ரிசர்வ் வங்கியின் நகைகடன் கெடுபிடிகள் தரும் செய்தி என்ன?

-செழியன். ஜா

சமீபத்திய  RBI  அறிவிப்புகள்  மக்களிடம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. ஏன் இத்தனை கெடுபிடிகளை வங்கியில் கடன் பெறும் மக்களுக்கு தருகிறார்கள்…! இந்தக் கெடுபிடிகளால் பாதிக்கப்படுவது வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல, வங்கியும் தான். ஆனால், இது கந்து வட்டிக்கார்களும், சேட்டுக் கடைகளுக்கும் ஒரு ஜாக்பாட்டாக மாறலாம்;

ரிசர்வ் வங்கியின் முதல் அறிவிப்பு வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள்  வருடம் ஒரு முறை நகைக்கான வட்டியை முழுமையாகச் செலுத்தி கடனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதாகும்.

ஒரே முறையில் அசல் -வட்டி இரண்டும் கட்ட முடியாது நிலை தான் இன்றும் அனேகமானவர்களுக்கும் உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக அசல் கட்டி, அடுத்த சில வருடங்களில் நகைக் கடன் முடிப்பார்கள். அதுவரை அதற்கான வட்டி கட்டி வருவார்கள். இதில் தான்  RBI ஒரு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வருடம் முடிவில் அசல்-வட்டி இரண்டும்  கட்டி, நகைக் கடனை முடித்துவிட வேண்டும். மறு நாள் தொடங்கி புதிதாக நகைக் கடன் தொடங்கட்டும் என்பதேயாகும். அவ்வப்போது வட்டி மட்டும் கட்டி இனி புதுப்பித்துக் கொள்ள முடியாது.

மொத்தம் ஒன்பது அறிவிப்புகளை RBI வெளியிட்டுள்ளது. அதில் முக்கியமானது, நகைக் கடன் வாங்குபவர் அந்த நகை என்னுடைய நகை என்பதை உறுதிப்படுத்த  அதற்கான ஆதாரமாக ரசீது கொடுக்க வேண்டும் என்பதாகும்.

RBI அறிவிப்புகளின் சாதக-பாதகங்கள் என்னென்ன என்று பார்ப்பதற்கு முன்பு நகைக் கடன் எப்படி வழங்கப்படுகிறது? அதில் என்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

நகைக்கடன் மூன்று  இடங்களில் வழங்கப்படுகிறது. ஒன்று வங்கி. இரண்டாவது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள். மூன்றாவது  சேட்டுகள் நடத்தும் வட்டிக் கடைகள்.

வங்கியில்  நகை மதிப்பீட்டாளர்  இருப்பார். இவர் வங்கியின் ஊழியர் இல்லை. அந்தந்த வேலைக்கேற்ற கூலி தரப்படும். நகை மதிப்பீட்டாளர் எப்படிச் செயல்பட வேண்டும் என்று விதி முறை உண்டு.

வங்கி வழக்கும் கடனில் மிகப் பாதுகாப்பான கடன், நகைக் கடன் ஆகும். கடன் கட்டவில்லை என்றால் நகையை ஏலத்தில் விற்று பணத்தை வங்கி எடுத்துக் கொள்ளும். மிக எளிமையாகக் கடன் தொகை மீண்டும் வங்கிக்கு வந்துவிடும். மற்ற கடன் முறையில் கட்டாத கடன் தொகையை வசூல் செய்வது வங்கிக்கு மிகச் சிரமம் என்பதால் அனைத்து வங்கிகளும் நகைக் கடன் கொடுக்க மிக ஆர்வமாக உள்ளன. அவர்களுக்கு இருக்கும் கடன் கொடுக்கும் டார்கெட் நகைக் கடன் வழியாக எளிதில் அடைந்து விட முடியும்.  இதனால் அனைத்தும் வங்கிகளும் நகைக் கடன் வழங்குவதில் முனைப்பாக உள்ளனர்.

நகை மதிப்பீட்டாளர்- வங்கி பணியாளர் இரண்டு பேருக்கும் எப்படி நகைக் கடன் வழங்க வேண்டும் என்பதில் விதி முறை இருந்தாலும், சில இடங்களில் இதில் சில தவறுகளும் ஏற்படுகிறது. இவை பெரும் பிரச்சினையாகிறது.

நகை மதிப்பீட்டாளர் வங்கியில் ஒரு கெளரவமான நிரந்தர ஊழியரில்லை. எனவே, சில இடங்களில் நகை மதிப்பீட்டாளர் போலி நகையை அவர் நண்பர்-உறவினர் மூலம் அவர் பணியாற்றும் கிளையில் வைத்து  நகைக் கடன் பெறுவார். இப்படிப் பல வங்கியில் முறைகேடு நடந்துள்ளது.

RBI கீழ் வங்கி, நிதி நிறுவனங்கள் வருகிறது.  RBI அறிவிப்புகள் இந்த இரண்டு நிறுவனங்களுக்குத் தான் பொருந்தும். மூன்றாவதான  சேட்டு கடைக்குப் பொருந்தாது. சேட்டுக் கடைகள் சர்வ சுதந்திரத்துடன் செயல்பட அதிகார மையங்கள் பாதுகாப்பு தருவதில் எந்த மாற்றமும் இல்லை.

சில முறை நகை கடன்கள் ஒரே நாளில் தொடங்கி, அதே நாளில் முடிப்பது போன்றும் நடை பெறுகிறது. நகையின் மதிப்பை விட இன்னும் சில நகைகள் வைக்கப்பட்டது போல் கணக்கில் காண்பித்து அதிக மதிப்பு சேர்த்து கடன் கொடுக்கப்படுகிறது. இப்படி பல நிதி நிறுவனங்கள் செயல்படுகின்றன.

ஒருவருக்கு ஒரு வருடத்தில் இவ்வளவு தான் நகை கடன் வழங்க வேண்டும் என்ற விதி முறையை மீறி கடன் டார்கெட் முடிக்க, ஒருவருக்கே  அதிகமாக வழங்குவதுண்டு. அப்படி அவரால் கடன் கட்ட முடியவில்லை என்றால், அந்த நகையை ஏலத்தில் விட்டு சில இடங்களில் அதை  முறைப்படி நகை கடன் வாங்கியவர்களுக்கு தெரிவிப்பது இல்லை.

இப்படி நகைமதிப்பீட்டாளர், வங்கி, நிதி நிறுவன  ஊழியர்கள் செய்யும் சில மோசடிகளால் பல புகார்கள் RBIக்கு சென்றது. இதில் இப்போது சில அறிவிப்புகளை RBI வெளியிட்டுள்ளது. அவற்றைத் தான் தொடக்கத்தில் பார்த்தோம். ஆனால் சிலர் செய்யும் தவறுக்கு பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை RBI கவனம் வைக்கவில்லை.

முதல் அறிவிப்பில் ஒரு வருட முடிவில் முழு தொகையும் கட்டி நகையை எடுத்து கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பு நிச்சயம் நடுத்தர மக்களை பாதித்து உள்ளது. இதனால் என்ன முறைகேடு நடைபெறும் என்றால் கந்து வட்டி கும்பல் பலன் பெற வழி உண்டு.

வருட முடிவில் முழு தொகை கட்ட முடியாது நகை கடன் பெற்ற வாடிக்கையாளர்களை கந்து வட்டி கும்பல்  தொடர்பு கொண்டு அந்த ஒரு நாளுக்கு மட்டும் கடன் கொடுத்து, அதிக வட்டி பெற்று நகையை மீட்டு மீண்டும் நகையை அடமானம் வைத்து, அவர்கள் தொகையை எடுத்து கொள்கிறார்கள்.

RBI விதிமுறை கந்துவட்டி கும்பல் பலன் பெற வழி செய்யும். மற்றும் இந்த கும்பலிடம் செல்ல விரும்பாத மக்கள் இனி வங்கி, நிதி நிறுவனத்தில் கடன் வாங்காமல் வீட்டு அருகில் உள்ள கடன் கொடுக்கும்  சேட்டு கடைக்கு செல்ல மிக அதிக வாய்ப்புள்ளது. இன்னும் மக்கள் தான் அதிகம் பாதிப்படைவார்கள். காரணம், வருடம் 24 சதவிகிதம் வட்டி கட்ட வேண்டும்.

9 அறிவிப்புகள் வெளியிட்டு உள்ளது RBI.

முதல் அறிவிப்பு;

நகை மதிப்பில் 75 சதவிகிதம் மட்டுமே கடன் வழங்க வேண்டும் என்பதாகும்.  நகை மதிப்பு ஒரு லட்சம் என்றால், 75 ஆயிரம் மட்டுமே கடனாக கொடுக்க வேண்டும்.

கொரோனா காலத்திற்கு முன்பு இந்த நடை முறை இருந்தது. கொரோனா காலத்தில் மக்கள் பொருளாதார பிரச்சனையில் இருந்ததால் இந்த அளவை 80 சதவிகிதம் உயர்த்தி, அதை மீண்டும் இப்போது 75 சதவிகிதமாக மாற்றி உள்ளது RBI.

இந்த விதி முறை  நடுத்தர, எளிய பொருளாதார பின்னணியில் உள்ள மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். சில நிதி நிறுவனங்கள் நகை மதிப்பு விட அதிகமாக கடன் கொடுக்கிறார்கள். அவற்றை கட்டுப்படுத்த  இந்த விதிமுறை சொன்னாலும் பாதிப்பு அடையப் போவது எளிய மக்களே ஆகும்.

இரண்டாவது அறிவிப்பு;

நகை கடன் வாங்குபவர் நகை என்னுடையது தான் என நிரூபிக்க வேண்டும். ஆகவே, அதை வாங்கிய கடையின் பில்லை காட்ட வேண்டும்.

திருட்டு நகைகள் வைப்பதை தடுப்பதற்கு இந்த விதிமுறையாம். இதிலும் பாதிப்பு அடையப்போவது நடுத்தர, எளிய பிரிவு  மக்களேயாகும்.  பெரிய கடைகளில் நகை வாங்கினால், ரசீது கொடுப்பார்கள். ஆனால் நம் நாட்டில் கிராம, நடுத்தர  மக்கள் தங்க நகை வாங்குவது அவரவர்கள் ஊரில் உள்ள சிறு நகை கடைகளில். அல்லது தங்களுக்கு தெரிந்த ஆச்சாரியிடம். இதற்கு பெரும்பாலும் ரசீது  கிடைப்பதில்லை. மக்களும் கேட்டு வாங்குவதில்லை. அப்படி யாரும் ரசீது வாங்கி பழக்கம் இல்லாததால் ரசீது என்ற ஒன்று உள்ளதே மக்களுக்கு தெரிவதில்லை.

இப்படியானவர்கள் வங்கிகளில் நகை கடன் வாங்க சென்றால், ரசீது கொடுக்க வாய்ப்பு இல்லை. மற்றும் சிலர்  உறவினர்கள், நண்பர்களின் நகையை கேட்டு வாங்கி அதை வங்கியில் அடமானம் வைத்து பணம் பெறுவார்கள். இனி அப்படி செய்ய முடியாது.

RBI இதில் இரண்டாவது ஒரு முறையையும் சொல்லி உள்ளனர். ரசீது இல்லையென்றால், இந்த நகை என்னுடையது என்பதற்கு சுய ஒப்புதல் கடிதம் கொடுக்க வேண்டும்.  உறவினர் நகையை எப்படி என்னுடைய நகை என்று சுய ஒப்புதல் கடிதம் வழங்க முடியும்?

இன்னும் பல கிராம மக்களுக்கு கையெழுத்து கூட போடத் தெரியாது அவர்கள் எப்படி சுய ஒப்புதல் கடிதம் வழங்க முடியும்? இதனால் கடன் கொடுக்கும் நிறுவனம் காண்பிக்கும் இடங்களில் எல்லாம் கைநாட்டு வைப்பதற்குத் தான் வழி ஏற்படும்.  எதற்கு இந்த கைநாட்டு கேட்கிறார்கள் என்று எந்த காலத்திலும் அவர்களுக்கு தெரிய வழியில்லை.

இந்த விதிமுறைக்கு தான் இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.  சிலர் செய்யும் தவறுக்கு எல்லோரும் எப்படி தண்டனை அனுபவிக்க  முடியும் என்ற நியாயமான கேள்வியும் கேட்கிறார்கள்.

மூன்றாவது அறிவிப்பு:

நகை கடன் கொடுக்கும் நிறுவனங்கள் கடன் வாங்குபவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும். அந்த சான்றிதழில் நகை எடை அளவு, நகையின் உண்மைத் தன்மை, நகையில் கல் வைத்தா- வைக்காததா அதன் விவரம், நகையில் எதாவது குறைபாடு இருந்தால் குறிப்பாக நகை வளைந்து இருந்தால், உடைந்து இருந்தால், நகை மொத்த மதிப்பு, வழங்கப்பட்ட தொகை போன்ற விவரங்கள் இடம் பெற வேண்டும். இந்த சான்றிதழில் கடன் கொடுப்பவர், வாங்குபவர் இரண்டு பெரும் கையெழுத்து போட்டு ஆளுக்கு ஒரு நகல் வைத்து கொள்ள வேண்டும்.  இந்த சான்றிதழ் கடன் வாங்குபவர்களுக்கு நன்மை கொடுக்கும்.

நான்காவது அறிவிப்பு;

எந்தெந்த  நகைகளுக்கு கடன் வழங்க வேண்டும் என்பதை குறிப்பதாகும். 22 காரட் அல்லது அதற்கு மேற்பட்ட காரட்  நகைகளுக்கு கடன் வழங்கலாம் அதற்கு குறைவான கார்ட் நகைகளுக்கு வழங்க கூடாது. அணியக்கூடிய ஆபரணம், வங்கிகள் கொடுக்கும் தங்க நகை காயின் போன்ற நகைகளுக்கு கடன் வழங்கலாம்.

முழுமையாக செய்து முடிக்காத நகைகள், பாதி செய்த  நகைகளுக்கு முன்பு கடன் வழங்கப்பட்டு வந்தது. அதை தற்போது அத்தகைய நகைகளுக்கு கடன் வழங்க கூடாது என்று அறிவித்து உள்ளனர்.

அதே போல் டிஜிட்டல் கோல்ட் என்று சொல்லப்படும் Gold ETF, Gold Mutual Fund போன்ற தங்க சான்றிதழ் கொண்டு கடன் வாங்கும் முறை இருந்தது. இனி இவற்றை அடமானமாக கொண்டு கடன் வழங்க கூடாது என்று அறிவுப்பு செய்து உள்ளனர். ஆனால் ஏராளமானோர் இந்த முறையை பயன்படுத்தி கடன் வாங்கி வந்தார்கள். அவர்களுக்கு இது மிக பெரிய பாதிப்பாகும்.  பாதுகாப்பாக நகை வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் டிஜிட்டல் கோல்ட் வாங்கி வந்தனர். இனி அவர்களுக்கு கடன் இல்லை.

ஐந்தாவது அறிவிப்பு;

இதற்கு முன்பு சில்வர் நகைகளுக்கு கடன் வழங்கப்படுவது இல்லை. இனி மேல் சில்வர் நகை, காயின் போன்றவற்றுக்கு  கடன் வழங்கலாம் என்று அறிவித்துள்ளது RBI. இது பலருக்கும் பயன்படலாம்.

ஆறாவது அறிவிப்பு;

ஒருவருக்கு எவ்வளவு நகை கடன் வழங்க வேண்டும் என்பதை குறிப்பதாகும். தனி நபர் ஒருவருக்கு ஓரு கிலோ வரை  நகை கடன் வழங்கலாம் என்று சொல்லி உள்ளது RBI. தங்க காயின் கொடுத்து கடன் கேட்டால் 50 கிராம் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும் என்று வரையறை செய்துள்ளது. மற்றும் வங்கி விற்கும் காயின் மட்டுமே நகை கடனுக்கு எடுத்து கொள்ள வேண்டும் வேறு காயின்களுக்கு கடன் வழங்க கூடாது என்றும் சொல்லியுள்ளது. இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இன்று  அதிகமானோர் கடைகளில் தங்க காயின் வாங்கி சேகரிப்பதை வாடிக்கையாக  கொண்டுள்ளனர். இனி, இந்த காயின்களுக்கு கடன் இல்லை என்பது அதிர்ச்சி தர கூடியதாகும்.

ஏழாவது அறிவிப்பு;

இது கொஞ்சம் குழப்பமான அறிவிப்பு. 22 காரட் மட்டுமே கடன் கொடுக்க வேண்டும் என்று ஒரு அறிவிப்பு உண்டு. ஆனால் அதற்கு குறைவான காரட் உள்ள 18 காரட் தங்க நகையை எப்படி 22 காரட் கணக்கீடு செய்து கடன் கொடுப்பது என்பதை குறிக்கிறது.  இவற்றை புரிந்து கொள்வது கொஞ்சம் குழப்பம் தருவதாக உள்ளது.

எட்டாவது அறிவிப்பு;

நகை கடன் வழங்கும் போது, அதை குறித்து படிவத்தில் குறிப்பாக நகை கடன் குறித்து முழுமையான தகவல் நிரப்பப்பட்ட கடன் அளவு, வட்டி, காலம், நகை விவரங்கள், கடன் கட்டவில்லை என்றால், ஏலம் மூலம் நகை விற்கப்படும் என்று தகவல் இப்படி அனைத்து தகவலும் அதில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

ஒன்பதாவது  அறிவிப்பு;

கடன் வாங்கியவர் கடன் தொகையை முழுவதும் செலுத்திவிட்டால் அவருக்கு உடனடியாக நகை கொடுக்க வேண்டும். சில தவிர்க்க முடியாத நிலை இருப்பின் அடுத்த ஏழு நாட்களுக்குள் நகையை கொடுத்துவிட வேண்டும். ஏழு நாட்களுக்கும் மேல் கொடுக்கவில்லை என்றால், எட்டாவது நாள் முதல் ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளருக்கு கடன் தந்த நிறுவனம் ஐயாயிரம்  வழங்க வேண்டும், நகையை திரும்பக் கொடுக்கும் வரை.

இந்த 9 அறிவிப்பில் அதிகம் பாதிப்படைய செய்வது, நகைக்கான ரச்சிது கேட்பதாகும். இதற்கு தான்  மக்களிடமிருந்து அதிக எதிர்ப்புள்ளது. சிலர் செய்யும் தவறை எப்படி சரி செய்யலாம் என்று பார்க்க வேண்டுமே தவிர, அனைத்து மக்களையும் தண்டிக்கக் கூடாது. மொத்தத்தில் நகை கடன் பெறுவதற்கு இனி மக்கள் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளுக்கு வருவதை தவிர்க்கக் கூடிய நிலை தோன்றியுள்ளது. இதன் மூலம் சேட்டுக் கடைக்கார்கள், கந்து வட்டிக்காரர்களை நோக்கி மக்கள் செல்லும் நிர்பந்தம் உருவக்கப்பட்டுள்ளது. இதை ஒரு மக்கள் நல அரசு செய்ய விரும்பாது.

-செழியன். ஜா

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time