எதையெல்லாம் சாதாரண மக்கள் செய்யக் கூடாது என சட்டம் சொல்கிறதோ, அதை ஒரு அரசே அடாவடியாக செய்வது தான் எளிய மக்கள் இந்த நாட்டில் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும். கொடுங்கையூர் குப்பை மேட்டில் எரி உலை நிறுவி, அதை கொடும் எரியூராக மாற்றத் திட்டமிடும் அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளிக்கின்றனர்.
வடசென்னை எரி உலை பெருநகர வாழ்க்கை என்பது பேரவல வாழ்க்கையே! ஒரே இடத்தில் மக்கள் குவியும் போது அவர்களால் உருவாகும் மலை போன்ற குப்பைகளுக்கு நேர்மையான முறையில் தீர்வு காண முன் கூட்டியே திட்டமிட்டிருக்க வேண்டும். ஆனால், சுமார் 50 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பெருமலை மலை போல குப்பையை சேர்த்துவிட்டு தீர்வைத் தேடுகின்றனர்.
சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கொட்டும் வளாகத்தில் குப்பையை எரித்து மின்னுற்பத்தி செய்யும் எரிஉலை (Incinerator) திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது.
சுமார் 343 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் அதிர்ச்சி தரும் உண்மையாகும். இதைச் சுற்றிலும் 100 மீட்டர் தொலைவிலேயே குடியிருப்பு பகுதிகள் உள்ளன. சதா சர்வ காலமும் துர் நாற்றமும், கொசுப் பிரச்சினையும் இந்த இடத்தின் சாபக் கேடாகும்.
சுமார் 252 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சுமார் 66.52 லட்சம் டன் திடக் கழிவுகளுக்கு முடிவு கட்டும் வகையில் மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றின் உதவியுடன் குப்பைகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் (Bio -Mining) திட்டத்தின் மூலம் அகற்றி, நிலத்தை மீட்டெடுக்கும் திட்டத்தை மீட்டெடுக்க மாநகராட்சி திட்டமிட்டு ரூ.648 கோடி செலவில்செயல்படுத்தி வருகிறது.

அதேநேரத்தில், அதே குப்பைக் கொட்டும் வளாகத்தில் இனி புதிதாக சேரும் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ரூ. , 1,248 கோடியில், 75 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்படி அப்பகுதியில் இனி புதிதாக சேரும் குப்பைகளை எரிப்பதற்கான எரிஉலை நிறுவப்பட்டு, தனியார் பங்களிப்புடன் நிறுவப்பட்டு அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுமாம். இதன் வாயிலாக, தினமும் 42 மெகா வாட் மின்சாரம், 80 கிலோ வாகன பயன்பாட்டிற்கான காஸ் தயாரிக்கப்படுமாம்.
இந்த எரி உலைகள் வேண்டாம் என அந்தப் பகுதி மக்கள் கடந்த இரண்டாண்டுகளாக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜுன் 27,2023 ஆம் ஆண்டு இதற்காக நடைபெற்ற கருத்துக் கேட்பிலும் மக்கள் இந்தக் கருத்தை ஒட்டுமொத்தமாக வலியுறுத்தினர். இதற்கு காரணம், அவ்வப்போது இந்தக் குப்பை மேடு தீப்பிடித்து எரியும் போது ஏற்படும் கொடும் துர் நாற்றத்தாலும், மூச்சுத் திணறலாலும் அப்பகுதியில் வாழும் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குப்பை எரிக்கப்படுவதால் ஏற்படும் துயர அனுபவத்தை பெற்றுள்ளனர். வெறும் 5 டன், 10 டன் குப்பைகள் எரிவதே பெரும் பாதிப்பைத் தரும் போது 1,400 டன்கள் குப்பை எரிக்கப்படும் போது என்னாகும் என நினைத்து பார்த்தாலே உடலும், உள்ளமும் நடுங்குகிறது.
ஏற்கனவே வட சென்னையில் ;செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், உர தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்களால், இப்பகுதி மக்களுக்கு நுரையீரல் பிரச்சினைகள் அதிகமாக உள்ளன. மண்ணில் பாதரசம் அதிகமாக உள்ளது. குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் உலக அளவில் காலாவதியாகிவிட்டன. எரித்து விட்டால் எல்லா கழிவுகளும் காணாமல் போய்விடாது. அது மண்ணையும், காற்றையும் கடுமையாக மாசுபடுத்திவிடும் என்பதே யதார்த்தமாகும். இது எப்படி தீர்வாகும்.
எரிஉலை திட்டங்கள் வட இந்தியாவில் லக்னோ, புனே, கான்பூர் உள்ளிட்ட பல இடங்களில் தொடங்கப்பட்டு படுதோல்வி அடைந்து மூடப்பட்டுள்ளன.
கொடுங்கையூர் எரிஉலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் மே 25-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படு ம் என வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
நமது அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் படி குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரிக்க வேண்டும். மக்கும் குப்பையை மட்க வைத்தும். மறுசுழற்சி குப்பையை மறுசுழற்சிக்கு அனுப்பவும் வேண்டுமே அல்லாது எடுத்தேன், கவிழ்த்தேன் என எரிக்கக் கூடாது.
மேலும், இந்த குப்பைகளில் பிளாஸ்டிக் மற்றும் பாலீத்தீன் பைகள் அதிகம் உள்ளது. அந்த வகையில் குப்பை மேலாண்மை விதிகள் 2016-ன் படி பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால், இந்தக் குற்றத்தை அரசே அடாவடியாக செய்வது தான் மக்கள் சந்திக்கும் பிரச்சினையாக உள்ளது.
குப்பை எரிப்பினால் வெளிப்படும் நச்சு ரசாயனங்களால் காற்று மாசுபடுவதோடு, புற்றுநோய், தோல்நோய்,இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு, ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகளை மக்கள் எதிர்கொள்வார்கள். எரி உலை சாம்பல் ஆபத்தானது.
வட சென்னையை வாழ முடியாத சென்னையாக மாற்றக் கூடிய இந்த திட்டத்தை ஒரு சிலரின் பொருளாதார ஆதாயத்திற்காக கொண்டு வருவது கொடுமையிலும் கொடுமையாகும். ஆகவே, இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி வடசென்னை குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் மே-25 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மக்களுக்கு மதிப்பளித்து தன் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
அஜிதகேச கம்பளன்
இந்தக் கட்டுரையை படிக்கும் வரை சத்தியமாக இப்படி ஒரு தீராத தலைவலி போல் ஒரு மோசமான பிரச்சனை வட சென்னை மக்களுக்கு இருக்கிறது என்பது தெரியாது. வடசென்னை பக்கம் செல்லும்போது துர்நாற்றம் வீசும்,ஒரு பக்கம் மக்கள் வசித்துக் கொண்டிருப்பார்கள். இதனை சிறு வயது முதலே நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு வேதனையான சோகம் அந்த மக்களுக்கு இருக்கும் என்பதை இந்த கட்டுரை படித்த பின்னரே அறிந்தேன். இதுவரை அரசியல் கட்சிகள் அனைத்துமே அப்பகுதி மக்களுக்காக குரல் கொடுத்ததாக நான் அறியவில்லை. பிரச்சனைக்கு ஒரே தீர்வு இந்த குப்பை எரி உலை திட்டத்தை கைவிடுவதே. ஆனால் மக்கள் வேண்டாம் என கூப்பாடு போட்டு கதறியும் பரந்தூர் விமான நிலையத்தை கைவிடாத இந்த அரசு இந்த திட்டத்தையா கைவிடப் போகிறது?