எத்தனையோ கட்சிகளை பிளந்த பாஜக, பாமகவில் தந்தையும், மகனையும் பிரித்து, பிளவுவாத அரசியலில் ஒரு பிரளயத்தையே உருவாக்கி உள்ளது. சாணக்கியன் காட்டிய துரோக அரசியல் சரித்திரத்தில் துகில் உரியப்பட்டது தந்தையின் தியாகம்..! சோரம் போனது மகனின் வீரம்! என்னவாகும் பாமக..?
இப்படியும் கூட நடக்குமா, நாட்டில்?
மகனிடமிருந்து அப்பாவின் உயிரை பாதுகாக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாம் தைலாபுரத்தில்!
அப்பாவின் உயிரை பாதுகாக்கவே போலீஸ் வேண்டும் என்றால், அந்த மகன் எவ்வளவு ஆபத்தானவராக இருப்பார்…? இவரிடம் இருந்து வன்னிய சமூகத்தை பாதுகாக்கப் போவது யார்?
இதைவிட பேரவலம் வேறு என்ன இருக்க முடியும்?
கொள்கைக்காக உயிரை கொடுக்கும் இயக்கமாக உருவெடுத்து, இன்று கொள்ளையை பங்கு போடுவதில் குடும்பத்திற்குள் சண்டையிடும் நிலை வந்தான பிறகு இதுவும், நடக்கும், இன்னமும் நடக்கும்.
ஒடுக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு என்று ஒரு உத்தமனை கண்டெடுப்போம் என வன்னிய சமூகத்தின் நாற்பது பெருந்தலைவர்கள் ஒன்று சேர்ந்து ராமதாஸை உருவாக்கினர். ஏ.கே. நடராஜன், எம்.பி.சுப்பிரமணியம், எம்.என்.மணிவர்மா..உள்ளிட்ட பலரது தியாகத்தில், பெருந்தன்மையில் உருவானவர் தான் ராமதாஸ்.
தன்னை பெருந்தலைவராக்கி அழகு பார்த்தவர்களையே பின்பு அழ வைத்த வரலாற்றுக்கு சொந்தக்காரர் தான் ராமதாஸ்.
அடுத்த நிலையில் கட்சியை கட்டமைக்க பட்டிதொட்டியெங்கும் பயணப்பட்டு வேர்வை சிந்திய முன்னணி மூத்த நிர்வாகிகளால் எங்கே தன் பதவிக்கு பங்கம் வருமோ என்ற கோழைத்தனத்தில் அதிரடியாய் இராம. நாகரத்தினம், டி.என்.ராமமூர்த்தி, முருகேசன் உள்ளிட்ட 13 மூத்த நிர்வாகிகளை அதிரடியாக கட்சியில் இருந்து விலக்கியவர் தான் ராமதாஸ். இப்படியாக பற்பலரை காவு கொடுத்து தான் தன்னை தனிபெரும் சக்தியாக்கிக் கொண்டார் ராமதாஸ்.
இதில் ராமதாஸ் வளர்ச்சிக்கு வாரி, வாரி வழங்கி, டெல்லியிலும் தொடர்புகளை உருவாக்கிக் கொடுத்தும் கொடூரமாக வஞ்சிக்கப்பட்ட தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியார்.
தற்போது 35 வயதில் மகனை கேபினெட் அமைச்சராக்கியது நான் செய்த மிகப் பெரிய தவறு என்கிறார் ராமதாஸ். ஆனால், தன் மகன் எப்படிப்பட்டவர் எனத் தெரிந்தே அவரை கேபினெட் அமைச்சராக்கியவர் தான் ராமதாஸ் என்பதற்கு வாழப்பாடி ராமமூர்த்தி அவர்கள் வெளியிட்ட அயோக்கிய சிகாமணி ராமதாஸ் என்ற நூலில் இவ்வாறு கூறியுள்ளார்;
”வாஜ்பாய் அமைச்சரவையில் பாமக சார்பில் பொன்னுசாமியும், சண்முகமும் அமைச்சர்களாக இருந்தனர். இவர்கள் இலாகா சம்பந்தப்பட்ட கோப்புகள் மாதக் கணக்கில் முடங்குகிறது. காரணம் உங்கள் மகன் அன்புமணியின் உத்தரவு உடனே கிடைகாதது தான்! அன்புமணி பைல் பார்த்து, பைல் தொடர்பான நபரை பார்த்து, அந்த நபரிடம் பேரம் நடத்தி, கைக்கு விஷயம் வந்து சேர்ந்தால் தான் கோப்பு நகர்கிறது. இதனால், அந்த இலாகா தொடர்பான செயலாளர்கள் மனம் உடைந்து, பிரதமருக்கு புகார் கூறினார்களே.., பிரதமர் வாஜ்பாய் இது தொடர்பாக உங்களை நேரில் அழைத்துக் கடிந்து கொண்டாரே நினைவு இருக்கிறதா..?’’
ஆக, தன் வினைத் தன்னை சுடும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.. என்பதெல்லாம் தான் ராமதாஸ் வாழ்க்கையில் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறார். இதை அன்புமணியும் நாளை பார்ப்பார்.
அதே சமயம் தன்னை இழிவுபடுத்தினார், பொய் சொன்னார், அநாகரீகமாக நடந்து கொண்டார், தன் தாயின் மீதே தண்ணீர் பாட்டிலை வீசி எறிந்தார். பா.மக என்ற கட்சியை கண்ணாடியை போல ஒரே நாளில் நொறுக்கினார், வளர்த்தகிடா மார்பில் பாய்ந்தது,..எக்ஸட்ரா…எக்ஸட்ரா என எவ்வளவோ சொன்னாலும், தன் மகனே தலைவன் என்பதில் ராமதாஸுக்கு மாற்று சிந்தனை வரவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். எனவே, அன்புமணி வன்னிய சமூகத்திற்கு தலைமை தாங்கும் தகுதியற்றது என ஏன் அவரால் சொல்ல முடியவில்லை…? இவ்வளவு சுயநலமும், அராஜகமும் உள்ள மகன் அன்புமணியை ஏன் மீண்டும், மீண்டும் நம்புகிறார்? ராமதாஸை பொறுத்த வரை இந்த சமூகத்தின் நலனைவிட தன் மகனின் நலனே மேலானது என்பதில் உறுதியானவர்.
இன்னொரு தகுதியான தலைமை தன் குடும்பத்திற்கு வெளியே கிடையவே கிடையாது. தலை எடுக்கவும் கூடாது.,,என்பதில் அப்பாவிற்கும்,பிள்ளைக்கும் எந்த கருத்து மாறுபாடும் வருவதில்லை.
பாஜகவுடன் கூட்டணி கண்ட கட்சிகள் யாவும் பிளவு கண்டுள்ளன. அதில் இது வரை எந்தக் கட்சியும் விதிவிலக்கில்லை. நிதீஸ்குமார் கட்சியை பிளந்தனர். சிவசேனாவை பிளந்தனர். தேசியவாத காங்கிரசை பிளந்தனர். அதிமுகவை பிளந்தனர், தற்போது பாமகவை பிளக்க அப்பாவையும், மகனையும் ஒருவருக்கொருவர் எதிரியாக்கி உள்ளனர்.
Also read
அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு அப்பா பேசி முடிவெடுக்க இரவோடு இரவாக பாஜக தலைவர்கள் கூடிப் பேசி , அதிகாலை வருவோம். கூட்டணி அறிவிப்பு முடிவு பெற வேண்டும். உன் அப்பாவை தயார்படுத்தி வை எனக் கூறுவதும், மகனும் மருமகளும் ராமதாஸ் காலில் விழுந்து பாஜக கூட்டணி இல்லையென்றால், அப்பா நீ தான் எனக்கு கொள்ளி வைப்பாய் என மகன் கதறி அப்பாவின் மனதை மாற்றியதும் நடந்திருக்கிறது என்பதை ராமதாஸே வாய் திறந்து சொல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தன் மருமகளின் அதிகாரம் கட்சியில் எப்படி கொடிகட்டிப் பறக்கிறது. தலைமை பொறுப்பை ராமதாஸிடம் இருந்து பறிப்பதில் செளமியா காட்டிய அவசரம் என எல்லாவற்றையும் கொட்ட வேண்டிய நிலைமை ஏன் வந்தது, ராமதாசுக்கு..? ஒருவேளை தன்னை கட்சியில் இருந்து மகன் நீக்குவதற்கு முன்பே அனைத்தையும் முன்கூட்டியே சொல்லி விடுவதன் மூலம் அதனை தடுக்கலாம் என சொல்லி இருப்பாரோ என்ற கோணத்திலும் பார்க்க வேண்டியுள்ளது.
எது எப்படியாயினும் இவ்வளவு சுயநலமிக்க ஒரு குடும்பத்திடம் உழைக்கும் வர்க்கமான வன்னியர் சமூகம் சிக்கி இருக்கிறதே..அது எப்போது விடுபட்டு இயல்பு நிலைக்கு மீண்டு வரும் என்ற கவலை தான் ஏற்படுகிறது.
சாவித்திரி கண்ணன்
Leave a Reply