தமிழகத்தின் மிக அதிக ஏரிகள் (381) நிறைந்த மாவட்டமாகவும், மத்திய அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட வேண்டிய பல தளங்களை கொண்டுள்ளதும், இயற்கை வளங்களின் கேந்திரமாகவும் விளங்கும் இந்த பிரதேசத்தை விமான நிலையத்திற்காக கற்பனையாகக் கூட கை வைக்க வாய்ப்பில்லை என்கின்றன சூழலியல் சட்டங்கள்;
தற்போது பரந்தூர் விமான நிலையத்திற்காக விழுங்கப்படவுள்ள பிரதேசமானது, மத்திய அரசின் தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய 160 தளங்களில் 104-ஐ தன் வசம் கொண்ட வரலாற்று பெருமை உடையது. இது காஞ்சிபுரம் மாவட்டத்தின் வரலாற்று பெருமையாகும்.
கரிக்கிலி பறவைகள் சரணாலயம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் என செழித்தோங்கிய காஞ்சிபுரம் இன்று விமான நிலைய அறிவிப்பால் தன் நிலை அறியாது நிலை குலைந்து நிற்கிறது.
விமான நிலையத் திட்டத்திற்கென மடப்புரம், ஏகனாபுரம், சிங்கிலி பாடி, நெல்வாய், வளத்தூர், பரந்தூர், அக்கம்மாபுரம், சிங்கிலி பாடி, மகாதேவி மங்கலம், குணகரம்பாக்கம், நாகப்பட்டு உள்ளிட்ட 80 கிராமங்களில் உள்ள பதிமூன்று நீர்நிலைகள், 36,000 க்கு மேற்பட்ட மரங்களை அழிக்க எப்படி இவர்களுக்கு துணிச்சல் வருகிறதோ?

எத்தனையெத்தனை விவசாய நிலப்பரப்புகள், நீர் நிலைகள் உள்ள செழிப்பான இந்த பூமியை விமான நிலையத்திற்காக சிதைக்க முடியுமா? எங்கே மசேந்திர நாதன் கமிட்டி அறிக்கை. அதை பொதுவெளியில் வைக்க தயங்குவது ஏன்? அதை தகவல் அறியும் உரிமை சட்டப்படி தரமறுப்பது திராவிட மாடல் அரசுக்கு அழகா? தர்மமா?
அமெரிக்க லூயிஸ் பெர்கர் கன்சல்டன்சி பிரைவேட் .லிமிடெட் நிறுவனமும் தமிழ்நாடு இன்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனமும், இணைந்து,
செங்கல்பட்டு மாவட்டம் படாளம் மற்றும் திருப்போரூர், காஞ்சிபுரம் மாவட்டம் பண்ணூர் மற்றும் பரந்தூர் என நான்கு இடங்களை தேர்வு செய்து, இதில் பரந்தூர் பகுதிதான் விமான நிலையம் கட்டுவதற்கான இடமாக முடிவு செய்து,, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அதன் பேரில் மத்திய அரசின் இடம் / தள அனுமதி சான்றிதழ் மற்றும் கொள்கை ரீதியான ஒப்புதலையும் பெற்று அடுத்த கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

காஞ்சிபுரம் தாலுக்காவை சார்ந்த பரந்தூர் A மற்றும் B, வளத்தூர், தண்டலம், நெல்வாய், மேல்பெடவூர், மடப்புரம், தொடூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவை சார்ந்த ஏகனாபுரம், மகாதேவி மங்கலம், சிங்கிலிபாடி, எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், அக்கம்மாபுரம் என இந்த 13 கிராமங்களின் மேல் அமையவுள்ளது தான் பரந்தூர் பசுமை வழி விமான நிலையம்.
பரந்தூருகும், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குமான இடைவெளி 62 கி.மீ, தாம்பரம் விமான நிலையத்திற்கான இடைவெளி 34.5 கி.மீ, அரக்கோணம் விமான நிலையத்திற்கான இடைவெளி 12 கி.மீ, மற்றும் தாம்பரம் LOCAL FLYING AREA 29.6 கி.மீ ஆகும்.
இவ்வாறான நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைந்தால், ஐம்பது அறுபது கி.மீட்டர் சுற்றளவில் நான்கு விமான நிலையங்கள் இருக்கும். பொது மக்கள் பயன்பாட்டுக்கான இரண்டு விமான நிலையங்களுக்கு இடையே, குறைந்தபட்சம் 150 கி.மீ இடைவெளி இருக்க வேண்டும் என்கிற நிபந்தனை ஏன் தளர்த்தப்பட்டது. தளர்த்த வேண்டிய நெருக்கடி என்ன? ஏன் மாற்று இடங்களை பரிசீலிக்கவில்லை..?
மத்திய அரசு பசுமை வழி விமான நிலையங்களுக்காக இந்த சட்டவிதியை ஏன் மீறியது.
குறைந்தபட்சம் இந்த திட்டத்தை திருப்போரூர் அருகிலாவது மாற்றி இருந்தால், இந்த அளவுக்கான இயற்கை பேரழிவுகளை தவிர்த்திருக்கலாம்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் எதிர்கால நெருக்கடியை சமாளிக்க, நான்கு இடங்களை பார்த்து அதில் பரந்தூரை தேர்வு செய்தோம் என்கிறார்கள், நம்முடைய கேள்வி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையமே குறை திறனோடு தான் இயக்கப்பட்டு வருகிறது. அதை முழுத் திறனுக்கு மாற்றி, சற்றே விரிவாக்கம் செய்தாலே கூடுதல் சேவைகளை தாரளமாக தர முடியும் எனும் போது, அதை செய்ய மறுப்பது ஏன்? கையிலேயே வெண்ணை இருக்க, இன்னொருவரின் பைக்குள் கைவிடுவானேன்?

இது மட்டுமின்றி, பரந்தூருக்கு மாற்றாக, திருச்சி, மதுரை, கோவை எனும் மூன்று சர்வதேச விமான நிலையங்களையும் கூடுதல் விரிவாக்கம் செய்து பயன்படுத்தலாம். UDAAN – RCS திட்டத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் சேலம், தூத்துக்குடி, புதுச்சேரி என இந்த மூன்று உள்நாட்டு விமான நிலையங்களையும் ஆய்வு செய்து சற்று விரிவாக்கலாம்.
இவற்றில் எதனை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தி சென்னை மீனம்பாக்கம் நெருக்கடியை சமாளிக்கலாம் என்றும் திட்டமிடலாம். ஏனென்றால், சென்னையைக் கடந்து தமிழகத்தின் பிற பகுதி மக்களே அதிக அளவில் விமான சேவையை பயன்படுத்துகின்றனர். மேலும், சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் சிலவற்றை பிற விமான நிலையங்களில் இருந்து இயக்கியும், சென்னை மீனம்பாக்கம் நெருக்கடியை சமாளிக்கலாம் METHODOLOGY எனும்வழி முறையியல் மூலம் ஆய்வு செய்திருக்கலாமே ?
EQUALITY எங்கே ?
பரந்தூர் விமான நிலையத்திற்கு தேவையான மொத்த நிலத்தில் 9.64 சதவிகித இடங்கள் மட்டும் தான் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு, ரோடு மற்றும் குடியிருப்பு பகுதிகளாகும். ஆனால் மிக மிக அதிகம் என்கிற அளவில் 90.36 சதவிகித மீதி நிலங்கள் அனைத்தும் உணவுக்கான ஆதாரம் மற்றும் நீர் ஆதாரம் கொண்டவை. அதாவது வயல் வெளிகள், ஏரிகள்! இயற்கையின் கொடைகள்! இவற்றை நிர்மூலமாக்குவது என்பது தற்கொலைப் பாதையாகும்.
பரந்தூரை தேர்வு செய்ததன் மூலம் மத்திய மாநில அரசுகள் இரண்டு பிரதான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
ஒன்று, வரலாற்று பெருமைகள் கொண்ட ஓர் நிலப்பரப்பில் இயற்கை வளங்கள் உட்பட்ட 90.36 சதவிகித பசுமை சூழலை அழிப்பதன் மூலம் ஏற்படும் நிகழ்கால மற்றும் எதிர்கால பாதிப்புகள் என்ன?

மற்றொன்று, வரலாற்று பெருமைகள் கொண்ட அதே நிலப்பரப்பின் மேல் ஐம்பது அறுபது கி.மீ சுற்றளவில் நான்கு விமான நிலையங்கள் செயல்படுவதன் மூலம் ஏற்படப்போகும் எதிர்கால பாதிப்புகள் என்ன?
நாம் அப்பகுதி மக்களுக்காக எழுதவில்லை. அவர்களுக்கு ஆதரவாகவும் நிற்கவில்லை.
மாறாக, ஆட்சேபனைக்குரிய 90 சதவிகிதத்திற்கும் மேலான அற்புத இயற்கை வளங்களை அழிக்கிறீர்களே..! இது மீண்டும் மனித சக்தியால் உருவாக்கிக் கொள்ள முடியாத இயற்கை செல்வங்களல்லவா? ஆக, இப்படியான மண்- மனித – இயற்கை வளங்களை அழிக்க துடிக்கும் மத்திய- மாநில அரசுகள் பரந்தூரில் இத்தனை விஷயங்களை கோட்டைவிட்டார்களா..?
Also read
நான் உனக்கும், நீ எனக்கும் அடிமை என்கிற கொள்கை உடன்பாடே பரந்தூர் பசுமை வழி விமான நிலையம்!
26.54 சதவிகித நீர் நிலைகள் உட்பட்ட 90.36 சதவிகித இயற்கை சூழல் அழிக்கப்படக் கூடிய அவல நிலை அறிந்தும் SITE CLEARANCE எனும் தள அனுமதி. வழங்கிய மத்திய பாஜக அரசின் அணுகுமுறை மிக ஆபத்தானது. மேலும், மத்திய அரசின் தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய 104 பகுதிகளை உள்ளடக்கியது. அதற்கான ஆதாரத்தை கீழே உல்ல லிங்கில் சொடுக்கி உள்ளே சென்று பார்க்கலாம்.
https://www.asichennai.gov.in/
கட்டுரையாளர்; அ.வை.தங்கவேல்
சமூக செயற்பாட்டாளர்.
ஆதாரங்களுடன் நியாயமான ஆத்திரத்தையும் நாகரிகமாக கொட்டியுள்ளார் கட்டுரையாளர் நீரும் நெல்லும் இல்லாமல் கரண்சிகளை தின்று வாழமுடியுமா படித்த இளம் விவசாயிகள் , 0.01% சமூக பிரக்ஞை உள்ள அரசியல்வாதிகள் மாற்று திட்டம் காணட்டும்