பொள்ளாச்சி வழக்கில் பொதிந்திருக்கும் உண்மைகள்!

-சாவித்திரி கண்ணன்

இளைய தலைமுறைக்கு பாடமாக அமைந்த வழக்கு! இதயத்தின் பாரம் இறக்கி வைக்கப்பட்டது போன்றதொரு உணர்வை பொள்ளாச்சி வழக்கில் தந்துள்ள தீர்ப்பு தந்துள்ளது, தமிழக மக்களுக்கு! ஆனால், இந்த தீர்ப்பு சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. பல அரசியல் அழுத்தங்களைக் கடந்து வந்த நீதி;

நமது இதயங்களை எல்லாம் உலுக்கி எடுத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆறாண்டு கால விசாரணைக்கு பிறகு 9 குற்றவாளிகளுக்கும்  சாகும் வரை சிறை தண்டனை உறுதிபடுத்தப்பட்டு உள்ளது!

பெண்களை போகப் பொருளாக கருதியது மட்டுமல்ல, அவர்களை பெல்டால் அடித்து துன்புறித்தி சாடிஸ்ட் மனோபாவத்தில் வன்புணர்வு செய்த இந்த செல்வாக்கான குடும்பத்தின் இளைஞர்கள், அதை வீடியோ படமெடுத்து பிளாக்மெயில் செய்து மேன்மேலும் துன்புறுத்தி உள்ளனர்.

காவல்துறையின் உயர்மட்டத்திலும், அரசின் நிர்வாகத்திலும்  அன்றைய அதிமுக அமைச்சர் பொள்ளாச்சி  ஜெயராமனுக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி, அவரது மகனின் நண்பர்கள் இந்த அட்டூழியங்களை எந்த குற்றவுணர்வுமின்றி அரங்கேற்றினார்.

இந்த சம்பவம் வெளியாகி, முதன் முதலாக ஒரு பெண் துணிந்து பிப்ரவரி 2019-ல் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் தந்தார். இந்த சம்பவம் தொடர்பான ஆடியோ, வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழக மக்களை உலுக்கி எடுத்தன. ஆனால், ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான குற்றவாளிகள் என்பதால் இந்த வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைத்தால் தான் நீதி கிடைக்கும் என ஒட்டுமொத்த மக்களும் குரல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து மார்ச்-2019 இந்த வழக்கை அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிபிஐ வசம் வழக்கு ஒப்படைப்பதாக அறிவித்தார்.

இவர்கள் மீது 2019-ம் ஆண்டு மே 21-ந் தேதி கோவை மகளிர் கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் குற்றவாளிகள் 9 பேர் மீது 76 விதமான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அரசு தரப்பில் 205 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து 12 ஆவணங்கள் குறிக்கப்பட்டன. 11 ஆவணங்களை நீதிமன்றமே தானாக எடுத்துக் கொண்டது.

குற்றவாளிகளிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், லேப்டாப், ஹார்டு டிஸ்க் உள்பட 30 பொருட்கள் ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் இருந்த நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்களும், அந்த பெண்களின் கதறல்களும் விசாரணை அதிகாரிகளையே விக்கிக்க வைத்தன. பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் இருப்பினும் எட்டு பேர் மட்டுமே உறுதியாக அஞ்சாமல் புகார் தந்து விசாரணைக்கு ஆஜராயினர். மேலும் 48 பேர் சாட்சியாக விசாரிக்கப்பட்டதில் இறுதி வரை இவர்கள் பிறழ்சாட்சியாக மாறாததும் அபூர்வமே!

இந்திய தண்டனை சட்ட பிரிவில் 120பி, 366, 342, 354 (ஏ), 354 (பி), 376 (டி), 376 (2) (என்), 509 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம், தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்ட பிரிவு 4 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அரசு தரப்பில் சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் சுரேந்திரமோகன் ஆஜராகி சிறப்பாக வாதிட்டார்.

அதன் பிறகு வழக்கு விசாரணை பல்வேறு அரசியல் அழுத்தங்களால் தாமதம் ஆனது. அதைத் தொடர்ந்து  உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கி பாதுகாப்பான- ரகசியமான – விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

மகளிர்  நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது.

இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், ஆள்கடத்தல், அடைத்து வைத்து துன்புறுத்துதல், கூட்டுசதி, தடயங்கள் அழிப்பு, ஆபாச வீடியோ எடுத்தல், ஆபாச வீடியோ க்களை பகிர்தல் உள்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதான 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன்(வயது 30), வசந்தகுமார்(32), சதீஷ் (33), மணிவண்ணன் (30), திருநாவுக்கரசு (30), ஹேரேன் பால் (34), பாபு என்ற பைக் பாபு (38), அருளானந்தம் (38), அருண்குமார் (36) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

எளியோர்களை துன்புறுத்தி, அதுவும் பலவீனமான பெண்களை அச்சுறுத்தி தொடர்ந்து பிளாக்மெயில் செய்து இன்பம் துய்க்கும் இந்த இழிபிறவிகள் அதிமுக ஆட்சியில் தொடர்ந்திருந்தால் தண்டிக்கப்பட்டு இருப்பார்களா? என்பது சந்தேகமே! அந்த அளவுக்கு இவர்களின் செல்வாக்கு கொடி கட்டிப் பறந்தது. நல்வினையாக ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், சி.பி.ஐ யின் ரகசிய விசாரணை முறைமையும் குற்றவாளிகளை அச்சமின்றி விசாரிப்பதற்கும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு தருவதற்கும் காரணமாக இருந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இதன் தொடர்ச்சியாகத் தான் இன்று ( மே-13,1025)  பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ஒட்டுமொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார்.

சாட்சியத்திற்கான , ஆடியோ, வீடியோ பதிவுகள் அழிக்கப்பட்ட நிலையில் அதை மீண்டும் புதுப்பித்தல், பெண்களுக்கு தைரியம் தந்து உண்மைகளை பேச வைத்தல், காவல்துறையில் உள்ள  கறுப்பு ஆடுகள் குற்றவாளிகளுக்கு துணையாக இருந்தததை தகர்த்து உண்மையை நிலை நாட்டுதல் ஆகியவை நடந்துள்ளது என்ற வகையில் அதற்கு காரணமானவர்கள் ஒவ்வொருவரையும் நாம் பாராட்டி, நன்றி தெரிவித்து வணங்குகின்றோம்.

தங்கள் ஆண் குழந்தைகளுக்கு பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதையும், பெண் குழந்தைகளுக்கு ஆண்களிடம் எவ்விதம் எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், இதையும் மீறி அநீதி இழைக்கப்பட்டால், அடங்கி, ஒடுங்கி போகாமல் அதற்காக போராட முன்வர வேண்டும் என்பதையும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு நமக்கு உணர்த்தி உள்ளது.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time