அரசுப் பணியை லஞ்சம் இல்லாமல் பெறுவது பெரும் சவாலாகும். அமைச்சர்களும், ஆளும்தரப்பு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஈவு இரக்கமில்லாமல் பணம் புடுங்கின்றனர். பேராசிரியர் பணிக்கு பல லட்சங்களா? லஞ்சப் பேர்வழிகளுக்கு நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது, பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர்கள் நியமனங்களில்; முழு விவரம்;
தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் நிர்வாகத்தில் மொத்தம் 333 கலை,அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 171 அரசு கல்லூரிகளும் 162 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு அரசு தான் சம்பளம் தருகிறது. ஆகவே, அந்த அரசு வேலையை கல்விச் சந்தையில் எவ்வளவு அதிக விலைக்கு விற்று பணம் பார்க்கலாம் என்பதே உயர்கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களின் வழக்கமாக உள்ளது.
பேராசிரியர் பணிகளுக்கு அரசாங்க சம்பளம் சுமார் ஒரு லட்சம் தரப்படுவதைக் காரணம் காட்டி, இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்களிடம் 30 முதல் 50 லட்சம் வரை லஞ்சமாக பெறப்படுவதால், தகுதியற்றவர்கள் கற்பிக்க வந்துவிடுகிறார்கள். இவர்களால் சரியாக கல்வி கற்பிக்க முடியாத காரணத்தால் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் கல்வித் தரம் அதளபாதாளத்திற்கு சரிந்துவிடுகிறது.
அந்த வகையில் மிகவும் பாதிக்கப்பட்ட கல்லூரிகள் பச்சையப்பர் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி நாயுடு கல்லூரி, செல்லம்மாள் கல்லூரி உள்ளிட்ட ஆறு கல்வி நிறுவனங்களாகும். அரசு உதவி பெறும் கல்லூரி என்பதால் குறைந்த கட்டணத்தில் ஏழை,எளிய, நடுத்தர வர்க்க மாணவர்கள் இங்கு பயில வருகின்றனர். தற்போது 30 ஆயிரம் மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர்.
இந்த மாணவர்களின் கல்வி எக்கேடு கெட்டால் என்ன? எங்கள் பாக்கெட் நிர்ம்ப வேண்டும்…என அந்த அறக்கட்டளையின் நிர்வாகிகள் (ஐசரி கணேஷ், எஸ்.ஜெயச்சந்திரன், ஆர்.பிரபாகரன், வி.ராமநாதன், கே.ஹேமநாத், வி.துரைமோகன்) 2014 முதல்2026 காலகட்டத்தில் அன்றைய அதிமுக கல்வி அமைச்சர் பழனியப்பனோடு கைகோர்த்து ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் பல லட்சங்கள் லஞ்சம் பெற்று கொஞ்சமும் தகுதியற்ற 254 பேரை பேராசிரியர்களாக நியமித்தார்கள்.
இந்த முறைகேடுகள் வெளியாகி விஸ்வரூபம் பெறுகிறது. விவகாரம் கோர்ட்டுக்கு போகிறது.
நீதியரசர் சண்முகம் விரிவாக விசாரணை நடத்தி, தேர்வுசெய்யப்பட்ட 250 ஆசிரியர்களில் 152 பேர் தகுதியே இல்லாதவர்கள் எனக் கூறினார்.
இந்த நியமனங்களில் தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள், தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள், பல்கலைக்கழக மானியக்குழு வரையறுத்துள்ள தகுதி இல்லாதவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தெரிய வந்தது. இவர்கள் வேலை எந்த நேரமும் பறி போகலாம்.
இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் தலையிட்டு நீதிபதி ஒருவரைத் தலைவராகவும், ஒரு நேர்மையாளரை செயலாளராகவும் போட்டு அறக்கட்டளையை சீரமைத்தது. அந்த வகையில் தற்போது அறக்கட்டளையின் தலைவராக நீதிபதி வி.பார்த்தீபனும், செயலாளராக சி. துரைக்கண்ணு அவர்களும் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் தற்போது பொறுப்பில் இருக்கும் சூழலில் பல ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதையொட்டி, 132 ஆசிரியர்களை நியமிக்க 2023 ஆம் ஆண்டு விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் செய்தனர்.
நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அறக்கட்டளைத் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்தீபனும், செயலாளர் துரைக்கண்ணுவும் பணம் வாங்காமல் நேர்மையாக இந்த ஆசிரியர் தேர்வு இருக்க வேண்டும். சிறந்த பேராசிரியர்கள் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் எனக் கறார் காட்டியதால், இந்த 152 உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு அரசு தரப்பில் அனுமதி தருவதில் ஐந்து மாதங்களாக கடும் இழுபறி செய்தனர்.
இது போன்று அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பேராசிரியர் பணி இடங்களுக்கு நியமனம் நடைபெறுவதற்கு உயர் கல்வித் துறையின் மண்டல இணை இயக்குனர் ( Regional joint director) கையெழுத்து அவசியமாகும். ஆனால், ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் இத்தனை லட்சம் அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் தந்தால் மட்டுமே மண்டல இணை இயக்குனர் கையெழுத்து போட முடியும்..என திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர்களாக இருந்த பொன்முடியும், கண்ணப்பனும் கடுமையான நிர்பந்தங்களை தந்தனர்.
ஆனால், 132 பேராசிரியர் பணி இடங்களில் தகுதியற்றவர்களை பணம் பெற்றுக் கொண்டு நியமித்தால் மாணவர்களின் படிப்பு சீரழியும். ஆகவே, லஞ்சம் வாங்கித் தரமாட்டோம். நேர்மையாக நிரப்புவோம்…என செயல்பட்டதில், ஆள்வோர் தூண்டுதலில் கடலூரைச் சேர்ந்த ஒருவர் பொதுநல வழக்கு போட்டு, ”தேர்தல் நடத்தி முறையான அறங்காவலர்கள் தேர்ந்து எடுக்கப்படாத நிலையில், தற்போதுள்ள நிர்வாகம் பேராசிரியர் பணி இடங்களை நிரப்ப தடை விதிக்க வேண்டும்” எனக் கேட்டதில் சில காலங்கள் தடைபட்டு. பின்னர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்கள் நேர்மையாக பணியிடங்களை நிரப்புவதில் தடையில்லை என தீர்ப்பானது.
பின்னர் ஒருவழியாக விண்ணப்பங்களை அலசி ஆராய்ந்து தகுதியானவர்களை நேர்காணல் செய்வதற்கு அழைக்கும் தருவாயில் அதற்கு சிறிதும் ஒத்துழைக்க மறுத்து உயர்கல்வித் துறை நிர்வாக ரீதியில் பல தடங்களை ஏற்படுத்தியது.

இதனால் நேர்காணல் தேதி அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் நேர்காணல் செய்யும் கல்வியாளர்களை கலந்து கொள்ளவிடாமல் உயர்கல்வித் துறை அதிகாரிகள் சதி செய்து தற்போதைய நிர்வாகத்தை தளர்வடைய வைத்தனர்.
ஆனால், இதற்கெல்லாம் சோர்ந்தால் ஊழல்வாதிகள் வெற்றி பெற்று விடுவார்கள் என்பதால், மீண்டும் நீதிமன்றத்தை அணுகி உயர்கல்வித் துறையினர் ஏற்படுத்திய தடைகள் எடுத்து சொல்லப்பட்டன. நீதிமன்றம் உயர்கல்வித் துறையை கடுமையாக எச்சரித்து ஒழுங்காக ஒத்துழைக்க வேண்டும் என கட்டளையிட்டது. இதையடுத்து திட்டமிட்டபடி நேர்காணல் நடந்து தகுதியான உதவி பேராசிரியர்கள் 132 பேர் தேர்வானார்கள். ஆனால், அவர்களுக்கு அப்பாயின்மெண்ட் ஆர்டர் போடாமல் உயர்கல்வித் துறை அதிகாரிகள் கண்ணாபூச்சி விளையாடினர்.
ஆனால் பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளையோ, மாணவர்களின்படிப்பு கெடக் கூடாது என்பதால் 152 உதவி பேராசிரியர்களையும் உடனே பணிக்கு வரச் சொல்லிவிட்டது. ஆனால், இவர்களுக்கு அரசாங்கத்தில் இருந்து சம்பளம் கிடைக்காத பேரவல நிலை ஓராண்டாகத் தொடர்ந்தது. லஞ்சம் தராமல் சம்பளத்தை விடுவிக்கமாட்டோம். இப்போதாவது எங்கள் அதிகாரத்தை உணர்ந்து கொண்டு, கரன்சிகளை கொண்டு தாருங்கள் என சொல்லாமல் சொன்னது தமிழக உயர்கல்வித் துறை.
Also read
பேராசிரியர்கள் யாரும் கடனை, உடனை வாங்கி லஞ்சம் தந்துவிடாதீர்கள். உங்களுக்கு தற்காலிகமாக அறக்கட்டளை சார்பில் மாதம் ரூ 20,000 ஆயிரம் தருகிறோம். இந்தப் பிரச்சினையையும் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று உங்களுக்கு உரிய சம்பளத்தை பெற்றுத் தருகிறோம் என கடந்த ஓராண்டாக ஊழல் மிகுந்த உயர்கல்வி துறையுடன் பச்சையப்பன் அறக்கட்டளை சட்ட போராட்டம் நடத்தி இன்று நீதிமன்றம் பேராசிரியர்களுக்கு உடனே சம்பளம் தர வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. இந்த வகையில் இனி பேராசிரியர்கள் அரசு தரும் கெளரவமான சம்பளம் பெறுவார்கள்.
அதிகாரம் மிக்க ஆட்சியாளர்களையும், ஊழல்கறை படிந்த உயர்கல்வித் துறை நிர்வாகத்தையும் எதிர்த்து நியாயமான முறையில், அசாத்தியமான நெஞ்சுரத்துரடன் ஆசிரியர் பணி இடங்களை நிரப்பியதன் மூலம் பச்சையப்பன் அறக்கட்டளை செயலாளர் துரைக்கண்ணுவும், தலைவர் நீதிபதி பார்த்தீபனும் சிறந்த முன்னுதாரணத்தை படைத்துள்ளனர்.
நாம் நேர்மையாகத் தான் இருப்போம் என முடிவெடுத்து கைகோர்த்தால், ஊழல்வாதிகள் கொஞ்ச காலம் உதார்விட்ட பிறகு அடங்கிப் போவதைத் தவிர வேறு வழியில்லை. அதே சமயம் இவர்களை அம்பலப்படுத்தி போராட வேண்டும்.
சாவித்திரி கண்ணன்
கலியுகத்தில் ஒரு கர்ணன் கல்வி எனும் ஞானக்கூற்றை வாரி வழங்கிய பச்சையப்பன் அறக்கட்டளை அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
உயர் கல்வித்துறையில் ஏற்கெனவே பணிபுரிந்த மற்றும் தற்போது பணிபுரியும் உயரதிகாரிகள் அனைவரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு நடத்த வேண்டும். அவர்களிடமிருந்து பெறப்படும் வாக்குமூலங்கள் அடிப்படையில் அத்துறையின் முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
good experience