கேட்கப்பட்டவை, எதிர்பார்க்கப்பட்டவை எதுவுமே முதல்வரின் அறிவிப்பில் இல்லை! பறிக்கப்பட்வை சில திருப்பியளிக்கப்பட்டுள்ளன. என்னென்ன அத்தியாவசியமானவை என்ற புரிதலே அரசின் தலைமைக்கு இல்லாமல் இருப்பது தான் முதல்வரின் அறிவுப்பு சொல்லும் செய்தியாகும். இதோ ஒரு நினைவூட்டல்;
தமிழ்நாடு அரசு சட்டமன்றக் கூட்டத் தொடரில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒன்பது வகையான அறிவிப்புகளை முதல்வர் (28/04/2025) வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்புகளைப் பற்றி பெருமை கொள்ள எதுவுமே இல்லை என்பதே யதார்த்தம்.
ஆமாம், அரசு ஊழியர்களுக்குப் புதிதாக எதுவும் அறிவிக்கவில்லை. ஈட்டிய விடுப்பு சரண்டர் செய்து பணப்பலன் பெறும் நடைமுறையை வரும் அக்டோபர் மாதத்திலிருந்து அறிவித்துள்ளார்கள். கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் அறிவிப்பில் சரண் விடுப்பை 1/04/2026 முதல் பணப்பலன் பெறலாம் என்று அறிவித்தனர். மேலும் பழைய ஓய்வூதியம் குறித்தும் எந்த அறிவிப்பும் செய்யாமல் விட்டுவிட, நான்கு ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றாமல் வஞ்சித்து வந்ததுடன் பட்ஜெட்டிலும் அறிவிக்கவில்லை என்று கொந்தளித்தனர் அரசு ஊழியர்கள்.
அதைத்தொடர்ந்து ஜாக்டோ ஜியோ அமைப்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒன்றிணைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தது. மார்ச் 23 அன்று தமிழ்நாடு முழுவதும் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பெருவாரியான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி தற்போதைய முதல்வருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தருவது தான் முடிவு என்று ஒற்றைக் குரல் எழுப்பினர்.
ஏனெனில், அறிவித்த சரண் விடுப்பு பலனும் இவர்கள் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு புதிய அரசு அமைந்த பிறகே வெளியிடும் அறிவிப்பாக 2026 பட்ஜெட் குறித்து 2025 இல் இந்த அரசு வெளியிட்டதை ஏமாற்று வேலையாகவேப் பார்த்தனர். ஆகவே தான் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் போராட்டம் என்று அறிவித்து வந்த நிலையில் தற்போது ஆறு மாத காலம் முன்பு சரண் விடுப்பு பலனை துய்த்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளதைப் பார்க்க முடிகிறது.
மேலும் சரண் விடுப்பு பணப்பலன் என்பது பல ஆண்டுகளாக ஏற்கனவே அரசு ஊழியர்கள் பெற்று வந்ததேயன்றி இந்த ஆண்டு தான் இப்போது தான் புதியதாக அறிவிக்கப்பட்டது என்று பெருமை கொள்ள முடியாது. பல ஆண்டுகளாக வாங்கி வந்த பயனை கொரோனா காலத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த அரசு அமைந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் அதை நிரந்தரமாக நிறுத்தினார். ஆகவே பிடுங்கி வைத்திருந்த உரிமையை தற்போது மீண்டும் அரசு ஊழியர்கள் வசமே கொடுத்து விட முன்வந்துள்ளனர் என்பது தான் கள எதார்த்தம். எனவே இதைக் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை.
அடுத்ததாக அகவிலைப்படி உயர்வு 2% என்ற அறிவிப்பு வருடா வருடம் தரும் அறிவிப்புதானேயன்றி இந்த வருடம் புதிதாக அறிவிப்பு செய்ய வில்லை. விலை வாசி உயர்வு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது, ஆகவே பஞ்சப்படிகளை உயர்த்தித் தர வேண்டியது அரசின் கடமை. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பைத் தருவதைத் தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பைத் தரும். எனவே இந்த அறிவிப்பிலும் புதிதாக மகிழ்ச்சி அடைய ஏதுமில்லை. இப்படியாக திருமணக் கடன், பண்டிகை முன்பணம் என வட்டியில்லா கடன்களை வழங்கும் அறிவிப்புகள் அர்த்தமற்றவை. இவை மக்களின் பார்வையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இவ்வளவு சலுகைகளை வழங்கியுள்ளது அரசு என்ற கருத்தை விதைப்பதாகவே அறிய முடிகிறது. கடன் தேவைப்படும் அரசு ஊழியர்கள் அவர்கள் திருமணத்திற்கு வங்கிகளில் கடன் பெற முடியும். உண்மையில் இந்த அறிவிப்புகள் அரசு ஊழியர்களை கடனாளியாக்கும் சூழ்ச்சியோ.. என்ற விவாதங்கள் போய்க் கொண்டுள்ளது.
பழைய ஓய்வூதியம் என்னவானது?
ஆனால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த அறிவிப்புகள் எதுவுமே தேவையில்லை. அவர்கள் எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்று தான் அது பழைய ஓய்வுதியம் வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கை மட்டுமே. ஆய்வு செய்யக் குழு அமைக்கிறோம், அவர்கள் செப்டம்பர் இறுதிக்குள் அறிக்கை தருவார்கள் அதன் பிறகு முடிவு எடுக்கப்படும் என்பதெல்லாம் பம்மாத்து வேலை.
இந்த ஆட்சி பதவி ஏற்றது முதல் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. வெறும் ஐந்தாண்டுகள் செய்த வேலைக்கு ஓய்வூதியம் பெறுபவர்களே தங்கள் ஓய்வூதியத்தை இழக்கத் தயார் இல்லை. ஆனால், அரசு ஊழியர்கள் கேட்டால் கமிஷன் அமைத்து காலம் தாழ்த்துகிறீர்கள்.
கவனிக்கத் தவறிய முக்கிய அம்சங்கள்;
# அரசுத்துறையில் ஆறு இலட்சம் காலிப் பணியிடங்கள் உருவாகியுள்ளன.
# ஆட்கள் பற்றாகுறையால் சமீபகாலமாக அதிக வேலைப் பளுவினால் அரசு ஊழியர்கள் திணறுகிறார்கள். அதீத வேலைச் சுமையால் இளம் வயதில் இறக்கும் அரசு ஊழியர்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து கொண்டிருப்பதை அரசு பொருட்படுத்தவே இல்லை.
# அரசுப் பள்ளி கல்லூரிகளின் அடிப்படைத் தேவையாக இருப்பது நிரந்தர ஆசிரியர் நியமனம். பள்ளிகளில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்தோ தலைமை ஆசிரியர்களை நியமிப்பது குறித்தோ எந்த ஒரு சிறிய அறிவிப்பும் இல்லை.
# நீண்ட வருடங்களாகப் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் குறித்தோ, கௌரவ விரிவுரையாளர்களுக்கு நிரந்தரமான படி குறித்தோ எதிர்பார்த்த அறிவிப்புகள் எதுவுமில்லை.
# இரவுக் காவலர்கள் துப்புரவுப் பணியாளர்கள் இல்லாமல் அல்லாடும் அரசுப் பள்ளிகளில் இவர்களின் பணி நியமனம் தொடர்பான அறிவிப்பு இல்லாதது மிகவும் மன உளைச்சலைத் தருகிறது.
# அரசு பள்ளிகளில் நீண்ட வருடங்களாக பணியாற்றும் மேலாண்மைக் குழு ஆசிரியர்களை நிரந்தரப்படுத்தும் அறிவிப்பு இல்லை.
# அரசு பள்ளிகளில் மாதம் ரூபாய் ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே அடிமாட்டுக் கூலியாக பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களை ரூபாய் பத்தாயிரமாவது கொடுத்து நிரந்தரம் செய்வது தான் உண்மையான சமூக நீதி.
Also read
# தனியார் மயம், ஒப்பந்த மயம், வெளி முகமையம் என்ற வகையிலான புதிய பாணி அரசுத் துறைகளில் அறிவிக்கபடாத செயல் திட்டமாக அரங்கேறி வருவதை வாபஸ் பெற அறிவிப்பு இல்லை.
# சத்துணவு ஆயா வேலை தொடங்கி பேராசிரியர் பணி வரை பல லட்சங்களுக்கு பேரம் பேசி வேலை கொடுக்கும் கொடுமைகளுக்கு முதல்வரின் பதில் என்ன?
# இப்படிப்பட்ட சூழலில் அரசு ஊழியர்களுக்கு அவர்களை ஏமாற்றும் படியான அறிவிப்புகள் பொது மக்கள் மனதில் அரசு ஊழியர்கள் மீது வயிற்றெரிச்சல் உருவாக்கும் நடைமுறைகள் தான் இவை.
அழும் குழந்தைகளுக்கு கிலுகிலுப்பையைக் காட்டி, அப்போதைக்கு அழுகையை நிறுத்தும் வேலை தான் இந்த அறிவிப்புகள். குழந்தை மீண்டும் அழும். ஆமாம், அரசு ஊழியர்களின் நிரந்தர அழுகையை நிறுத்த வேண்டும் என்றால் ஓய்வூதியம் தரும் அறிவிப்பால் மட்டுமே இயலும்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கணிசமான வாக்கு வங்கியை இழக்க மனமின்றி ஆட்சி முடியும் தருவாயில் அவசர கதியில் முதல்வர் ஸ்டாலின் இப்படியான அறிவிப்புகளை தந்துள்ளார் என்றே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது..
சாமானியன்
இவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதியை கொடுத்தால்கூட வேலை செய்ய லட்சக்கணக்கானோர் தயாராக உள்ளனர் என்பது இவனுங்களுக்கு தெரியுமா?
110 கீழ் அவசர அறிக்கை
SIR, ALSO TALK ABOUT PUBLIC SERVANT’S INCREASING CORRUPTION…