படிதாண்டா பத்தினியும், பல கள்ளக் காதலர்களும்!

-சாவித்திரி கண்ணன்

ஊழலை ஒழிக்க வந்த கட்சியாம்..! திராவிட இயக்க ஆட்சிகள் ஊழல்களில் திளைக்கின்றனவாம்!  நேர்மையான ஆட்சி தரப் போகிறார்களாம்! இந்தக் கட்சியின் தலைவர்கள் ஊழலுக்கு அப்பாற்ப்பட்டவர்களாம்! இந்தக் கட்சியின் முன்னாள் தலைவர், இன்னாள் தலைவர் ஆகியோர்களின் யோக்கியதையை உள்ளது உள்ளபடி பார்ப்போம்;

இந்தக் கட்சிக்கு ஐ.பிஎஸ் ஆபிசராக இருந்து ஐந்தாண்டுகள் தலைவராக இருந்த நபர் இன்றைக்கு பதவியை விட்டுச் செல்லும் போது< பல நூறு கோடிகளுக்கு அதிபதியாகியுள்ளார்!

குறைந்தபட்சம்  சக கட்சிக்காரனிடம் கூட நேர்மையாக இல்லாமல் – தேர்தல் செலவுக்கு மேலிடம் தந்த பணத்தை ஒழுங்காக விநியோகிக்காமல் – கடும் கண்டனத்திற்கு ஆளாகி தான் பதவி இழந்துள்ளார். திமுக ஊழல்களை பொதுவெளியில் அதிரடியாகப் பேசுகிறார். ஏதோ அறச் சீற்றம் கொண்டவர் போல சீன் போடுகிறார். உண்மையில் எந்த ஒரே ஒரு விவகாரத்திலாவது இவர் யாரேனும் ஒரு திமுக அமைச்சரின் ஊழலை அம்பலப்படுத்தி தண்டனை கிடைக்க வழி வகை செய்துள்ளாரா? என்றால், கிடையாது. மத்தியில் ஆட்சி அதிகாரம் இருக்கும் கட்சி என்ற ஹோதாவில் மிரட்டி, ஆதாயம் காணும் அரசியலைத் தான் அண்ணாமலை செய்தார். ஒரு அரவிந்த் கெஜ்ரிவாலையே இவர்களால் தண்டிக்க முடியும் எனும் போது திமுக அமைச்சர்கள் எம்மாத்திரம்..?

இது ஒருபுறமிருக்க ஈவர்கள் ஆரவாரமாக தற்போது தேர்ந்தெடுத்து இருக்கும் புதிய தலைவரின் பூர்வீகத் தொழில் சாராய வியாபாரம்! அதுவும் பல்லாண்டுகள் நெல்லையில் கள்ளச் சராயத்தில் கொடி கட்டிப் பறந்த குடும்பமாம்!

நில அபகரிப்பு தொடங்கி ரியல் எஸ்டேட், ஹோட்டல் இண்டஸ்டிரி, இயற்கை வளத்தை சுரண்டும் குவாரிகள்.. அளவில்லா கருப்பு பணம்… ஆகியவற்றுக்கு பெயர் போனவர் தான் நயினார் நாகேந்திரன். சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது, நான்கு கோடி ரூபாய் விவகாரத்தில் மாட்டியவர்.

அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது அந்தத் துறை தொழிலாளர்களின் கடும் எதிர்பால் பதவி  பறிபோனவர். மின்சாரத் துறை அமைச்சரான போது ஷாக்கடிக்கும் வண்ணம் விளையாடி பதவி இழந்தவர்! தொழிற்துறை அமைச்சர் பதவி தரப்பட்ட போது இண்டஸ்டரிலிஸ்டுகளால் பழி மிகச் சுமத்தப்பட்டதால் ஜெயலலிதாவிடம் அவமானப்பட்டவர்.  இவரது நிர்வாகத் திறமைக்கு ஐந்தாண்டுகளில்  மூன்று துறைகளில் மூக்குடைபட்டதே சாட்சியாகும்.

இவர் மென்மையானவர்.  தென்றல் போன்றவர் என்றெல்லாம் புகழப்படுகிறார். 2018 ஆம் ஆண்டு ஆண்டாள் தொடர்பாக கவிஞர் வைரமுத்துவின் பேச்சு சர்ச்சையான போது வைரமுத்துவின் நாக்கை அறுப்பவர்களுக்கு பத்து கோடி பரிசளிப்பேன் என்றவர் தான் இந்த மென்மையான தென்றல்.

இவர் எல்லோரோடும் இணக்கமாகப் பழகுபவர். எல்லா கட்சியிலும் இவருக்கு நண்பர்கள் உண்டு…என்றெல்லாம் புகழப்படுகிறார். ஆனால், இவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில்  மாவட்ட நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் இவரை சந்திப்பதற்கே மணிக்கணக்கில் காக்க வைப்பதில் பேர் போனவர். அதிகாரமட்டத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே இன்முகம் காட்டுவது இவரது இயல்பு..என்கிறார்கள்! உண்மையில் இவர் பல துறைகளில் பல்லாயிரம் கோடிகள் முதலீடு செய்துள்ளவர் என்ற வகையில் ஒரு வியாபாரியின் இலக்கணமும் இது தானே!

அகில இந்திய அளவில் பாஜகவின் அதிகாரபூர்வத் தலைவர் ஜெ.பி. நட்டா. ஆனால், நடைமுறையில் – உண்மையில்  – அமித்ஷாவே தலைவராக செயல்பட்டு கூட்டணியை உருவாக்குகிறார். நயினார் பணிவாகவும், நயந்தும் பேசுவதைக் கொண்டு நயினாரை ஒப்புக்கு தலைவராக்கி உண்மையில்  தன்னிடம் அதிகாரம் இருப்பது போல பார்த்துக் கொள்ளலாம் என அண்ணாமலை கணக்கு போட்டுள்ளார். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.

ஏனென்றால், நயினாரை பொறுத்த அளவில் அவர் ஆர்.எஸ்.எஸ் தலைமையுடன் நல்ல புரிதலோடு நன் மதிப்பை பெற்றுள்ளார். கட்சிக்குள் அண்ணாமலையைக் காட்டிலும் நிறைய நண்பர்களை பெற்றவர். அதனால் தான் பாஜகவின் முக்கிய பத்து தலைவர்கள் இவரது வேட்பு மனுவில் கையெழுத்து போட்டனர். பார்ப்பனர் லாபியிலும் பக்காவாக இருக்கிறார். பாஜகவில் தலைவராக இருப்பதற்கு இது தானே அடித்தளம். ஆகவே, அண்ணாமலையை ஒரு கட்டத்திற்கு மேல் அடித்து ஆடவிடமாட்டார், நயினார் நாகேந்திரன் என்கிறார்கள்.

காரணம், 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வர் பதவியை சொத்து குவிப்பு வழக்கில் இழக்க நேர்ந்த போது முதலமைச்சர் பதவிக்கு அடக்கமுள்ளவர்களாக கருதப்பட்டத்தில் பன்னீர் செல்வத்துடன் சேர்ந்து பரிசீலிக்கப்பட்டவர்களில் நயினார் நாகேந்திரனும் ஒருவர்.  அந்த காலத்தில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர் மற்றும் பணிவானவர் என்ற வகையில் டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலாவின் குட் புக்கில் இருந்துள்ளார்.

இவரை முதல்வர் ஆக்குவது தொடர்பாக ஜோசியரிடம் ஜாதகம் தந்து கேட்கப்பட்டதாம். அப்போது ஜோசியர் சொன்னது; ’இவரிடம் முதல்வர் பதவியை ஒப்படைத்தால் திரும்பப் பெற முடியாது’ என்பது தானாம்!

அண்ணாமலை அளவுக்கு இவர் திமுகவை அதிரடி விமர்சனம் செய்ய முடியாது. காரணம், இவர் ஒரு மிகப் பெரிய வியாபாரி. எக்கச்சக்க தொழில்களில் முதலீடு செய்துள்ளார். வியாபாரிகள் எப்போதும் முதலீட்டிற்கே மோசம் வந்துவிடக் கூடாது என்பதில் தான் கவனமாக இருப்பார்கள். அதனால் தான் இவர் தென்றல் எனத் தன்னைத் தானே சொல்லி தற்காத்துக் கொண்டார்.

இனி மாற்று அரசியலைப் பேசுவதற்கு எந்த அருகதையும் பாஜகவிற்கு கிடையாது. அதுவே ஒரு ஏமாற்றுக் கட்சி என்பதில் எள்ளவும் பொய்யில்லை.

கிராமங்களில் எத்தர்களை குறிப்பிட ஒரு சொல வடையைச் சொல்வார்கள்!

படி தாண்டா பத்தினியாம்…! பல கள்ளக் காதலர்களாம்!

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time