பிரபல நடிகரான ராஜேஷ் அந்தக் காலங்களில் சினிமாவில் மட்டுமின்றி, ரியல் எஸ்டேட் பிசினஸிலும் கொடிகட்டி பறந்தவர். அப்போது அவர் மீது ஒரு இன்கம்டாக்ஸ் வழக்கு பதிவானது, அதை செய்தியாக்கியது தினமணி, பதற்றமானார் நடிகர் ராஜேஷ். படையெடுத்தார் பத்திரிகை அலுவலகத்திற்கு! என்ன நடந்தது..?
1996- ஆண்டு வாக்கில் நான் தினமணியில் நிருபராக பணியாற்றிய போதான அனுபவத்தை உங்களோடு பகிர்கிறேன்.
அன்றைக்கு ‘ஆர்எம்.டி’ (Rm.T) என அனைவராலும் அழைக்கப்படும் இராம.திரு.சம்பந்தம் தினமணியின் எடிட்டர். எப்போதும் சிரித்த முகத்துடன் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். சிறு சிறு தவறுகளைக் கூட பொறுத்துக்கொள்ள மாட்டார். அந்த அளவுக்கு ரொம்ப கண்டிப்பானவர். பயங்கர கோபக்காரர். தவறு செய்பவர்களை வார்த்தைகளால் வறுத்தெடுத்துவிடுவார்.
அவரது எதிர்பார்ப்புக்கு தகுந்தவாறு வேலை செய்யாதவர்களை எந்தவித தயவுதாட்சயமும், முன்அறிவிப்பும் இன்றி அதிரடியாக வேலையில் இருந்து ஒரே நிமிடத்தில் தூக்கிவிடுவார். அதனால் அங்கே பணிபுரியும் அனைவரும் யாருக்கு எப்போது வேலை பறிபோகுமோ எனத் தெரியாமல் எப்போதுமே ஒருவித பதட்டத்துடனேயே வேலை செய்வாங்க.
நான் தினமணியின் ‘க்ரைம் பீட்’ செய்தியாளர்.அக் காலகட்டத்தில் மொபைல் ஃபோன் வசதியெல்லாம் கிடையாது. சென்னை எக்மோரில் சிட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ‘பிரஸ் ரூம்’. சென்னையில் ஆங்கில மற்றும் தமிழ் பத்திரிகைகளில் பணிபுரியும் ‘க்ரைம் பீட்’ செய்தியாளர்கள் அனைவரும் தினமும் சங்கமிக்கும் இடம். அங்கே செய்தியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள ஒரு டெலிஃபோன் உண்டு.
காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை செய்தியாளர்கள் அங்கே ஒன்றுகூடி தங்களுக்கு கிடைத்த க்ரைம் செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். எனவே நான் தினமும் காலை பிரஸ் ரூமுக்கு சென்று செய்திகளைப் பெற்று, அச் செய்திகளை அலுவலகத்தில் உள்ள மோடத்தில் (modem) அடித்துக் கொடுப்பேன்.
பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரம். அன்றைய தினம் நான் வழக்கம் போல் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள பிரஸ் ரூமுக்கு சென்றுவிட்டு பிற்பகலில் தினமணி அலுவலகம் வந்தேன்.
அலுவலகத்தில் நான் நுழைந்ததும், அங்கே மோடத்தில் ரொம்ப பிஸியாக செய்தி அடித்துக் கொண்டிருந்த சீனியர் நிருபர் ஜெகதீஸன், “உடன்பிறப்பே, இன்று காலை உன்னைத் தேடி நம்ம அலுவலகத்துக்கு ஒரு விஐபி வந்தார்,” என்றார்.
‘யார், ஸார், என்னைத் தேடி வந்தது?’ என நான் கேட்டதற்கு, “சீஃப் ரிப்போர்ட்டர் சிகாமணியிடம் போய் கேட்டு தெரிஞ்சுக்க,” என கூறிவிட்டு செய்தி அடிக்கும் பணியை தொடர்ந்தார் ஜெகதீஸன்.
நானும் ஆவலுடன் சீஃப் ரிப்போர்ட்டர் சிகாமணியிடம் சென்று இதுபற்றி கேட்டேன். அதற்கு அவர், “ராஜேஷ் வந்தார்” என்றார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. “எந்த ராஜேஷ்?,” எனக் கேட்டேன். “நடிகர் ராஜேஷ்ங்க” என்றார் சிகாமணி. அவர் எதுக்கு என்னை தேடி வந்தார் என நான் அப்பாவியாய் கேட்க அன்று காலை நடந்த அனைத்தையும் கூறினார் சிகாமணி.
அவர் கூறியது இது தான்…
எடிட்டர் கோயம்புத்தூருக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது நடிகர் ராஜேஷ் தனது ஆதரவாளர்கள் சிலர் புடைசூழ அலுவலகத்துக்கு வந்து எடிட்டரை சந்தித்துள்ளார்.
ஓரிரு தினங்களுக்கு முன் அவரைப்பத்தி தினமணியில் வந்துள்ள செய்தி உண்மைக்கு மாறான, தவறான செய்தி எனக் கூறி, உடனடியாக அச் செய்திக்கு மறுப்பு செய்தி போட்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என எடிட்டரிடம் நடிகர் ராஜேஷ் கூறியுள்ளார்.
தான் பள்ளிக்கூட ஆசிரியராக வேலை பார்த்த காலத்திலிருந்தே தினமணி வாசகர் என்றும், தற்போது தினமணியில் தன்னைப் பற்றி தவறான செய்தி வந்துள்ளதால், சினிமா வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் இத்தனை ஆண்டுகள் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து வைத்திருந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார் நடிகர் ராஜேஷ்.
மேலும், அச் செய்தியை போட்ட செய்தியாளரான என்னுடைய பெயர், நான் எங்கே தங்கியிருக்கிறேன் என்ற விபரங்களை நடிகர் ராஜேஷ் கேட்டுள்ளார். அதற்கு, செய்தியை போட்ட என்னிடம் இதுபற்றி மேலும் விசாரித்துவிட்டு, தவறு நேர்ந்திருந்தால் மறுப்பு வெளியிடுவதாக எடிட்டர் கூறியுள்ளார்.
“எடிட்டர் உங்க மேல ரொம்ப கோபமா இருக்கார். நடிகர் ராஜேஷ் குறித்து நீங்க போட்ட செய்தியின் உண்மைத் தன்மை, அதற்கான ஆதாரம் குறித்து உங்களிடம் கேட்கச் சொன்னார். அச் செய்தி தவறானது என்றால், இப்பவே உங்களை கிளம்பி வீட்டுக்கு போகச் சொல்லி விட்டார் ”, என்றார் சீஃப் ரிப்போர்ட்டர் சிகாமணி.
இதைக் கேட்டதும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதற்கு காரணம், அச் செய்தியை நான் நேரடியாக சேகரிக்கவில்லை. கதிரவன் என்ற நாளிதழில் பணிபுரிந்த லோகநாதன் என்ற செய்தியாளர் என்னிடம் கூறிய தகவலின் அடிப்படையில் அச் செய்தியை போட்டிருந்தேன்.
நாங்கள் டீ சாப்பிடச் சென்ற போது பேசிக் கொண்டிருக்கையில், ‘செய்தி ஏதுவும் உண்டா?’ என நான் கேட்டதற்கு, 1982-83ம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யாததால் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் நடிகர் ராஜேஷ் மீது சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்ற நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், அதனடிப்படையில் பிப்ரவரி 13-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நடிகர் ராஜேஷுக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகவும் ஒரு தகவலை நண்பர் லோகநாதன் என்னிடம் தெரிவித்தார்.
அதனடிப்படையில் இத் தகவலை தினமணியில் சிறிய அளவில் ஒரு செய்தியாக போட்டிருந்தேன். ஆனால், அது இவ்வளவு பெரிய பூகம்பமாக வெடிக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை.
வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில் பசி எடுக்கவில்லை. அன்று இரவு தூக்கம் வரவில்லை. எப்போது பொழுது விடியும் என எதிர்பார்த்து தூக்கத்தை தொலைத்து, விடிய விடிய படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன்.
மறுநாள் பொழுது விடிந்ததும், நண்பர் லோகநாதனை சந்திப்பதற்காக வழக்கத்துக்கு மாறாக காலை 8.30 மணிக்கே புறப்பட்டு முதல் ஆளாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள பிரஸ் ரூமுக்கு வந்துவிட்டேன். அவருக்காக காத்திருந்தேன்…..காத்திருந்தேன்.
அவருக்காக காத்திருந்த ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாக கழிந்தது. கடைசியில் ஒருவழியாக அவர் காலை 11.30 மணியளவில் அங்கு வந்தார்.
அவரிடம் இச் செய்தி தொடர்பாக எனது அலுவலகத்தில் நடந்த விபரங்களைச் சொல்லி எனது வேலையை தக்க வைத்துக் கொள்ள உதவுமாறு கெஞ்சினேன். அவர் என்னை பொருளாதார குற்ற நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்த ஊழியரிடம் இதுபற்றி விசாரித்தபோது, நடிகர் ராஜேஷ் குறித்த வழக்கு கட்டை எடுத்துப் பார்த்துவிட்டு, ராஜேஷின் இனிஷியல் ‘டபிள்யு’ என்றும் அவரது தந்தை பெயர் வில்லியம் என்றும் கூடுதல் தகவல்களை தெரிவித்தார்.
அத் தகவல்களோடு அலுவலகத்துக்கு வந்து அன்றைய க்ரைம் செய்திகளை நான் மோடத்தில் அடித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது என்னை சீஃப் ரிப்போர்ட்டர் சிகாமணி அழைத்தார். அவரோடு எனக்கு இதற்கு முன் அறிமுகமில்லாத இன்னொரு நபர் இருந்தார். அவரிடம் என்னைக் காண்பித்து, “இவர்தான் இர்ஷாத் அஹமது. அச் செய்தியை எழுதியவர்” என என்னை அறிமுகப்படுத்தினார் சிகாமணி.
அதைக் கேட்டவுடன், அந்த நபர், “என்ன ஸார் இப்படி பண்ணிட்டீங்க? எங்க பாவா உங்க மேல ரொம்ப கோபமா இருக்கார்,” என்றார்.
நீங்க யார்? உங்க பாவா யார்? என நான் கேட்டதற்கு, தன்னுடைய பெயர் ராமகிருஷ்ணன் என்றும், நடிகர் ராஜேஷின் மைத்துனர் எனவும் அறிமுகப்படுத்திக் கொண்டு, என்னிடம் அவரது விசிட்டிங் கார்டு ஒன்றை கொடுத்தார்.
அவரிடம் நடிகர் ராஜேஷ் குறித்து நான் நீதிமன்றத்திலிருந்து சேகரித்திருந்த தகவல்களை கூறினேன். ஆனால் அத்தகவல்களை அவர் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.
நடிகர் ராஜேஷின் தந்தை பெயரும் வில்லியம் தான் எனக் கூறிய ராமகிருஷ்ணன், ஆனால், நடிகர் ராஜேஷ் மீது எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்கு எதுவும் இல்லை என்று கூறினார்.
அப்படியே இருந்தாலும் எங்களுக்கு தெரிவிக்காமல் வருமான வரித்துறையினர் எப்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பாங்க எனக் கேட்டார். அதை நீங்க வருமான வரித்துறையினரிடம் தான் கேட்க வேண்டும் என பதிலளித்தேன்.
என்னுடைய பதிலில் திருப்தி அடையாத அவர், மீண்டும் மறுநாள் வருவதாகவும், அப்போது திருப்திகரமான பதில் அளிக்காவிட்டால் என் மீதும், தினமணி நாளிதழ் மீதும் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுக்கப் போவதாகவும் கடுமையாக எச்சரித்துவிட்டு, கிளம்பிச் சென்றுவிட்டார்.
அதைக் கேட்ட எனது சீனியர்கள், “இது சம்பந்தமா நாளைக்கு மேலும் தகவல்கள் சேகரிச்சிட்டு வாங்க. இல்லைனா உங்க வேலை போய்விடும்,” என பீதியைக் கிளப்பினர்.
அன்று முழுவதும் நான் சாப்பிடவில்லை. பசியில்லை. அன்னைக்கு இரவும் தூங்கவில்லை. தூக்கம் வராமல் விடிய விடிய கட்டிலில் புரண்டு படுத்திருந்தேன்.
மறுநாள் விடிந்ததும் போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள பிரஸ் ரூமுக்கு சென்று நண்பர் லோகநாதனுக்காக காத்தருந்தேன். இன்று அவர் 12.30 மணியளவில் வந்தார். அவரிடம் முதல்நாள் அலுவலகத்தில் நடந்தவற்றை சொன்னேன்.
அவர் என்னை அழைத்துக்கொண்டு மீண்டும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு சென்று, அங்கிருந்த நீதிமன்ற ஊழியர் ஒருவரிடம் அவ்வழக்கு குறித்த தகவல்களைக் கேட்டார். ஆனால் அத் தகவல்களைக் கூற நீதிமன்ற ஊழியர் மறுத்துவிட்டார்.
இதையடுத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென தனது பாக்கெட்டிலிருந்து ரூ. 50ஜ எடுத்து அந் நீதிமன்ற ஊழியரிடம் வழங்கினார் லோகநாதன். அதைத் தொடர்ந்து, அவ்வழக்கு தொடர்பான கட்டையே எங்களிடம் எடுத்துக் கொடுத்துவிட்டார் அந்த நீதிமன்ற ஊழியர்.
அதில் குறிப்பிடப்பட்டிருந்த நடிகர் ராஜேஷின் வீட்டு முகவரி, அலுவலக முகவரி, அவ்விரு இடங்களிலும் உள்ள தொலைபேசி எண்கள் ஆகியவற்றை குறித்துக் கொண்டோம்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், வழக்குக் கட்டில் குறிப்பிடப்பட்டிருந்த நடிகர் ராஜேஷின் அலுவலக முகவரியும், அவரது மைத்துனர் ராமகிருஷ்ணன் என்னிடம் கொடுத்திருந்த விசிட்டிங் கார்டில் அச்சிடப்பட்டிருந்த முகவரியும் ஒன்றாக இருந்தது. இதன்மூலம், நடிகர் ராஜேஷ் வேண்டுமென்றே பொய் சொல்கிறார் என்பது ஊர்ஜிதமானது.
எனவே, நாங்கள் இருவரும் நீதிமன்றத்திலிருந்து நேரடியாக சிட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள பிரஷ் ரூமுக்கு வந்தோம். அங்கிருந்த லேண்ட் லைன் டெலிபோன் மூலம் ராமகிருஷ்ணனின் அலுவலகத்துக்கு ஃபோன் போட்டேன்.
அந்த அழைப்பிற்கு மறுமுனையிலிருந்து, “ராஜேஷ் ஹியரிங்” என ஒரு குரல் கேட்டது.
குட் ஈவ்னிங், ஸார் என சொல்லிவிட்டு, நான் யார் என்பதை ஆங்கிலத்தில் கூறினேன். எனது பெயரைக் கேட்ட அடுத்த நிமிடமே, “என்ன பிரதர் இப்படி பண்ணிட்டீங்க?. சினிமாத் துறையிலும், தற்போது ரியல் எஸ்டேட் பிசினஸிலும் எனக்கு இத்தனை நாள் இருந்த நல்ல பெயரை ஒரு நொடியில் ஒரு தவறான செய்தியைப் போட்டு கெடுத்திட்டீங்க,” என்றார் நடிகர் ராஜேஷ்.
இதையடுத்து, ‘ஒரு நிமிஷம் நான் சொல்வதைக் கேளுங்க, ஸார்’ என நான் கூறிவிட்டு, அவரது வீடு மற்றும் அலுவலக முகவரிகளையும், தொலைபேசி எண்களையும் ஒவ்வொன்றாக கூறினேன். அவை தன்னுடைய வீடு மற்றும் அலுவலக முகவரிகள், தொலைபேசி எண்கள் தான் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ‘இவை அனைத்தும் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தன?’ என்றார் அவர்.
நீதிமன்றத்தில் உள்ள வழக்கு கட்டில் இருந்து எடுத்ததாகக் கூறியதும் சிறிது நேரம் எதுவுமே கூறாமல், மௌனமாக இருந்தார். அவர் லைனில் தான் இருக்கிறாரா எனத் தெரிந்து கொள்ள “ஸார்” என அழைத்தேன்.
இதையடுத்து அவர், “எந்த ஆண்டுனு சொன்னீங்க?,” என்றார், தனக்கு இதுபற்றி எதுவுமே தெரியாதது போல.
“1982-83ம் ஆண்டு,” என நான் கூறியுவுடன், “வெரி வெரி ஸாரி, பிரதர். ஒருவேளை ‘அச்சமில்லை…அச்சமில்லை” படத்தில் நடித்துக் கொண்டிருந்த பிஸியில் வருமானவரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய மறந்திருப்பேன்,” எனக் கூறி சமாளித்தார்.
அதோடு, தன்னுடைய அலுவலகத்துக்கு வரவேண்டும் என்றும், தன்னுடைய வீட்டுக்கு ஒரு நாள் விருந்துக்கு வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இரண்டு நாளாக சாப்பிடவில்லை. தூங்கவுமில்லை. அதனால் உடல் சோர்வு. மனச் சோர்வு. இனி வேலை பறிபோகாது என்பதால் தற்போது கொஞ்சம் மனதில் நிம்மதி. அங்கிருந்து புறப்பட்டு நேராக அலுவலகத்துக்கு வந்தேன்.
அலுவலகத்தில் எடிட்டர் சம்பந்தம் செய்திப் பிரிவு ஹாலின் நடுவே ஒரு மேஜையின் ஓரத்தில் அமர்ந்து, கையில் இருந்த ஒரு பேப்பரில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார்.
நேராக அவரிடம் சென்று ‘குட் ஈவ்னிங், ஸார்’ என்றேன். அதற்கு பதிலளித்த எடிட்டர், “ராஜேஷ் பிரச்சினை என்னாச்சுப்பா?,” என்றார்.
செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த நபர் சினிமா நடிகர் ராஜேஷ் தான் என்பதைக் கூறி, நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களை நடிகர் ராஜேஷிடம் தெரிவித்து விட்டேன் என்பதையும் கூறினேன்.
அதைக் கேட்டு ராஜேஷ் மீது கோபமடைந்த எடிட்டர் சம்பந்தம், “அவன் வேண்டுமென்றே பொய் சொல்லி இருக்கிறான். அவன சும்மா விடக்கூடாது,” என கர்ஜித்தார்.
“நடிகர் ராஜேஷ் அடியாட்களுடன் அலுவலகத்துக்குள் புகுந்து மிரட்டினார் என ஒரு செய்தி அடிச்சிட்டு வாப்பா. தினமணியில் ‘பாக்ஸ்’ கட்டி போடுவோம்” என்றார் எடிட்டர் சம்பந்தம்.
Also read
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வெ.தங்கராஜ் புகழேந்தி என்ற சப்-எடிட்டர், “ஸார், இப்போ இருக்கிற நடிகர்களிலேயே ஜென்டில்மேல் ராஜேஷ் தான். இது ஏதோ தெரியாமல் நடந்திருச்சினு நினைக்கிறேன். தயவு செஞ்சு செய்தி எதுவும் போட வேண்டாம். நான் அவரிடம் இது பற்றி விசாரிக்கிறேன்,” என்றார்.
சப்-எடிட்டர் புகழேந்தி தொடர்ந்து வற்புறுத்தி கேட்டுக் கொண்டதற்கிணங்க, தினமணியில் நடிகர் ராஜேஷுக்கு எதிராக செய்தி போடும் திட்டம் கைவிடப்பட்டது.
இவர் வேறு யாருமல்ல. பின்னாளில் ‘காற்றுக்கென்ன வேலி’, ‘உச்சிதனை முகர்ந்தால்’, ‘கடல் குதிரைகள்’, ‘உள்ளக் கடத்தல்’, ‘ரசிகர் மன்றம்’ போன்ற தரமான படங்களை இயக்கிய இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் ஆவார்.
பல ஆண்டுகளுக்குப் பின் அவரை கடைசியாக தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நேரில் சந்தித்து பேசினேன். அப்போது பழைய நிகழ்வுகளை இருவரும் நினைவு கூர்ந்து அசை போட்டோம்.
கட்டுரையாளர்; எஸ். இர்ஷாத் அஹமது
மூத்த பத்திரிக்கையாளர்
பின் குறிப்பு; ( பத்திரிகையாளர் இர்ஷாத் அகமது ‘ஒரு நிருபரின் டைரி குறிப்பு’களாக ‘ஊடக அறம்’ என்ற நூல் எழுதி வருகிறார். அதில் இந்த நிகழ்வையும், இது போன்ற சில அதிர்ச்சி அனுபவங்களையும் எழுதி வருகிறார்.)
வணக்கம்!
அண்ணன் இர்ஷாத் அஹமத். தங்களுடைய கட்டுரையை முழுமையாக படித்தேன். பின் குறிப்பையும் படித்தேன், ஊடக அறம் என்ற நூலினை தாங்கள் எழுதி வருவதாக அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
கடந்த நூற்றாண்டின் இறுதியில் 1994-ஆம் வருடம் கதிரவனில் பணியாற்ற சென்றபோது ஒரு 3 நாட்கள் நிருபர் லோகநாதனுடன் பயணித்தேன். அவருடன் தான் பயிற்சி. அதன் பின்னர் ஏதேனும் சந்தேகம் என்றால் மட்டும் அவரிடம் கேட்பேன் மற்றபடி கதிரவன் அலுவலகத்தில் இருந்து அனைவரும் எனக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தனர்.
அந்த நிறுவனத்தின் லோகநாதனுடன் பழகி தாங்கள் செய்தி சேகரித்ததை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். ஒரு சிறிய செய்தி, தகுந்த ஆதாரம் நம்மிடம் இல்லை என்றால் எவ்வளவு பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்தேன்.
நடிகர்கள் வி கே ராமசாமி,சிவகுமார் வரிசையில் வருபவர் நடிகர் ராஜேஷ். தன்னுடைய அலட்டிக் கொள்ளாத உடல் மொழியில், ஏற்ற இறக்கத்துடன் உரையாடல் பேசி மக்களை கவர்ந்தவர். கன்னிப்பருவத்திலே படத்திலிருந்து தான் அவரை எனக்கு தெரியும். நேரடி பழக்கம் கிடையாது.தனக்கு கொடுக்கப்பட்டது எந்த ஒரு கதாபாத்திரம் என்றாலும் சிறப்பாக திறம்பட செய்வார். வளர்க அவருடைய புகழ்.
டி.கே.இராஜபாண்டியன்,
கதிரவன், மாலை முரசு,
சென்னை.
வணக்கம்
அறத்தோடு பயணிக்கும் மனிதர்களின் நிலை சற்று அறுபட்டுத்தான் போகிறது.
அதோடு, தன்நம்பிக்கைக்கு நேர்த்த இழிவாக கொள்வர். அன்றைய சூழலில் அவர் புடைசூழ வந்தது ஒன்றும் பெரிதல்ல. வேறொருவராயின் நிகழ்வுகளின் நிலை உணரமுடியும்.
அறம் சார்ந்தோர் அன்று நிறை, அது எத்துறையாயினும். இன்று ?, நாளை ??.
அறம் நாடும் நல்லோரை அகிலம் காக்கட்டும்.
நன்றி, வணக்கம்.
fine, personal experience.