கீழடி ஆய்வுக்கு துரோகம்; கைகோர்த்த பாஜகவும், திமுகவும்!

-சாவித்திரி கண்ணன்

கீழடி ஆய்வில் பாஜக அரசு செய்து கொண்டிருப்பது பெரிய துரோகம். அதை தகர்க்க, தமிழ்ச் சமூகம் நீதிமன்றத்தை  நாடியது. ஆய்வை பாதியிலேயே நிறுத்தியது பாஜக அரசு. பிறகு ஆய்வறிக்கை எழுதாமலே அமர்நாத்தை தூக்கி அடித்தது.பிறகு எழுதியதை பொது வெளியில் வைக்க மறுத்தது. இப்படி துரோகம் இழைத்தது பாஜக மட்டும் தானா?

சங்ககாலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை  கீழடி அகழாய்வு மாற்றியமைத்துள்ளது. இரப்பா் ஸ்டாம்ப்பாக உபயோகப்படுத்திய சுடுமண் முத்திரை கட்டைகள், அழகிய எழுத்தாணிகள், சண்டைக்கான அம்புகள்,  நாகரீகத்தின் முதல் அடையாளமான இரும்பு, செம்பு ஆயுதங்கள், வித வித அணிகலன்கள்,  தமிழ் எழுத்துக்களுடைய மட்பாண்ட ஓடுகள்  5300-க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள்… இப்படியாக பிரமிக்கத் தக்க வகையில் கீழடியில் கிடைத்துள்ளன. இவை மிகவும் ஆச்சரியமளிக்கத்தக்க அபூர்வ கண்டெடுப்புகளாகும். அகில உலகமே ஆச்சரியப்படுகிறது. ஆனால், இதை வட இந்திய ஆய்வாளர்களால் ஏற்க முடியவில்லை.

வெள்ளையர்கள் நம்மை ஆட்சி செய்த காலத்தில் இப்படி ஒரு ஆய்வு நடந்திருந்தால், நம்மை உச்சந் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி அகிலத்திற்கே அறிவித்து இருப்பார்கள்!

ஏனென்றால், வேத கால நாகரீகமே இந்திய நாகரீகம் போன்ற புரட்டுகளை புரட்டிப் போட்டு,  1924 ல் சிந்துவெளி அகழாய்வில் தமிழர் பண்பாட்டை அகிலத்திற்கே சொன்னது பிரிட்டிஷ் ஆட்சி தான். அதைச் சொன்னவர், சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் என்ற தொல்லியல் ஆய்வாளர். அந்த சிந்து இன்று பாகிஸ்தானுக்கு போய்விட்டது.

தொல்லியல் அகழாய்வுகளின் வழியே புதைக்கப்பட்டிருந்த நமது தொன்மை நாகரீகச் சிறப்புகளை மீட்டெடுத்து தந்தது பிரிட்டிஷ் அரசு. ஆனால், தற்போதோ கீழடியில் நாம் மீட்டெடுத்த தொனமை சிறப்பை மீண்டும் புதைக்கத் துடிக்கிறது இந்திய அரசு.

 சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக் காஞ்சி, பட்டிணப்பாலை போன்ற இலக்கியங்களில் நம் கேள்விப்பட்ட கல்மணிகள், முத்துமணிகள், கொண்டை ஊசிகள், சில்லு,தாயக்கட்டை,சதுரங்க காய்கள், சுடுமண் பொம்மைகள் போன்ற தொல் பொருட்களும், உறை கிணறுகள், நீண்ட தூரம் தண்ணீரை எடுத்துச் செல்லும் சுடுமண் குழாய்கள், வெளிநாட்டோடு நாம் வணிகம் செய்தற்கான ஆதாரங்கள் போன்றவை நாம் பெரு நகர பண்பாட்டுடன் கூடிய மிகச் சிறந்த நாகரீகத்தை 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் பெற்று இருந்தோம் என்பதைச் சொல்லும் போது மோடிக்கும், அமித்ஷாவிற்கும் வயிறு எரிகிறதா?

கீழடியும் இந்தியாவிற்குள் தானே இருக்கிறது. தமிழர் பண்பாடும் இந்தியப் பண்பாட்டின் ஒரு அங்கம் தானே. இதை ஏன் இவர்கள் மனம் ஏற்க மறுக்கிறது.?

சும்மாவா? ஒவ்வொரு பொருளும் வியப்பை தருகின்றன. நூல் நூற்கும் தக்ளி தொடங்கி பெண்கள் அணியும் ஆபரணங்கள் வரை உங்கள் கற்னையான வேத நாகரீகத்தைக் காட்டிலும் தமிழர்களின் நிஜ  நாகரீகம் சிறப்பு வாய்ந்ததாக இருப்பதை உங்களால் அங்கீகரிக்க இயலவில்லை.

 

வரலாறு முழுக்க இத்தகு இருட்டடிப்பை பார்த்து பழகியவர்களே நாங்கள்! தமிழர்களின் தனித் தன்மையான சித்த மருத்துவத்தை இன்று வரை தலை எடுக்க அனுமதிக்காமல், சித்த மருத்துவ பல்கலைக் கழகத்திற்கு தடை போட்டு வருகிறீர்கள். கர்நாடக சங்கீதத்திற்கும் முற்பட்டது தமிழ் இசை என்பதை ஆப்ரகாம் பண்டிதர் அன்றே நிருபித்த போதிலும், அதை ஆங்கிலேயரே வழி மொழிந்த பிறகும் தமிழ் இசைக்கான முக்கியத்துவத்தை தர மறுக்கிறீர்கள். தமிழ் மரபின் இசை வேளாளர்கள் தொன்று தொட்டு நிகழ்த்தி வந்த சதிராட்டத்தை திருடி பரத நாட்டியம் என்று மாற்றி, அதை பார்ப்பனிய கலாச்சாரத்தின் அடையாளமாக்கிவிட்டீர்கள்!

இப்படி நிறையவே வரலாறு நெடுகிலும் துரோகங்களை பார்த்தவர்கள் நாங்கள்;

இதோ கீழடியில் நீங்கள் செய்த நிகழ்கால துரோகங்களின் பட்டியல் தருகிறேன்;

1974 முதல் சிவகங்கையின் துருப்புவனத்தில் அரிய வகை பொருட்கள் மக்கள் கிணறு தொண்டும் போது கண்டெடுக்கப்பட்டு கவனம் பெற்று வந்த போதிலும் சுமார் 40 அண்டுகள் அகழாய்வை தள்ளிப் போட்டு 2014 -ல் தான் ஆரம்பித்தீர்கள்.

2015-ல் இரண்டாவது கட்ட ஆய்வில் தொடங்கி தொடர்ந்து இரண்டாண்டுகள் அமர்நாத் கிருஷ்ணன் என்ற அற்புத ஆய்வாளர் 5,765 அரிய வகை தொல்லியல் பொருட்கள கண்டெடுத்தார். இவற்றை நவீன ஆய்வு முறைப்படி கார்பன் டேட்டிங், அக்சிலேட்டர் மாஸ் ஸ்பெக்ரோமெட்ரி போன்ற ஆய்வு முறைகளின் வழியே முறைப்படி இந்த நாகரீகத்தின் காலகட்டம் கி.மு 200 க்கும் முற்பட்டது என்றார். இது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு முறையாகும். ஆனால், சங்கித் தனமாக சிந்திப்பவர்களால் ஏற்க முடியாத ஆய்வாகவும் உள்ளதே நமது சிக்கலாகும்.

இந்த ஆய்வை அமர்நாத் கிருஷ்ணன் செய்தவுடன் அவரை அஸ்ஸாமுக்கு தூக்கி அடித்தீர்கள்! அடுத்ததாக செய்த ஆய்வை அவர் எழுதி தரவே அனுமதிக்க மறுத்தீர்கள். பிறகு ஸ்ரீராமன் என்ற ஆர்வமற்ற ஆய்வாளரைக் கொண்டு, ”இதற்கு மேல் ஆய்வு செய்ய இங்கு எதுவும் இல்லை” என சொல்லி விட்டு நகர்ந்தீர்கள்.

இதையெல்லாம் நீதிமன்றத்தில் முறையிட்டு, நீதிமன்றம், ”மத்திய அரசுக்கு ஆர்வம் இல்லை என்றால் மாநில அரசு செய்வதை தடுக்க கூடாது’’ என ஆணையிட்டது.  அத்துடன் அமர்நாத் காலத்தில் நடந்த ஆய்வு குறித்த அதிகாரபூர்வ அறிக்கையை 10 மாத காலத்தில் தந்தாக வேண்டும் என கெடு விதித்த பின்பே 2017 ஆம் ஆண்டு அமர்நாத் கிருஷ்ணனை எழுத அனுமதித்தீர்கள்.

அவரும் மிகவும் சிரத்தையெடுத்து ஆய்வு அறிக்கையை 982 பக்கத்திற்கு எழுதி தந்தார்.

நீங்கள் உண்மையான ஆட்சியாளர்கள் என்றால், அந்த அறிக்கையை அகிலத்திற்கே அறிவித்து அகில இந்தியாவிலும் விழா நடத்தி இருப்பீர்கள்! ஆனால், நீங்கள் அவ்விதம் கொண்டாட இந்த ஆய்வு குஜராத்திலோ, உத்திரபிரதேசத்திலோ வெளி வந்திருக்க வேண்டும். அது தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்டது தான் உங்களால் தாங்க முடியவில்லை. எனவே, அந்த அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டீர்கள்.

பிறகு, மீண்டும் நீதிமன்றத்தை அணுகி நீதிமன்றமும் கடும் கண்டணத்தை பதிவு செய்து ‘அந்த ஆய்வு அறிக்கையை பொதுவெளியில் வையுங்கள்’ என்று கட்டளையிட்டது. இது நடந்தது பிப்ரவரி 2024 ஆம் ஆண்டாகும். ஆனால், அதன் பிறகும் 14 மாதங்கள் கள்ள மெளனம் சாதித்துவிட்டு, தற்போது குதர்க்கமாக சந்தேகங்களை கிளப்புகிறீர்கள்;

அறிக்கையை மேலும் உண்மையானதாக மாற்ற வேண்டுமாம். மூன்று வெவ்வேறு காலகட்டங்களுக்கு சரியான பெயரீடு தேவையாம். வரை படங்களில் தெளிவு இல்லையாம். சில முக்கிய ஆவணங்கள் விடுபட்டுவிட்டதாம்….!

”இவை எல்லாம் வேண்டுமென்ற ஏதாவது நொட்டை சொல்ல வேண்டும் என்பதற்காக சிறுபிள்ளைத்தனமாக கேட்கப்படுகிறது…எல்லாவற்றுக்கும் அதிலேயே பதில்கள் உள்ளன” என ஆய்வாளர்கள் பலரும் கண்டணம் தெரிவித்துள்ளனர்.

சரி, இவ்வளவு நேரம் மத்திய பாஜக அரசின் துரோகத்தை விவரித்தேன். ஆனால், இங்குள்ள திமுக அரசோ, கீழடி விவகாரத்தில் பாஜக அரசுக்கு சற்றும் சளைத்ததல்ல. அமர்நாத் மூன்றாவது கட்ட ஆய்வை முடித்த பிறகு, நான்காம் கட்ட ஆய்வை அதிமுக அரசு சரியான முறையில் அதிகாரபூர்வ ஆய்வறிக்கையாக வெளியிட்டது.

அதே சமயம் திமுக அரசு வந்த பிறகு தொடர்ந்து இது வரை நடந்துள்ள 10 கட்டம் வரையிலான ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கு பயந்து வெளியிட தயங்கி வருகிறது. இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் பல முறை கோரிக்கை வைத்தும், நமது அறம் இதழிலும் விரிவாக இது பற்றி  நாம் எழுதியும் இன்று வரை தமிழக அரசுக்கு கீழடி ஆய்வு குறித்த அதிகாரபூர்வ ஆய்வறிக்கையை வெளியிட தைரியம் வரவில்லை.

கீழடியின் சிறப்பை இன்னும் எவ்வளவு காலம் ம்றைப்பீர்களோ?

மேலும், அங்குமிங்கும் துண்டு துண்டாக குழிகள் தோண்டாமல், 110 ஏக்கரை முழுமையாக தொடர் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை இது வரை காது கொடுத்து கேட்கவும் தயாரில்லை திமுக அரசு.

இது  உடனிருந்து கொண்டே செய்யும் மிகப் பெரிய துரோகமாகும். அப்படி அதிகார பூர்வ ஆய்வறிக்கையும் தராமல் கூடுதல் நிதி ஒதுக்கி விரிவான முறையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பதையும் புறம் தள்ளி திமுக அரசு நடந்து கொள்வது பாஜகவிற்கு பயந்தா? அல்லது திமுகவுக்கும் இதில் ஒவ்வாமை இருக்கிறதா? என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time