அரசியல் சார்புத் தன்மை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனிடம் தொடர்ந்து வெளிப்படுகிறது. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கை அணுகிய விதமும், தமிழக அரசிற்கு பதில் அளிக்க வாய்ப்பு தராமல் தடை தந்திருப்பதும் சட்டத்தின் அடிப்படை கோட்பாட்டின்படி செல்லத்தக்கதா?; நீதிபதி ஹரிபரந்தாமன் கட்டுரை;
துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான தற்போது மே_26 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்குள் அவசர, அவசரமாக சென்னை உயர்நீதிமன்றம் ஒரு இடைக்கால தடையை இவ் வழக்கில் தந்திருப்பது தான் பலத்த விமர்சனங்களை பொதுத் தளத்தில் ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல்-8, 2025 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில், மூன்று நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு சட்டசபை நிறைவேற்றிய 10 சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் இருந்த ஆளுநரின் செயல் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று கூறியதுடன் , அரசமைப்புச் சட்டம் உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த வழக்கை ஒரு சிறப்பு நிகழ்வாக கருதி தாமே ஒப்புதல் தருவதாக கூறியது உச்ச நீதிமன்றம். எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப்பின் இவைகள் சட்டங்கள் ஆயின. உடனடியாக ஏப்ரல் – 11, 2025 அன்று அரசின் கெஜட்டிலும் இச்சட்டங்கள் வெளியிடப்பட்டன.
நீதிபதிகள் ஜி ஆர் சாமிநாதன் மற்றும் வி லட்சுமி நாராயணன் அவர்களின் அமர்வு விசாரணையில் மூன்றாவது வாரத்தில் நடத்தி, தமிழக அரசின் 10 சட்டங்களுக்கும் இடைக்கால தடை கொடுத்துள்ளது.
இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழக உயர்கல்வி துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் வைத்த வாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான யுஜிசி விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த வழக்கையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த வழக்கை அவசர, அவசரமாக விசாரிக்க எந்த அவசியமும் இல்லை.
பாஜகவை சேர்ந்த வழக்கறிஞரான மனுதாரர் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அரசின் சட்டங்களுக்கு தடை கோரும் இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்க போதிய அவகாசம் தராமல் விடுமுறை கால அமர்வில் அவசரகதியில் விசாரிப்பது நியாயம் அல்ல.
ஏற்கெனவே, ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. தற்போது இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மனுதாரர், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனுக்களுக்கு பதிலளிக்க அவகாசம் தராமல் விசாரிப்பது முறையற்றது, நியாயமற்றது, அநீதியானது. வானம் இடிந்து விழுந்து விடாது’’ என்றெல்லாம் கடுமையான ஆட்சேபம் தெரிவித்தும் அது நீதிபதிகளால் அலட்சியம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட காலகட்டமும், இதை அவசர வழக்காக எடுத்து விசாரித்த அணுகுமுறையும், நியாயமான ஆட்சேபனைகளை புறம்தள்ளி தடை உத்தரவு பிறப்பித்திருப்பதும் பலமான விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை. வாரத்தில் ஒரிரு நாட்கள் அவசர வழக்குகளின் விசாரணை மட்டுமே நடைபெறும். ஒவ்வொரு வாரத்திலும் 3 நீதிபதிகள் அவசர வழக்குகளை விசாரிப்பர். அடுத்த வாரம் வேறு மூன்று நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பர். இவ்வாறு மே மாதத்தில் 4 வாரங்களிலும் விசாரணை நடக்கும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மே மாதத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வார விசாரணையில் மட்டும் நீதிபதிகள் ஜி. ஆர் .சாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் தொடர்ந்து இரு நீதிபதிகள் அமர்வாகவும் பின்னர் தனித்தனியே விசாரணை செய்யும் நீதிபதிகளாகவும் செயல்படும் கால அட்டவணை உயர்நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டது. மற்ற நீதிபதிகள் ஒரே வாரம் மட்டுமே அமர்வில் இருந்தனர்.
இப்போது விஷயத்துக்கு வருவோம்!
இந்த வழக்கில் என்ன அவசரம் இருக்கிறது…? அப்படி ஒரு அவசரம் இருந்திருந்தால், ஏப்ரல்- 30, 2025-க்கு முன்னரே வழக்கை போட்டிருக்கலாம். ஒரு சாதாரண அரசு ஊழியரோ அல்லது வேறு எவரேனும் ஏப்ரல்- 8, 2025 தேதிய உத்தரவை எதிர்த்து வழக்கு போட்டால், உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால அலுவலர் அந்த வழக்கை பதிவு செய்யவே அனுமதிக்க மாட்டார் .
அப்படி இருக்கையில், விடுமுறை காலத்தில் விசாரிக்கப்படும் அவசர வழக்காக விசாரிக்க எப்படி உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால அலுவலர் அனுமதித்தார் என்பது புரியவில்லை.
அப்படியே அனுமதிக்கப்பட்டு ரிட் மனுவிற்கு எண் அளிக்கப்பட்டு, இரு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வின் முன்னர் வந்த போது, அவர்கள் இந்த வழக்கில் என்ன அவசரம் இருக்கிறது? என்ற கேள்வியை எழுப்பி, உடனடியாக கோடை விடுமுறைக்கு பின் விசாரணையை ஒத்தி வைத்திருக்க வேண்டாமா? என்ற கேள்வியை இந்த கட்டுரை எழுப்புகிறது.
இதற்கு மாறாக அவர்கள் டெல்லியில் இருந்து இந்தியாவின் தலைமை வழக்குரைஞர் வந்து அடுத்த வாரமே வாதாட வேண்டும் என்று இந்த வழக்கில் அவசரத்தை காட்ட வேண்டியது ஏன் என்று புரியவில்லை.
சட்டசபை அல்லது நாடாளுமன்றம் இயற்றும் சட்டம் அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது தானா என்பதை உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் பல வருடங்கள் விசாரித்து முடிவெடுக்கும். அதில் அவசரம் ஒன்றும் இல்லை.
மேலும் இந்த பொதுநல வழக்கை தாக்கல் செய்தவர் திருநெல்வேலி மாவட்டத்தின் பாஜக தலைவர் வெங்கடாசலபதி. இவரும், இவருக்காக இந்த வழக்கில் வாதாடிய வழக்குரைஞரும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் நடத்துபவர்களே. அப்படியெனில் மதுரை உயர்நீதிமன்றத்தை விடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்வது முறையற்ற செயல் அல்லவா? இதை பாரம் ஷாப்பிங்(forum shopping) என்றுதானே கூற முடியும்.
விடுமுறை கால உயர்நீதிமன்ற அமர்வு இந்த வழக்கை விடுமுறைக்கு பின் ஒத்தி வைத்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசிற்கு வாய்ப்பு தராமல் தடை உத்தரவை போட்டிருப்பதால் அந்த தடை உத்தரவில் கூறப்பட்டுள்ள பொருண்மை (merit ) பற்றி எந்தக் கருத்தையும் இந்த கட்டுரை பரிசீலிக்கவில்லை. போதிய வாய்ப்பு தராமல், குறிப்பாக பதில் மனு கூட போட வாய்ப்பு தராமல் வழங்கப்பட்ட உத்தரவு சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என்பதே சட்டத்தின் அடிப்படை கோட்பாடாகும்.
ஆர். எஸ். எஸ் வழிகாட்டுதலில் நடக்கும் பாஜக அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை செயல்படாமல் தடுப்பதற்கு கவர்னர்களை பயன்படுத்துகிறது. அப்படித் தான் தமிழ்நாடு கவர்னர் மேற்சொன்னபடி 10 சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க 4 முதல் 5 வருடங்களாக மறுத்து வந்தார். கவர்னர் மூலம் எழுப்பி இருந்த தடையை உச்ச நீதிமன்றம் தகர்த்தெறிந்தது. கவர்னர் எப்படி இந்த சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் தடை எழுப்பி வந்தாரோ, அந்த செயலுக்கு ஒத்தது தான் இப்போதைய உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவு.
Also read
இந்த நேரத்தில் நீதிபதி ஜி .ஆர். சுவாமிநாதனை பற்றி குறிப்பிட வேண்டும். அவர் வழக்குரைஞராக பணியாற்றிய காலத்தில் ஆர். எஸ் .எஸ் இயக்கத்தைச் சார்ந்தவர். அவர் நீதிபதியாக ஆன பின்பும் பாஜக சார்பான வழக்குரைஞர் அமைப்பின் பல கூட்டங்களில் பேசி வருகிறார். அவருடைய பல தீர்ப்புகளில் அவருடைய அரசியல் சார்பு தெளிவாக தெரிவதாக பலத்த விமர்சனங்கள் உள்ளன. அப்படி ஒரு விமர்சனத்தை அவர் தவிர்ப்பது நல்லது. அதாவது, எந்த அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் நீதிபதியான பின் அவர்களுடைய பழைய சித்தாந்தங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு அரசமைப்புச் சட்டம் காட்டும் வழியில் செயல்பட வேண்டும். இதில் ஒரு சிறிய அளவில் பிழைகள் இருப்பின் அதை ஏற்கலாம். ஆனால் தொடர்ந்து பல வழக்குகளில் இப்படி விமர்சனங்கள் வருவது நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை இழக்க வைக்கும்.
இனி வருங்காலத்திலாவது அரசியல் சம்பந்தப்பட்ட வழக்குகளில் போதிய வாய்ப்பளித்து, எதிர்தரப்பினருக்கு பதில் தர அவகாசம் அளித்து வாதாடுவதற்கும் வாய்ப்பு அளித்து, தீர்ப்பை அளிப்பது நீதிமன்றத்தின் மேல் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் .இல்லையெனில், மக்கள் நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை இழப்பர்.
கட்டுரையாளர்; ஹரிபரந்தாமன்
முன்னாள் நீதிபதி,
சென்னை உயர்நீதிமன்றம்
Leave a Reply