சமீபத்தில் மறைந்த (25 .11. 2020 )மரடோனா என்ற அந்த மாபெரும் விளையாட்டு வீரனுக்காக அர்ஜென்டினா மட்டுமல்ல, உலகமே கண்ணீர் சிந்தியது .கடந்த புதனன்று மறைந்த அவனுடைய உடல் லட்சக்கணக்கான பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது.
வெறும் 5 அடி 4 அங்குலம் மட்டுமே உயரம் .அந்த உயரத்துக்கு இருக்க வேண்டியதை தாண்டி கூடுதல் எடை. பருத்த உடல் .தடித்த கால்கள். இப்படி ஒரு உடல் அமைப்பை வைத்துக்கொண்டு ஆஜானுபாகுவான உடல் வாகு கொண்ட திறன்மிக்க வீரர்களை சர்வதேச அளவில் எதிர்கொண்டு வெளுத்து வாங்கி, கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் என்ற பெயர் எடுத்தவர் மரடோனா!
அவருடைய விடா முயற்சி. மிகக்கடுமையாக மேற்கொண்ட பயிற்சி. ஓயாத உழைப்பு. அவரை சாதனை சிகரத்தை எட்ட வைத்தது.
மரடோனாவுக்கு உடன்பிறந்த சகோதர- சகோதரிகள் ஆறுபேர். வறுமை தாணடவமாடிய குடும்பம். புழுதி நிறைந்த தெருவில் சக நண்பர்களுடன் கால் பந்தை உதைக்கத் தொடங்கி படிப்படியாக உயர்ந்தார். விளையாட்டில் அவர் பெற்ற வளர்ச்சிதான் குடும்ப சூழலையும் மாற்றியது.
கடந்த நான்கு தசாப்தங்களாக கால்பந்து என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவராக அவர் தான் திகழ்ந்தார்.அதுவும் விளையாடுவதை நிறுத்தி இரண்டு தசாப்தங்களான நிலையிலும் அவர் புகழ் மங்கவில்லை!
ஒரு மகத்தான மக்கள் தலைவர் மறைந்தால் மக்கள் கூட்டம் எப்படி அலைமோதி பரிதவித்து நிற்குமோ, அப்படியொரு மாபெரும் கூட்டம் அந்த விளையாட்டு வீரனின் இறுதி நிகழ்வில் பார்க்கமுடிந்தது. பல லட்ச மக்கள் அஞ்சலி செலுத்த திரண்டனர்.அவர்களை கட்டுப்படுத்த போலீசார் திணறினர்! அர்ஜெண்டினா மூன்று நாள் துக்கம் அனுஷ்டித்தது!
ஜப்பானில் நடைபெற்ற ஜூனியர் உலக கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவை வீழ்த்தி அக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார் .1982,1986, 1990 ,1994 ஆகிய நான்கு முறை தொடர்ந்து உலக கோப்பை போட்டியில் பங்கேற்றார். 16 முறை அணியை தலைமை தாங்கி நடத்திச் சென்றுள்ளார். பிரேசிலின் பீலேவும் இவரும் நூற்றாண்டின் சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப் பட்டனர். 2000 ஆண்டில் இவ்விருதுகளை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு வழங்கியது.
அர்ஜென்டினா என்ற நாட்டோடு அவர் ஆட்டம் அடங்கி விடவில்லை. தன் நாட்டை தாண்டி உலகம் முழுவதும் வலம் வந்தார் .பல்வேறு நாடுகளில் பயணித்துத் தான் கற்றதை இளம் வீரர்களுக்கு சொல்லிக்கொடுத்தார்.
இந்தியாவில் தமிழகம், கேரளம் ,மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.காட்சி போட்டிகளில் விளையாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
இவ்வளவு பெயரும் புகழும் கிடைக்க என்ன காரணம்?, உலகுக்கு அவன் விட்டுச்சென்ற செய்தி எது? என்பதை கால்பந்து விளையாட்டை நேசிப்போர் மட்டுமல்ல, அனைத்து தரப்பினரும் குறிப்பாக இளைய சமுதாயம் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்.
மெக்சிகோவில் 1986 -ம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் ,ஜெர்மனி- அர்ஜென்டினா இடையே மோதல். உலகமே போட்டியை ஆர்வத்துடன் காணத் தயாராகிக் கொண்டிருந்தது.
இப்போட்டியில் யார் வெல்வார்கள் என்று வல்லுநர்கள் பலரும் கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஒரு மூத்த வல்லுநர் சொன்ன கணிப்பு இதுதான்,
” ஆட்டத்தின் போது முன்களம், பின்களம் எங்குமே அவர்தான் தென்படுகிறார்.மரடோனா இருக்கும் அணிதான் வெல்லும்”. அவருடைய கணிப்புப்படி 3 -2 என்ற கோல் அடிப்படையில் அர்ஜென்டினா வெற்றி வாகை சூடியது .
ஆட்டத்தில் மட்டுமல்ல, அந்த உலகக் கோப்பை தொடரின் சிறந்த ஆட்டக்காரராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தங்க கால்பந்து பரிசாக வழங்கப்பட்டது.
அதே உலக கோப்பைத் தொடரின் காலிறுதியில் நடைபெற்ற போட்டியும் உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது.
1982 ஆம் ஆண்டில் நடைபெற்ற ,பாக்லாந்து பிரச்சினை தொடர்பான போரில் இங்கிலாந்திடம் அர்ஜென்டினா தோல்வியைச் சந்தித்திருந்தது .
அந்தப் போரின் வெற்றியை இங்கிலாந்து மக்கள் பெரிதும் கொண்டாடி மகிழ்ந்த வேளையில், அர்ஜெண்டினா நாட்டு மக்கள் அளவு கடந்த மனக்காயம் அடைந்து துவண்டிருந்தனர். அந்தக் காயம் எக்காலத்திலும் ஆறாத காயமாக இருக்குமென்று கருதப்பட்டது.அச்சூழலில் அடுத்த நான்கே ஆண்டுகளில் மரடோனா என்ற மாவீரன் அக்காயத்தை முழுவதுமாக ஆற்றிக் கொடுத்தான்.
ஆம்! 1986 இல் நடைபெற்ற உலக கால்பந்து போட்டியின் காலிறுதியில் திறன் மிகுந்த வீரர்களைக் கொண்ட இங்கிலாந்து அணியும் மரடோனா தலைமையிலான அர்ஜென்டினா அணியும் மோதின. அர்ஜென்டினா மக்கள் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவும் கூட பாக்லாந்து போரின் ஒரு நீட்சியாகத்தான் இப்போட்டியைப் பார்த்தன.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் மரடோனா விசுவரூபம் எடுத்தார். இங்கிலாந்து வீரர்களை அநாயசமாகக் கடந்து சென்று இரண்டு கோல்கள் அடித்தார். 2-1 என்ற அடிப்படையில் அர்ஜென்டினா அபார வெற்றி பெற்றது. அப்போட்டியில் அவர் அடித்த ஒரு கோல் நூற்றாண்டின் சிறந்த கோலாக கால்பந்து விளையாட்டின் சர்வதேச கூட்டமைப்பு(FIFA) தேர்வு செய்தது.
தங்களின் துயர் துடைக்க வந்த கடவுளின் வடிவமாகவே அந்நாட்டு மக்கள் மரடோனாவை பாவித்துக் கொண்டாடினர்.
இத்தாலியில் 1990 இல் நடைபெற்ற உலக கால்பந்து போட்டியிலும் அர்ஜென்டினா அணிக்கு தலைமை தாங்கி மரடோனா வந்தார் .இப்போது உலகத்தின் ஒட்டுமொத்தப் பார்வையும் எதிர்பார்ப்பும் அவர் மீது தான் இருந்தன. லட்சக்கணக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் அவர் பெயரையும் அவருடைய உருவப்படத்தையும் தாங்கிய உடை அணிந்து ஆர்ப்பரித்தவாறு போட்டிகளைக் கண்டனர்.
ஆனால், 1986ல் இருந்த வேகம் அவரிடம் இந்த சமயம் இல்லை .காலம் அவர் உடல் இலேசான தளர்வை கண்டிருந்தது .
30 வயதாகியிருந்த அவரிடம் முந்தைய உலகக் கோப்பை போட்டியில் இருந்த துடிப்பு ,எதிரணியினரை சாதுரியமாக கடந்து ஊடுருவி மின்னல் வேகத்தில் பந்தை எடுத்துச் செல்லும் திறன் குறைந்து இருந்தது .ஆனாலும் அணியை திறம்பட நிர்வகித்து நடத்திச் செல்லும் அபார ஆற்றல் ஒருபடி மேலோங்கி இருந்தது . அவருடைய அணியில் வலுவான பின்கள வீரர்கள் இருந்தாலும் முன் களத்தில் கனிஜியா என்ற ஒற்றை வீரர் மட்டுமே எதிர் அணியினருக்கு சவால் விடும் வகையில் விளையாடினார் .
முழு நிறைவு இல்லாத இந்த அணியை வைத்துக்கொண்டே இறுதி ஆட்டம் வரை அர்ஜென்டினாவை கொண்டுவந்துவிட்டார், மரடோனா.
அதே ஜெர்மனியுடன் தான் மீண்டும் மோதல். அரையிறுதிப் போட்டியில் கனிஜியா செய்த தவறு காரணமாக இறுதிப் போட்டியில் விளையாட அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதுவரை , மரடோனா லுக்கு வலக்கரமாகத் திகழ்ந்து உரிய சமயத்தில் அவர் எடுத்துக்கொடுக்கும் பந்தை லாவகமாக கோலாக மாற்றி வந்த துடிப்புமிக்க அந்த இளம் வீரரும் இல்லாத நிலைமை. மரடோனா வால் தன் அணியை இறுதிப் போட்டியில் வெற்றி பெற வைக்க முடியவில்லை. அப்போட்டியில் 1-0 என்ற அடிப்படையில் அர்ஜென்டினா தோற்றுப்போனது.
ஆனாலும்கூட 2 ஆம் இடம் பெற்றுக் கொடுத்த அவரை நாடு கொண்டாடியது.
அமெரிக்காவில் நடைபெற்ற 1994 உலக கோப்பை போட்டியிலும் அர்ஜென்டினாவுக்கு அவர் தலைமை தாங்கி வரத் தவறவில்லை. இந்த முறையும் உலகம் அவர் ஆட்டத்தைக் காண தயாராக இருந்தது.ஆனால் இம்முறை ஊக்க மருந்து உட்கொண்டு விளையாடியதாக பிடிபட்டு பாதியிலேயே போட்டியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
விளையாட்டில் மட்டுமல்ல கால்பந்து துறையில் அடி முதல் நுனிவரை அனைத்து நுட்பங்களையும் அவர் அறிந்திருந்தார். ஓய்வு பெற்ற பிறகு அணியின் பயிற்சியாளராக நீண்டகாலம் இருந்தார். தற்போதைய அர்ஜென்டினாவின் நட்சத்திரம் மெஸ்ஸி அவரிடம் பயிற்சி பெற்றவரே.
சர்வதேச போட்டிகளில் இருந்து மரடோனா விடைபெற்ற பிறகு கடந்த 30 ஆண்டுகளில் போர்ச்சுக்கல் வீரர் ரொனால்டோ போன்ற தலைசிறந்த வீரர்கள் உருவான போதிலும் தான் சார்ந்த அணியை உலக கோப்பையை வெல்லும் அணியாக மாற்றுவதற்கு யாராலும் இயலவில்லை .
விளையாட்டுக் களத்தில் ஓய்வு பெற்ற பிறகு ஒரு நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள மரடோனாவால் இயலவில்லை. அவருக்கு ஏற்பட்டிருந்த போதைப்பழக்கம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது .அவர் உபயோகித்த ஊக்கமருந்து பின்னாளில் அவருடைய இதயத்தையும், நுரையீரலையும் பதம் பார்த்தது .உடலும், உள்ளமும் பாதிக்கப்பட்ட நிலையில் மன உளைச்சலுக்கு ஆளாகி அவதிப்பட்டார் .
இது குடும்ப வாழ்க்கையிலும் எதிரொலித்தது. இதன் விளைவாக தன் 60 ஆம் வயதை எட்டிய நிலையிலேயே மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக மரணத்தைத் தழுவிக் கொண்டார். போதை என்ற தீயது அவரிடம் நெருங்காமல் இருந்திருந்தால் இன்னும் இருபது ஆண்டுகள் அவர் வாழ்ந்திருக்கக்கூடும்.
ஈட்டிய பெரும் பணமும், புகழும் அவர் கோட்டை விட்ட உடல் நலத்தை மீட்டுக் கொடுக்க முடியவில்லை.
வளரும் இளம் தலைமுறையினர் அவருக்கு கிடைக்காத மன வளத்தை விளையாட்டு பயிற்சியின்போது சேர்ந்து பெறவேண்டும். இதில் பயிற்சியாளர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.
Also read
மக்களும் ரசிகர்களும் எதிர்பார்க்கதான் செய்வர். அதே சமயம் ஒரு வீரரின் நிறைவான திறன் எப்போதும் அவரிடம் நீடித்து இருக்கும் என்று சொல்ல முடியாது. இயல்பான இந்த புரிதலுடன் வீரர்கள் இயங்க வேண்டும்.ஒரு அரைமணி நேர வேகத்திற்காக உட்கொள்ளப்படும் போதை மருந்து அதே அளவு உடலுக்கும் உள்ளத்திற்கும் எதிர்வினையாற்றும் என்பதையும் ஆழ்மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
” உண்ணற்க கள்ளை; உணில் உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்’’
(திருக்குறள்: 922)
சான்றோர்களால் வெறுக்கப்படுவது போதைப் பொருள். அது பற்றிய எண்ணம் சிந்தனையில் உதிக்கும் போதே அதை ஒழித்துவிட இளம் வீரர்கள் பழகிக் கொள்ள வேண்டும்.
கால்பந்து விளையாட்டுப் போட்டியின் ஓர் அடையாளமாகவே அவர் திகழ்ந்தார்.
விளையாட்டில் மட்டுமல்ல சமூக எண்ணத்திலும் கூட
அவரிடம் மாறுபட்ட சிந்தனையோட்டம் இருந்தது.
கியூபா நாட்டில் தனக்குக் கிடைத்த அமைச்சர் பதவியை தூக்கி எறிந்து விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறி, சுதந்திரத்திற்காக தென் அமெரிக்கக் காடுகளில் போராடிக்கொண்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களுடன் சேர்ந்து போராடி , ஆதிக்க சக்திகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு கொடூரமாக பலியான சேகுவேராவை மிகவும் நேசித்தார். புரட்சித்தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் உருவத்தை தன் உடலில் தரித்துக்கொண்டிருந்தார்.
வல்லாதிக்க சக்திகளுக்கு எதிரான இத்தகைய குணநலன்களும் சேர்ந்துதான் இன்றைக்கு மரடோனா என்ற அந்த மாவீரனைக் கொண்டாட வைத்திருக்கின்றன.
Leave a Reply