மத நம்பிக்கையாளர்களை பாதுகாக்கவே இந்த சட்டம்!

-சாவித்திரி கண்ணன்

மூட நம்பிக்கைகள் எல்லாம் இப்போ இருக்குதா என்ன? எதுக்கு சட்டமெல்லாம்? இதனால் மத நம்பிக்கை உள்ளவர்கள் மனம் புண்படுமே…. எனப் பொதுவாக பலர் பேசுகின்றனர்.  மூட நம்பிக்கை ஒழிப்பு என்பதை நாத்திகத்தோடு சம்பந்தப்படுத்தி இந்த சந்தேகம் வருகிறது. இல்லை, இது மத நம்பிக்கையாளர்களுக்கே அதிகம் தேவையாகிறது? எப்படி..?

கடந்த இரண்டு நாட்களாக இந்த விவகாரம் தான் அனல் பறக்க சூடாக விவாதிக்கப்படுகிறது.
சட்ட சபையில் ”மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்” என எழிலன் எம்.எல்.ஏ பேசியதற்கு ஆதரவாக ஏகப்பட்டோர் பதிவிட்டு வருகின்றனர்.
‘கலைஞர் முன்பே இந்த சட்டம் வேண்டும்’ எனக் கூறியதை தனிப்பட்ட முறையில் சி.பி.எம் செல்வா நினைவுபடுத்தி, வலியுறுத்தி உள்ளார்! கம்யூனிஸ்டுகள், திராவிடர் கழகத்தினர், பல முற்போக்கு அமைப்புகள் இந்த சட்டம் வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தி உள்ளனர்.

ஆனால், மூட நம்பிக்கை ஒழிப்பு என்பது  நாத்திகர்களை விடவும்,  ஆத்தீகர்களையே அதிகம் பாதுகாக்கிறது என்பதே உண்மை!

ஆன்மீகவாதியான வள்ளலார் தான் மூட நம்பிக்கை எதிர்ப்பு முரசை முதன்முதலாக ஓங்கி அடித்தவர்;

”சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே

சாத்திரச் சந்தடியிலே, கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்

அலைந்தழிந்து வீணே நீர் அழிவது அழகல்லவே’’

என்றும்,

”கலையுரைத்த கற்பனையை

நிலையெனக் கொண்டாடும்

கணுமூடி வழ்க்கமெல்லாம் மண் மூடிப் போக’’

என்றும் ஏகப்பட்ட பாடல்கள் எழுதி மக்களை எச்சரித்துள்ளார்.

மகாகவி பாரதியும் ஒரு ஆன்மீகவாதியே அவரும் மூட நம்பிக்கைகள் குறித்து எச்சரித்துள்ளார்.

”தெய்வம் பலபலச் சொல்லி பகை தீயை வளர்ப்பவர் மூடர்

உய்வதனைத்திலும் ஒன்றாய் ஓர் பொருளானது தெய்வம்’’

”உண்மையின் பெயர் தெய்வமென்போம்- அன்றி

ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்’’

என்றார், பாரதியார்.

நாத்திகர்கள் யாரும் போலிச் சாமியார்களிடமோ, போலி ஜோதிடர்களிடமோ, மாந்தீரீகம், மந்திரம் செய்வோர்களிடமோ ஏமாந்து பெரும் பணத்தை இழந்து சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளானதாக வரலாறில்லை.

# ஆவிகளிடம் பேச வைக்கிறேன் உங்களை என ஆசை காட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்தல்

# மாந்திரீகம் என்ற பெயரில் பெண்களிடம் நகை பறிப்பதோடு, கற்பையும் சூறையாடும் போலிச் சாமியார்களுக்கு தமிழகத்தில் பஞ்சமில்லை.

# உங்களுக்கு யாரோ செய்வினை வைத்திருக்கிறார்கள். அதனால் தான் நீங்க முன்னேற முடியாமல் கஷ்டப்படுகிறீர்கள் எனக் கூறி  பில்லி, சூனியம் எடுக்கும் பெயரால் அரங்கேறும் பண மோசடிகள்; சொல்லி மாளாது…

# அந்த பூஜை செய்தால் பரிகாரம், இந்த பூஜை செய்தால் பரிகாரம் எனக் கூறி ஏற்கனவே பணக் கஷ்டத்தில் உழல்பவனை மீட்கிறேன் எனக் கூறி கடனை, உடனை வாங்க வைத்து பெரிய பூஜைகள் நடத்தி பெரும் கடனாளியாக்கி பள்ளத்தில் தள்ளிவிடப்பட்ட ஏராளமானவர்களை நான் அறிவேன்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மூட நம்பிக்கை ஒழிப்பு குறித்து ஏராளமான பாடல்கள் எழுதியுள்ளார்.

”மடமை தான் அச்சத்தின் வேராம்- அந்த

மடமையிலே விளைவது தான் போராம்.’’

”பேடி வழக்கங்கள் மூடத்தனம்- இந்தப்

பீடைகளே இங்கு சாத்திரங்கள்’’

”நாட்டின் தலைவர்கள் சாதி மத

நாய்வெறி தன்னை நறுக்குதல் வேண்டும்’’

என்றார் பாரதிதாசன்!

சின்னச் சின்ன மூட நம்பிக்கைகள் பலருக்கும் இருக்கவே செய்கிறது. அது அவரது முன்னேற்றத்தை தடுப்பதாக இல்லாத வரை, அடுத்தவரை ஏமாற்றுவதாக இல்லாத வரை பிரச்சினை இல்லை. ஆனால், ஒருவரின் துன்பத்தை, துயரத்தை தன் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் சூது மதியாளர்களை எச்சரிக்கவும், தண்டிக்கவும் வேண்டும்…என்பதை எவருமே ஏற்றுக் கொள்வார்கள்!

உதாரணத்திற்கு ஒரு சில சம்பவங்களை பட்டியலிடுகிறேன்.

# 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தஞ்சாவூர் மல்லிப்பட்டினத்தில் தாத்தாவின் உடல்நிலை சரியாக வேண்டும் என்பதற்காக 6 மாத பெண் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து நரபலி கொடுத்த கொடுமை நடந்தது.

# 2022-ல், கேரளாவின் எலந்தூர் கிராமத்தில்  பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த பகவல் சிங் – லைலா இணையருக்கு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை சரி செய்வதாக கூறி, முகமது சாபி என்ற மாந்திரீகர் பத்மா ரோசலின் எனஇரு தமிழகப் பெண்களை கடத்தி சென்று  நரபலி கொடுத்த செய்தி கேரளத்தையும், தமிழகத்தையும் ஒருசேர உலுக்கியது.

2013-ல் மகாராஷ்டிர அரசும், 2017-ல் கர்நாடக அரசும் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றின. கர்நாடகத்தில் 2020-ல் பாஜக அரசு அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது என்பதை கவனப்படுத்துகிறேன். ஆகவே இதை பாஜகவினர் எதிர்க்க முடியாது.

அதே சமயம் சட்டம் போட்டு மட்டும் இதை தடுக்க முடியாது. அறிவியல் பூர்வமான அணுகுமுறைகளை மக்களிடம் வளர்த்தெடுப்பதன் மூலமும், எதையும் அப்படியே ஏற்காமல் சற்று தர்க்கபூர்வமாக யோசிக்கவும் பயிற்சி தர வேண்டும்.

முக்கியமாக மனதில் பேராசை எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் துணிவுள்ளோர் ஏமாறமாட்டார்கள். பொருளாதார கஷ்டமா? பரிகார பூஜை செய்யுங்கள் என்பவர்களை நாடாமல் தங்கள் அறிவையும்,உழைப்பையும், நற்பண்புகளையும் மட்டுமே நம்புவர்.

சட்டம் போட்டாலும் இதையெல்லாம் பெரிதாக தடுத்துவிட முடியாது. ஓரளவுக்கு உதவலாம். அப்படியேனும் உதவட்டுமே!

சாவித்திரி கண்ணன்.

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time