இன்னும் பல மடங்கு தீவிரமடைகிறது, தில்லி விவசாயிகள் போராட்டம்

சாவித்திரி கண்ணன்

டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் அகில இந்திய அளவில் மட்டுமல்ல,அகில உலக அளவிலும் இது வரை காணாத போராட்டமாக உருவெடுத்துள்ளது! பல்லாயிரக்கணக்கில் டிராக்டர்கள், டிரக்குகள், பேருந்துகள் ,வேன்கள் ஆகிவற்றில் வந்து சேர்ந்துள்ள பல லட்சம் விவசாயிகளின் வீரம் செறிந்த எழுச்சியை வெகுஜன ஊடகங்கள்  உரிய முக்கியத்துவம் தராமல் தவிர்ப்பதன் மூலம் மக்களிடம் நன்கு அம்பலப்பட்டுவிட்டனர்.

நான்காவது நாளாகத் தொடரும் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு இன்று இன்னும் விவசாயிகள் வந்து சேர்ந்தவண்ணம் உள்ளனர். கடும் பனிப் பொழிவு,போலீசார் தரும் நெருக்கடிகள்,சாலைகளில் பள்ளம் தோண்டியும்,கற்குவியல்களை வைத்தும் ஏற்படுத்தப்படும் தடைகள் ஆகியவற்றால்,தங்கள் பயணத்தை அரசு சாகசப் பயணமாக்கிவிட்டதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

ஒவ்வொரு இடத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகளை சரிப்படுத்தி,முன்னேறுவது சுவாராசியமான அனுபவமாக மாறிவிட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

70 வயது மதிக்கதக்க விவசாயி ஒருவர் பேசுகையில், ’’மோடி தினசரி தன் டைனிங் டேபிளில் சாப்பிடும் ரொட்டிகள் நாங்கள் எங்கள் நிலத்தில் உற்பத்தி செய்து தந்த கோதுமையில் இருந்து பெறப்பட்டவை என்பதை அவர் மறந்துவிட்டார். இந்த அரசாங்கம் விவசாயிகளுக்கு ஏதாவது செய்கிறேன் என்றால், அது நிச்சயம் எங்களுக்கல்ல, கார்ப்பரேட்டு கம்பெனிகளுக்கே என்பது எங்களுக்கு நன்றாக புரிந்துவிட்டது.’’என்றார்.

’’ஜனநாயக நாட்டில் எங்களுக்கு போராடும் உரிமை இல்லையா? அந்த உரிமையை பறிக்க அரசாங்கம் செய்யும் தந்திரங்கள் அவமானகரமனவை! எங்களை தடுக்க,தடுக்க முன்னேறுவோம்,அடிக்க,அடிக்க எழுந்து நிற்போம்.கொரானாவுக்கே அஞ்சாமல் தான் போராட வந்துள்ளோம்’’ என்றனர்!

பஞ்சாபின் 14 மாவட்டங்களில் இருந்து மேலும் பத்தாயிரம் பெண்கள் தனிப்படையாக டெல்லுக்கு புறப்பட்டு வர உள்ளனர்’’ என பிந்து என்ற பெண்விவசாயி தெரிவித்தார்.

’’பஞ்சாபில் கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் குடும்பத்துடன் போராடிக் கொண்டு தான் இருந்தோம்.எங்கள்வீட்டுக் குழந்தைகளும், இந்த போராட்டங்களில் பங்கெடுத்தனர். அரசாங்கம் எங்களை பொருட்படுத்தி இருந்தால், நாங்கள் டெல்லி நோக்கி வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஹரியானா பாஜக முதல்வருக்கு முளை குழம்பிவிட்டது போல இருக்கிறது.விவசாயப் போராட்டத்த திவீரவாத பின்னணியில் வைத்து பேசுகிறார்.எங்கள் மீது கொலைவழக்கு போடப்படும் என மிரட்டுகிறார். உண்மையில் அரசாங்கத்தின் மீது தான் கொலைப்பழியை நாங்கள் சொல்ல வேண்டும்’’ என்றனர் பஞ்சாப் விவசாயிகள்!

டெல்லி போராட்டத்தின் தாக்கம் அனைத்து இந்திய மாநிலங்களிலும் உள்ள விவசாயிகளை நாமும் டெல்லி சென்று போராட்டத்தில் கலந்து கொண்டால் என்ன? என்று ஆர்வப்படுத்தி உள்ளது. தற்போது உத்திரகண்ட் விவசாயிகள் டெல்லி வந்து சேர்ந்துள்ளனர்.பீகாரில் இருந்து பெரும் குழு ரயிலில் புறப்பட்டு உள்ளது.

விவசாயிகள் போராட்டக் குழு தலைவர் சுர்ஜித்சிங் கெளல் பேசுகையில், எங்கள் போராட்ட மேடையில்,களத்தில் நாங்கள் எந்த ஒரு அரசியல்கட்சி தலைவரையும் பேச அனுமதிக்கமாட்டோம். விவசாயிகளின் போராட்டத்தை அரசியல்மயபடுத்தமாட்டோம். கார்ப்பரேட்டுகளின் காலடிகளில் விழுந்திருக்கும் அரசாங்கம் எழுந்து வந்து எங்களிடம் நிபந்தனையின்றி பேச வேண்டும். அதுவரை நாங்கள் டெல்லியை முற்றுகையிட்டுக் கொண்டிருப்போம்.தற்போது சிங்கு நுழைவு வாயிலும்,திகிரி நுழைவு வாயிலிலும் போராடி வருகிறோம்,போகப்,போக கூட்டம் சேரும் போது, மேலும் மூன்று நுழைவு வாயில்களிலும் அணிதிரள்வோம். அதாவது, டெல்லி-ஜெய்பூர் எல்லை, டெல்லி -மதுரா எல்லை,டெல்லி-ஹப்பர் எல்லை ஆகிவற்றுக்கும் விவசாயிகள் வரவுள்ளனர் என்றார்.

இதற்கிடையில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் வெளியிட்டுள்ள பத்திரிக்கைச் செய்தியில்,’’பஞ்சாப் மற்றும் அரியானா உழவர்கள் பெரும் எண்ணிக்கையில் பேரணியைத் தொடரவுள்ளனர். உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் உழவர்களும் டெல்லி செல்கின்றனர்.

அரசு உள்துறை அமைச்சகம் மற்றும் உளவுத்துறை மூலம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதை உழவர் அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பதுடன் உயர்நிலை அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையை வலியுறுத்தியுள்ளனர்.

உழவர்கள்  பெரும் எண்ணிக்கையில் டெல்லி புறப்பட்டு வருமாறு 50க்கும் மேற்பட்ட உழவர் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

உழவர்களுக்கு ஆதரவான உழவர்களை விழுங்க நினைக்கும் பெருவணிக நலன்களுக்கு எதிரான அனைத்து சக்திகளும் இப்போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமென உழவர் அமைப்புகள் கோருகின்றோம்.

பேரராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதுடன் டிசம்பர் ஒன்று முதல்  அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் நடத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய ஒன்றிய அரசின் உழவர் நலன் மற்றும் மக்கள் நலனுக்கெதிரான மூன்று சட்டங்களையும், திருத்தப்பட்ட மின்சார சட்ட முன்வரைவு 2020 ஐயும் திரும்பப் பெறவேண்டும் என்றும் உழவர் சங்கங்கள் ஒருமித்த குரலில் கோருகின்றன.

அமைதியான முறையில் உறுதிப்பாட்டுடன் டெல்லியை நோக்கி ஆர்ப்பரித்து வரும் உழவர்கள் தங்கள் கோரிக்கைகளை அடைவதில் முழு உறுதியுடன் உள்ளனர்.

“டெல்லி செல்வோம்” என்ற போராட்டத்தை அறிவித்த பின் இதுவரை இந்திய அரசு உழவர்களின் கோரிக்கைகளைக் கவனப்படுத்திக் கொள்ளவில்லை.

“டெல்லி செல்வோம்” என்ற பெயரில் நாடு முழுவதும் மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவதென்று செப்டம்பர் 2020 ல் அறிவித்தது முதல் இன்று வரை அரசு உழவர்களின் கோரிக்கையைக் கவனப்படுத்திக் கொள்ளவில்லை.

நாடு முழுவதும் உள்ள உழவர்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ளூர் அளவில் பல போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வரும் அதே வேளையில் டெல்லிக்கு அருகிலுள்ள மாநிலங்களின் உழவர்கள்  டெல்லி நோக்கி அணி வகுத்துவருகின்றனர்.

டெல்லி வருவதற்காக உழவர்கள் விரிவான முன்னேற்பாடுகளைச் செய்துள்ளனர். ஆனால், அவர்கள் மீது நீரைப் பீச்சியடிப்பது, கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசுவது, தடியடி நடத்துவது, சாலைகளில் பள்ளம் தோண்டி உழவர்களை வரவிடாமல் தடுப்பது போன்ற பல்வேறுவிதமான மனிதத்தன்மையற்ற, ஈவிரக்கமற்ற அடக்குமுறைகளை அரசு ஏவியுள்ளது. அரசின்மீது உழவர்கள் நம்பிக்கையிழக்கும் நிலைக்கு அரசே காரணமாகும்.

அரசு கொண்டு வந்துள்ள மூன்று கறுப்புச்சட்டங்களையும், மின்சாரச் சட்ட முன்வடிவு 2020 ஆகியவற்றைத் திரும்பப்பெற வேண்டும் என்ற உழவர்களின் முக்கியக் கோரிக்கைகளுக்குப் பதில் கூறுவதை விட்டு விட்டு உழவர்கள் டெல்லியில் எங்கு முகாமிட வேண்டும் என்பதை நோக்கி விவாதத்தை அரசு திசை திருப்பிவிட முயற்சிக்கிறது

போராட்டம் நடத்தி வரும்  உழவர்கள் மத்தியில் மட்டுமின்றி டெல்லி மக்கள் மத்தியிலும்கூட பெரும் அச்ச உணர்வையும் சந்தேகத்தையும் கிளப்பும் வகையில் அரசு காவல் துறையை ஏவியுள்ளது. பொய் வதந்திகளை பரப்புகிறது. உழவர்கள் செல்லும் வழியிலுள்ள தடுப்புகள் இன்னும் கூட அகற்றப்படவில்லை.

அரசு உழவர்களின் கோரிக்கையைப் பரிசீலிப்பதில் உண்மையாகவே அக்கறை கொண்டிருக்குமானால்,”ஒழுங்கமைவோடு புராரி மைதானத்தில் சென்று போராட்டம் நடத்துங்கள், அதற்குப் பின் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிப்பதைத் தவிர்ப்பதுடன், இச்சட்டங்களின் பலன்கள் பற்றி உழவர்களுக்கு விளக்க முயற்சிப்பதையும் நிறுத்திக் கொண்டு, அரசு என்ன தீர்வை முன்வைக்கிறது  என்ற திட்டத்துடன் நேரடியாக வர வேண்டும். உழவர்கள் தங்களின் கோரிக்கையில் தெளிவாக உள்ளனர். அரசு உழவர்கள் பிரச்சினையை உள்துறை அமைச்சகம், உளவுத்துறை ஆகியவற்றின் மூலம் அணுகுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அகில இந்திய. விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்குழு கோருகிறது.  அரசு இச்சட்டங்களை பாராளுமன்றத்தில் அதிரடியாக நிறைவேற்றியுள்ளதால், உழவர் கோரிக்கைகள் குறித்து அரசின் அரசியல் ரீதியான  பதில் அரசின் மிக உயர்ந்த மட்டத்திலிருந்து வர வேண்டும். உள்துறை அமைச்சகத்தை உழவர் பிரச்னையில் ஈடுபடுத்துவது அரசின் மீது உழவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு மாறாக உழவர்களை மிரட்டுவதாகவே அமையும்.

அகில இந்திய உழவர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழு போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் பொருட்டு உழவர்களை டெல்லியை நோக்கி வருமாறு அழைப்பு விடுக்கிறது.

அத்துடன் அனைத்து பெருவணிக நிறுவன எதிர்ப்பு மற்றும் உழவர் ஆதரவு சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த முன் வரவேண்டும் என்றும் கூட்டமைப்பு விரும்புகிறது. அகில இந்திய அளவில் அணி திரட்டுவதுடன் டிசம்பர் ஒன்று முதல் அந்தந்த மாநில அளவிலும் உழவர்கள் அணிதிரண்டு போராட வேண்டும் உழவர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

பொதுமக்களுக்கு சில சிரமங்கள் மற்றும் தடங்கல்கள் ஏற்பட்டாலும்கூட, டெல்லி, அரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்திலுள்ள பொதுமக்கள் உழவர்களுடன் பெருமளவில் ஆர்வத்துடன் இணைந்து போராட வேண்டும் என்றும் கூட்டமைப்பு அழைப்பு விடுக்கிறது.

இந்திய உழவுத்தொழிலையும், இந்திய உழவர்கள் அனைவரையும் காக்கும் பொருட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஞ்சாப் மற்றும் அரியானா உழவர்களுக்கு  இக்கூட்டமைப்பு மிகுந்த மரியாதையுடன் தலைவணங்குகிறது.  இப்போராட்டத்தின் போது தங்கள் இன்னுயிரை ஈந்த உழவர்கள் இப்போராட்டத்தை முன்னெடுப்பதில் பெரும் உந்து சக்தியாக இருப்பர். நம்முடைய போராட்டப் பாதை அமைதி வழியிலான மக்கள் திரள் போராட்டமாகவே தொடரும்’’ என அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time