ஒகோ! இது தான் போர் நிறுத்தத்தின் பின்னணியா?

ந.தெய்வ சுந்தரம்

”இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்திற்கு மிக முக்கிய காரணம் வர்த்தகம்” என்றார், அமெரிக்க அதிபர் டிரம்ப். வர்த்தகம் என்றால்.., மிகக் குறிப்பாக ஆயுத வர்த்தகம்! இந்த இரு நாடுகளுக்கான மோதலில் ராணுவ விமானங்கள், ஏவுகணைகள் சம்பந்தப்பட்ட வர்த்தகம் போர் நிறுத்ததில் செலுத்திய ஆதிக்கம் என்ன?;

இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில் அண்மையில் நடைபெற்ற ஆயுத மோதலுக்குத் தற்காலிக முற்றுப் புள்ளி வைக்கப்பட்டதில் இருநாட்டு மக்களுக்கும் உலக ஜனநாயகச் சக்திகளுக்கும் மகிழ்ச்சி. யார் முடிவுக்குக் கொண்டு வந்தார்கள்? எப்படி மோதல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது என்பது பற்றிய ஆய்வுகள், நடைபெற்று வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து இருதரப்பு மோதலும் குறிப்பிட்ட நேரத்திலிருந்து முடிவுக்கு வந்தது என்றதன் அடிப்படையில் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன!

நமது இராணுவத்தினர் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர், பல வெற்றிகளை குவித்தனர் என்பதெல்லாம் ஒரு புறம் இருக்க . . ., இரு நாடுகளுக்கும்  போர் ஆயுதங்கள் விற்பனை செய்த நாடுகளும், அங்குள்ள ஆயுத உற்பத்தி நிறுவனங்களும் இந்த மோதலில் தங்கள் ஆற்றலை . . . தங்கள் ஆயுதங்களின் வலிமையை . . . நிரூபிக்கவே முக்கியமாக இந்த மோதல்கள் உதவியுள்ளன.

அதையொட்டி, அந்த நிறுவனங்களின் பங்கு மதிப்பு பங்குச் சந்தையில் ஏற்றம் இறக்கம் கண்டுள்ளன என்று ஊடகங்கள் தகவல்கள் அளித்துக் கொண்டிருக்கின்றன.

இந்தியா பயன்படுத்திய ரஃபேல் விமானங்களின் ஆற்றல் எவ்வளவு? . . . அவற்றை எதிர்த்து நின்ற பாகிஸ்தான் பயன்படுத்திய எதிர்ப்பு ஏவுகணைகளின் ( சீனநாட்டு நிறுவனம் விற்பனை செய்த ஆயுதம் PL-15E ) ஆற்றல் எவ்வளவு ? எது எதைச் சேதப்படுத்தியது என்ற விவாதங்களினால் . . . தற்போது உலக ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் பங்கின் மதிப்பு , உலகப் பங்குச் சந்தையில் ஏற்றம் இறக்கம் கண்டு கொண்டிருக்கிறது என்னும் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன!

அதாவது, இது போன்ற மோதல்களில் தான் பன்னாட்டு ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் ஆயுதங்களின் ‘ஆற்றல்’ வெளிப்படுகிறதாம்! ஆகவே, நாடுகளுக்கிடையே மோதல் இந்த நிறுவனங்களுக்குத் தேவை. அதே வேளையில் ஒரு நிறுவனத்தின் ஆயுதத்தை மற்றொரு நிறுவனத்தின் ஆயுதம் எதிர்த்து நின்று முறியடித்து விட்டால் . . . அழித்து விட்டால் . . . முறியடிக்கப்பட்ட ஆயுதங்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பங்கு ஒரே நாளில் குறைந்து விடுகிறது!

ஆகவே, ஏகாதிபத்தியங்களின் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உலகில் நாடுகளுக்கிடையே மோதல் தேவை . . . எதற்கு ? தங்களுடைய ஆயுதங்களின் வலிமையைச் சோதிக்க !

அறிவியலாளர் ஐன்ஸ்டீன் (Einstein) ஒளிக்கற்றை – பொதுசார்பு நிலைக் கோட்பாடு (General Theory of Relativity) தனது 1905 ஆம் ஆண்டு ஆய்வு முடிவை நிரூபிக்க . . . 1919 வரை காத்திருந்தார். அப்போது ஏற்பட்ட ஒரு கிரகணத்தின் போது தான் அவரது ஆய்வு முடிவு நிரூபிக்கப்பட்டது. சர் ஆர்தர் எடிங்க்டன் (Sir Arthur Edington) என்னும் அறிவியலாளர்தான் அதற்கு உதவினார். அதன் பிறகு தான் 1921-இல் ஐன்ஸ்டீனுக்கு நோபல் பரிசு கிடைத்தது.

அது போல . . . நாடுகளுக்கிடையே ஏற்படும் போர்கள் தான் பன்னாட்டு ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் ஆயுதங்களின் ‘திறமை’ வெளிப்படுகிறது! ஜல்லிக் கட்டு நடைபெற்றால் தான் குறிப்பிட்ட மாடு திறமையானதா? அல்லது அதை அடக்குகிற வீரர் திறமையானவரா? என்பது தெரியும்.

தற்போதைய மோதல் திடீரென்று நின்று போனதற்கும் இந்த ஆயுத உற்பத்தி நிறுவனங்களும் அவற்றின் நாடுகளும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. ரஃபேல் விமானத்தைச் சீனத்தின் PL-15E ஏவுகணை தடுத்து நிறுத்தியது என்று வெளியான செய்தி, ரஃபேல் நிறுவனத்தைப் பாதித்துள்ளது. அதே போன்று பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன்களை இந்தியா தடுத்து நிறுத்தி அழித்ததால், அந்த ட்ரோன்களைத் தயாரித்த இஸ்ரேல் ஆயுத நிறுவனத்தின் பங்கு மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது!

பாகிஸ்தான் தனது விமானப்படையின் ஒரு பெரிய வெற்றியைப் பற்றிப் பேசுகையில், ஐந்து இந்திய போர் விமானங்கள் – மூன்று ரஃபேல் விமானங்கள், ஒரு மிக் -29 மற்றும் ஒரு சு -30 போர் விமானங்கள் – ஒரு மணி நேர மோதலில் தங்களின் ஜே -10 சி போர் விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறியது. இதைத் தொடர்ந்து இதைத் தயாரித்த சீன நிறுவனத்தின் பங்குகளுக்கு சர்வதேச சந்தையில் மவுசு கூடியது.

இந்தியா கொள்முதல் செய்த பிரெஞ்சு தயாரிப்பான ரஃபேல் உள்ளிட்ட  போர் விமானங்களை சுட்டு வீழ்த்த  சீனாவின் AVIC தயாரித்த J-10C போர் விமானங்கள் வெற்றிகரமாக பயன்பட்டதாக பாகிஸ்தான் கூறியதன் மூலம் சீனாவின் AVIC செங்டு விமானத்தின் பங்குகள் சர்வதேச சந்தையில்  40% உயர்ந்தன!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் மோதலில்  சீன இராணுவ ஏற்றுமதி  சாதனங்களின் சர்வதேச மதிப்பு உயர்ந்து செல்வதை அமரிக்காவால் சகிக்க முடியவில்லை என்பதே போர் நிறுத்த முயற்சியில் அமெரிக்கா உடனடியாக ஈடுபட முக்கிய காரணம் என சர்வதேச அரசியல் விற்பன்னர்கள் சொல்கின்றனர்..!

இன்னும் தெளிவாக சொல்வதென்றால், பாகிஸ்தானுக்கு பெரும்பாலும் சீனா ஆயுதங்களை வழங்குவதாலும், இந்தியா தனது ஆயுதங்களில் பெரும் பகுதியை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு ஐரோப்பிய நாடுகளிடமிருந்து பெறுவதாலும், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் என்பது தெற்காசியாவின் சீனாவின் தயாரிப்புகளுக்கும், மேற்கத்திய இராணுவ தளவாட தயாரிப்புகளுக்கும் இடையிலான வர்த்தக மோதலாக கருதப்படுகிறது.

எனவே, இது போன்ற மோதல்களை வெறும் சண்டையாகக் கருதக் கூடாது. ‘அரசியல் சார்ந்த பொருளாதாரத்தின் ‘ பகுதியாகப் பார்க்க வேண்டும்!

‘பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது’ என்பதன் பொருள் இப்போது தெளிவாக விளங்குகிறது. குழந்தை யார்? கிள்ளி விடுவது யார்? தொட்டிலை ஆட்டுவது யார்? சிந்தித்துப் பாருங்கள்!

கட்டுரையாளர்; ந.தெய்வசுந்தரம்

பேராசிரியர், இடதுசாரி சிந்தனையளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time