திமுகவில் இப்படியும் ஒரு எம்.எல்.ஏ இருந்திருக்கிறாரா?

-எஸ். இர்ஷாத் அஹமது

வறுமையிலும் நேர்மை! எத்தனை எளிமை! என்னே ஒரு கம்பீரம்! மீண்டும் எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்பை புறம் தள்ளியவர்…! வணங்கத்தக்க மாமனிதர்கள் வாழ்ந்த சுவடே தெரியாமல் மறைந்து போவது தான் காலத்தின் கோலமா…?

2002-ம் ஆண்டு நடந்த சம்பவம். ஒரு நாள் காலை செய்தி தொடர்பாக அப்போதைய பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலத்திற்கு  சென்று விட்டு அங்கே வந்திருந்த பெரம்பலூர் காவல் நிலைய ஜீப்பில் கடைவீதி ஏரியாவுக்கு திரும்பி கொண்டிருந்தேன்.

காவல் துறையைச் சேர்ந்த ஜெயராமன் என்ற இளைஞர் ஜீப்-ஐ ஓட்டிவந்தார்.  முன்பக்க இருக்கையில் பெரம்பலூர் டவுன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் (எஸ்ஐ)  பாலையா அமர்ந்திருந்தார். அவர் கிடா மீசை வைத்திருந்ததால் ‘மீசை’ பாலையா என அழைக்கப்பட்டார். அவருக்கு பின்னால் ஜீப்பின் உள்ளே இருந்த சீட்டில் நான் அமர்ந்திருந்தேன்.

ஜீப் சங்குப்பேட்டையைக் கடந்து சென்று கொண்டிருந்த போது, தனது உடம்பில் ஒரு கோவணம் மட்டுமே அணிந்திருந்த சுமார்  65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவரும், அவருடன் வயதான அவரது மனைவியும் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அந்த தள்ளாத வயதிலும் தனது தோளில் ஏர் கலப்பை ஒன்றை சுமந்து சென்று கொண்டிருந்தார் அம் முதியவர்.  சிறிய கஞ்சி வாளி ஒன்றை கையில் சுமந்து சென்று கொண்டிருந்தார் அவரது மனைவி.

அத் தம்பதியரை ஜீப் கடந்து சென்றது.

அப்போது யதேச்சையாக அத் தம்பதியினரைக் கவனித்துவிட்ட எஸ்ஐ பாலையா, “ஜெயராம், வண்டிய நிறுத்து,” எனறார்.

வண்டி நின்ற அடுத்த நொடியே ஜீப்பிலிருந்து வெளியே துள்ளிக் குதித்து இறங்கிய எஸ்ஐ பாலையா, ‘ஐயா, வணக்கம்’ எனக் கூறியவாறு, ஏதோ ஒரு எஸ்.பி அல்லது டிஐஜி அந்தஸ்திலான தனது உயரதிகாரிக்கு மரியாதை செலுத்துவது போல தனது நெஞ்சை நிமிர்த்தி விறைப்பாக நின்று அம் முதியவருக்கு காவல் துறையினருக்கே உரிய ஒரு ராயல் சல்யூட் அடித்தார். அதற்கு, தனது இரு கைகளையும் ஒன்றாக சேர்த்து கும்பிட்டவாறு பதில் வணக்கம் வைத்தார் அம் முதியவர்.

ஒல்லியான தேகம். வருத்தம் தோய்ந்த முகம். ஆனாலும் அவரது முகத்தில் ஒருவித இனம் புரியாத அமைதி…தேஜஸ்.

அம் முதியவரையும், அவரது மனைவியையும் தனித்தனியாக  ரொம்ப பவ்யமாக நலம் விசாரித்தார் எஸ்ஐ பாலையா. அதன் பின்னர், “ஐயா, இந்த மொட்ட வெயில்ல இப்படி எங்கே நடந்து போயிட்டு இருக்கீங்க ஐயா?. தயவு செய்து மறுக்காம என்னோட ஜீப்ல ஏறுங்க.  நீங்க எங்கே போகணுமோ அந்த இடத்திலேயே நான் உங்களைக் கொண்டுவந்து இறக்கி விடுறேன்,” என்றார் எஸ்ஐ பாலையா.

அதற்கு அம் முதியவரோ, “அதெல்லாம் வேணாங்க, ஐயா. வயலுக்கு கூலி வேலைக்கு போயிட்டு இருக்கேன். வழக்கம் போல நடந்தே போய்க்கிறேன். தயவு செய்து நீங்க உங்க பணியை பாருங்க. உங்க வண்டியில வர மறுத்ததற்காக என்னை தப்பா நெனைக்காதீங்க,” என மீண்டும் தனது இருகைகளையும் இணைத்து, எஸ்.ஐ பாலையாவைப் பார்த்து கும்பிட்டவாறே கூறினார்.

எஸ்ஐ பாலையா எவ்வளவோ வற்புறுத்தியும், அம் முதியவர் மசியவில்லை. புன்னகை மலர ஜீப்பில் வர மறுத்து விட்டார்.

வேறு வழியின்றி, அவருக்கு மீண்டும் ஒரு சல்யூட் அடித்துவிட்டு, ஜீப்ல ஏறி அமர்ந்தார் எஸ்எஸ்ஐ பாலையா. அவர் முகத்தில் ஒருவித இறுக்கம், ஏமாற்றம் தெரிந்தது. இப்போது ஜீப் புறப்பட்டது.

கோவணம் மட்டுமே அணிந்திருந்த அம் முதியவரிடம் எஸ்ஐ பாலையா ஏன் இப்படி பம்முறார் என எனக்கு மனதில் ஒரே ஆச்சரியம். பொதுவாக காவல்துறையில் பணியாற்றும் ஒரு சாதாரண கான்ஸ்டபிளே அதிகாரத் தோரணையுடன் பேசும் இக்காலக்கட்டத்தில் உதவி ஆய்வாளரான பாiலையாவின் பவ்யமான நடவடிக்கைகளைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அதனால், “யார், ஸார், இந்த தாத்தா?,” என நான் ஆர்வத்துடன் கேட்டேன்.

“அவர் ஒரு முன்னாள் எம்எல்ஏ,” என்றார் பாலையா. அவர் கூறியதை என்னால் நம்ப முடியவில்லை. ஏதோ விளையாட்டுக்கு அப்படி சொல்கிறார் என நினைத்து, “முன்னாள் எம்எல்ஏவா, இவரா?,” என ஒருவித சந்தேகத்துடன் கேட்டேன்.

அப்போது தான் அம் முதியவரைப் பற்றிய தகவல்களை பாலையா சொன்னார்.

“இவர் முன்னாள் திமுக எம்எல்ஏ. இவரது பெயர் எஸ்.மணி. ஆலத்தூர் வட்டம் கொட்டரை அருகேயுள்ள ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.  இவர் அறிஞர் அண்ணா காலத்திலேயே திமுக எம்எல்ஏவாக இருந்திருக்கிறார்.

கடந்த 1962-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் அப்போது இருந்த வெங்கலம் என்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர். இப்போது அத் தொகுதி இல்லை.

அத் தேர்தலில் திமுக சார்பில் வெற்றிபெற்ற 50 எம்எல்ஏக்களில் இவரும் ஒருவர். அத் தேர்தலில் திமுக பொதுச் செயலாளரான அறிஞர் அண்ணாவே வெற்றி பெற முடியவில்iலை. காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட அண்ணா தோல்வியடைந்தார்,” என்றார் எஸ்.ஐ பாலையா.

“இவரை எப்படி உங்களுக்கு தெரியும்?,” என நான் கேட்டேன்.

“கடந்த 2001-ம் ஆண்டு ஜுன் 29-ம் தேதி நள்ளிரவு முன்னாள் முதல்வரான திமுக தலைவர் கலைஞர் (கருணாநிதி) ஊழல் குற்றச்சாட்டில் போலீஸாரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதே நாளில் தமிழகம் முழுவதும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் மற்றும் இந்நாள் எம்.எல்.ஏ.க்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திச்சு.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வான இவரை கைது செய்வதற்காக நான் நள்ளிரவில் அவரது கிராமத்துக்கு ஜீப்ல போனேன்.

அவரது பெயர் மட்டும் தான் எனக்கு தெரியும். அவர முன்ன பின்ன பார்த்ததில்ல. அதனால அவர் எப்படி இருப்பார் என்பது கூட எனக்கோ என்னுடன் வந்திருந்த மற்ற போலீஸாருக்கோ தெரியாது. அவரது வீடு எது என்பதும் தெரியாது.

அக் கிராமத்தில் தெரு விளக்குகளும் இல்லை. நாங்க போன சமயம் இரவு நேரம் என்பதால் அங்கே ஒரே இருட்டு. ஆங்காங்கே வரிசையாக குடிசை வீடுகள். அவரைப் பற்றி யார்கிட்ட விசாரிப்பது என தெரியல.

அப்போது அங்கே சட்டை அணியாமல் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்திருந்த முதியவர் ஒருவர் தனது வீட்டின் எதிர்புறம் சென்று சிறுநீர் கழித்து விட்டு, எழுந்து நடந்து வந்தார். அவரிடம் நான், ‘ஐயா, இங்கே முன்னாள் எம்எல்ஏ மணி வீடு எது?,’ எனக் கேட்டேன். அதற்கு அவர்,  எதிரே இருந்த ஒரு வீட்டை காட்டி இதுதான் எனக் கூறிவிட்டு, “என்ன விஷயம், ஐயா?,” எனக் கேட்டார்.

சென்னையில் கலைஞர் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக அவரை கைது செய்ய  வந்துள்ளதாக நான் கூறினேன்.

எனது பதிலைக் கேட்ட அந்த முதியவர் கொஞ்சமும் கலக்கம் அடையவில்லை.. மாறாக, ‘ஐயா, நீங்க தேடி வந்துள்ள  முன்னாள்  எம்எல்ஏ மணி நான் தான்’ எனக் கூறினார். அதுமட்டுமின்றி, “ஐயா, ஒரு நிமிஷம் இருங்க. நான் சட்டை மாட்டிக்கிட்டு வர்றேன்” எனக்கூறிவிட்டு தனது குடிசை வீட்டிற்குள் சென்றார்.

அந்நேரத்திலும் அவரது மனைவியை அழைத்து எங்களுக்கு குடிக்க ஏதாவது கொடுக்கச் சொன்னார். அதைத் தொடர்ந்து, அவரது மனைவி ஒரு சொம்புல தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ மணி வாழ்ந்த குடிசை வீடு

வீட்டுக்குள் சென்ற அம் முதியவர் சிறிது நேரத்தில் சட்டையணிந்து கொண்டு வெளியே வந்து ‘ஐயா, இப்போ நாம புறப்படலாமா?’ என எங்களைப் பார்த்து ரொம்ப கூலாகக் கேட்டார். அதன் பின் அவர் தானாகவே நடந்து வந்து ஜீப்ல பின்புறம் ஏறி அமர்ந்து கொண்டார்,” என்றார், எஸ்ஐ பாலையா.

அதோடு, முன்னாள் எம்எல்ஏ மணியை பற்றி எஸ்ஐ பாலையா அடுத்து கூறியது தான் ரொம்ப ஹைலைட்.

“ஒருவகையில் அவங்க கட்சித் தலைவர் கலைஞரை விட இந்த முன்னாள் எம்எல்ஏ ரொம்ப சிறந்தவர், நேர்மையானவர். அதனால் தான் நான் அவர் மீது   இந்த அளவு மரியாதை வச்சிருக்கேன்,” என்றார் எஸ்ஐ பாலையா.

கலைஞரை விட இவர் எந்த வகையில் சிறந்தவர் என நான் கேட்டதற்கு, “தன்னை போலீஸார் கைது செய்ய வந்தபோது ஏற்கெனவே மூன்று முறை முதல்வராக பதவி வகித்துள்ள கலைஞர் போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுக்காம ‘ஐயோ, என்னைக் கொல்றாங்களே…என்னைக் கொல்றாங்களே…’ என கத்தி கூப்பாடு போட்டார். இத்தனைக்கும் அவரை கைது செய்வதற்குதான் போலீஸார் அவரது வீட்டுக்கு போயிருந்தாங்க. அவரை கூட்டிட்டு போய் தூக்கில் போடுவதற்காக அல்ல.

கைது செய்யப்பட்டாலும் அவர்  ஓரிரு வாரங்களில் ஜாமீனில் வெளியே வந்திடலாம். இந்த உண்மைகள் தெரிந்திருந்தும் அவரது வயது மற்றும் அனுபவத்திற்கு கொஞ்சங்கூட பொருத்தமில்லாம, அவர் கத்தி கூப்பாடு போட்டு ஆர்ப்பாட்டமாக நடந்துக்கிட்டார்.

ஆனால், இந்த முன்னாள் எம்எல்ஏவோ அவரோட கட்சித் தலைவர் கலைஞரைப் போல கத்தி கூப்பாடு போடாம, ரொம்ப கண்ணியமா நடந்துக்கிட்டார். அவரை கைது செய்ய வந்திருக்கிறோம் என சொன்னவுடனே, அவர் வீட்டுக்குள் சென்று சட்டை மாட்டிக்கிட்டு தானாகவே வந்து ஜீப்ல ஏறி அமர்ந்து கொண்டார். அதுதான் ஒரு கட்சித் தலைவனுக்கான அழகு, தலைமைப் பண்பு.

இத்தனைக்கும் அது இரவு நேரம். அவர் யார் என்றே எங்களுக்கு அடையாளம் தெரியாது. உண்மையிலேயே அவர் தப்பிக்க நினைச்சிருந்தா, அவரிடம் நாங்கள் முன்னாள் எம்எல்ஏ மணியின் வீடு எது எனக் கேட்டபோது, அவர் சுதாரித்துக்கொண்டு தனக்கு தெரியாது என பொய் சொல்லி விட்டு அங்கிருந்து ரொம்ப ஈஸியா தப்பிச்சு போயிருக்கலாம். ஆனால் அவர் அப்படியெல்லாம் செய்யாம, ரொம்ப நேர்மையாக நடந்து எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

அவரை கைது செய்ய வந்திருக்கிறோம் எனத் தெரிந்த பின்னரும், எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காம அந்நேரத்திலும் அவர் எங்கள் அனைவருக்கும் குடிக்க சொம்புல தண்ணீர் கொடுத்து உபசரித்தார்.

இன்னைக்கு சாதாரண கவுன்சிலரே பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பல கோடி ரூபாய்  சம்பாதிச்சிர்றாங்க. ஆனால் 1962 முதல் ஐந்தாண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்திருந்தும், இவர் இன்று வரை ரொம்ப வறுமையில் இருக்கிறார். சாதாரண மண் சுவரிலான குடிசை வீட்டில் தான் வசிக்கிறார். இன்றைக்கும் தனது மனைவியுடன் வயல்களில் கூலி வேலைக்குப் போய் சம்பாதித்து, அதில் கிடைக்கும்  சொற்ப வருமானத்தில் சாப்பிட்டு வர்றார்.

வறுமையான அவரது குடும்ப சூழ்நிலையைக் கண்டு எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.

அவரை கைது செய்வதற்கே எனக்கு மனசில்ல. நான் மட்டும் தனியா வந்திருந்தா நிச்சயம் அவரை கைது செய்யாம விட்டுட்டு வந்திருப்பேன். ஆனா என்கூட  மற்ற போலீஸார் இருந்ததால என்னால் அவரை கைது செய்யாமல் அங்கேயே விட்டுட்டு வர முடியல,” என்றார் எஸ்ஐ பாலையா குரலில் ஒருவித வருத்தத்துடன்.

1962-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெங்கலம்  தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட எஸ்.மணி  தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எம்.அய்யாக்கண்ணுவை தோற்கடித்துள்ளார். அப்போது அவருக்கு வயது 25. அத் தேர்தலில் மிகக் குறைந்த வயதில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் என்ற பெருமையைப் பெற்றார்.

1967 சட்டமன்ற தேர்தலில் அவரை மீண்டும் அதே தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுமாறு அறிஞர் அண்ணா சொன்னபோது, “வேண்டாம். எனக்கு மீண்டும் போட்டியிட விருப்பம் இல்லை. நான் ஏதாவது பெட்டிக் கடை வைத்து பிழைத்துக் கொள்கிறேன். அத் தொகுதியில் வேறு யாரையாவது வேட்பாளராக நிறுத்துங்கள்,” எனக்கூறி மீண்டும் போட்டியிட மறுத்துவிட்டார். அத் தேர்தலில்தான் திமுக மாபெரும் வெற்றி பெற்று முதல்முறையாக அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.

முன்னாள் எம்எல்ஏ மணியின் மனைவி கருப்பாயி. அத் தம்பதியினருக்கு இளங்கோவன், முத்துசாமி என இரண்டு மகன்கள், குணசுந்தரி என்ற ஒரு மகள்.

மகன்கள் இருவரும் சென்னையில் ஓட்டல்களில் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்க்கின்றனர். மகள் குணசுந்தரி அங்கன்வாடி உதவியாளராகப் பணிபுரிகிறார்.

இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் முதல் வாரம் அவரது மனைவி கருப்பாயி உடல் நலக் குறைவு காரணமாக இறந்தார். அதனால் மணி மனமுடைந்தார். மிகுந்த மன வருத்தத்தில் இருந்த அவர் தனது மனைவி இறந்த சுமார் 20 நாள் கழித்து டிசம்பர் 25-ம் தேதி தனது 83வது வயதில் இறந்தார்.

மேற்கூரைகூட சரியாக வேயாத குடிசைவீட்டில் வசித்து வந்த அவர் தனது இறுதிநாள் வரை எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் கொள்கையில் கோபுரமாக உயர்ந்து நின்றார். அவரது உடல் மீது முரசொலி நாளிதழ் வைத்து இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

அவர் உயிரோடு இருந்தபோது அவரை கட்சித் தலைமையோ அல்லது உள்ளுர் நிர்வாகிகளோ கண்டு கொள்ளவில்லை. ஆனால், அவரது மறைவு குறித்து தகவலறிந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

அக் கிராம மக்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கடைசி வரை குடிசை வீட்டில் வறுமையில் போராடி இறந்த முன்னாள் எம்எல்ஏ மணியின் வாழ்க்கை வரலாறை அறிந்த பொதுமக்கள், ‘திமுகவில் இப்படியும் ஒரு எம்எல்ஏ இருந்திருக்கிறாரா?,” எனக் கேட்டு  ஆச்சரியப்பட்டனர்.

கட்டுரையாளர்; எஸ்இர்ஷாத் அஹமது

மூத்த பத்திரிக்கையாளர்

பின் குறிப்பு; ( பத்திரிகையாளர் இர்ஷாத் அகமது ‘ஒரு நிருபரின் டைரி குறிப்பு’களாக ‘ஊடக அறம்’ என்ற நூல் எழுதி வருகிறார். அதில் இந்த நிகழ்வையும், இது போன்ற சில அதிர்ச்சி அனுபவங்களையும் எழுதி வருகிறார்.)

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time