அனகாபுத்தூர் அராஜகம்! அதிகாரமற்ற முதல்வர்!

-அஜிதகேச கம்பளன்

அனகாபுத்தூர் குடியிருப்புகள் இடிப்புக்கு சொல்லப்பட்ட காரணங்கள் பொதுவாக பார்க்கும் போது நியாயமாகத் தோன்றுகிறது. ஆனால், உண்மையும், யதார்த்தமும் நெஞ்சை பிழிகின்றது. இது, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு எடுத்த கொள்கை நிலைபாடுகளுக்கு ஏற்ப தமிழக அதிகாரிகளும், காவல்துறையும்  செயல்படுவதையே காட்டுகிறது;

சென்னையை 2015 வெள்ளத்திற்கு  பின்னர் ஆற்றங்கரைகளில், நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஏழை, எளியோர் குடிசை மற்றும் சிறு குடியிருப்புகளால் தான்  அந்த வெள்ளத்தின் போது வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டதாக அதிகார மையங்களின் சார்பாக ஒரு கருத்துருவாக்கம் செய்யப்பட்டது.  இந்த பின்னணியில் அரசும் , நீதிமன்றங்களும்  கைகோர்த்துக் கொண்டது போல நீர் நிலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது என்று  அறிவித்து ஒரு போலித்தனமான அறச் சீற்றம்  காட்டின!  இதை ஏன் போலித்தனமான அறச் சீற்றம் என்றேன் என்பதற்கான அர்த்தத்தை இந்த கட்டுரையை முழுமையாக வாசிக்கும் போது உங்களுக்கே புரிந்துவிடும்.

2015 வெள்ளத்திற்கு பிறகு அடையாறு ஆற்றை ஒட்டிய எளியோர்களின் அனைத்து ஆக்கிரமிப்புகளும் அடியோடு அகற்றப்பட்டன. ஆனால், பெரிய கட்டிடங்கள் மட்டும் கண்டு கொள்ளாமல் விடப்பட்டன.

மத்திய அரசின் கார்ப்பரேட் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்ற கொள்கைக்கு ஏற்ப, தமிழ்நாடு அரசு ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்கி அதற்கு சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனம் (CRTCL) எனப் பெயரிட்டு, அதன் பேரில் எளியோர் குடியிருப்புகளை வேட்டையாடி அழிப்பது நடக்கிக்றது.

திமுக அட்சிக்கு வந்த பிறகு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பக்கிங்காம் கால்வாயை ஒட்டி உள்ள கோவிந்தசாமி நகர்,  இளங்கோ தெரு போன்ற இடங்களில் இருந்த 625  எளிய மக்களின் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளை அகற்றினர். இதைத் தொடர்ந்து கண்ணையா என்பவர் தீக்குளித்து உயிர் இழந்தது நினைவிருக்கலாம்.

கடற்கரையோரம் என்பது மீனவர்களின் பூர்வீக இடமாகும். ஆனால், மெரீனா லூப் சாலையில் ஏழை, எளிய மீனவப் பெண்களின் மீன் கடைகள் அதிரடியாக அப்புறப்படுத்தப்பட்டன!

தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அடையாறு நதியை சீரமைக்க  தமிழ்நாடு அரசின் புதிய நிறுவனமான சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனம் (CRTCL) மூலம் ரூபாய் 1,500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ள வரவு செலவு திட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தினை செயல்படுத்த நடப்பு ஆண்டில் தமிழக அரசு ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடையாறு நதியை முழுவதுமாக புனரமைத்து கரையோரம் உள்ள பகுதிகளில் கழிவுநீர் கலப்பதை அறவே தடுத்து, நீர்வாழ் உயிரினங்கள் வாழும் சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றால், கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் அதன் மூலம் மாசுபடுவதை தடுக்கவும் கரையோரம் உள்ள குடியிருப்புகளை அகற்றுவது அவசியம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

அடையாறு ஆற்றினை 110 அடியிலிருந்து 360 அடியாக அகலப்படுத்தும் பொருட்டு ஆற்றங்கரை ஒரு புறத்தில் அமைந்துள்ள ஏழை எளிய மக்களின் அகற்றுகிறோம் என்ற கூற்றில் உண்மையுள்ளதா? ஆற்றை அகலப்படுத்துவதும் நடக்கவில்லை. ஆழப்படுத்துவதும் நடக்கவில்லை. மாறாக அகற்றப்பட்ட இடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் மேட்டுக்குடியினருக்கு நடைபாதை மற்றும் பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. அத்துடன் காசா கிராண்ட் போன்ற கட்டுமான நிறுவனங்களுக்காக அடுக்குமாடி குடியிருப்புக்கான வசதி வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படுகின்றன..என்பதே ஏழை, எளிய மக்கள் வைக்கும் குற்றச்சாட்டாகும்.

சில இடங்களீல் ஜி ஸ்கொயர், அதானி எண்டர்பிரைசஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகக் கூட பல இடங்களில் குடியிருப்புகள் அகற்றப்படுகின்றன.. என்றும் மக்கள் தெரிவித்தனர்.

அந்த வகையில் அடையாறு பாய்ந்தோடும் அனகாபுத்தூரில் உள்ள டோபிகானா, தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், காயிதே மில்லத் நகர், ஸ்டாலின் நகர், எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளில் அடையார் ஆற்றை ஆக்கிரமித்து 700 குடியிருப்புகள், கடைகள் கட்டப்பட்டிருப்பதாக அறிவித்து 2023 ஆம் ஆண்டு ஒரு இடிப்பு முயற்சியை அரங்கேற்றினர்.

இவற்றை அகற்ற வருவாய் துறை மூலமாக  நோட்டீஸ் வழங்கப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு 20 கடைகள், 90-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன. ஆக்கிரமிப்பாளர்களுக்கு, தாம்பரம் தர்காஸ் சாலையில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தப் பகுதிகள் ஊராட்சி, நகராட்சி பட்டியலில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன! மின் இணைப்பு, குடி நீர் இணைப்பு, வீட்டு வரி என எல்லாம் இருந்துள்ளது!

இங்கு வாழும் மக்களின் பிள்ளைகள் 400 க்கு மேற்பட்டோர் அரசு பள்ளிகளில் படித்துவரும் மாணவர்களின் கல்வி கேள்வி குறியாக உள்ளது. இவர்களுக்கு 10 கீமீ தள்ளி ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் வெறும் 350 சதுர அடியில் மாற்று இடம் தரப்பட்டத்தால் வேதனை அடைந்த மக்கள் தினசரி போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட், மே 17, மற்றும் நாம் தமிழர் கட்சி போன்றவை களத்தில் நின்று போராடின.

ஆயினும் ஆக்கிரமிப்பு அகற்றுகிறோம் என்ற பெயரிலான அராஜக நடவடிக்கை நேற்று முதல் மீண்டும் தொடங்கியது.  பாதிக்கப்படும் மக்களை அச்சுறுத்தும் விதமாக தாம்பரம் மாநகர துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் தலைமையில் நீர்வள ஆதாரத்துறையினர், வருவாய்த்துறையினர் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் வீடுகளை இடிக்கும் பணியில் மக்களின் கதறல்களை பொருட்படுத்தாமல் இறங்கினார்கள்.

முதல் நாளான நேற்று, சாந்தி நகர், தாய் மூகாம்பிகை நகரில் வீடுகள் இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அழுகையும், ஆற்றாமையும், குமுறலும், இயலாமையும், விரக்தியும் வெளிப்பட்ட மக்களை அலட்சியப்படுத்தி  வீடுகள் இடித்து அடியோடு அகற்றப்பட்டன.

இதனைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர்.நகரில் ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணியை தொடர்ந்தனர்.. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மாலை 4 மணியளவில் வீடுகளை இடிக்கும் பணி சற்றே  நிறுத்தப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட வீடுகள் அப்புறப்படுத்தப்பட உள்ளதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி 2-வது நாளாக இன்றும் தொடர்ந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் ஆற்றங்கரை பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்பு வீடுகளும் அகற்றப்படும் என்றும் அதிகாரிகள்  கூறினர்.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஏழுமலை கூறும் போது, ’’அப்பகுதியின் அடையாறு ஆற்றங்கரை மொத்தம் 370 ஏக்கராகும். இதில் மூன்று ஏக்கரில் அமைந்துள்ள எளியோர் குடிருப்புகளை மட்டும் அகற்றுகிறார்கள். மற்ற இடங்கள் என்னவானது…? ஏன் இந்த இரட்டை  நிலைபாடு’’ என்றார்.

இந்தப் பகுதியின் கம்யூனிஸ்ட் பிரமுகரான கே.என்.பாலன் கூறுகையில், ’’இந்த மக்களை வாழ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் போது பக்கத்தில் காசா கிராண்ட் கட்டியுள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் பக்கம் ஜே.சிபி போக மறுக்கிறதே ஏன்? எங்கள் கட்சி பொதுச் செயலாளர் முத்தரசனும், மதிமுக தலைவர் வைகோ அவர்களும் இது குறித்து முதல்வர் கவனத்திற்கு பல  முறை கொண்டு சென்றும் எந்தப் பயனுமில்லை என்பது தான் அதிர்ச்சியளிக்கிறது’’ என்றார்.

இது குறித்து மே-17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி அந்த பகுதிக்கு தொடர்ந்து சென்று ஆதரவு தந்து வந்தார். அவர் பேசுகையில், ‘’காஸாக்ராண்ட்’ எனும் சென்னையின் பெரிய ரியல்எஸ்டேட் கம்பெனியின் வீடுகள் அனகாபுத்தூர் குடியிருப்பிற்கு எதிர்கரையில் வருகிறது. பல்லாவரம்-குன்றத்தூர் சாலையில் மேலுமொரு மாபெரும் அபார்ட்மெண்ட்டுகளை காஸாக்ராண்ட் கட்டுகிறது. அதே ஆற்றின் ஓரம், சற்று தொலைவில் மேலுமொரு ப்ராஜெக்ட்டை காஸாக்ராண்ட் கட்டுகிறது. இவ்வாறாக இப்பகுதியில் அடுத்தடுத்து ஆற்றின் ஓரம் நடக்கும்   காஸாக்ராண்ட்டின் அபார்ட்மெண்ட்டின் சுற்றுச்சுவர்,  ப்ராஜெக்ட் எல்லை ஏன் அடையாறு ஆற்றின் கரையை ஆக்கிரமித்து வருகிறது என கேட்க யாருமில்லை. ஊடகங்கள் கேட்பதில்லை. எதிர்க்கட்சிகள் பேசுவதில்லை. ஊழலுக்கு எதிராக போராடுவோர் எவரும் பெருநிறுவனத்தையோ, வீடு இடிப்பையோ கேட்பதில்லை.

இந்த காஸாக்ராண்ட் திட்டங்களுக்காக மார்க்கெட்டிங் வேலைகள் நடக்கின்றன. ஆற்றின் கரையை ஆக்கிரமித்து கட்டினால், வெள்ளநீர் செல்ல வழியில்லாமல் தவிக்கும். இதை சரிசெய்ய எதிர்கரையில் நிலத்தை கையகப்படுத்த வேண்டும். ஆகவே அனகாபுத்தூர் குடிசைகள் அகற்றப்படுவதில் வியப்பில்லை. 2008ல் பட்டா தருவதற்கு ரசீது கொடுத்திருக்கிறார்கள். CMDA இப்பகுதியை குடியிருப்பு பகுதியென அறிவித்திருக்கிறது. ஆனால், இதுநாள்வரை  பட்டா தரவுமில்லை, பதிவு செய்யவுமில்லை, தற்போது புதிய வரைபடத்தை காட்டி வீடுகளை இடிக்க வருகிறார்கள்.

இடிக்கப்படும் இவர்களது குடியிருப்பிற்கு அருகே, ஆக்கிரமிப்பாக உயர்ந்து நிற்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த 10-15 ஆண்டுகளில் இடிக்கப்பட்டதில்லை. அடையாறு கரையில் ஷான்ராயல் ஹோட்டல், ஸ்கைவாக்-அம்பா மால் ,சைதை காஸாக்ராண்ட் என பட்டியலை சொல்லலாம். இவற்றிற்கு அருகே இருந்த வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. ஆர்.ஏ புரம் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்பு என இடிக்கப்பட்ட வீடுகளை விட அதிகமாக ஆற்றின் கரையை ஆக்கிரமித்து மின்சாரவாரிய கட்டிடம் இன்றும் கம்பீரமாக நிற்கிறது. இதற்கெல்லாம் தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்’’ என்றார்.

இன்றைய தினம் களத்திற்கு நேரடியாக விசிட் செய்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பத்திரிகையாளர்களிடம் பேசுமையில் அடையாறு ஆற்றின் கரையைப் பலப்படுத்துவதாகக் கூறி சென்னை அனகாபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள 750 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 3500-க்கும் மேற்பட்ட மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற திமுக அரசு முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது. குடியிருப்புகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கிப் போராடிய பூர்வகுடி மக்களின் மீது காவல்துறை மூலம் கடுமையான அடக்குமுறைகளை ஏவி திமுக அரசு கைது செய்திருப்பது சிறிதும் மனிதநேயமற்ற கொடுஞ் செயலாகும்.

ஏழை எளிய மக்களின் குடியிருப்புகளை அகற்ற முயலும் திமுக அரசு, கரையின் மறுபுறத்தில் உள்ள பெருமுதலாளிகளுக்கு சொந்தமான இடங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? அவையெல்லாம் ஆக்கிரமிப்பு இல்லையா? ஆற்றங்கரையின் ஓரத்தில் கார்பரேட் நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ள மிகப்பெரும் மதில் சுவர்களை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற திமுக அரசிற்குத் துணிவிருக்கிறதா?

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு என அனைத்து சான்றுகளையும் பெற்று, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தி, வாக்கும் செலுத்தி வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பு என்றுகூறி வெளியேற்றுவது சிறிதும் நியாயமற்ற செயலாகும். அம்மக்களிடம் வாக்கு கேட்டுச் செல்லும்போது ஆக்கிரமிப்பு என்று தெரியாத வீடுகள் இப்போது மட்டும் ஆக்கிரமிப்பாகத் தெரிகிறதா? காவல் துறை மூலம் அடக்குமுறைகளை ஏவி மண்ணின் மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது, திமுக அரசின் எதேச்சதிகார மனப்பான்மையையே வெளிக்காட்டுகிறது’’ என்றார்.

எவ்வளவு பேசினாலும் முதலமைச்சர் ஸ்டாலினிடமிருந்து பதில் வராது. பொம்மை முதல்வரான அவருக்கு எப்போது அதிகாரிகள் அல்லது ஆலோசகர்கள் இந்தப் பிரச்சினை தொடர்பாக எழுதி தருகிறார்களோ அப்போது தான் அவர் வாய் திறப்பார்.

அஜிதகேச கம்பளன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time