தமிழ் மொழியில் இருந்தது பிறந்தது தான் கன்னடம் என்ற கமலஹாசனின் பேச்சு பெரும் கொந்தளிப்பை கர்நாடகத்தில் ஏற்படுத்தி உள்ளது. தமிழில் இருந்து தோன்றியதே மற்ற திராவிட மொழிகள் என்ற நம்பிக்கை தமிழர்களிடையே வேரூன்றி உள்ளது. இது வெறும் நம்பிக்கை சார்ந்தது தானா? அல்லது நிரூபிக்கப்பட்ட உண்மையா?
மொழி அரசியல் என்பது மூர்க்கத்தனமான உணர்ச்சி நிலை சார்ந்தது!
உண்மையில் கமலஹாசன் சகோதர உரிமை கொண்டாடும் நோக்கத்தில் பேசி இருக்கிறார் என்று தான் தோன்றுகிறது.
’தக் லைப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமலஹாசன் பேசியதாவது; ”கன்னட நடிகர் ராஜ் குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனை நீங்களும் (சிவராஜ்குமார்) ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்” எனப் பேசியுள்ளார்.
ரொம்ப காலமாக தமிழ் தான் தென்னிந்திய மொழிகளின் தாய் மொழி என்பது நம் தமிழர்களின் பொது புத்தியில் படிந்து போய்விட்டதன் வெளிப்பாடாகத் தான் கமலஹாசன் மிக இயல்பாக இதை பேசி இருக்கிறார்.
இது உண்மையா? என்றால், நான் வாசித்த வரை தமிழ் மொழியில் இருந்து தோன்றியதே பிற திராவிட மொழிகள் என்று எந்த மொழி அறிஞரும் ஆய்வு செய்து நிருபிக்கவில்லை.
பேரறிஞர் கால்டுவெல் அவர்களின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் தேடிப் பார்த்த போது கூட அதில் அவர்,
# திராவிட மொழிகளுக்குள்ளே மிகப் பழமையானது தமிழ்!
# மற்ற திராவிட மொழிகளுக்கு முன்பே தனக்கான இலக்கணத்தை கொண்ட மொழி தமிழ்.
# மிகச் சிறந்த கலாச்சார, நாகரீகக் கூறுகள் தமிழில் ஆதி காலத்தில் இருந்தே உள்ளன..!
# பல வகையில் பார்க்கும் போது மற்ற திராவிட மொழிகளின் பிரதிநிதியாக தமிழ் மொழி விளங்குகிறது!
இது தான் கால்டுவெல் ஆய்வின் சாராம்சமாகும்.
தமிழில் இருந்து தோன்றியது இன்னின்ன மொழிகள் என கால்டுவெல்லும் எழுதவில்லை. வேறு மொழியியல் அறிஞர்களும் நான் வாசித்த வரை எழுதியதாகத் தெரியவில்லை. அப்படி இருப்பின் சுட்டிக் காட்டினால், நான் திருத்திக் கொள்கிறேன்.
அதே சமயம் ”சமஸ்கிருதம் தான் இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி” என பிராமணர்கள் அடித்துப் பேசி வந்தனர். அதற்காகவே எல்லா மொழிகளுக்குள்ளும் அவர்கள் சமஸ்கிருதக் கலப்பை செய்தனர். தமிழிலும் அவ்வாறே செய்து, ”தமிழ் மொழிக்கும் தாய் மொழி சமஸ்கிருதம்’’ என்றனர்.
இவ்வாறாக பிராமணர்கள், ‘தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளுக்கும் தாய் சமஸ்கிருதமே’ எனப் பலரையும் நம்ப வைத்திருந்த ஒரு கால கட்டத்தில், அதனை மறுத்துத் ‘தமிழ் தனித் தன்மையானது. தொன்மையானது, சமஸ்கிருதத்தை சார்ந்திருக்கும் அவசியம் இல்லாதது’ என தகுந்த ஆதாரங்களுடன் நிறுவியவர் கால்டுவெல்.
இந்த ஆய்வு தமிழ் கவிஞர்களையும், தமிழறிஞர்களையும் பெரிதும் உற்சாகம் கொள்ள வைத்தது.
கவிஞர் மானோண்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழ் தாய் வாழ்த்தில்,
”கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்..”
என எழுதி வைத்தார்.
அதாவது, தமிழ்த் தாயின் உதிரத்தில் இருந்து உதித்தவையே கன்னடமும், தெலுங்கும், மலையாளமும், துளுவும் என எந்த ஒரு ஆய்வு கண்ணோட்டமும் இன்றி, ஆர்வ மிகுதியால் மிகைப்பட எழுதிச் சென்றார். இது கவிஞர்களுக்கேயான இயல்பு தான். தவறில்லை.
அவரைத் தொடர்ந்து மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர் போன்ற தமிழ் மொழியின் மிகப் பெரிய ஆளுமைகளும் ”தமிழ் தான் எல்லா திராவிட மொழிகளுக்கும் தாய்” என அன்று கூறியதன் பின்னணி ‘சமஸ்கிருதமே அனைத்துக்கும் தாய் மொழி’ என்ற பொய்க்கு பதில் அளிக்கும் நோக்கத்தில் பேசியது தான். இதுவே, தமிழ் தேசிய இயக்கங்களும், திராவிட இயக்கங்களும் ‘தமிழ் தான் தென்னிந்திய மொழிகளுக்கு தாய்’ என நம்பியதாகும்.
‘சமஸ்கிருதம் தான் கன்னட மொழிக்கு தாய்’ என பலர் பேசும் போது வராத கோபம், ‘தமிழ் தான் தாய் என்று சொன்னதற்கு ஏன் வருகிறது’ என்றும் நாம் பார்க்க வேண்டும்.
கன்னட மொழி வெறியை அடிநாதமாக கொண்ட அமைப்புகள் கமலஹாசன் பேச்சை வைத்து கர்நாடகத்தையே அதகளப்படுத்தி வருகின்றனர். கர்நாடக பாஜகவினர் கமலஹாசனை இந்து மத எதிர்ப்பாளர் என்ற கோணத்தில் விமர்சிக்கின்றனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா, ”கமல்ஹாசன் பாவம். அவருக்கு கன்னட மொழி குறித்த வரலாறு தெரியவில்லை” என கடந்து விட்டார்.
Also read
கன்னட கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, ” கமலஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால், கர்நாடகாவில் அவரின் திரைப்படத்துக்கு தடை விதிக்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
‘கமலஹாசன் பேசியதில் எங்களுக்கு உடன்பாடில்லை’ என எளிதில் கடந்து போகக் கூடிய ஒரு விஷயத்தை இவ்வளவு பெரிதுபடுத்துவது தேவையற்றதாகும்.
இதனால், அங்கு அமைதியாகவும், இணக்கமாகவும் வாழ்ந்து கொண்டுள்ள தமிழர்களுக்கு எதுவும் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதே நம் தவிப்பாகும். அங்குள்ள தமிழர்களின் நலன்களுக்காக கமலஹாசன், ”நான் ஆய்வின் அடிப்படையில் பேசவில்லை. உணர்ச்சியின் மிகுதியால் பேசினேயன்று, உள் நோக்கத்துடன் பேசவில்லை. உங்கள் மனம் புண்படுகிறதென்றால், பேசியதை வாபஸ் பெறுகிறேன்’’ எனக் கூறி முற்றுப்புள்ளி வைப்பது நலமாகும்.
ஒரு மூத்த மொழியான தமிழின் கூறுகள் மற்ற மொழிகளிலும் இருக்கலாம். அந்த வகையில் தமிழின் தாக்கம் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்ல, மற்ற வட மாநில மொழிகளும் உள்ளன. ஆனால், இதைக் கொண்டு இந்த மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி தமிழ் தான் என நாம் உரிமை கொண்டாட முடியுமா? தெரியவில்லை. ஆனால், தமிழின் தாக்கம் இந்தந்த மொழிகளில் உள்ளது என்பதை உரிமையோடு சொல்ல முடியும்.
‘ஒவ்வொரு மொழியும் அந்தந்த மண் சார்ந்தும், மரபுகள் சார்ந்தும், இயற்கையான சூழலியல் மற்றும் பூகோளக் கூறுகள் சார்ந்தும், அந்த மண்ணில் வாழும் மக்களின் சொந்த புத்தியில் இருந்தும், அனுபவத்தில் இருந்தும் மட்டுமே தோன்ற முடியும்’ என்பதே யதார்த்தமும், உண்மையுமாகும்.
சாவித்திரி கண்ணன்
சிறந்த கட்டுரை. துணிந்து உண்மையை சொல்லி இருக்கிறீர்கள்
மத்தியில் இருக்கும் பாஜக அரசு மிகவும் மூர்க்கமான வகையில் இந்தி திணிப்பை இந்தி பேசாத மக்களின் மீது மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு நிறுவனங்களில் இந்தி பேசாத மக்கள் ஹிந்தி பேசுபவர்களால் அவமானப் படுத்தப்படுவது குறித்த செய்திகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளன. மாநில உணர்வும் மாநில மொழி உணர்வும் இந்திய தேச விரோதம் என்கிற தொனியில் இந்தி பேசாத மக்களை மத்திய அரசு நிறுவனங்களில் தரக்குறைவாக நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையான காலகட்டத்தில் ஹிந்தி அல்லாத மற்ற மொழிகளை பேசக்கூடிய அதிலும் குறிப்பாக தென்னிந்திய மக்களிடையே சகோதரத்துவம் மொழி சார்ந்த உணர்வு ஆகியன வரவேண்டும். ஒற்றுமையாக ஹிந்தி ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும். இதுவரை இந்தி திணிப்புக்கு எதிரான எதிர்ப்பென்பது பலவீனமான ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கமலஹாசன் மாதிரியான சுயநலமைகள் தங்கள் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கண்டதையும் பேசி இரண்டு ஹிந்தி பேசாத மாநிலங்களுக்கு இடையே வெறுப்பை அதிகப்படுத்தி விடுகிறார்கள். கன்னட மக்களிடம் நிபந்தனை இல்லாத மன்னிப்பு கேட்பதுதான் கமலஹாசன் செய்ய வேண்டியது. தமிழும் கன்னடமும் ஒரே கொடியில் பூத்த இரு அழகான மணம் வீசும் மலர்கள். கன்னட மொழியில் நடந்த சாதனைகள் அளப்பரியவை.
தமிழ் மூத்த மொழி என்றுதான் கால்டுவெல் பாதிரியார் குறிக்கிறாரே தவிர திராவிட மொழிகளுக்கு தாய் என்று எங்கும் சொல்லவில்லை. கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது உண்மை எனில் சமஸ்கிருதம் இந்திய மொழிகளுக்கு தாய் என்பதும் உண்மை ஆகிவிடும். ஆனால் கமலஹாசன் இருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்பது தான் ஒரே வழி. இப்போது அனைவரும் ஒன்று சேர்ந்து ஹிந்தி ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும்.