சந்திர சூட் அளவுக்கு சறுக்கியவரல்ல, தலைமை சஞ்சீவ் கண்ணா. சில முக்கியமான விவகாரங்களில் அதிகார மையங்களிடம் அடிபணியாமல் தீர்ப்புகளை வழங்கினார். அடக்கம் அமரருள் உய்க்கும் என்பர். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாதவராக வலம் வந்தார்; நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் தீர்ப்புகள் குறித்து அலசுகிறார் ஹரிபரந்தாமன்;
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் கண்ணா அவர்கள் மே- 13,.2025 அன்று ஓய்வு பெற்றார். இவர் ஆறு மாத காலமே இந்த உயர் பொறுப்பில் இருந்தார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய அவர், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட போது, அவரது நியமனம் சில கேள்விகளை எழுப்பியது . காரணம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் சில மூத்த நீதிபதிகளை புறந்தள்ளி அவர் உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்.
இந்திய நீதித்துறை வரலாற்றில் மிகவும் போற்றப்படும் உச்ச நீதிமன்ற நீதிபதி எச்.ஆர்.கண்ணா அவர்களின் நெருங்கிய உறவினர் (அண்ணன் மகன் அல்லது அக்காள் மகன்) சமீபத்தில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா.
அவசரநிலை காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் ( தடுப்புக்காவல் சட்டம்) ஜெயபிரகாஷ் நாராயணன் உட்பட ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது ஹேபியஸ் கார்ப்பஸ் வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு இந்த வழக்குகளை விசாரித்தது. அவசரநிலை காலத்தில் அரசமைப்பு சட்டத்தின் கூறு 21 வழங்கும் ஜீவாதார உரிமை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், தனிநபர் உரிமை மறுக்கப்படலாம், சட்டத்திற்கு புறம்பாக எவரும் சிறைபடுத்தப்படலாம், சுட்டுக்கொல்லலாம். எனவே இந்த வழக்குகளை விசாரிக்கவே உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
அரசின் இந்த வாதத்தை 5 நீதிபதிகளில் 4 பேர் ஏற்றனர். அரசுக்கு எதிராகவும், மக்களுக்கு ஆதரவாகவும் தீர்ப்பளித்த ஒரே நெஞ்சுரமிக்க நீதிபதி எச்,ஆர்.கண்ணா மட்டுமே. எந்த அரசும் அவசர நிலை காலம் உட்பட எப்பொழுதும் அரசமைப்புச் சட்டத்தில் 21 வழங்கும் ஜீவாதார உரிமையை மட்டும் பறிக்க முடியாது என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார் நீதிபதி எச்.ஆர்.கண்ணா.

அந்த நால்வரில் ஒருவர் தான் நீதிபதி ஒய்.வி. சந்திர சூட். முன்னாள் தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்களின் தந்தையே அவர். மற்றொருவர் பின்னாளில் சிவில் உரிமைகளுக்கான முக்கிய தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி பி.என்.பகவதி ஆவார்.
இந்த தீர்ப்பை வழங்கியதால் நீதிபதி எச்.ஆர்.கண்ணா அவர்களுக்கு பணி மூப்பின் படி கிடைத்திருக்க வேண்டிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி மறுக்கப்பட்டு, அவருக்கு இளையவர் தலைமை நீதிபதி ஆக்கப்பட்டார்.உடனே அவர் உச்சநீதிமன்ற பதவியை ராஜினாமா செய்தார்.
50 ஆண்டுகளுக்குப் பின் 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் மிகப்பெரிய அமர்வு , அவசரநிலை காலத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய மேற்சொன்ன தீர்ப்பை தவறானது என்று கூறி , நீதிபதி எச்.ஆர்.கண்ணாவின் தீர்ப்பே சரியானது என்றது. இந்த ஒன்பது நீதிபதிகளில் நீதிபதி சந்திர சூட்டும் ஒருவர் என்பது வரலாற்றின் விந்தையே.
முன்னாள் தலைமை நீதிபதி சந்திர சூட் அப்போதெல்லாம் தினமும் பத்திரிக்கையில் ஒரு செய்தியாக வருவார். இதற்கு நேர்மாறானவராக சஞ்சிவ் கண்ணா இருந்தார். அவர் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற போது, பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லை. உச்சநீதிமன்றம் என்பது ஒரு நிறுவனம். ஒரு நிறுவனம் என்ற முறையில் உச்சநீதிமன்றத்திற்கு கருத்து இருக்கலாமே தவிர, தலைமை நீதிபதிக்கு என தனி கருத்து இருக்க வேண்டியதில்லை என்று கருதினார் நீதிபதி சஞ்சீவ் கண்ணா. புகழ் விரும்பாதிருப்பது மிக அரிதினும், அரிதான குணமாகும்.
நீதிபதி சந்திர சூட் அவர்கள் இரண்டு ஆண்டு காலம் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். அவர் ஊடகத்தில் பேசிய பேச்சுக்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கையை அளித்தது. ஆனால் அவர் செயல்பாடுகளோ ஏமாற்றத்தையே தந்தது.
ஆனால் 6 மாத காலங்களே தலைமை நீதிபதியாக பணியாற்றினாலும், நீதிபதி சஞ்சீவ் கண்ணா பற்றி குறிப்பிட சில நல்ல சம்பவங்கள் உள்ளன.
அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் உள்ள மதச் சார்பின்மை மற்றும் சோசலிசம் என்ற வார்த்தைகள் அவசரநிலை காலத்தில் சேர்க்கப்பட்டது என்பதால், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத அவற்றை முகவுரையிலிருந்து நீக்க வேண்டும் என்று ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு உடனடியாக தள்ளுபடி செய்தது. நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையே மதச்சார்பின்மை தான். இதனை கேசவனந்த பாரதி வழக்கில் 13 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு உறுதிபடுத்தியுள்ளது எனச் சுட்டிக்காட்டியது.
தலைமை நீதிபதி சந்திர சூட் காலத்தில் பல மசூதிகளை கோயில்கள் என்று உரிமை கொண்டாடி சிவில் வழக்குகள் வட இந்தியாவின் பல பகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட போது, 1991 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட வழிபாட்டு உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்திற்கு இந்த சிவில் வழக்குகள் விரோதமானது என்று தடுத்து நிறுத்த அவர் முன் வரவில்லையே என ஜனநாயக சக்திகள் வருந்தின.
ஆனால், தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு எந்த புதிய சிவில் வழக்குகளும் மசூதிகளை கோயில்கள் என்று உரிமை கூறி தாக்கல் செய்யக் கூடாது என்றது. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை பொறுத்த வரை வழிபாட்டு உரிமைகள் பாதுகாப்பு சட்டம் பற்றி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லும் வரை இருக்கின்ற நிலைமைகள் தொடரும் என தெளிவுபடுத்தியது. இதனால், மதகலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது இந்த தீர்ப்பு.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஓய்வு பெறுவதற்கு சற்று முன்பாக, ஒன்றிய அரசு இஸ்லாமியருக்கு எதிராக போட்ட வக்பு திருத்த சட்டம் சட்டத்தை எதிர்த்த 170 க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒருமித்த முறையில் விசாரித்து, அதில் உள்ள பல பிரிவுகளுக்கு தடை அளிக்க போவதாக தெரிவித்தது, தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் அமர்வு. குறிப்பாக வக்பு போர்டுகளில் இந்துக்களை நியமனம் செய்வது சரி இல்லை என்ற கருத்தை கூறினார் தலைமை நீதிபதி.
இந்து மத அற நிலையத் துறைகளில் இஸ்லாமியர்களுக்கு உங்களால் பிரதி நிதித்துவம் அளிக்க முடியுமா..? என எதிர்கேள்வி வைத்தார். இதற்கு எதிர்வினை ஆற்றிய அரசு வழக்குரைஞர், இஸ்லாமிய நீதிபதி இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்பதை ஏற்றுக் கொள்வீர்களா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு, நீதிபதிகளுக்கு மதம் இல்லை. நாங்கள் இங்கே எங்கள் மதங்களை துறந்து தான் நீதிபரிபாலனம் செய்கிறோம். எங்களை பொறுத்த வரை இரு தரப்பும் ஒன்று தான். என்று பதில் அளித்தார், தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா. அவரது இந்த உறுதியான நிலைபாட்டால், அரசே முன் வந்து வக்பு சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று உறுதிமொழி அளித்தது.
அதேபோல அவரது காலத்திலும் அவருக்கு முந்தைய காலத்திலும் கொலேஜியம் பரிந்துரைத்த உயர்நீதிமன்ற நீதிபதிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றி வெளிப்படை தன்மையை வெளிப்படுத்தினார்.
அவர் தலைமை நீதிபதியாக இருந்த போது, அனைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் அவர்களின் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என்ற முக்கியமான முடிவு எடுக்கப்பட்டு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விபரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டன.
அதேபோல டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதி யஷ்வந்த் வர்மா அவர்களின் வீட்டில் தீ பிடித்து எரிந்த போது அதில் கட்டு கட்டுகளாக கோணிப்பைகளில் இருந்த கரன்சி நோட்டுகள் எரிந்தன. இந்த விபரம் பத்திரிகைகளில் வெளிவந்தது. இதைப் பற்றி விசாரித்து ஒரு அறிக்கை அளிக்க உத்தரவிட்ட தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பிறகு அந்த அறிக்கையையும் அத்துடன் சம்பந்தப்பட்ட நீதிபதி வர்மா அளித்த ஏற்க இயலாத சமாதானத்தையும், சம்பவ இடத்தின் வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு அனைவரும் பார்க்கும் வகையில் வெளிப்படை தன்மையை செயல்படுத்தினார் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா.
மேலும், இதைப் பற்றி விசாரிக்க மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ஒரு குழுவை நியமித்தார். அந்த குழு அளித்த அறிக்கையை குடியரசு தலைவருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார், சஞ்சீவ் கண்ணா.
ஆனாலும் இந்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா பேரில் குற்ற வழக்கு தொடர்வதற்கான அனுமதியை வழங்கவில்லை. இது ஒரு குறைபாடே.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மேற்படி சம்பவத்திற்கு பின்னர் மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு அங்கே பணி வழங்கப்படவில்லை என்றாலுமே கூட ஏன் மாற்றம் செய்ய வேண்டும் என்பதே கேள்வி?
நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் நமக்கு மிகவும் பிடித்த விஷயம் தன் ஆய்வுக்கு பிறகு ஏதேனும் ஆட்சியாளர்கள் தரும் பெரிய பதவிகளை எதிர்பார்த்து, அவ்விதமே பெற்றுக் கொண்ட சில நீதிபதிகளை போலில்லாமல், ”நான் ஓய்வுக்கு பிறகு அரசு தரும் எந்த அரசு பதவியையும் ஏற்கமாட்டேன்’’ என தானாக வலிந்து கூறியது தான். பழிச் சொல்லுக்கு அஞ்சி சான்றோர் எப்போதும் தங்களை விழிப்புணர்வுடன் தற்காத்துக் கொள்வர் என்பதற்கேற்ப அவரது இந்த செயல்பாட்டை நான் பார்க்கிறேன்.
Also read
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் அந்த நீதிமன்ற வளாகத்திற்குள் பேசிய ஒரு கூட்டத்தில் இஸ்லாமியருக்கு எதிராக நேரடியான வெறுப்பு பேச்சை பேசினார். அந்த பேச்சின் விவரங்கள் ஊடகங்களில் வந்தது. அது மிக அதிர்ச்சியாக இருந்தது. இந்த விவகாரத்தில் ஒரு உள் விசாரணைக்கு கூட உத்தரவிடவில்லை சஞ்சீவ் கண்ணா. ஆனால், அதே சமயம் அவரை அழைத்து கொலேஜியத்தின் வழியாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதைத் தாண்டி, வேறு ஒன்றும் நடை பெறவில்லை. ஒரு வேளை சூழல்கள் அவரை கட்டுப்படுத்தி இருக்கவும் கூடும்.
எனவே, ஒட்டு மொத்தத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா காலத்தை, குணம் நாடி குற்றமும் நாடி மிக்க கொளல் என்ற திருக்குறள் வழி பார்த்தால் அவரது பணிகாலத்தை பாராட்டலாம்.
ஹரிபரந்தாமன்
முன்னாள் நீதிபதி
சென்னை உயர்நீதிமன்றம்
Leave a Reply