம்

உயர் கல்வித் துறையில் உச்சகட்ட ஊழல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் பொன்முடி.

வருவாய்த் துறையில் வரலாறு காணாத வசூல் வேட்டை நடத்தி வருகின்ற கீர்த்திக்கு சொந்தமான அமைச்சர் மூர்த்தி!

தமிழ்நாட்டு முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் பலரும் ஆசியாவின் பெரும் பணக்காரர்களாகி உள்ள சாதனை!

அரசுத்துறைகள் அனைத்திலும் ஊழல்,முறைகேடுகள் லஞ்ச, லாவண்யங்கள் கொடி கட்டிப் பறக்கும் சாதனை!

பொருளாதாரக் குற்றங்களுக்காக எவ்வளவு அமலாக்கத் துறை ரெய்டுகள் நடந்தும் எந்த அமைச்சர்களும் தண்டிக்கப்படாமல் தப்பும் சாதனை!

டாஸ்மாக் முறைகேடுகளில் சரித்திரம் படைத்து, தமிழக இளைஞர்களை குடி நோயாளியாக்கி வீழ்த்தி, வட மாநில இளைஞர்களின் உழைப்பை நம்பி தொழில்துறை இயங்கும் நிலைக்கு தமிழகத்தை தள்ளியது மாபெரும் சாதனையன்றோ!

விவசாயிகளின் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை அபகரித்து கார்ப்பரேட்டுகளுக்கு தருவதற்காக சட்டம் இயற்றி சாதனை படைத்தது.

தண்ணீர் பற்றாகுறையற்ற தமிழகத்தை உருவாக்க, அத்தியாவசியமான நீர்மேலாண்மை திட்டங்களை நிறைவேற்ற முடியாத அவலம். காவிரி தண்ணீரை கடைமடை வரை கொண்டு செல்ல முடியாமல் கடலுக்கு தாரை வார்க்கும் அவலம்.

தமிழ்நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் சிறு, குறுந்தொழில்களை சின்னாபின்னப்படுத்தி சிதைத்து, அந்நிய நாட்டு முதலீடுகளுக்கு காவடி தூக்கும் சாதனை!

தமிழ்நாட்டு அரசு பணிகளில் 6 லட்சம் பணி இடங்களை நிரப்ப முடியாத சாதனை.

பழவேற்காடு துறைமுகம் தொடங்கி தமிழகத்தின் பல இடங்களை அதானிக்கு தாரை வார்த்து அகம் மகிழ்ந்து சிரிக்கும் சாதனை!

தமிழக மக்கள் தற்சார்பு பொருளாதாரத்தை எட்டவில்லை என்பதற்கு உதாரணங்களாக ரேஷனில் இலவச அரிசி, மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய், முதல் தலைமுறையாக கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்..என ஏகப்பட்ட மானிய உதவிகளே..தமிழ்நாட்டின் பின்னடைவைச் சொல்லிவிடுகிறதே!

அமைச்சராக இருக்கும் போதே பொருளாதார குற்றங்களில் சிறை சென்று மீண்டு மீண்டும் அமைச்சரான செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோரின் சாதனை!

இன்னும், இன்னும் பட்டியலிட நிறையவே உள்ளது..! இன்னும் ஓராண்டு உள்ளதே… மீண்டும் சொல்வேன்.. தொடரட்டும் உங்கள் சாதனை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time