அயோக்கிய சிகாமணியை காப்பாற்றிய லோக்பால் நீதிபதி!

-ச.அருணாசலம்

ஹிட்டன் பர்க்கால் அம்பலப்பட்டவர்  செபி அமைப்பின் தலைவராக இருந்த மாதபி பூரி புச். வேலியே பயிரை மேய்ந்த கதையாக அதானியுடன் கூட்டணி வைத்து  பொதுப் பணத்தை கொள்ளையடித்தார்! இத்தகைய ஊழல் ராணி சட்டத்தின் தண்டனையில் இருந்து எப்படி தப்பிக்கிறார்…? லோக்பாலா?, ‘லாக்’ பாலா?

மே -28 அன்று லோக்பால் ‘நீதி மன்றத்தின்’ முழு அமர்வு ஒரு தீர்ப்பை வெளியிட்டது. பொது வாழ்வில் நேர்மையையும் , நாணயத்தையும், கறைபடியா ஒழுக்கத்தையும் எதிர்பார்க்கும் மக்களுக்கு இத்தீர்ப்பு பேரிடியாக வந்துள்ளது.

இந்த மாபெரும் தீர்ப்பை – வழங்கியவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ. எம். கான்வில்கர் அவர்கள் தான்.

பாராளுமன்ற நடைமுறைகளுக்கு வேட்டு வைத்து, நாடாளுமன்ற கண்காணிப்பை தவிர்க்கும் நோக்கில் நிதி மசோதா ( Money Bill) என பொய்யைக் கூறி, பி எம் எல் ஏ (PMLA) சட்டத்தில் மாற்றங்களை மோடி அரசு கொண்டு வந்தது தவறு என்ற குற்றச்சாட்டை கிடப்பில் போட்டுவிட்டு, அத்தகைய திருத்தத்தின் அடிப்படையில் , சந்தேகத்தின் பெயரிலேயே ஒருவரை இச்சட்டத்தில் கைது செய்யலாம் என்ற குரூரமாக மாற்றியது சரி தான் என ஆமோதித்து ‘அரைகுறை” தீர்ப்பை வழங்கிய அதே கான்வில்கர் தான் இன்று அதானியின் கைப்பாவையான மாதவி குற்றமற்றவர் என்று சான்றிதழ் வழங்கியுள்ளார் என்பது கவனிக்கதக்கது.

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவரும், ஐசிஐசிஐ வங்கியில் ஊதியம் வாங்கி கொண்டே செபி அமைப்பின் தலைவராகவும் நீடித்த திருமதி மாதவி பூரி புச் மீது தொடுக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுக்களையும் விசாரித்த லோக்பால் நீதிமன்றம் மாதவி பூரி புச் மீது எந்தவித வழக்கும் தொடர வேண்டாம் என தீர்ப்பளித்தது.

பலரும் எதிர்பார்த்தபடியே, உச்சநீதிமன்றத்தின் நீதிபதியான கான்வில்கருக்கு பணி ஓய்விற்கு பின்னர் விசுவாசத்திற்கு தரும் பரிசாக, லோக்பால் நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பை மோடி அரசு கொடுத்தது.

கொடுத்தவர்களின் எதிர்பார்ப்பை மெய்ப்பிக்கும் வகையில் இப்பொழுது லோக்பால் நீதிபதியாக கான்வில்கர் தீர்ப்பளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) தலைவரான மாதவி பூரி புச் மீது என்ன குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன?

அதானி குழுமத்தின் மீது 2014க்கு முன்னரே பல்வேறு மோசடி குற்றச்சாட்டுக்கள் எழுந்த போதும், பொருளாதார குற்றங்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவு (Directorate of Revenue Intelligence DRI) பல வழக்குகள் பதிந்து அவை நிலுவையில் இருந்த போதும், செபி அமைப்பு முறையாக விசாரிக்கவில்லை.

இந் நிலையில் மோடி அரசு அதானி குழுமத்திற்கு பல சலுகைகள் கொடுத்ததும், தேசீய கனிம வளங்களை, துறைமுகங்களை, விமான தளங்களை அதானி குழுமத்திற்கு மட்டுமே தாரை வார்த்ததும் நாடறியும் .

இந்நிலையில் இந்திய பங்குசந்தையில் அதானி குழுமத்தின் பங்கின் விலைகள் “தாறுமாறாக” எகிறியதும்,

அதனடிப்படையில் அதானி குழுமம் இந்திய பொதுத்துறை வங்கிகளிடம் , ஏராளமான கடன்களை வாங்கி கொழுத்ததும் நாம் அறிந்த ஒன்றுதான். இதனாலேயே மோடி-அதானி = மொடானி என அடைமொழி வந்ததும் உலகம் அறியும்.

இந்த வர்த்தக கொள்ளையை இந்திய கார்ப்பரேட் உலகின் மாபெரும் மோசடியாக அமெரிக்காவை சார்ந்த ஹிண்டர்பர்க் நிறுவனம் தனது அறிக்கை மூலமாக தோலுரித்து காட்டியது. அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி துபாயில் அமர்ந்து கொண்டு

செபியின் கண்களில் மண்ணை தூவி, அதானியின் பங்குகளை மறைமுகமாக வாங்கி, பங்குகளின் விலையை ஏற்றுவதும் நடந்தது என ஆதாரபூர்வமாக பல ஆவணங்களுடன் ஹிண்டன்பர்க் அறிக்கை அம்பலப்படுத்தியது.

இதனால், பங்குசந்தையில் பெரும் பூகம்பம் வெடித்தது, அதானியின் பங்குகள் அதல பாதாளத்தை நோக்கிச் சரிந்தது, அதானியின் பங்கு பத்திர விற்பனை நிறுத்தியும் வைக்கப்பட்டது.

ஆனால், இந்திய அரசோ- மோடி அரசோ- வாயை திறக்கவில்லை, முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய செபி அமைப்போ கண்ணையும், காதையும் பொத்திக் கொண்ட குரங்காக மௌனமாக இருந்தது!

இந்த அதானி முறைகேடு குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் செபி விசாரணையை முடிக்காமல் இழுத்தடித்தது. மூடி மறைத்தது நமக்கு மறக்க முடியாத வேதனைகள்.

இந்த நிலையில் மாதவி பூரி புச் தலைமையிலான செபி அமைப்பு முறையாக அதானி குழுமத்தின் மீது விசாரணை நடத்தாதற்கு காரணம், மாதவி பூரி அவர்களே அதானி ஷெல் கம்பெனிகளில் முதலீடு செய்துள்ளார் என ஹிண்டன்பர்க் நிறுவனம் மீண்டும் குற்றஞ்சாட்டியது.

Global Dynamic Opportunities Fund

கணவருடன் மாதபி பூரிபுச்

அதானி சகோதர்ர் வினோத் அதானி நிருவகிக்கும் குளோபல் டைனமிக் ஆப்பர்ச்சூனிட்டீஸ் பண்ட் என்ற ஷெல் நிறுவனத்தில் மாதவி பூரியும் அவரது கணவர் தாவல் புச்சும் ரூபாய் ஐந்து கோடி பணம் 2015 – 2018 ஆண்டுகளில் முதலீடு செய்து வைத்திருந்தனர் என்பது மட்டுமல்ல,

உச்ச நீதிமன்ற விசாரணையின் போதோ, செபி தலைவராக மாதவி பொறுப்பேற்கும் போதோ இதை மாதவி பொது வெளியில் கூறவில்லை என்பதும் அம்பலமானது. இது கள்ள உறவையும், நேர்மையற்ற பணப் பரிவர்த்தனையையும், ஆதாய  நோக்கையும் காட்டுகிறது .

Consultancy Services

 செபி தலைவராக பணியாற்றி கொண்டே, தன் கணவருடன் சேர்ந்து மகிந்திரா நிறுவனம், மற்றும் வினோத் அதானியின் பினாமி திறுவனங்களான பிளாக் ஸ்டோன், ரியல் எஸ்டேட் இன்ஃபரா டிரஸ்ட் (Black Stone and Real Estate Infra Trust) போன்றவற்றிற்கு “ வணிக ஆலோசனைகள் “ வழங்கி புச் தம்பதியர் பணம் சம்பாதித்ததை முறைகேடாகும்,

Rental Income

வொக்கார்ட் என்ற நிறுவனத்திற்கு தன்னுடைய கட்டிடங்களை வாடகைக்கு கொடுத்துவிட்டு, அந்த நிறுவனங்கள் குறித்த முறைகேடுகளை தட்டி கேட்கும் பொறுப்பான செபி தலைவர் பொறுப்பில் இருப்பதும் ஆதாய முரணுக்கு,  நேர்மையற்ற நடைமுறைக்கு வழி வகுக்குகிறது ,

Pay out from ICICI BANK

ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து 16.18 கோடி ரூபாய் பணம் செபி தலைவர் மாதவி பூரி 2017 – 2024 காலங்களில் பெற்றது முறையற்ற செயல் என்றும்

திரிணாமுல் காங்கிரஸ் எம் பி திருமதி. மகுவா மொய்த்ரா மற்றும் சிலரும் கடந்த ஆண்டு (2024செப்டம்பர் 13) புகார் மனுக்களை அளித்தனர்.

இதை விசாரித்த லோக்பால் நீதிமன்றம், ”மாதபி புரி பூச் மீதான குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் அனுமானங்கள் அடிப்படையில் உள்ளன. அவை உறுதிபடுத்தப்படவில்லை. குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, ஆதாரமற்றவை. சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் அடிப்படையில், புகார்கள் தகுதியற்றவை” என தெரிவித்துள்ளது.

10-8-2024 தேதியிட்ட ஹிண்டன்பர்க் அறிக்கை ஒரு ஷார்ட் செல்லருடைய அறிக்கை, அதானி குழுமத்தை அம்பலப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட அறிக்கை, எனவே அதை மட்டுமே ஆதாரமாக கொண்டு மாதவி பூரி புச் மீது நடவடிக்கை எடுக்க கூடாதாம்! ஏனெனில் அவர் ஒரு ( Responsible Public Servant) பொறுப்புள்ள பொது ஊழியராம் !

இதை தெரிந்தே புகார் மனுதார்ர்கள் ஹிண்டன்பர்க் அறிக்கையின்றி பொது வெளியிலுள்ள புகார்களை முன்வைத்துள்ளனர் என்பதை லோக்பால் நீதிமன்றம் ஒத்துக் கொண்டது.

ஆனால், அத்தகைய குற்றச்சாட்டுகள் ‘ஆதாரமற்றவை, ஏற்றுக் கொள்ள முடியாதவை ‘எனவே அவற்றை நிராகரிக்கிறோம்’ என்று கூறியுள்ளது கான்வில்கர் தலைமையிலான முழு அமர்வு.

இத்தகைய விசித்திரமான ஆனால், ஆளுபவர்களுக்கு விருப்பமான தீர்ப்பை கூறியுள்ள இந்த நீதி மன்றம் பிறிதொரு உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மேற்கோள் காட்டி உள்ளது.

லலித குமாரி vs உத்தர பிரதேச அரசு. இடையே நடந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த லோக்பால் நீதி மன்றம் குற்றச்சாட்டுகளில் உள்ள உண்மைத் தன்மையை சோதிக்கவில்லை.

மாறாக, இக்குற்றச்சாட்டுகளில் இருந்து குற்றமெதுவும் வெளிப்படுகிறதா? என்றே பார்த்தோம் , எங்களது கணிப்பில் எந்தவொரு குற்றமும் புலப்படவில்லை , எனவே இக்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மேல் நடவடிக்கைகள் ஏதும் தேவையில்லை என தீர்ப்பளிக்கிறோம் என்று இந்த அமர்வு கூறியுள்ளது.

மேலும், ஒருபடி மேலே சென்று இந்த அமர்வு குற்றங் கூறியவர்கள் மீது  மாதவி பூரி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.

நீதிபதி கான்வில்கர்

இதே நீதிபதி கான்வில்கர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தான் , குஜராத் படுகொலையின் போது அன்றைய முதல்வர் மோடியின் பங்கு பற்றி நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியதற்காக திருமதி. தீத்சா செத்தல்வாடு மீது குஜராத் அரசு வழக்கு தொடரலாம் என தீர்ப்பளித்து நினைவிருக்கலாம் .

இத்தகைய தீர்ப்புகள் அகம் சார்ந்தவையாக இருக்கின்றதே அறஞ்சார்ந்த தீர்ப்பாக இல்லையே என நீங்கள் கருதலாம் .

மோடியின் நவ இந்தியாவில் , தீர்ப்புகள் குற்றங்களின் தன்மையை பொறுத்து வழங்கப்படுவதில்லை, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யார் என்பதை பொறுத்தே தீர்ப்புகள் எழுதப்படும் !

ஒரே கண்ணோட்டமுடையவர்கள் ஆளுபவர்களாகவும், நீதி பரிபாலகர்களாகவும் வலம் வருகையில் அங்கு அரசமைப்பு சட்டம் என்றஅறம்பின்பற்ற படவில்லை என்றால்வலம் வருபவர்களின்அகம்காட்டும் கோட்பாடுகளே பின்பற்றப்படும் அபாயம் உள்ளது!

நியாயங்களை மறந்த இந்தியா சிறக்குமா?

ச.அருணாசலம்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time