அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கு நேர்ந்த கொடூர பாலியல் சம்பவத்தில் குற்றவாளி தண்டிக்கப்படுகிறான் என்பது ஆறுதலும், நிம்மதியும் தருகிறது…என்றாலும், இந்த குற்றம் ஒரு தனிமனிதன் சம்பந்தப்பட்டது மாத்திரமல்ல. இதில் கவனிக்கத் தவறிய அல்லது தப்பித்துக் கொண்ட குற்றவாளிகளின் பட்டியலை பார்ப்போம்;
ஒரு தொழில்முறை குற்றவாளி சுமார் 15 ஆண்டுகளாக கொடூர தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவன் – பல முறை கைதாகியும், பல முறை வழக்கு போட்டும் மீண்டும், மீண்டும் வெளியே வந்து குற்றச் செயல்களில் ஈடுபடுகிறான்…என்றால், அவன் ஒற்றை மனிதனல்ல, சில தரப்பில் அவனுக்கு ஒத்தாசையும், அனுசரணையும் கிடைக்காமல் அவன் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட முடியாது.
ஆக, ஒரு நீண்ட குற்ற செயினில் உள்ள கடைசி கண்ணி தான் ஞானசேகரன். அந்த குற்றச் செயனில் உள்ள அனைவரும் அவனை பலி கொடுத்துவிட்டு தப்பித்துக் கொண்டனர் என்றோ அல்லது தப்புவிக்கப்பட்டனர் என்றோ தான் இந்த வழக்கை என்னால் பார்க்க முடிகிறது.
மூன்று தளங்களில் ஞானசேகரனின் குற்றச் செயல்களுக்கு அனுசரணையானவர்கள் கண்டு கொள்ளப்படவில்லை.
முதலாவது, சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணா பல்கலைக் கழகத்திற்குள் ஞானசேகரன் சுதந்திரமாக நடமாடவும், இது போன்ற குற்றச் செயல்களை தொடர்ந்து செய்து கொண்டே இருந்ததற்கும் அந்த கேம்பஸிற்குள் அவனுக்கு ஒத்துழைப்பு கிடைக்காமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. அந்த ஒத்துழைப்பினால் அவர்களும் பயன் பெற்று இருப்பார்கள். அந்தப் பயனை அனுபவித்து பழகியவர்கள் இன்னொரு ஞானசேகரனை ஆதரிக்க தயங்கமாட்டார்கள்.
அடுத்ததாக காவல் துறையினர் இது போன்ற தொழில்முறை குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பது அவர்களின் தொழில் தர்மம். ஆகவே, இவனது நடவடிக்கைகளை கண்டும் காணாமல் இருந்ததற்கு யார், யார் எவ்வளவு கையூட்டு பெற்றனர் எனப் பகிரங்கப்படுத்தி தண்டிக்கப்படாவிட்டால், இவர்களே இன்னொரு ஞானசேகனை உருவாக்கிக் கொள்வார்கள்.
மூன்றாவதாக கோட்டூர்புரத்தில் சகலவிதமானவர்களுக்கும் இவன் ஒரு படு மோசமான கிரிமினல் என்பது நன்கு தெரியும். இப்படி ஊரறிந்த கிரிமினலோடு ஆளும்கட்சி நிர்வாகிகள் சிலர் மிக நெருக்கமாக இருந்துள்ளனர். இப்படிப்பட்ட கிரிமினல்களை தூர நிறுத்தும் அல்லது முற்றிலும் புறக்கணிக்கும் பண்பு ஆளும் கட்சி நிர்வாகிகளிடம் இல்லாதது தான் ஞானசேகரன் கட்சிக்குள்ளும் முக்கியத்துவம் பெறக் காரணம் ஆயிற்று. அவனிடம் பொருளாதார பணப் பலன்களை அனுபவித்த காரணத்தால் தான் முதல்கட்ட காவல் விசாரணையில் இருந்து அவன் விடுவிக்கப்பட்டதும், இரண்டாம் கட்ட விசாரணைக்கு அவனை அழைத்துச் செல்ல லோக்கல் நிர்வாகிகள் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்தததுமாகும்.
குறைந்தபட்சம் அவனோடு தொடர்புடைய நான்கைந்து பேராவது திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு இருந்தால், கட்சிக்கார்களும் இனி இது போன்ற தவறுகளை செய்ய பயப்படுவார்கள். கிரிமினல்களை எவ்வளவு ஆதரித்தாலும், அரசியல் செல்வாக்குள்ளவர்களை தண்டிக்க முடியாது என்பது ஏற்புடையது அல்ல.
Also read
ஆக, பொள்ளாச்சி பாலியல் வழக்கை போல இதுவும் பாதி கிணறு தாண்டிய கதை தான்!
ஆக, இத்தனை விதமானவர்கள் இதில் இருந்து தங்களை தற்காத்துக் கொண்டு, ஒற்றை மனிதனை காட்டி தப்பித்துக் கொள்ள முடிவது நமது ஜனநாயத்தின் பலவீனங்களில் ஒன்றாகும். ஆட்சியாளர்களை பொறுத்த வரை வெளியே தெரிய வந்த குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்தோம் என்ற வகையில் மக்களை திருப்திபடுத்திவிட்டார்கள். அழுகிற குழந்தைக்கு கிலுகிலுப்பையை ஆட்டிக்காட்டி அழுகையை நிப்பாட்டுவது போலத் தான் ஞானசேகரன் மட்டும் தண்டிக்கப்பட்டதானது! கொந்தளித்த மக்களை நிச்சயம் இந்த தீர்ப்பு ஆசுவாசப்படுத்திவிடும். இதெல்லாம், நமது ஜனநாயகம் இன்னும் குழந்தை பருவத்தில் இருந்து முதிர்ச்சி நிலைக்கு வராததையே உறுதிபடுத்துகிறது.
சாவித்திரி கண்ணன்
பகுதி நியாயம் கிடைத்ததென்று அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வடநாட்டில்நடந்த இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கிய கொடூர வேடிக்கைகள் நடக்கவில்லை! இங்கே பெரும் அரசியலைப் பார்க்க முடிகிறதே தவிர நுண் அரசியலில் நுழைய முடியவில்லை!
மு.பிச்சையப்பா