சகாயத்தை திமுக ஆட்சியாளர்கள் வெறுப்பது ஏன்..?

-சாவித்திரி கண்ணன்

கிரானைட் கொள்ளையர்கள் சம்பந்தப்பட்ட வழக்கை ஆட்சியாளர்கள் ஆண்டுக் கணக்கில் இழுத்தடிக்க காரணம் என்ன..? பி.ஆர்.பி குவாரிகளை சகாயம் மூடி இருக்காவிட்டால், மதுரை, தேனீ, திண்டுக்கல் மாவட்ட மலைகள் முழுவதும் எப்போதோ விழுங்கப்பட்டு இருக்கும். சகாயத்தின் எதிரிகள் இன்றைய ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாகி விட்டார்களா?

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, கிரானைட் குவாரி கொள்ளையர்கள் அழித்து சூறையாடிய  கண்மாய், குளங்கள், ஓடைகள், பாசன கால்வாய்கள், விவசாய நிலங்கள், ஊர்கள் குறித்த முழு விவரங்களையும்  நேரடியாக களம் கண்டு குறிப்பெடுத்தவர் சகாயம். அதை தமிழக அரசுக்கு  7,000 பக்க அறிக்கையாக  கொடுத்ததோடு, ஒரு லட்சம் 10,000 கோடிகள் அரசுக்கு இழப்பு என்பதை சுட்டிக் காண்பித்து, பி.ஆர்.பி என்ற கிரானைட் கொள்ளையனின் அட்ராசிட்டியை முடிவுக்கு கொண்டு வந்தவர் முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் ஆவார்.

இவர் இதை செய்திருக்காவிட்டால் – சகாயம் களம் காணாவிட்டால் – அங்குள்ள சமண சிற்பங்கள், சமண படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள், 2,200 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோயில்கள் அனைத்தும் எப்போதோ கிரானைட் கொள்ளையர்களின் கோரப் பசிக்கு தீனியாகி இருக்கும்.

சர்வதேச முக்கியத்துவம் நிறைந்த அரிட்டாபட்டி மலையில் 2010  காலகட்டத்தில் அதிமுக ஆட்சி கிரானைட்  கற்களை வெட்ட தனியார்  நிறுவனமான பி.ஆர்.பியின் நிறுவனத்திற்கு  அனுமதி தந்தது. இதற்கு  எதிராக  மனு கொடுத்த அரிட்டாபட்டி மக்களின் நியாயமான கோரிக்கையை அன்றைய  மதுரை மாவட்ட ஆட்சியாளாராக இருந்த  சகாயம்  களத்திற்கே வந்து  பார்வையிட்டதும் அசந்து போனார்.

அரிட்டாபட்டி கிராமம் என்பது ஏழு அழகிய சிறுகுன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ள பகுதி. இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதார பகுதியாக செயல்படுகிறது. 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளன. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி அசத்தலானது. ஆகவே, இதை உயிருக்கு அஞ்சாமல் பாதுகாத்து தந்தது சகாயம் என்பதே வரலாறு.

இயற்கை வளம் சூறையாடப்பட்டது தொடர்பான ஆய்வை சகாயம் நடத்திய போது மலைகள், சமவெளிகள் யாவும் சுற்றி அலைந்து, ஆங்காங்கே கிடைப்பதை உண்டு, இரவெல்லாம் வெட்ட வெளியில் ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்துறங்கி அயராது பாடுபட்டார். கிராம மக்கள் அவருக்கு பாதுகாப்பு தந்தனர்.

இவ்வளவு பெரிய கொள்ளைகளை தடுத்து நிறுத்திய தனிப் பெரும் ஆளுமை தான் சகாயம். இந்தக் உடந்தையாக இருந்த அதிமுக ஆட்சி பி.ஆர்.பியை தண்டிக்க முன்வரவில்லை. அதே போல திமுக ஆட்சியும் இது வரை தண்டிக்க ஆர்வம் காட்டவில்லை.

கிரானைட் கொள்ளை தொடர்பாக 200க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த வழக்குகளில் விசாரணை ஆணையத்தின் தலைவராக இருந்த சகாயம் ஐஏஎஸ் அவர்களின் சாட்சியானது மிக முக்கியமானதாக கருதப்படும் சூழலில் அவரது பாதுகாப்பை விலக்கி அவரை நிராயுதபாணியாக்கி அவரது எதிரிகளுக்கு வேட்டையாடக் கொடுப்பது ஒரு அரசு செய்யக் கூடிய செயலா? என்பதே நமது கேள்வியாகும்.

தனக்கு வந்த மிரட்டல் கடிதங்களை காட்டி  பாதுகாப்பு இன்மையால் ஏதாவது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற  தனது   அச்சத்தை விளக்கி,  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், டி.எஸ்.பிக்கும் சகாயம் கடிதம் எழுதியும் அது ஏன் மறுக்கப்பட்டது என்பதற்கு முதலமைச்சர் விளக்கம் தருவாரா?

  கிரானைட் கொள்ளையர்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள்? அவர்கள் எத்தனையெத்தனை பேரை வெளியில் தெரியாமல் கொன்று புதைத்துள்ளார்கள் என்பது தமிழ் நாட்டிலுள்ள ஒரு பாமரனுக்கும் தெரிந்த உண்மையே. இதில் வெளியே தெரிந்த கொலைகளை விடவும், தெரியாமல் நடந்தவைகளே அதிகமாகும்.

தமிழ்நாட்டில்  சட்டவிரோத கனிமவளங்கள், கல்குவாரிகளை எதிர்த்து செயல் பட்டுவருபவர்களின்  பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இல்லாத சூழலே தற்போது நிலவுகிறது.

புதுக்கோட்டை திருமயம் ஜெகபர் அலி, கரூர் மாவட்டம் குப்பம் கிராமத்தில் சட்ட விரோத கல்குவாரியை எதிர்த்த விவசாயி  ஜெகநாதன்,  திருநெல்வேலி ஜாகீர் உசேன் ஆகியோர் இந்த ஆட்சியில் பொதுச் சொத்தை காப்பதற்காக பலியானவர்கள்.

திமுக ஆட்சி பதவி ஏற்றதில் இருந்து இயற்கை வள சுரண்டல்கள் பல மடங்கு வேகம் எடுத்துள்ளது. இவற்றை தடுக்க முயன்றவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர் நிகழ்வாக உள்ளது. இதோ சில உதாரணங்கள்;

# சூசைபாண்டியாபுரத்தைச் சேர்ந்த கோவில்பத்து வி.ஏ.ஓ.,வான  லுார்து பிரான்சிஸ் முறப்பநாடு பகுதியில், நடந்த மணல் கொள்ளையை தடுக்க முயற்சித்ததில் மணல் மாபியாக்கள் லுார்து பிரான்சிசை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்!

கிரானைட் கொள்ளையை அரங்கேற்றிய பி.ஆர்.பி!

# பழனி அருகே ஆயக்குடி பொன்னிமலை சித்தன் கரடு பகுதியில் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி (வி.ஏ.ஓ), உதவியாளர் மகுடீஸ்வரன், இரு போலீசார் என நான்கு பேரை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்றனர்.

# சட்ட விரோதமாக சவுடு மணல் கடத்தி செல்லும் லாரியை மடக்கிப் பிடித்து வி.ஏ.ஒ, தாசில்தார், கோட்டாட்சியர் என அடுத்தடுத்து தகவல் தெரிவித்து முறைப்படி அவர்களிடம் ரிப்போர்ட் வாங்கி மணல் கடத்தல்கார்களை கைது செய்ய முயற்சித்த கும்பகோணம்- நாச்சியார் கோவில் காவல் நிலைய எஸ்.பி ஈஸ்வரனை 48 மணி நேரத்தில் இடமாற்றம் செய்தனர்!

# அமைச்சர் துரைமுருகனின் சொந்த ஊரான காட்பாடி அருகிலுள்ள பொன்னை ஆற்றில்  சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதை தனது செல்போனில் வீடியோ எடுத்த முன்னாள் ராணுவ வீரர் உமாபதியை நவம்பர் 2, 2023, ஆம் தேதி மணல் மாபியா கும்பல்  அரிவாளால் வெட்டினர்!

இந்த சம்பவங்களில் ஒரு சிலவற்றுக்கு சகாயம் தன் கண்டணத்தை தெரிவித்ததை இன்றைய ஆட்சியாளர்கள்  ரசிக்கவில்லை. அது மிகவும் எரிச்சலை தந்துள்ளது.

மற்ற பல சமூக ஆர்வலர்களைப் போல சகாயம் அவர்களும் ஒரு நாள் கிரானைட் மாபியாக்களால் கொலையுண்டால், அதுவும் சில நாள் பரபரப்பாக பேசப்பட்டு மக்கள் மறந்து விடுவார்கள் என்ற எண்ணமா? அல்லது தங்களுக்கு அள்ளி தந்த வள்ளல் பி.ஆர்.பியை தண்டனையில் இருந்து காப்பாற்ற சகாயத்தை சாய்ப்பது தவிர்க்க இயலாது என கருதுகிறார்களா?

சகாயம் எப்போதும் மத நல்லிணக்கத்திற்கு எதிரான பாஜகவை எதிர்ப்பவர். ஆகையால் அவருக்கான பாதுகாப்பை விலக்கச்  சொல்லி  ஒன்றிய பாஜக அரசு தமிழக அரசை நிர்பந்தித்ததா?

இதில் எது உண்மையான காரணம்…தெரியவில்லை.

ஆனால், சகாயத்திற்கான பாதுகாப்பை விலக்கிக் கொண்டது திமுக அரசின் முதல் தவறு. அவர் ”பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது” என தெரிவித்து, பாதுகாப்பு கேட்டும் தர மறுத்திருப்பது அதை விடத் தவறு. இதை தமிழகமே சீரியசாக எடுத்து விவாதித்து தமிழக அரசை கண்டனம் செய்திடும் போதும் அலட்சியம் காட்டுவது இந்த அரசு தன் தலையில் தானே வைத்துக் கொள்ளும் கொள்ளியாகும். ஏனென்றால், சகாயத்திற்கு ஏதேனும் விபரீதம் நடந்தால் அதன் விளைவு தமிழக ஆட்சியாளர்களை தலை எடுக்க விடாமல் செய்துவிடும்.

சாவித்திரி கண்ணன்

 

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time