அதிகார அழுத்தம் வெற்றி கண்டது. அரட்டல், மிரட்டல், உருட்டல் அனைத்துக்கும் அமைதி காத்த அதிமுக இன்று அடிபணிந்துவிட்டது. பொருந்தா கூட்டணி, நிர்பந்த நட்பு வெற்றி பெறுமா? முரண்டு பிடித்த அதிமுக பணிந்தது எப்படி? அமித்ஷா ஏவிய அஸ்திரம் என்ன..? பின்னணியில் நடந்தது என்ன..?
”பாஜக விரித்த வலையில் விழமாட்டோம்” என போக்கு காட்டி வந்த அதிமுக, தானே சென்று சிக்கிக் கொண்டது!
கொள்கை சார்ந்த ஒரு அரசியல் இயக்கத்தை நடத்துவதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். அது இன்றைய அதிமுக தலைவர்களிடையே அறவே இல்லை.
எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி அடிமைகளைத் தான் விரும்பினார்களேயன்றி, அறிவும், ஆற்றலும் கொண்ட கொள்கையாளர்களை அல்ல.
கருணாநிதி என்ற பவர்புல் தலைவரை எதிர்த்த போது எம்.ஜி.ஆர் ஒரு நடிகர் மட்டுமே. ஆனால், கருணாநிதியின் எதிர்ப்பை சமாளிக்கும் சூழல் வந்த போது தான் அவர் தன்னைத் தலைவராக ஆக்கித் தகுதி படைத்துக் கொண்டார்.
ஜெயலலிதா எம்.ஜி.ஆரையே எதிர்த்து அரசியலில் எதிர் நீச்சல் போட்டவர். எம்.ஜி.ஆரின் இறுதி காலத்தில் தற்போது தலைவரின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது. ஜெயலலிதாவால் தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்று கட்சிக்கார்கள் தன்னை நம்பும் நிலையில் தன்னை வைத்துக் கொண்டார். நெருக்கடியான சூழல்கள் தான் தலைவர்களை உருவாக்குகிறது.
அப்படியான ஒரு நெருக்கடி தற்போது உருவாகி இருக்கும் சூழலில் எடப்பாடி பழனிச்சாமி துணிந்து எதிர்க்காமல் பாஜகவிடம் பணிந்து போய்விட்டார்.
திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகள் ஒன்றுபட வேண்டும் என்ற பெயரில் பொருத்தமில்லாத கூட்டணியை அதிகார அழுத்தம் தந்து வலிந்து உருவாக்கி உள்ளது பாஜக.
ஆனால், அதிமுகவும் பாஜகவும் சேர்வது, ‘திமுகவைத் தவிர பாஜகவை எதிர்க்க தமிழ்நாட்டில் வேறு யாருமே இல்லை’ என்ற புரிதலைத் தான், மக்களுக்கு தந்துள்ளது. ஆகவே, பாஜக எதிர்ப்பு ஓட்டுகளை ஒருங்கிணைத்து திமுகவிற்கு தாரை வார்த்துவிட்டது பாஜகவின் அடாவடி அரசியல்.
அவரவர் பலத்தில் அரசியல் நடத்துவது என்ற நிலையை மாற்றி, மற்றவர்களை அரவணைத்து ஆலிங்கணம் செய்து உள்வாங்கி, செரிக்கும் அரசியலைத் தான் பாஜக இந்தியா முழுமையும் நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் அது நிதீஸ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்தை நீர்த்து போக வைத்துள்ளது. சிவசேனாவை சின்னாபின்னமாக்கிவிட்டது. மாயாவதி கட்சியை ஒளிமங்கிப் போக வைத்து விட்டது.
இன்றைய அமித்ஷாவின் அழைப்பை பாமகவின் ராமதாஸ் நிராகரித்துவிட்டார். தேமுதிக நிராகரித்துவிட்டது. ஆனால், அதிமுகவோ சற்றே முரண்டு பிடித்துவிட்டு, மதியத்திற்கு பின்னர் சரணாகதியாகிவிட்டது.
உண்மையில் இன்றைக்கு அமைதியாக இருந்து காரியத்தை சாதித்துவிடலாம் என்று தான் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்திருந்தார். அதனால் ”அதிமுக செயற்குழுவைக் கூட்டி நிர்வாகிகள் கருத்தறிந்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும்’’ என எடப்பாடி பழனிச்சாமி அவகாசம் கேட்டார். அதிமுகவில் பெரும்பாலனவர்கள் பாஜக கூட்டணியை விரும்பவில்லை என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்த அமித்ஷா, ”அதற்கெல்லாம் நேரம் இல்லை. நான் டெல்லியில் இருந்து இதற்காகவே வந்துள்ளேன். நான் நல்ல முறையில் உங்களை கேட்டுக் கொள்கிறேன். என்னை அவமானப்படுத்த நினைக்காதீர்கள். எனக்கு வெறி ஏறப்பட்டதென்றால் அதன் பின் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.’’ என்று எச்சரிக்கை தந்ததாக சொல்லப்படுகிறது.
இது எடப்பாடி பழனிசாமியை பதற்றமடைய வைத்துவிட்டது. அதே சமயம் அதிமுக தலைமையில் தான் கூட்டணி இருக்க வேண்டும். ஒ.பி.எஸ், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியவர்கள் குறித்து எங்களுக்கு நிர்பந்தங்கள் தரக் கூடாது. அதிமுகவினர் அனைவர் மீதும் உள்ள வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும். குறைந்தபட்ச பொதுத் திட்டம் என்ற அம்சத்திற்கு பாஜக உடன்பட வேண்டும். என எடப்பாடி கோரிக்கை வைத்தார்.
”இதெல்லாம் பிரச்சினை இல்லை. ஆகவே புறப்பட்டு வாங்க..” என அமித்ஷா கூறவும் எடப்பாடி ஓரளவு நம்பிக்கை பெற்றார். ஆகவே, கே.பி.முனுசாமி, வேலுமணி சகிதமாகச் சென்று அமித்ஷாவை சந்தித்து விட்டாராம்.
முன்னதாக ஆளும் கட்சியான திமுகவின் அதிகார பலம் பணபலம் ஆகியவற்றை எதிர்கொள்ளவும், மத்திய ஆளும் கட்சியோடு நாம் இருப்பது நமக்கு பாதுகாப்பு என்பதோடு இரட்டை இலை சின்னமும் சிக்கல் இல்லாமல் கிடைத்துவிடும் என்பதாலும்.. இத்தகைய சமாதானங்களை சொல்லி கட்சியினரை சமாளித்துக் கொள்ளலாம் என எடப்பாடியிடம் வேலுமணியும் தொடர்ந்து அழுத்தம் தந்ததாக சொல்லப்படுகிறது.
‘தமிழ்நாட்டு நலனுக்கு எதிரான கட்சி’ என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் தயங்காமல் தன்னை வெளிப்படுத்தி வரும் கட்சி தான் பாஜக. தமிழகத்தின் அனைத்து கட்சிகளும், மக்களும் சேர்ந்து எதிர்த்தாலும் நீட்டிற்கு விதிவிலக்கு தர மறுப்பது, இந்தியை திணிப்பது சனாதனத் தன்மை கொண்ட தேசிய கல்வி கொள்கையை திணிப்பது, பொதுத் துறையை அழித்து தனியார் துறையை வளர்ப்பது, ஜி.எஸ்.டி வரியை அதிகாமக் வாங்கிக் கொண்டு தமிழகத்தின் பங்கை தர மறுப்பது, ம நில அரசின் மசோத்தாக்களை கவர்னர் மூலம் அனுமதி மறுப்பது என பல்வேறு இன்னல்கள் செய்யும் பாஜகாவை எதிர்த்து அறிக்கைவிடாமல் பம்மிப், பதுங்கி அரசியல் செய்த அதிமுக இனி உயிர் வாழ்ந்து தமிழகத்திற்கு ஆகப் போவது என்ன..?
தற்கொலைக்கு தன்னை தயார்படுத்திக் கொண்ட அதிமுகவிற்கு நம் ஆழ்ந்த அனுதாபங்களை முன் கூட்டியே தெரிவித்துக் கொள்கிறோம்.
தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள முடியாத கட்சி தமிழகத்தையா காப்பாற்ற முடியும்…?
இந்த நாட்டையே பேராபத்து சூழ்ந்துள்ள நிலைமையில், அதை எதிர்க்க துணிவு கொண்டிருந்தாலே போதும், அதிமுகவை மக்கள் கரை சேர்த்திருப்பார்கள்…!
அடிமையாகவே வாழ்ந்து பழக்கப்பட்டவர்களுக்கு அதிகார அழுத்தங்களை புறம் தள்ள முடியவில்லை போலும்.
அண்ணாமலை தமிழக பாஜக தலைமை பதவியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டிருப்பது என்பது ஒரு நாடகமே. இது தேசிய அரசியல் பாணியில் ஜெ.பி. நட்டாவை டம்மியாக வைத்துக் கொண்டு அமித்ஷா கட்சியை நடத்துவதை போலத் தான் இந்த மாற்றமும் இருக்கும்.
சாவித்திரி கண்ணன்
Leave a Reply