அமெரிக்காவின் நிர்பந்தமா? பாகிஸ்தான் பின்னணியில் சீனா இருந்ததால் ஏற்பட்ட தயக்கமா? நமது ரபேல் ராணுவ விமானங்களை சீனாவின் PL-15E ஐ பயன்படுத்தி பாகிஸ்தான் முறியடித்ததால், சீனாவின் ஆயுத வியாபாரத்திற்கு சர்வதேச மவுசு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அமெரிக்காவின் பதட்டமா..? ஒரு அலசல்;
பெஹல்காம் படுகொலையைத்தொடர்ந்து, இந்திய அரசு , பாகிஸ்த்தான் நாட்டில் ஒன்பது இடங்களை குறி வைத்து தாக்கி தாக்குதலை (போரை) தொடங்கி வைத்தது.
அண்டை நாட்டு மீதான இத்தாக்குதலை இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என அழைத்தாலும், இது ஒரு மட்டுபடுத்தப்பட்ட, பொறுப்பான, அளவான, பிரச்சினையை விரிவாக்காத தாக்குதல் என இந்திய அரசு வருணித்தது! இத்தாக்குதல் பாகிஸ்த்தான் இராணுவத்தின் மீதான தாக்குதலோ, பாகிஸ்த்தான் குடிமக்கள் மீதான தாக்குதலோ அல்ல என்றும் இந்திய அரசு விளக்கம் அளித்தது! பயங்கரவாத முகாம்களின் மீதான தாக்குதலே என இந்திய அரசு கூறியது.
ஆனால், பாகிஸ்த்தான் அரசோ இத்தகைய எல்லை தாண்டிய தாக்குதல் பாக் இறையாண்மை மீது இந்தியா தொடுக்கும் போர் என்றும் இதற்கு தக்க பதிலடி உரிய நேரத்தில் பாகிஸ்த்தான் கொடுக்கும் என மே மாதம் 7. தேதியே அறிவித்தது!
இந்திய ஊடகங்களும் , அனைத்து கட்சிகளும் இந்திய ராணுவத்தின் இத்தாக்குதலை , தேச பற்று , பயங்கரவாத்த்திற்கெதிரான தேச ஒற்றுமை என்பதின் பெயரால் வெகுவாக வரவேற்றன!
தேச பற்றின் மொத்த குத்தகைதாரரான பாரதீய ஜனதா கட்சியோ, இத்தாக்குதலை பயங்கரவாத்த்தை வேரோடு சாய்க்கும் மோடியின் அரசின் அஸ்திரம் எனக் கூறியது. பாகிஸ்த்தான் நொறுங்கியது என குதூகுலத்தில் கோடி மீடியாவும் வலது சாரி சமூக ஊடகவியலாளர்களும் கூப்பாடு போட்டனர்.
ஆனால், இந்த ‘மகிழச்சி’ யை தவிடுபொடியாக்கியது போல் ஐந்து இந்திய விமானங்களை – ரஃபேல் விமானம் உட்பட – பாக் விமானப்படை சுட்டு வீழ்த்திய செய்தியை பாக் ராணுவம் வெளியிட்டது. இந்திய அரசு இதை ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும், இச்செய்தியை மறுக்கவும் இல்லை என்பது நெருடலாக இருந்தது. சர்வதேச ஊடகங்களான ராய்ட்டர், சி.என் என். மற்றும் பி.பி.சி, வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ், பிரென்ச் பத்திரிக்கையான லே மாண்ட் போன்றவையும் இத்தகவலை உறுதி செய்ததால் ஒரு ‘ தர்ம சங்கடமான’ சூழல் இந்திய அரசியல் தலைமையை கவ்விக்கொண்டது என்றால் அது மிகையல்ல.
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களின் இடையே 7.8 பில்லியன் யூரோ (சுமார் 62,000 கோடி ரூபாய்) பெறுமான ரஃபேல் விமானங்களை பிரான்சு நாட்டு தஸால்ட் நிறுவனத்திடமிருந்து மோடி அரசு வாங்கியது. அத்தகைய விலை உயர்ந்த , அதி நவீன போர் விமானமான ரஃபேலை பாகிஸ்த்தான் மிக குறைந்த விலையே உள்ள
J10 CE என்ன சீன விமானத்தின் மூலம், சீன ஏவுகணை PL-15E ஐ கொண்டு முறியடிக்கும் என்று கனவிலும் மோடி நினைத்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் அது தான் நடந்தது. விலை உயர்ந்த மூன்று ரஃபேல் விமானங்களை குறைவான விலை கொண்ட சீன விமானமும்,ஏவுகணையும் மட்டமான பாகிஸ்த்தான் ராணுவத்தினரால் இந்திய வான் எல்லைப்பகுதியலேயே, மே 6-7 தேதி இரவே சுட்டு வீழ்த்தப்பட்டது, அகில உலகையும் ஆச்சரியப்பட வைத்தது!
இந்தியா வேண்டுமானால் , ‘சண்டை என்று வந்தால் இழப்புகள் இல்லாமலா இருக்கும் என கடந்து சென்றாலும், இந்நிகழ்வு உலக ராணுவ தளவாடங்களின் சந்தையையே ஒரு குலுக்கு குலுக்கியுள்ளது. தஸால்ட் பங்குகள் சரிந்ததும், சீன நிறுவன பங்குகள் விலை உயர்ந்ததும் இதனால் தான் ஏற்பட்டது.
எங்களது தாக்குதல் இதற்கு மேல் தொடராது என்ற நிலையிலிருந்த இந்திய ராணுவம் இந்த இழப்பிற்கு பின்னர் ஆளில்லா விமானங்கள் ( drones) மூலம் பாக். எ்லையை கடந்து லாகூர் போன்ற ராணுவ தளங்களின் மீது தாக்குதலை நடத்தியது. இதனை – இத்தாக்குதலை 70 விழுக்காடு ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியதன் மூலம் முறியடித்ததாக பாக். ராணுவம் கூறியது, இதை மீறி சில இடங்களில் தாக்குதல் நடந்து சேதங்கள் விளைந்தன என்பதை பாக் ராணுவம் ஒத்துக் கொண்டது, வீழ்த்தப்பட்ட ட்ரோன்களின் பாகங்களை படமெடுத்து வெளியிட்டது பாக் ராணுவம்.
எல்லை பகுதியில் ஷெல்லிங் எனப்படும் பீரங்கி தாக்குதலில் இரு நாட்டு ராணுவமும் முழுமையாக ஈடுபட்டிருந்தன. இதனால் இந்திய எல்லைப்பகுதியில் உள்ள காஷ்மீர் மக்களே வெகுவாக – ஏனைய எல்லைப் பகுதி மக்களை விட வெகுவாக – பாதிப்படைந்தனர்.
இந்திய ராணுவ முகாம்களின் மீதான தனது தாக்குதலை பாக். ராணுவம் மே 9 அன்று தொடுத்தது. 400க்கும் மேற்பட்ட ட்ரோன்களை பாக். ராணுவம் பயன்படுத்தியதாக இந்தியா கூறியது. உதம்பூர், அமிர்தசரஸ் பாரமுல்லா, பெரோஸ்பூர், குஜராத்திலுள்ள பூஜ் போன்ற இடங்கள் தாக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்திய மெயின்ஸ்டரீம் டி வி ஒளிபரப்புகள் குறிப்பாக ரிப்ப்ளிக் டி வி, ஆஜ் தக், நியூஸ் 18 டி வி போன்றவை லாகூரை இந்திய ராணுவம் கைப்பற்றி விட்டது, கராச்சி மீது ஐ என் எஸ் கப்பல்
குண்டு வீசி தாக்கி கராச்சி நகரத்தையே சுற்றி வளைத்ததாகவும், ராவல்பிண்டி சரண்டைந்ததாகவும்,பாக் ராணுவ தலைமை தளபதி முனீர் ஓடி விட்டார் என்றும் உண்மைக்கு புறம்பான, ஒருதலை பட்சமான தகவல்களை தொடர்ந்து பரப்பி வந்தன. வெறுப்பு உணர்வுகளை பரப்பி அதில் குளிர்காய முனைந்தனர். இதனால் இந்திய ராணுவத்தையும் இக்கட்டுக்கு உள்ளாக்கின இந்த ஊடகங்கள்! .
போர் வந்தவுடன் முதலில் மடிவது உண்மை தான் என்பதற்கேற்ப வதந்திகளை பரப்புவதையே முழு நோக்கமாக கொண்டு இந்திய ஊடகங்கள் செயல்பட்டன என்பது வெட்ககேடு. இந்திய ஆட்சியாளர்களோ பொய் செய்திகளை ஒடுக்குகிறேன் என்று கூறிக்கொண்டு 8000 x அக்கவுண்டுகளையும், செய்தி இதழ்களான தி வயர், மற்றும் பி பி சி (உருது) மற்றும் நூற்றுக்கணக்கான யூ ட்யூப் இதழ்களையும் சானல்களையும் முடக்கினர். இதில் பல கலைஞர்களும், பாடகர்களும் அடக்கம். ஆனால், வதந்திகளையும் பொய்களையும், வன்மத்தையும் பிளவு வெறியையும் தூண்டும் டி வி சானல்களை இந்திய அரசு கண்டிக்க கூட இல்லை!
இப்படியாக நடந்த சண்டை மே 10 அன்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது என்று டிரம்பே தனது ட்ரூத் என்ற சமூக ஊடக பதிவில் வெளியிட்டது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
பாக். மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் உலக நாடுகள் அதை ஆதரிக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் இரு நாடுகளை சமாதானம் செய்யவோ, காஷ்மீர் பிரச்சினையில் பிற நாடுகள் (மூன்றாவது நாடு) மத்தியஸ்தம் செயவதையோ இந்தியா விரும்பவில்லை என்ற “விசித்திரமான” நிலையை கடைபிடிக்கும் இந்திய அரசு டிரம்பின் இத்தகைய அறிவிப்பால் மேலும் தர்ம சங்கடத்திற்கு ஆளாகியது எனலாம்.
நிலைமையை சமாளிக்க இந்திய அரசு அதிகாரபூர்வமான மறுப்பை தெரிவிக்காமல் மழுப்பலாக இந்திய அரசு மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஒத்துக் கொள்ளவில்லை என்ற செய்தியை “நம்பகமான செய்தியாக” கசியவிட்டது.
பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற இருதலை பாம்பாக மோடி மவுனத்தை கடைபிடித்து வருகிறார். போர் நிறுத்தத்தை வரவேற்ற பாகிஸ்த்தான் பிரதமர் ஷெரீப் , டிரம்பிற்கு நன்றி கூறுகையில் மோடியோ இம்முயற்சி இரு நாட்டு ராணுவ அதிகாரிகளின் (டி ஜி எம் ஓ- Director General of Military Operations) முடிவாக முன்னிறுத்தி ஒதுங்கி இருப்பது வேடிக்கையாக உள்ளது.
இதன்மூலம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா கடைபிடித்துவரும் – இந்திய பாக் . இடையேயான பிரச்சினைகளை இரு நாடுகளும் பரஸ்பரம் பேசி தீர்த்து கொள்ளுவது, இதில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை, மத்தியஸ்தத்தை இரு நாடுகளும் ஏற்காது என்ற நிலை பாட்டை- இப்பொழுது மோடி அரசு கைவிட்டு விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டிரம்பின் தலையீடும், மே 12 ல் பொதுவான இடத்தில் பிரச்சினைகளை பேச முடிவு செய்திருப்பதை மீண்டும் டிரம்ப் இன்று உறுதி செய்துள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
இதற்கிடையில் ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என்றும், பயங்கரவாத செயல் இனி நடந்தால் பாக். மீது தாக்குதல் தொடரும் என இந்திய ராணுவம் கூறி வருவதும், இந்திய பிரதமர் அலுவலக அதிகாரி (PMO) ‘ சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவது தொடரும் ‘ என்று கூறுவதும் இந்த போர் நிறுத்த்தை பற்றிய தெளிவு இந்திய ஆட்சியாளர்களுக்கு இருக்கிறதா அல்லது சரியான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருக்கின்றனரா என்ற கேள்வியை எழுப்புகிறது.
முதலில் எதற்காக இந்திய அரசியல் தலைமை போரை துவக்கியது? புல்வாமா பாலகோட் தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்ட மாற்றங்களை மறந்துவிட்டு, பாலக்கோட்டை விட பெரிய தாக்குதல் தொடுத்தால்தான் தமது ‘இமேஜ் ‘ காப்பாற்றபடும் என தலைமை எண்ணியதா?
பாக்கித்தானை போலவே இந்துக்களின் பாரம்பரியத்தை பற்றியும் மேன்மை பற்றியும் பேசும் மோடி , இந்து விரோதிகள் எங்கிருந்தாலும் கொன்றொழிப்பது என்ற கொள்கையை பாக்கித்தானிலும் காட்ட முடியும் என்ற இறுமாப்பா?
பாக் சமூகத்தில் ராணுவத்திற்கும் சிவில் சமூகத்திற்கும் உள்ள பிணக்குகள் முற்றியுள்ள நிலையில, பயங்கரவாதிகளான தெரீக் ஈ தாலிபான் அமைப்பினர் மற்றும் பலுச்சிஸ்தான் விடுதலை படை ஆகியவற்றின் பயங்கரவாத தாக்குதல்களில் சிக்கி சிதிலமடைந்துள்ள பாக் ராணுவமும் , பொருளாதார சிக்கலில் மூழகியுள்ள சமூகமும் இந்திய தாக்குதலை சமாளிக்க முடியாது என இந்திய ஆட்சித்தலைமை எண்ணியதா?
அல்லது இந்திய அரசியலிலும், வரும் தேர்தல்களிலும் தமது செல்வாக்கை நிலை நாட்ட இது உதவும என்ற கணக்கிலா ?
எதை மனதிற்கொண்டு இத்தகைய ( தாக்கும்) முடிவை எடுக்க முப்படைகளையும் நிர்ப்பந்தித்து இந்திய அரசியல் தலைமை?
இன்று நிலை என்ன?
இந்தியா இஸ்ரேலும் அல்ல , அமெரிக்காவும் அல்ல என்பது விளங்கி விட்டதா?
பாக்கித்தான் ஹமாஸ் அல்ல என்பது புரிந்து விட்டதா?
ஊருக்கெல்லாம் ஆருடம் கூறி வேவு பார்க்கும் இந்திய உளவுதுறை, பாக் ராணுவமும் சீனத்தின் பி எல் ஏ வும் (PLA) 2019க்குப்பிறகு மிக மிக நெருக்கமாக தங்கள் பிணைப்பை ,கூட்டுச் செயலாற்றலை வளர்த்துள்ளனர் என்ற உண்மை புரியாமல் போனதா?
அல்லது அரசியல் தலைமையின் அகங்காரமும், அதிகாரவெறியும் இவற்றை மறைத்தனவா?
எதை மனதிற்கொண்டு போரை தொடுத்தனர்? என்ன சாதித்தனர்?
பாக்கித்தானுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் பொதுவான இடமெதற்கு என கேள்வி கேட்கும் அதிகாரி உண்மையில் இந்திய ஆட்சித் தலைமையின் எண்ணத்தை பிரதிபலித்தால் இன்று ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் யாருடைய வற்புறுத்தலால் ஏற்பட்டது?
யாருடைய உத்தரவின் பேரில் இந்திய ராணுவ அதிகாரி (DGMO) இந்த ஒப்பந்தத்தை ஏற்று கொண்டார் என்ற கேள்விகள் எழுகின்றன?
பயங்கரவாத செயலை பாக் செய்திருந்தால் போரை நிறுத்த இந்தியா முன்வந்தது ஏன்?
இந்தியாவிற்கெதிரான பயங்கரவாத செயல்களில் இனி பாக். ஈடுபடாது என்ற உறுதி மொழியை அமெரிக்கா ஏன் பாக்.கிடமிருந்து பெறவில்லை?
அப்படி பெறுவதை இந்தியா ஏன் வற்புறுத்தவில்லை?
அதற்கான ஆதாரங்களை அமெரிக்காவிடம் இந்தியா பகிர்ந்திருக்கிறதா?
தற்போது ஏற்பட்டுள்ள போர் நிறுத்தத்தால் சகஜ நிலைமை திரும்புமா?
நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதால் சிம்லா ஒப்பந்தத்தை பாக்கித்தான் ஏற்காது என்ற நிலைபாட்டை இந்தியா எப்படி எதிர் கொள்ள போகிறது? உலக நாடுகள் காஷ்மீர் பிரச்சினையில்மூக்கை நுழைக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளதா?
காஷ்மீரில் பாக்கித்தான் தலையீடு கூடாது என்ற சரியான முடிவை இந்தியா வலியுறுத்தும் நேரத்தில், பலுச்சித்தான் பிரச்சினையிலும் இந்தியா தலையிடாது என்ற உறுதிமொழியை கொடுக்குமா?
சண்டை நடந்தாலும் இன்னல், சண்டை ஓய்ந்தாலும் ராணுவத்தினால் இன்னல் என்ற நிலையில் உள்ள காஷ்மீர் மக்கள் தங்களது உரிமைகளை பெறுவார்களா?
இரு நாடுகளின் ராணுவ குவிப்பிலிருந்து காஷ்மீர் பகுதி மீட்கபடுமா ?
காஷ்மீர் மக்களின் எண்ணம் பற்றி யாருக்காவது எந்த நாட்டிற்காவது உண்மையில் அக்கறை உள்ளதா? என்பன போன்ற பல கேள்விகள் இந்த போர் நிறுத்த அறிவிப்பின் மூலம் எழுகின்றன.
இதற்கு யார் விடை கூறுவது?
Also read
இதற்கிடையே சில அரசியல் பிரமுகர்களும் தலைவர்களும் இந்தியா ஏன் போர் நிறுத்தத்திற்கு ஒத்துக்கொண்டது? பாக்கித்தானிற்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டாமா என்று விசனப்படுகிறார்கள். காங்கிரஸ் தலைவர் ச்ச்சின் பைலட் பாக் வசமுள்ள காஷ்மீரை மீட்டெடுக்க வேண்டும் என இந்திய நாடாளுமன்றம் 1994ல் நறைவேற்றிய தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளதை நோக்குங்கால் இந்திய கட்சிகள் உண்மையில் காஷ்மீர் பிரச்சினையை புரிந்து உள்ளார்களா என்ற கேள்வி எழுகிறது.
மக்களை , மக்களது உணர்வுகள், மற்றும் உரிமைகளை மதிக்காத எந்த தேசீயவாதமும் வென்றதில்லை.
மத அடிப்படையிலான தேசீயவாதமும் வெல்ல முடியாது என்பதை பாக்கித்தான் நேற்றுவரை உணர்த்தி வந்தது. இன்று இந்தியாவில் மோடி அரசின் செயலும் நோக்கமும் மத அடிப்படை தேசீயவாதம் விரும்பத்தக்கதல்ல என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளது!
ச.அருணாசலம்
Leave a Reply