திகட்டாத ரசனைக்குரிய படைப்பாளி தி.ஜானகிராமன்!

-  பீட்டர் துரைராஜ்

நடுத்தரவர்க்க மனிதர்களின் ஆசைகள் நிராசைகள்,விருப்புகள், வெறுப்புகள்,பொறாமைகள், இயலாமைகள்,பாலியல் தவிப்புகள் ஆகியவற்றை துல்லியமாக தன் படைப்புகளில் கொண்டு வந்து அசத்திய மாபெரும் படைப்பாளி தி.ஜானகிராமனின் நூற்றாண்டு நடக்கிறது! பேசப்படாத நுண்ணுர்வுகளை மையமாகக் கொண்ட நுட்பமான கதாபாத்திரங்களை தந்தவர் என்ற வகையில் அவர் தமிழ் வாசகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுவிட்டார்!

“இந்தத் தராசைப் பார்த்து இப்படிச் சொல்றீங்களே. எளுதின கார்டுக்கும் எழுதாத கார்டுக்கும் வித்தியாசம் காட்டும் சாமி. உங்களுக்குச் சந்தேகமா இருந்தால் கடையில  ஒரு தராசை வாங்கிட்டு வாங்க” என்று  சொல்லுவது  ஒரு பழைய பேப்பர்காரர். இது ‘கோதாவரிக் குண்டு’ சிறுகதையில் வருகிறது. தி.ஜானகிராமன் படைப்புகள் முழுவதிலும் இத்தகைய  உரையாடல்களைக் காண முடியும். அவருடைய நூற்றாண்டு (1921- 1982) நேரத்தில், அவருடைய சிறுகதைகள் குறித்து  மேலோட்டமாகப் பார்ப்போமா !

தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் ஜீன்28,1921 ல் பிறந்த தி.ஜானகிராமன்  நவம்பர்18, 1982  ல்  மறைந்தார். பள்ளி ஆசிரியராக 11 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்கிறார். அகில இந்திய வானொலியில் 27 ஆண்டுகள் கல்வி ஒலி பரப்புத்துறையில் பணிபுரிந்து இருக்கிறார். கணையாழி இலக்கிய இதழின் ஆசிரியராகவும் சிறிது காலம் இருந்துள்ளார். ஜானகிராமனுடன் பிறந்தவர்கள் நான்கு பெண்களும், ஒரு ஆணுமாக ஐந்து பேர்.வடமொழி தெரிந்தவர். கர்நாடக இசையில் ஆழ்ந்த ஞானம் கொண்டவர். எனவே அவர் பெற்ற அனுபவங்களின் திரட்சியை வெவ்வேறு வடிவங்களில் அவரது படைப்புகளில் காண முடியும்.

‘அம்மா வந்தாள்’ ‘மலர்மஞ்சம்’ ‘அன்பே ஆருயிரே’ ‘மரப்பசு’ ‘நளபாகம்’ போன்ற பத்து  நாவல்களை எழுதியிருக்கிறார். அவருடைய ‘மோகமுள்’ நாவலை அரசு அதிகாரியான ஞான.ராஜசேகரன் திரைப்படமாக எடுத்து இருக்கிறார். திஜாராவின் ’நாலுவேலி நிலம்’ 1959 ல் திரைப்படமானது. சுதந்திரம் அடைவதற்கு முன்பு தொடங்கி, சுதந்திரம் பெற்ற பின்பு முடியும் ‘செம்பருத்தி’ நாவல் அன்றைய வாழ்வியலை நம் கண்முன்னே கொண்டு நிறுத்தும்.

“ஒரு படைப்பாளியாக தி.ஜானகிராமன் தன்னியல்புடனும், அநாயசமான மேதமையுடனும் வெளிப்படுவது சிறுகதைகளில்தான் ” என்று கூறுகிறார் அவரது சிறுகதைகளை (122) காலச்சுவடு பதிப்பகத்திற்காக தொகுத்த சுகுமாரன்.

“சிறுகதைகளின் நீட்சிதான் அவருடைய நாவல்கள்.குறைந்தபட்சம் முப்பது சிறந்த  சிறுகதைகளை என்னால் சொல்ல முடியும். ‘ஸ்ரீராமஜெயம்’ கதையில் ராகவாச்சாரி இருபத்தியாறு வருடங்களாக ப்ரூப் ரீடராக  ஒரு அச்சாபிசில் பணிபரிகிறார்.ஒரு நாள் தன் குழந்தைகளுக்கு வேண்டுமென்று  பைண்ட் செய்த பெரிய நோட்டுப்புத்தகத்தை எடுத்துச் செல்வதை காவல்காரன் பிடித்துவிடுகிறான்.

இதைப்போல பத்து நோட்டு பண்ணி இவர்கிட்ட சாயங்காலத்துக்குள்ள கொடுக்கணும் என்று முதலாளி சொல்கிறார்.இது கதை. நிலப்பிரபுத்துவ காலத்திற்கும், முதலாளித்துவ காலத்திற்கும் இடைப்பட்ட வித்தியாசத்தை சொல்லும் சிறுகதை இது. இந்தக்காலமாக இருந்தால்,  திருட்டிற்காக அவரை முதலாளி வெளியேற்றியிருப்பார்; தண்டித்து இருப்பார். ஆனால் மனித உறவுகளை பெரிதுபடுத்திய  முதலாளி, அதேபோல பத்து நோட்டுகளை தரச்சொல்லுகிறார். யாரும் பெரிதாக கவனிக்காத நல்ல சிறுகதை இது” என்கிறார் அரசு குடிமைப்பணி பயிற்சிக் கல்லூரியின் முதல்வரான கல்யாணராமன். இவர் “ஜானகிராமம்” என்ற பெயரில் அவருடைய படைப்புகள் குறித்த  ஒரு நூலை தொகுத்துவருகிறார்.

கிரேசியா டெலடாவின் நோபல்பரிசு பெற்ற ’அன்னை’ நாவலை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

தி.ஜா.ராவின்  சக்தி வைத்தியம் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றது!

அவருடைய சிறுகதைகள் அனைத்தும் ரசனைக்குரியவை! கொட்டுமேளம் (1954), சிவப்பு ரிக்க்ஷா (1956), அக்பர் சாஸ்திரி (1963), யாதும் ஊரே (1967), பிடிகருணை (1974), சக்தி வைத்தியம் (1978), மனிதாபிமானம் (1981),எருமைப் பொங்கல் (1990), கச்சேரி (2019) ஆகிய ஒன்பது சிறுகதை தொகுதிகள் வந்துள்ளன. கச்சேரி, எருமை பொங்கல் ஆகியவை அவரது மரணத்திற்கு பின்பு வெளியாகின!

கமலம், தோடு, அவலும்உமியும், நாலாவது சார், சிவஞானம்,வீடு ஆகியவை அவரது குறு நாவல்களாகும்!

அவரது ஜப்பான் பயண அனுபவங்களை ’உதயசூரியன்’ என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதினார். இது 1967ல் நூலாக வெளியிடப்பெற்றது. ரோமானிய செக்கோஸ்லோவோக்கியா சென்ற அனுபவங்களை ’கருங்கடலும் கலைக்கடலும்’ என்னும் தலைப்பில் 1974ல் வெளியிட்டார்.இவை இரண்டும் இந்த நாடுகள் குறித்த நல்ல புரிதலை தமிழ் வாசகர் தளத்திற்கு தந்தன!

குடவாசலைச் சார்ந்த பள்ளி ஆசிரியர் பி.சார்லஸ் “துணை நடிகைகளைப் பற்றி பேசும் போதும், நறுமணம் பூசிக்கொள்பவர்களை  கடக்கும்போதும் ‘மணம்’ சிறுகதை என் நினைவிலாடும். அக்கதையில்,  துணைநடிகை நீலாவின் இயலாமை, அருவருப்பு, அதிர்ச்சி என அனைத்தையும் என்னால் உணர முடியும்” என்கிறார். இக்கதையில் வரும் நீலா, முதல் நாள் இரவு  மின்சாரம் நின்றுபோன இருட்டு நேரத்தில் ஒருவரோடு  இணைகிறாள். நல்ல மணம் வீசுகிறது. மறுநாள் காலையில் பார்த்தால் அவர்தான் பட முதலாளி; அவர் ஒரு தொழுநோயாளி.அதை மறைக்கவே நறுமணத்தை பூசிக்கொண்டு முதல் நாள் இருட்டு நேரத்தில் வந்தது தெரியவரும்.

ரஷ்ய இலக்கியவாதியான பியோதர் தஸ்தாயேவஸ்கி 573 பாத்திரங்களை படைத்து இருக்கிறார் என்று சொல்லுகிறார் நாவலாசிரியரான எஸ்.ராமகிருஷ்ணன். அதேபோல தி.ஜானகிராமன் படைத்த பாத்திரங்களை யாரும் கணக்கிட்டு இருக்கிறார்களா என்று  தெரியவில்லைல ! சரியாக கணிக்க முடியுமா என்றும் தெரியவில்லை !

அவர் அரசியலை நேரடியாக பேசியதில்லை. ஆனால் எல்லா  எண்ணவோட்டம் கொண்டவர்களும் அவரை கொண்டாடுகின்றனர். பஞ்சாங்கத்தை கையில் வைத்து இருக்கும் ஒரு  வழக்கறிஞர் போல  அவர் பழமைக்கும், புதுமைக்கும் இடையில் இருந்தார்.தேவைப்பட்டால் பழமையை கைவிட அவர் தயாராக இருந்தார். ‘வெட்டுப்புலி’ நாவலாசிரியர் தமிழ்மகன் ‘ரசிகரும், ரசிகையும்’ என்ற சிறுகதையை விதந்தோதுகிறார். “திருவையாறு ஆராதனைக்கு பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து செல்லும் மார்க்கண்டத்தை விட , தாசி ஞானாம்பாள்  தியாகையரை ஆராதிப்பதில் உயர்ந்து விளங்குகிறாள். அக்கதையில் வருணனை இருக்காது; ஆசிரியர் கூற்று ஒரு வரி கூட  இருக்காது. உரையாடல்கள் மூலமாகவே நாம் கதையை புரிந்து கொள்கிறோம்.இது மணிக்கொடியில் 1950 ல் வெளியான சிறுகதை ” என்கிறார் பெரியார் விருது பெற்ற தமிழ்மகன்.

கிறிஸ்தவர், முஸ்லிம் போன்ற சிறுபான்மையினரை  நல்லவிதமாக சித்தரிக்கிறார். சிறுகதை ஒன்றிற்கு அவர் வைத்துள்ள தலைப்பு ‘அக்பர் சாஸ்திரி’. அவருடைய இரண்டு அக்காக்களும் ஒருவரை மணந்து இளவயதிலேயே விதவையானவர்கள். எனவே  எப்போதும் பெண்களை கரிசனத்தோடு பார்க்கிறார்; சுயாதீனம் உள்ளவர்களாக படைக்கிறார்.  திரைப்பட  இயக்குநரான சா.ரு.மணவில்லன் ‘முள்முடி’ கதையை போற்றுகிறார். “அனுகூலசாமி நல்ல ஆசிரியர்தான். ஆனால் ஒரு நோட்டைத் திருடிய மாணவனிடம் யாரும் பேசக்கூடாது என்று ஒரு வருடத்திற்கு முன்பு சொல்லியதை இப்போதும் மாணவர்கள் கடைபிடிக்கிறார்கள்; அவருடைய ஓய்வுபெறும் பார்ட்டிக்கு கூட அவனிடமிருந்து ஒரு ரூபாய் வாங்க மறுக்கிறார்கள். அந்த மாணவன் அடையும் வேதனையைக் கண்டு தான் அடைந்த பெருமைகளை பொருளற்றதாக உணர்கிறார் அனுகூலசாமி”.

நல்ல படைப்புகளை  பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தி வரும் வாசகசாலை கார்த்திக் “என்னுடைய பனிரெண்டாம் வகுப்பு துணைப்பாட நூலில் வந்த ‘பாயசம்’ எனக்குப் பிடித்த சிறுகதை. தன் சொந்த அண்ணன் மகன் வீட்டுக் கல்யாணம் நடக்கிறது. அவனுடைய  செல்வாக்கு, செல்வம்  போன்றவைகளைக் கண்டு  பொறாமைத்தீயில் உருகும் 77 வயது  சாமநாது, பாயசக் குண்டானில் எலி விழுந்துவிட்டது என்று சொல்லி, அதனைக் கவிழ்த்துவிடுவார். மனிதனின் கீழ்மையான எண்ணங்களை படம் பிடிக்கும் சிறுகதை பாயசம்.அவருடைய முள்முடியும் நன்றாக இருக்கும் என்கிறார் கார்த்திக்.

தி.ஜா நூற்றாண்டு விழா எப்படி  நடைபெறுகிறது என்று கேட்டபோது “அவரைப் பற்றிய ஆவணப்படம் இல்லை. தி.ஜானகிராமன் படித்த கும்பகோணம் கல்லூரியில் கூட அவருடைய நூற்றாண்டு விழா கொண்டாடப்படவில்லை. அகில இந்திய வானொலி தி.ஜானகிராமன் நினைவு சிறுகதைப் போட்டியை நடத்தலாம்” என்கிறார் தி.ஜா. குறித்து தொடர்ந்து பேசி் வரும் கல்யாணராமன்.

” எந்தப் பூந்தியும் இனிப்புதான். பௌர்ணமி நிலா எந்தப் பக்கமிருந்து பார்த்தாலும் அழகுதான். நாதஸ்வர இசையை எங்கிருந்து கேட்டாலும் பிரமிப்புதான். ஜானகிராமன் நாவல்களும் சரி, சிறுகதைகளும் சரி அப்படித்தான். ஒன்றை மற்றொன்று விஞ்சும் ஈர்ப்பும் பரவசமும் தரக்கூடியவை. முள்முடி, அக்பர் சாஸ்திரி, நடேசன்னா, பரதேசி வந்தான்,பாயசம், சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய், கோபுர விளக்கு  இப்படி எனக்குப் பிடித்த கதைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்” என்கிறார் மொழிபெயர்பாளரான அக்களூர் இரவி.

திஜாவின் இரண்டு மகன்கள் இறந்துவிட்டனர். அவரது மகளான உமா சங்கரி ஆந்திராவில் வசிக்கிறார். தி.ஜானகிராமன் நூற்றாண்டை முன்னிட்டு ‘கனலி’ இணையதளம் தி.ஜா.100 என்ற சிறப்பிதழை வெளியிட்டுள்ளது.அதில் உமா சங்கரியின் நேர்காணல் வந்துள்ளது. அதனைத் தொகுத்த க.விக்னேஸ்வரன் ‘தவம்’,’பாஷாங்க  ராகம்’,’கோபுரவிளக்கு’ ‘சிலிர்ப்பு’ ‘கடன் தீர்ந்தது’ போன்ற கதைகளை சிலாகிக்கிறார்.

மனிதனை ஆற்றுப்படுத்தும் வேலையை தி.ஜாவின் படைப்புகள் தொடர்ந்து செய்கின்றன. வரவிருக்கிற புத்தாண்டை முன்னிட்டு என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், ‘பாயசம்’ சிறுகதையைப் படியெடுத்து வாழ்த்தாக  அனுப்பலாம்  என்று இருக்கிறேன்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time