போப் ஆண்டவர் தேர்வின் உள் அரசியலை பேசும் படம்!

- பீட்டர் துரைராஜ்

உலகின் மிக சக்தி வாய்ந்த மதகுருவான போப் ஆண்டவர் தேர்வில் உள்ள அரசியல்களையும், சிக்கல்களையும் இவ்வளவு வெளிப்படையாக எடுக்க முடிவதே நம்மை வியக்க வைக்கிறது. யார் அடுத்த போப் என்பதில் கடைசி வரை ஊகிக்க முடியாத வகையிலான திரைக் கதை! பிரபல இயக்குநர் எட்வர்ட் பெர்கர் இயக்கிய திரில்லர் படம் இது;

கான்க்லேவ் (Conclave) : போப் ஆண்டவர் தேர்தலைக் காட்டும் படம்
போப் ஆண்டவர் இறந்த பிறகு, அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும், கர்தினால்கள் ஒன்று கூடி, தமக்குள் ஒருவரை போப் ஆண்டவராக  தேர்ந்தெடுக்கும் கூடுகையின் பெயர் ‘Conclave’.

கான்கிலேவ் (2025) திரைப்படம் தற்போது பிரைம் தளத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. நுணுக்கமான விவரங்களோடு, சுவாரசியமாக, அழகியலோடு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தக் காட்சி என்னவாக இருக்கும் என யூகிக்க முடியாத அளவுக்கு விறுவிறுப்பாகச் செல்கிறது. மக்கள் அரசியலைப் பேசுவதால், இது சகலருக்கும் உரிய படமாகிறது.

சினிமா உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதான பாஃப்டா (பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள்) 2025 விருது வழங்கும் விழாவில் இப்படம் நான்கு விருதுகளை அள்ளியது! இது ராபர்ட் ஹாரிஸ் எழுதிய  நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. சிறந்த நடிகரனான ரால்ஃப் ஃபைன்ஸ்   பிரிட்டிஷ் கார்டினல் தாமஸ் லாரன்ஸ் கேரக்டரில் அசத்தி இருக்கிறார்.

போப் ஆண்டவர், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரோமன் கத்தோலிக்க கிறித்தவர்களின் தலைவர். வாடிகன் நகரத்தின் அதாவது, ஒரு நாட்டின் தலைவரும் கூட.  அதிகாரம் மிக்க பதவி என்பதால், அதையொட்டிய அரசியலும் இருக்கும் தானே! இதே பெயரில், ராபர்ட் ஹாரிஸ் எழுதிய நாவலை வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. நாவலின் திரைமொழி அற்புதமாக உள்ளது.

போப் இறந்து கிடப்பதில் கதை தொடங்குகிறது. அவருக்கு ஓராண்டாகவே உடல் நிலை சரியில்லை என்ற விவரம் யாருக்கும் தெரியாது. அப்படித் தெரிந்த ஒரு கர்தினால் அதற்கேற்றவாறு காய் நகர்த்தி வருகிறார் என்பது இறந்து போன போப்பிற்கு தெரியும். எனவே, தனக்கு பின்னர், சரியான ஒருவர் வர வேண்டும் என்று அவர் முயற்சி செய்து வந்தார் என்பது கதையின் போக்கில் பார்வையாளர்களுக்குத் தெரிய வரும்.

கர்தினாலாக  (போப்புக்கு அடுத்த பதவி) இருக்கும் லாரன்ஸ், இந்த உள்ளரங்கை (conclave), மேலாளர் (Dean) என்ற வகையில் நடத்தி முடிக்க வேண்டும்.  இவருக்கு இலத்தீன் மொழியில் இறை வணக்கம் போன்ற வழிபாட்டு முறைகளில் நம்பிக்கை இல்லை.

இவரது  ராஜினாமாக் கடிதத்தை மறைந்து போன போப் ஏற்காததால் பதவியில் தொடர்கிறார். அதே சமயம் அந்தப் பதவியானது பொறுப்பான ஒருவர் வசம் போக வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறார். அவரும் அந்தப் பதவிக்கு தகுதியானவர் தான். அப்பொழுது இயல்பாக முரண்பாடு வருமே ! இவர் சொல்வதை சந்தேகிக்கவும் செய்கிறார்கள்.

கர்தினால்கள் உலகம் முழுவதிலும் இருந்து ஒவ்வொருவராக வரத் தொடங்குகிறார்கள். அவர்களில் அறுதிப் பெரும்பான்மை வாக்கு,  யாருக்கு கிடைக்கிறதோ அவர் வெற்றி பெறுவார். அது வரையில் பல சுற்று வாக்கெடுப்பு நடைபெறும். 108 பேரில், 72 வாக்குகளாவது பெற வேண்டும்.    தேர்தல் நடக்கும் இடத்தின் கூண்டில் இருந்து புகை வந்து கொண்டிருக்கும். வண்ணப்புகை வெளிவந்தால், போப் ஆண்டவர் தேர்வு முடிந்து விட்டதாக மக்கள் தெரிந்து கொள்வார்கள். அது வரை எத்தனை நாட்களாக இருந்தாலும் மக்களும், ஊடகங்களும் வெளியே காத்திருப்பர். போப் ஆண்டவரை தேந்தெடுப்பதில் கடவுளின் ஆவி பங்காற்றும் என்பது அவர்களின் நம்பிக்கை.

உலகம் முழுமையிலும் உள்ள சபைகளை நிர்வாகம் பண்ண வேண்டியிருப்பதால், அனைத்து கண்டங்களிலும் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளும் ஒருவராக இருக்க வேண்டும். அனைத்து இனங்களைச் சேர்ந்தவர்களுக்கும்  வாய்ப்பு கிட்ட வேண்டும். தேர்வு முடிய நீண்ட காலம் ஆனாலும், திருச்சபையில் உள்முரண்பாடு உள்ளது என்று ஊடகங்கள் பேசும்.

அதுமட்டுமின்றி, கால ஓட்டத்திற்கு ஏற்றவாறு வரும் மாற்றங்களை கண்டுகொள்ளவில்லை என்றால், சபை நீடித்து நிற்காது. அவற்றையும் நுட்பமாக இதில் காட்டியுள்ளனர். பாலினச் சிறுபான்மையினருக்கு ஆதரவாக   பேசும் கர்தினாலை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா ! இவருக்கு நரகத்தில் தான் இடம் கிடைக்கும் என்கிறார், ஒரு கர்தினால். பழைய காலம் போல, மதச்சண்டை வேண்டும் என வலியுறுத்தும் கர்தினாலும் வாய்ப்புள்ள ஒருவராக வருகிறார்.

70 வயதைக் கடந்தவர்கள் தான் கர்தினால்கள். எனவே அதற்கேற்றவாறு இருக்கிறார்கள். இறுதிச் சுற்றுக்கு வரும் நான்கைந்து பேரும் இயல்பாக பொருந்துகிறார்கள். கர்தினால் லாரன்சாக வரும் ரால்ஃப் பின்னாசுக்கு (Ralph Fiennes) விருது கண்டிப்பாக கிட்டும்.(டைடானிக் பட நாயகி கதே வின்ஸ்லெட் நடித்த ரீடர் படத்தில் வழக்கறிஞராக வருபவர்).

இவையெல்லாம் கடந்து, ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெற இருக்கும் நிலையில் அவர்மீது ஒரு கன்னியாஸ்திரி சொல்லும் பாலியல் குற்றச்சாட்டு லாரன்ஸ் கவனத்திற்கு வருகிறது. அனைத்து தகுதிகளும் உள்ள ஒருவருக்கு, எப்போதோ நடந்த தவறுக்காக இந்த வாய்ப்பை மறுக்க வேண்டுமா?

அந்த கன்னியாஸ்திரியை நைஜீரியாவில் இருந்து அந்த உள்ளரங்கு பணிக்கு வரவழைத்தது யார் ? அதன் பின்னணி என்ன ? போப் ஆண்டவர் இறப்பதற்கு முன்பு ஒரு கர்தினாலை ராஜினாமா செய்யச் சொல்கிறார். இந்தச் செய்தியை சம்மந்தப்பட்டவர் மறுக்கிறார். அவர் ஒருசில கர்தினால்களுக்கு பணம் கொடுத்திருக்கிறார் ஏன் ? இதை எப்படி எதிர் கொள்வது? உண்மை வெளியே வர வேண்டும் என்றால், இறந்துபோன போப் அறையை ரகசியமாக ஆராய வேண்டும்; அதுவே ஒரு தகுதியிழப்பு. இப்படி பல சிக்கல்கள் ஒன்றையொன்று பின்னி வருகின்றன. திருச்சபையின் புனிதத்தை குலைக்காமல், அதே சமயம் பழமைக்கும், புதுமைக்கும்; அறத்திற்கும், சுயலாபத்திற்கும் வரும் முரணையும் சிறப்பாகக் காட்டியதன் மூலம், இயக்குநர் இதனை அனைத்து தரப்பினரின் படமாக்கிவிட்டார்.

நடிப்பு, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு என இந்தப்படம் பல விருதுகளைப் பெறும். எட்வர்ட பெர்கர் என்பவர் இயக்கி இருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் போப் ஆண்டவர் இறந்த பிறகு இந்தப்படம் மீண்டும் கவனம் பெற்றதாகவும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட போப் இதனைப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. இதே போல Two Popes படமும் ( பார்க்க அறம் இதழ்) இரு எண்ணவோட்டங்களை காட்டும் ஒரு நல்ல படம்.

கிறிஸ்த்துவத்தை சுய பரிசோதனைக்கு அட்படுத்தும் படம்!

இந்தப்படம் கிறிஸ்தவ நம்பிக்கை என்றோ, கடவுளின் செயல் என்றோ  பேசவில்லை. மனிதர்கள், அந்தப் பதவிகளுக்கு உரிய உடல்மொழியோடு வருகிறார்கள். அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசுகிறார்கள். வேண்டுதல் கூட, வழக்கமாகப் பார்க்கும் சடங்கு போல இல்லை. இரண்டு மணி நேரமும் காட்சிகள் விறுவிறுப்பாகச் செல்கின்றன.

இறுதியில் யாரும் எதிர்பார்க்காத ஒருவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். போப் ஆண்டவர் ஆன பிறகு அவர் புதிய பெயரை சூட்டிக் கொள்ள வேண்டும். அதற்கு அவர் தேர்ந்தெடுக்கும் பெயரே, திருச்சபையின் எதிர்காலத்தைச் சொல்கிறது.

– பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time