பொள்ளாச்சி வழக்கு – சில ஏமாற்றங்கள், துரோகங்கள்!

-சாவித்திரி கண்ணன்

தமிழகத்தை உலுக்கிய இந்த பாலியல் கொடூர வழக்கின் மிக முக்கிய குற்றவாளிகளை காவல் துறையும் சரி, சிபிஐயும் சரி  நெருங்கவே இல்லை. விசாரிக்கப்படவும் இல்லை. இந்த வி.ஐ.பிக்கள் யார்? யார்? இவர்கள் எப்படி தப்பிக்க வைக்கப்பட்டனர். இதன் பின்னணியில் இருப்பது யார்..?

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை தரப்பட்டு இருப்பதும், பாதிக்கப்பட்ட எட்டு பெண்களுக்கு நஷ்ட ஈடு அறிவித்திருப்பதும் தமிழக மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது என்பதை மறுக்க முடியாது..! ஆகவே, இந்த தீர்ப்பை முதலில் வரவேற்க வேண்டியது நம் கடமை. வரவேற்றோம்.

ஆனால், இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் வெறும் 9 பேர் மட்டும் தானா?

நம் மக்களுக்கு மறதி அதிகம். இது தான் அரசியல்வாதிகளின் வரப்பிரசாதம்…!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு சம்பந்தமான செய்திகளை சற்று பின் நோக்கி பார்த்தோமென்றால், இதில் பாதிக்கப்பட்டது எட்டு பெண்கள் மாத்திரமல்ல…!

200-க்கும் அதிகமான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை குற்றவாளிகளே 1000-க்கும் மேற்பட்ட வீடியோ படமெடுத்த செய்தியை மறக்க முடியுமா…?

இத்தனை பெண்களை சிறிதளவும் குற்றவுணர்வின்றி துணிச்சலாக தூக்கிப் போனதற்கும், வீடியோ எடுத்தற்கும் இந்த கூட்டத்திற்கு  பின்னணியில் பலமான அரசியல் செல்வாக்கு இல்லாமல் சாத்தியமில்லை.

இந்தக் குற்றவாளிகள் அனைவருக்குமான அந்த அரசியல் பாதுகாப்பாக இருந்த பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன், பொள்ளாச்சி ஜெயராமனின் நெருங்கிய சகாக்களான ’பார்’ நாகராஜன், கிருஷ்ணகுமார்.. ஆகியோர் பெயர்களே அன்றைய புலனாய்வு பத்திரிகைகளான நக்கீரன், ஜுனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பெரிதும் அடிபட்டது. இந்த பாலியல் வழக்கின் குற்றவாளிகள் அன்றைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அப்போது தொடர்ந்து வெளியாயின. செய்தி சேனல்கள் பலவற்றிலும் கூட வெளியானது.

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன், ’பார்’ நாகராஜன்

இந்த வழக்கில் பார் நாகராஜனையும், திமுக பிரமுகர் செல்வராஜின் மகன் மணிமாறனையும் கஸ்டடியில் எடுத்து விசாரித்து விட்டு அரசியல் அழுத்தங்களால் விடுவிக்கப்பட்டனர் என்ற செய்திகள் வெளியாயின.  ஆனால்,  பிரவீன், பொள்ளாச்சி அதிமுக நகர செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோரை விசாரிக்க கூட முக்கியத்துவம் தரப்படவில்லை. இவர்கள் மீது எப்.ஐ.ஆரும் போடவில்லை. ஆக, இந்த ஆறாண்டு இடைவெளியில் இவர்களை மக்களும் மறந்து விட்டனர், பெரும்பாலான ஊடகங்களும் மறந்து விட்டன.

இப்படி எடுக்கப்பட்ட வீடியோவை கொங்கு மண்டல வி.ஐபிக்களுக்கு அனுப்பி, அதில் இருந்து அவர்கள் செலக்ட் செய்த பெண்களை ’வாளையார் கெஸ்ட் அவுஸில்’ வைத்து மீண்டும் பாலியல் வன்முறை அரங்கேறியுள்ள வகையில், இது வரை எந்த வி.ஐ.பியும் தண்டிக்கப்படவில்லை.

குறிப்பாக இப்படி பலவந்தமாக தூக்கி செல்லப்பட்ட ஒரு பெண் இந்த கொடியவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்த வகையில் நடு ரோட்டில் விழுந்து மற்றொரு கார் ஏறியதில் சின்னாபின்னமாகி அந்தப் பெண் இறந்தார் என்பதை நக்கீரன் போட்டோவோடு அம்பலப்படுத்தியது. இந்த வகையில் காணாமல் போன பெண்கள், அவமானத்திற்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட பெண்கள் பற்றிய விசாரணைகளே கூட நடக்கவில்லை.

பொள்ளாச்சி ஜெயராமன், கிருஷ்ணகுமார்,வேலுமணி

இதில் ஏழை பெண்களுக்கு கடன் தந்து, அதை அவர்கள் திருப்பி செலுத்த முடியாமல் தவிப்பதை காரணமாக்கி, அவர்களை தூக்கிச் சென்று சின்னாபின்னப்படுத்தினர் எனும் போது, இதன் பின்னணியில் ஒரு பெரிய நெட் வொர்க்கே இருந்துள்ளதை நாம் அறியலாம்.

இத்தனை அநீதிகளையும், அட்டுழியங்களையும்  குற்றவாளிகள் ஒரே நாளில் செய்து விடவில்லை. இவற்றை தொடர்ந்து அச்சமின்றி அவர்கள் செய்வதற்கு லோக்கல் காவல்துறையின் அனுசரணை இருந்துள்ளது என்பது கோவை எஸ்.பி. பாண்டியராஜன் (police superintendent of coimbatore) குற்றவாளிகளுக்கு வெளிப்படையாகவே, ஆதரவாக இயங்கியதும், பத்திரிகையாளர்களிடம் உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பி, குற்றவாளிகளை காப்பற்ற துணை நின்றதையும் ஊடகத் துறையில் உள்ள அனைவரும் அன்று அதிர்ச்சியுடன் பார்த்தோம்.

கொளத்தூர் தொகுதியில் டெபுடி கமிஷனராக இருக்கும் பாண்டியராஜன்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக போராடிய பெண்கள் அமைப்புகள், ஜனநாயக இயக்கங்கள் ஆகியவற்றையும் எஸ்.பியான பாண்டியராஜன் மிரட்டினார் என்பதும், இதே போல ராஜேஸ்வரி, நிஷா பார்த்தீபன் என்ற பெண் காவல் அதிகாரிகள் முற்ற முழுக்க குற்றவாளிகளுக்கு ஆதரவாக இயங்கியதையும் கொங்கு வட்டார மக்களும் அறிவர். அனைத்து ஊடகத்தினரும் அறிவர்.

இதிலென்ன துரதிர்ஷ்டம் என்றால், இத்தகைய கொடூர போலீஸ் அதிகாரியாக அறியப்பட்ட பாண்டியராஜன் தான் இன்று இந்த ஆட்சியாளர்களின் செல்லபிள்ளையாக இருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில்  சகல அதிகாரங்களுடன் டி.சி யாக ( ) வலம் வருகிறார்…! இதை நாம் எப்படி புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை.

முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ25 லட்சம் அறிவித்துள்ளார். ஆனால், அதே சமயம் இந்த அட்டுழியங்கள் அனைத்தையும் தடுத்திருக்க வேண்டிய பொறுப்பில் இருந்த இந்த காவல் அதிகாரி, அதற்கு அனுசரணையாக இருந்த வகையில் பதவி பறிக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருக்க வேண்டாமா..? என்பது தான் இந்த வழக்கை கூர்ந்து பார்க்கும் ஊடகத் துறையில் உள்ளோர் மற்றும் பெண்கள் இயக்கங்கள் வைக்கும் கேள்வியாகும்.

‘சிபிஐ விசாரணையின் போது பாதிக்கப்பட்ட பெண்கள் பாதுகாக்கப்பட்டனர்.  குற்றவாளிகளுக்கு பெயில் தரவில்லை’ என்பது மிகவும் ஆறுதலான விஷயமே. ஆனாலும், குற்றவாளிகளில் ஒரு பகுதியினர் மட்டுமே தண்டிக்கப்பட்டனர் என்பதும், பாதிக்கப்பட்ட பெரும்பாலான  பெண்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்பதும் மனதை உறுத்துகிறது. சாமானியர்களான நாம்,  ‘நமது ஜனநாயகத்தில் இவ்வளவாவது நடந்திருக்கிறதே..’  என்று திருப்திபட்டுக் கொண்டு, மனதை தேற்றிக் கொள்ள வேண்டும் போல.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time