அரசமைப்பு சட்டமா? தனி நபர் அதிகாரமா?

- நீதிபதி ஹரிபரந்தாமன்

உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ஒன்றிய அரசு ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். அதே போல, உச்ச நீதிமன்ற அமர்வு இந்த 14 கேள்விகளுக்கு பதில்  அளிக்கக்கலாம், அளிக்காமலும் தவிர்க்கலாம். பதவிக்கான அதிகாரத்தை நிலை நாட்டுவது தான் முக்கியமா? மக்கள் நலன்களுக்கான சட்டங்கள் முக்கியமா..? என்றும் விவாதிக்கலாம்; நீதிபதி ஹரிபரந்தாமன் அலசல்;

குடியரசு தலைவருக்கு சில சந்தேகங்கள் எழுந்துள்ளதாம்.  அந்த சந்தேகங்களை தீர்த்து வைக்குமாறு உச்சநீதிமன்றத்தை கேட்டுள்ளார் நமது குடியரசுத் தலைவர் துரௌபதி முர்மு. அதாவது, 14 கேள்விகளை  உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி, அவரது சந்தேகத்தை தீர்த்து வைக்குமாறு கூறியுள்ளார். இது பற்றிய விவாதங்கள்  ஊடகங்களில்  நடைபெற்றுக் கொண்டுள்ளது.

நமது அரசமைப்புச் சட்டத்தில் குடியரசுத் தலைவருக்கு சந்தேகம் என்றால், மத்திய அரசுக்கு சந்தேகம் என்று பொருள். மத்திய அரசு கேட்டுக் கொண்டதின்  பேரில் தான் மேற்சொன்ன 14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி  சந்தேகத்தை தீர்க்குமாறு கேட்டுள்ளார் குடியரசுத் தலைவர்.

அந்த 14 கேள்விகளில் எந்த கேள்வியும் ,சமீபத்தில் ஏப்ரல்- 8,.2025 அன்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பெற்ற  தீர்ப்பை குறிப்பிட்டு அல்ல. ஆனால்,  அதே சமயத்தில் அந்த தீர்ப்பை கேள்விக்கு உள்ளாக்குவதும்,  நீர்த்துப் போக வைப்பதும் தான் மத்திய அரசின் நோக்கமாக உள்ளது.

மேற்சொன்ன உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. உச்சநீதிமன்றம் எப்போதாவது இது போன்ற தீர்ப்புகளை வழங்கும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  சட்டசபை ஒரு சட்டத்தை இயற்றி  ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பினால்,  கால வரையறை இன்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுநர் இருக்க முடியாது என்பதே அந்த தீர்ப்பின் அடிப்படையான சாரம்.

ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். அல்லது,ஒப்புதல் தருவதை நிறுத்தி வைப்பதாக இருந்தால், மூன்று மாதத்திற்குள் அதைத் திருப்பி சட்டசபைக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பும் போது அவருடைய கருத்தை கூற வேண்டும்.

அதாவது, அந்த சட்டத்தில் என்ன திருத்தம் செய்வது என்பது பற்றி யோசனை கூற வேண்டும். அவரது யோசனையை சட்டசபை ஏற்கலாம் அல்லது மறுக்கவும் செய்யலாம். மீண்டும் சட்டசபை அதே சட்டத்தை  இயற்றி –யோசனையை ஏற்றோ மறுத்தோ சட்டம்  இயற்றி–ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பினால் ஆளுநர்  ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் தர வேண்டும் என்று கூறுகிறது அந்த தீர்ப்பு.


அதே போல, ஒத்திசைவு பட்டியலில் உள்ள பொருள் பற்றி சட்டசபை இயற்றும் சட்டத்தை உடனடியாக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு  ஒப்புதல்  வேண்டி அனுப்ப வேண்டும். குடியரசுத் தலைவர் 3 மாதத்திற்குள் அது பற்றி முடிவெடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கும் கால கெடு விதித்துள்ளது மேற்சொன்ன தீர்ப்பு.

குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரலாம். அல்லது, அந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று கருதினால் மீண்டும் சட்டசபைக்கு அனுப்பி, அந்த திருத்தத்தை செய்ய கூறலாம். அல்லது தகுந்த காரணங்கள் கூறி ஒப்புதல் தர மறுக்கவும் செய்யலாம். ஆனால்  குடியரசுத் தலைவர் காலவரையறை இன்றி எந்த முடிவும் எடுக்காமல், மாதக்கணக்கில் அல்லது ஆண்டு கணக்கில் சும்மா இருக்க கூடாது என்று கூறுகிறது அந்த தீர்ப்பு.

இந்த சமயத்தில் ஒன்றை குறிப்பிட்ட வேண்டும். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் என்பது மத்திய மந்திரி சபையின் ஒப்புதல் என்று பொருள்.

ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் உச்சநீதிமன்றம்  காலக்கெடு  விதிக்க  முடியாது என்று கொக்கரித்தார் உதவி குடியரசுத் தலைவர் திரு.தன்கர்.

மேற்சொன்ன 415 பக்கங்கள் கொண்ட மிக நீண்ட தீர்ப்பில் தீவிர  ஆய்விற்குப் பின்னரே உச்ச நீதிமன்றம் காலக்கெடுவை விதித்தது. 1858 இல் முதல் முறையாக பிரிட்டிஷ் அரசு கவர்னரை  நியமித்ததில் இருந்து தொடங்கி, இன்று வரை உள்ள அரசமைப்பு சட்ட விதிகளை ஆய்வு செய்துள்ளது உச்சநீதிமன்றம்.

பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதியாக கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் 1857 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை எதிர்த்து இந்திய சிப்பாய்கள் கலகம் செய்தனர். அதை  முதல் சுதந்திரப் புரட்சி என்றும் குறிப்பிடுவர். இதற்குப் பின்னரே  இந்தியாவை  பிரிட்டிஷ் அரசு நேரடியாக ஆட்சி செய்ய தொடங்கியது.

1858 ல் கவர்ன்மெண்ட் ஆப் இந்தியா சட்டம் மூலம் கவர்னர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு மாகாணமும் ஒவ்வொரு கவர்னரின் ஆளுகையின் கீழ் இருந்தது. அந்த மாகாணம் சம்பந்தமாக சட்டம் இயற்றவோ அல்லது  உத்தரவுகள் பிறப்பிக்கவோ கவர்னருக்கு அதிகாரம் உண்டு.

இந்நிலையில் 1919 இல் கவர்ன்மெண்ட் ஆப் இந்தியா சட்டத்தின் கீழ்,  மாகாணங்கள்  தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட சபைகள் மூலம் ஆட்சி செய்ய அனுமதித்தது.

கல்வி ,மருத்துவம், விவசாயம் போன்ற சில பொருட்கள் சம்பந்தமாக மாகாண சட்ட சபை சட்டம் இயற்றலாம்.  மற்றவைகள் சம்பந்தமாக கவர்னர் சட்டம் இயற்றுவார் என  வழி வகை செய்யப்பட்டது.

மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்வி, மருத்துவம், விவசாயம் போன்ற பொருட்களில்   மாகாண சட்டசபை சட்டம் இயற்றினாலும், கவர்னரின் ஒப்புதல் இன்றி அது சட்டமாகாது என்பது நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசின் சட்டம்.

அடுத்து 1935 ஆம் ஆண்டில் கவர்ன்மெண்ட் ஆப் இந்தியா சட்டம் வந்தது. அதில், மத்திய அரசுக்கான அதிகாரம்,  மாகாணங்களுக்கான அதிகாரம் என்பது வரையறுக்கப்பட்டது. மத்திய அரசு இயற்றும் சட்டங்கள்  கவர்னர் ஜெனரல் ஒப்புதல் இன்றி சட்டமாகாது. ஏற்கனவே உள்ளது போல மாகாணங்கள் இயற்றும் சட்டங்கள் கவர்னரின் ஒப்புதல்  இன்றி சட்டமாகாது.

அதாவது பிரிட்டிஷ்  அரசு இந்தியாவை அடிமையாக வைத்திருந்த போது பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்படும் கவர்னர்களின் அனுமதி இன்றி, மாகாண சட்ட சபைகள் சட்டத்தை நிறைவேற்ற இயலாது என்ற நிலை இருந்தது. கவர்னர்கள் மாகாணங்கள் இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் தரலாம் ,ஒப்புதல் தராமல் வெறுமனே இருக்கலாம் அல்லது ஒப்புதல் தர மறுக்கலாம்..என்பதே நம்மை அடிமைத் தளையில் வைத்திருந்த பிரிட்டீசின் அணுகுமுறையாக இருந்தது.

மேற்சொன்ன விபரங்களை கூறும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு, ஜனவரி,- 26 , 1950 முதல் அமலுக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கவர்னருக்கோ அல்லது குடியரசுத் தலைவருக்கோ சட்டசபை இயற்றும் சட்டங்களையோ அல்லது பாராளுமன்றம் இயற்றும் சட்டங்களையோ ஒப்புதல் தராமல் இருக்கும் அதிகாரம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காண்பிக்கிறது உச்ச நீதிமன்ற தீர்ப்பு.

இந்த பின்னணியில் தான் உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் சட்டசபை இயற்றும் சட்டங்கள் சம்பந்தமாக ஒப்புதல் தருவதற்கு  காலக்கெடுவை விதித்துள்ளது.


எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அந்த ஆட்சியை செயல்பட விடாமல் தடுக்கும் வேலையை செய்வது தான்  ஆளுநர்களுக்கு பாஜகவின் மத்திய அரசு அளித்துள்ள வேலை என்று தமிழ்நாடு முதல்வர் குற்றம் சாட்டியுள்ளது மிகச் சரியானது தான் . இந்த வேலைக்கு  முட்டுக்கட்டையாக வந்துள்ளது இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு. எனவே, அதை நீர்த்து விடும்படி செய்ய வேண்டும். அதற்கான மத்திய அரசின் உத்தியே, உச்ச நீதிமன்றத்திற்கு மேற்சொன்னபடி 14 கேள்விகளை கேட்டு அதற்கு உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கேட்பது.

உச்சநீதிமன்றம் குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைத்து அந்த 14 கேள்விகளுக்கான பதில்களை அளிக்க பணிக்கப்படும். அதை காரணமாக காட்டி இனிவரும் காலங்களில் எதிர்க்கட்சி  ஆட்சி செய்யும் மாநிலங்களில் இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் தர வேண்டாம் என்ற அராஜக வேலையை கவர்னர்கள் தொடர்வார்கள். இது பாஜக அரசின் உத்தியாக இருக்கலாம்.

அரசமைப்புச் சட்டம் பிரிவு 143 இன் கீழ்  14 கேள்விகளுக்கு  கருத்தை  தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் கேட்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் தெரிவிக்கும் கருத்து ஒரு தீர்ப்பு ஆகாது. உச்ச நீதிமன்றம் அளிக்கும் கருத்தை ஒன்றிய அரசு ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். அதே போல உச்ச நீதிமன்ற அமர்வு இந்த 14 கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாது என்றும் தெரிவிக்கலாம். இதற்கு முன் உதாரணம் உண்டு. 1991 ஆம் ஆண்டில் வழிபாட்டு இடங்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிய வேளையில் ,மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் அரசமைப்புச் சட்டம் பிரிவு 143 ன் கீழ் ஒரு கருத்தை கேட்டது. அதாவது பாபர் மசூதி இருக்கும் இடத்தில் அதற்கு முன்னர் இந்துக்களின் கோயில் இருந்ததா? என்ற கேள்விக்கு கருத்தை அளிக்குமாறு கேட்டிருந்தது. இந்த கேள்விக்கு கருத்தை அளிக்க இயலாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல இந்த 14 கேள்விகளின் சாராம்சம், சட்டசபை இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் தருவது சம்பந்தமாக ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் உச்ச நீதிமன்றம் காலக்கெடுவை  நிர்ணயிக்க முடியுமா என்பதுதான்.

இந்த நேரத்தில் ஒரு கேள்வியை நாம் கேட்டாக வேண்டும். பாராளுமன்றம் இயற்றும் சட்டங்களுக்கு  , அச்சட்டங்கள் இயற்றப்பட்ட அன்றே குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கிறார் என்பதை அனைவரும் அறிவர். வக்பு திருத்த சட்டமாகட்டும், குடியுரிமை திருத்த சட்டமாகட்டும், தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டமாகட்டும், எந்த சட்டத்தை பாராளுமன்றம் ஏற்றினாலும் அன்றே குடியரசுத் தலைவர் ஒப்புதல் தருவார். ஆனால் இதே அணுகு முறையை சட்டசபை இயற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் தரும் போது கடைப்பிடிக்க மறுப்பது எந்த விதத்தில் நியாயமாகும்.

எந்த மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கிறார்களோ, அதே மக்கள் தான் சட்டசபை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கிறார்கள். எனவே பாராளுமன்றம் இயற்றும் சட்டங்களுக்கு ஒரு அணுகுமுறை என்பதும் ,சட்டமன்றம் இயற்றும் சட்டங்களுக்கு– அதுவும் குறிப்பாக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்களுக்கு –ஒப்புதல் தருவதற்கு வேறு அணுகுமுறை என்பதும் ஜனநாயகத்திற்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் விரோதமானது.


ஆளுநர்களை மத்திய அரசின் ஏஜென்ட்களாக மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசும் பயன்படுத்தியது என்பது உண்மைதான். இருந்தாலும், இப்போது பாஜக ஆட்சியில் இருப்பது போல எதிர்க்கட்சி ஆட்சி  செய்யும் மாநிலங்களை ஆட்சி செய்ய விடாமல் தடுக்கும் வேலையை ஆளுநர்கள் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் அரசு கருதவில்லை. இது தான் வித்தியாசம். பாஜகவின் இந்த செயல் பாசிச அணுகுமுறை என்பது தானேயன்றி, வேறு ஒன்றும் அல்ல.

இதை வீழ்த்துவதற்கு தமிழ்நாடு முதல்வர் அனைத்து எதிர்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல் வர்களையும் ஒன்றிணைத்து உச்ச நீதிமன்றத்தில் போராட  அழைத்திருப்பது வரவேற்கத்தக்கது.

கட்டுரையாளர்; ஹரிபரந்தாமன்

 

உயர்நீதிமன்ற நீதிபதி ( ஓய்வு),

சென்னை உயர்நீதிமன்றம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time