நீதிமன்றம் ஒன்றே நம் அரசியல் பிரச்சினை, சமூக பிரச்சினை, குடும்ப சச்சரவுகள் உள்ளிட்ட அனைத்திற்கும் தீர்வு என்பது ஆரோக்கியமற்ற சூழலின் அடையாளமாகும். நீதிபதிகள் என்ன வானத்தில் இருந்து வந்துதித்த தேவ தூதர்களா…?
இப்ப எல்லாம் நீதிமன்றங்களை நாம் அதிகம் நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆட்சியாளர்கள் தவறிழைக்கும் போது,
அதிகார மையங்களின் அழுத்தங்கள் தலை தூக்கும் போது,
காவல்துறை செயல்பட மறுக்கும் போது,
அரசு நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி அழிச்சாட்டியம் செய்யும் போது..,
என இப்படி பட்டியல் போட்டால் நீண்டு கொண்டே போகும்.
மேற்படி விவகாரமெல்லாம் தனி நபர்கள் வேறு வழியில்லாமல் நீதிமன்றங்களை நாடுவதாகும்.
ஆனால், தற்போது அரசியல்வாதிகளும் – அதிலும் குறிப்பாக ஆட்சியாளர்களும் நீதிமன்றங்களை அதிகமாக நாடத் தொடங்கிவிட்டனர்.
மத்திய ஆட்சியாளர்கள் தங்கள் ஏஜெண்டுகளான கவர்னரை வைத்து மாநில அரசுக்கு தாங்க முடியாத டார்ச்சர் கொடுக்கும் போது மாநில அரசுகள் நீதிமன்றத்தின் உதவியை நாடுகிறார்கள்!
குடியரசுத் தலைவரும், கவனரும் மாநில அரசுகள் அனுப்பும் மசோதாக்கள் இருக்கட்டும், கருணை மனு மீது கூட முடிவு எடுக்க பல்லாண்டுகள் காலம் தாழ்த்துகிறார்கள்..!
இப்படி சகலத்திற்கும் நாம் நீதிமன்றங்களை நாடுவது சரியாக இருக்குமா?
இதோ பாருங்க, டாஸ்மாக்கில் வரலாறு காணாத ஊழலை நடைமுறைப்படுத்தி வரும் தமிழக ஆட்சியாளர்கள் டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனைக்கு தடை கேட்டு அதையும் உச்ச நீதிமன்றம் தந்துள்ளது.
ஆக, இது ஊழலுக்கு தடையற்ற அனுமதியை தந்ததாகத் தான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
ஆட்சியாளர்கள் நேர்மையாக இருக்கமாட்டார்கள். கணக்கு வழக்கின்றி ஊழல்களில் திளைப்பார்கள். பொதுச் சொத்தை சூறையடுவார்கள். அவர்களை விசாரணைக்கு உட்படுத்தினால், நீதிமன்றம் சென்று தடை கோருவார்கள்.. என்றால் எப்படி?
மாநில ஆட்சியாளர்கள் தான் இப்படி என்றால், மத்திய ஆட்சியாளர்கள் விசாரணை அமைப்புகளை அநீதிகளை தடுக்கவும், நியாயத்தை நிலை நாட்டவும் பயன்படுத்தாமல் மிரட்டலுக்கும், பேரத்திற்கும், அரசியல் எதிரிகளை பழி வாங்கவும் பயன்படுத்துவார்கள் என்றால் எப்படி?
இப்படி மத்திய, மாநில ஆட்சியாளர்கள் தவறுக்கு மேல் தவறுகள் செய்து கொண்டு, அவரவர் தரப்பும் நீதிமன்றத்தில் நியாயம் கேட்டால் எப்படி..?
அரசியல் அழுத்தங்கள் நீதிமன்றங்களை நிர்பந்திக்கிறதா? இல்லையா?
எனில், அதிக அதிகாரம் உள்ளவர்கள் நீதியை வென்றுவிடுவதும் நடக்கிறதா? இல்லையா?
இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு கையறு நிலையில் இருப்பது தான் ஜனநாயகத்தில் மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறதா..?
அதே போல துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் தந்த ஒப்புதலுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அவசர, அவசரமாக மாநில அரசு பதில் அளிக்கக் கூட வாய்ப்பளிக்காமல் தடை தருகிறார்கள்! ஆக, பல ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு உச்ச நீதிமன்றத்தால் கிடைத்த ஒரு மகத்தான உரிமையை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அராஜகமாக தடுத்துள்ளனர்.
இதையெல்லாம் எப்படி புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை.
நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளின் தீர்ப்புகள் சில சமயங்களில் பெரிய நன்மைகளைத் தருவதைப் போலவே, பெரிய தீமைகளுக்கும் வித்திட்டு வருகின்ற யதார்த்தத்தை புறம் தள்ள முடியவில்லை.
இதற்கு ஆயிரக்கணக்கான உதாரணங்களை நாம் நம் அனுபவங்களில் இருந்தே சொல்ல முடியும். அரசியல்வாதிகள் தவறுகள் இழைத்தால் கூட தேர்தல் மூலம் அவர்களை தண்டிக்கும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது. ஆனால், எந்த நீதிபதியையும் யாராலும் தண்டிக்க முடியாது.
அதனால், சமூக தளத்திலும், அரசியல் தளத்திலும், மக்கள் மன்றங்களிலும் காண வேண்டிய தீர்வுகளுக்கு நாம் நீதிமன்றங்களை நாடக் கூடாது. ஒவ்வொரு அமைப்புக்கும் தார்மீக பொறுப்பு உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் அறம் சார்ந்த வாழ்வியல் உள்ளது. அவரவரும் அவரவர் தளத்தில் சரியாக இருந்தால் மட்டுமே, மற்ற தளங்களில் தவறு நடக்கும் போது தட்டிக் கேட்க முடியும்.
இங்கே எல்லா தளத்திலும் சோரம் போனவர்களே பெருமளவு அதிகாரத்தை ஆக்கிரமித்துள்ளார்கள்! அவர்கள் தங்களை எதிர்த்து கேட்க ஆளில்லாத நிலையைத் தான் முதலில் கட்டமைக்கிறார்கள்.
எதிர்கட்சிகள் மக்கள் பிரச்சினைக்காக இல்லை.
ஊடகங்கள் மக்கள் பிரச்சினைகளை எதிரொலிப்பதில்லை.
எழுத்தாளர்கள், கவிஞர்கள், சிந்தனையாளர்கள் எந்த குற்றவுணர்வுமின்றி அதிகார மையங்களை அண்டி வாழ்கின்றனர்.
இந்தச் சூழல்கள் தான் அனைவரும் நீதிமன்றங்களாவது நியாயம் வழங்காதா..? என எண்ணத் தளைப்படுகிறது.
ஆக, ”நான் ஒன்றும் செய்ய மாட்டேன், வாளாயிருப்பேன். தவறுகளை தட்டிக் கேட்கமாட்டேன். பிள்ளை பூச்சியைப் போல இருப்பேன். நீதிமன்றம் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளட்டும்” என்றால்.. எப்படி?
நீதிபதிகள் என்ன வானத்தில் இருந்து வந்துதித்த தேவ தூதர்களா? அவர்களும் இந்த சமூகத்தில் தானே உள்ளனர்! இந்த சமூகத்தின் பலவீனங்கள் அவர்களிடமும் எப்படி படியாமல் இருக்கும்…? ஒரு சிலர் வேண்டுமானால், இதற்கு விதிவிலக்காக இருக்கலாம்.
எல்லோரும் வாய்ப்பு கிடைத்தால் தவறு செய்வதை பிறப்புரிமையாக நினைத்து, அதுவே சகஜமாகிவிட்ட ஒரு சமூக அமைப்பு, தன்னை சுய விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டால் மட்டுமே தீர்வாகும். . அந்ததந்த அமைப்பின் தலைமைகள் எதற்கும் பொறுப்பேற்காமல்.., நீதிமன்றங்களிடம் தீர்வை நாடினால் எப்படி..? ஒவ்வொரு துறையிலும் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் நேர்மையானவர்களாகவும், உண்மையானவர்களாகவும் இருக்காமல், மற்றவர்களிடம் அதை எதிர்பார்த்தால் கிடைக்காது.
நமக்கும் பொறுப்புள்ளது. நம் அளவில் நாமும் யோக்கியதையாக இருக்க வேண்டும். அப்போது தான் நம் குரலுக்கு ஒரு மதிப்பு உண்டாகும். மக்கள் சக்திக்கு இல்லாத மகத்துவம் வேறு எந்த அமைப்பிற்கும் கிடையாது.
நீதிமன்றம் ஒன்றே நம் அரசியல், சமூக பிரச்சினை, குடும்ப பிரச்சினை..உள்ளிட்ட அனைத்திற்கும் தீர்வு என்பது ஒரு போதும் ஆரோக்கியமல்ல! ஆபத்திலும் முடியலாம்.
சாவித்திரி கண்ணன்
Leave a Reply