வேறு மாநிலங்களுக்கு செல்லும் திருப்பூர் பனியன் ஆலைகள்!

 – தொழிற்சங்கத்  தலைவர் என். சேகர்

பல்லாயிரம் கோடி விற்பனை! ஆறு லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு… என அன்னிய செலவாணியையும், வேலை வாய்ப்பையும் தரும் பனியன் உற்பத்தி தொழில் சந்திக்கும் நெருக்கடிகள், தொழிலாளர்கள் மீது நடக்கும் சுரண்டல்கள் ஆகியவை பற்றி தொழிற்சங்கத்  தலைவர் என்.சேகர், பீட்டர் துரைராஜுக்கு தந்த பேட்டி;

யாருடைய உதவியும் இன்றி, திருப்பூரில் சுயம்பாக துவங்கி வளர்ந்த பனியன், பின்னலாடைத் தொழிற்சாலைகள் ஒன்றிய, மாநில அரசாங்கங்களின் பாராமுகத்தினால் ஆந்திரா, பீகார், ஒரீசா… போன்ற மாநிலங்களுக்குச் செல்கின்றன என்கிறார், ஏஐடியுசி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த என்.சேகர்.

தமிழ்நாட்டில் திருப்பூர் நகரம் பனியன், பின்னலாடைத் தொழில்களில் சிறந்து விளங்குவதின் காரணம் என்ன ?

80 வருடங்களுக்கு முன்பு எம்ஜி.குலாம் காதர், சத்தார் சாகிபு  ஆகியோர், இங்குள்ள அவரது நாடக கொட்டகைக்காக திரைச்சீலை வாங்க குஜராத் சென்ற போது அங்கிருந்த பனியன் தொழிலைப் பார்த்து, திருப்பூர் – பெத்தி சட்டிபுரத்தில்  ஐந்து தையல் இயந்திரங்களைப் போட்டு பனியன் உற்பத்தி செய்தார். குடிசைத் தொழிலாகத்தான் முதலில்  தொடங்கியது.வெள்ளை நிறத்தில், கையுள்ள பனியன், கையில்லாத பனியன் என இரண்டு வகைகளில் மட்டுமே உற்பத்தி செய்தனர்.

அருகில் உள்ள கோயமுத்தூரில் இருந்து பருத்தி நூல் கிடைத்தது. அரசினுடைய எந்த ஆதரவும் இல்லாமல் சுயமாக இந்தத் தொழில் கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்தது.1980 முதல் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2024 ம் ஆண்டில்  50,000 கோடி ரூபாய்க்கு உற்பத்தி நடந்துள்ளது; அவற்றில் 36,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள பனியன், பின்னலாடைகள் 70 வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

சிறியவர், பெரியவர், இளைஞர், மகளிர் என சகலருக்கும் தேவையான ஆடைகள் விதவிதமாக, நுகர்வோர் கேட்கும் பாணியில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், இந்தத் தொழிலை மேம்படுத்த மத்திய, மாநில அரசாங்கங்கள் செய்ய வேண்டியவை எவ்வளவோ உள்ளன.

அரசாங்கம் மானியம் தருவதாகச் சொல்லப்படுகிறதே ?

அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடைகளால் கோடிக்கான ரூபாய்கள் இந்தியாவிற்கு அந்நியச் செலாவணி கிடைக்கிறது. இதனை ஊக்குவிக்கும் விதமாக, ஏற்றுமதி செய்யப்படும் மதிப்பில் 15 சதம் வரையில் மானியம் மத்திய அரசு மானியம் வழங்கி வந்தது.  ஆனால், பாஜக அரசு வந்த பிறகு மானியம் வழங்குவதை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்து விட்டார்கள்.

ஒரு இலட்சம் கோடி பெறுமானமுள்ள பனியன் துணி வகைகளை உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளதாக முதலாளிகளே சொல்கிறார்கள். அதாவது, இன்னொரு திருப்பூர் நகரத்தை உருவாக்கும் அளவுக்கு வேலை உள்ளது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் ஜவுளி வகைகளில் 45 சதம் திருப்பூரில் உற்பத்தி ஆகிறது. சிறிதும், பெரிதுமாக 5000 ஆலைகள் இங்கு உள்ளன. இதில் கே.பி.ஆர் போன்ற, பெரிய   கம்பெனிகள் 100 உள்ளன; அவை  20,000 கோடி ரூபாய்க்கு அதிகமாக உற்பத்தி செய்கின்றன. மற்றவை சிறு ஆலைகள். பருத்தி நூல் எடுத்தல், துணிநெய்தல், தேய்த்தல், வெட்டுதல், தையல், சலவை செய்தல், சாயம் போடுதல், அட்டை போடுதல் என பலவகைத் தொழில்கள் இதையொட்டி இயங்கி வருகின்றன.

ஜிஎஸ்டி வரி, இந்தத் தொழிலை, குறிப்பாக சிறு ஆலைகளை கடுமையாகப் பாதித்துள்ளது. துணி உற்பத்தியானவுடன் ஒட்டு மொத்தமாக ஜிஎஸ்டி வரி போடலாம். மாறாக துணி, சாயம், உற்பத்தி, பேக்கிங் என ஒவ்வொரு இடத்திலும் வரி போடப்படுகிறது. இந்த நெருக்கடிகளால் சிறு, குறுந்தொழிலாக இதை செய்பவர்கள் திக்குமுக்காடுகிறார்கள்!

நூல் விலை உயர்வதினால் ஏற்படும் இழப்பை, அரசாங்கம் கொடுத்து வந்த மானியம் ஈடுகட்டி வந்ததது. இப்போது மானியமும் இல்லை. சந்தையில் நிலவும் நூல்விலைக்கேற்ப வெளிநாடுகளோடு ஒப்பந்தம் போடுவார்கள். பொருளை தயாரித்து, ஏற்றுமதி செய்வதற்குள்ளாக நூல்விலை உயர்ந்து விடும். எனவே, வியாபாரிகளுக்கு நட்டம் ஏற்படுகிறது.

இதை சரி செய்ய வேண்டுமானால், உள்நாட்டுத் தேவைக்கு போக, மீதி இருக்கும் பருத்தியை தான், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அரசு அனுமதியளிக்க  வேண்டும். ஆனால், அதைச் செய்வதில்லை. பருத்தி நூல் தட்டுப்பாடு வந்தால், ஏற்றுமதியை குறைக்க இந்திய அரசாங்கம் வரி போடுகிறது.பத்து சதம் வரி போடுகிறது என்று வைத்துக் கொள்வோம். பிறகு தேவையை ஒட்டி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதியான, அதே பஞ்சை அதே நாட்டில் இருந்து, அந்த நாடு போடும் வரியையும் கொடுத்து இறக்குமதி செய்ய நேரிடுகிறது. இதனால் நூலின்  விலை தாறுமாறாக இருக்கும். நூல் விலையை  ஆறுமாதம், ஓராண்டு காலத்திற்கு என விலையைச் சீராக வைக்க வேண்டும்.

பருத்தி நூலை உற்பத்தி செய்து வந்த, பொதுத்துறை நிறுவனமான தேசிய பஞ்சாலைக் கழகம் நடத்தி வந்த ஆலைகளை மூடி விட்டார்கள். அவை இருந்தால் நூல் விலை கட்டுக்குள் இருக்கும். மூடியிருக்கும் தேசிய பஞ்சாலைகளைத்  திறக்கலாம். அதன் மூலம் வேலைவாய்ப்பும்  ஏற்படும்.

திருப்பூரில் நிரந்தர ஜவுளித் தொழில் பூங்கா அமைக்க வேண்டும். இதனால் ஒரே வளாகத்திற்குள் புதிய ஆடை வடிவமைப்பு,கண்காட்சி என பின்னலாடைத் தொழில் சம்மந்தப்பட்ட அனைத்தையும் வைக்க முடியும்.

இந்த தொழிலை மேம்படுத்த திருப்பூர் நகரத்திற்கு சிறப்பு நிதியாக 240 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும். இதனால் சாலை, வீட்டுவசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம். இத்தகையக் கோரிக்கைகளை, இந்தத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான கே.சுப்பாராயன் அவர்கள் எழுப்பியுள்ளார். இவர் எங்கள் பனியன் பேக்டரி லேபர் யூனியன் ஏஐடியூசி தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். அமைச்சர்கள், அதிகாரிகள் என சம்பந்தப்பட்டவர்களிடம் நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார். பாராளுமன்றத்திலும் இதுபற்றி பேசியிருக்கிறார். இந்தத் தொழில் சார்ந்த பிரச்சினைகளைக் கவனிக்க தனியாக ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் நிர்வாக அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் கோரி வருகிறோம்.

வட மாநிலத் தொழிலாளர்கள் திருப்பூரில் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன ?

திருப்பூர் ரயில் நிலையத்திற்கு  வட மாநிலங்களில் இருந்து ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 4,000 பேர் வருவதைப் பார்க்கலாம். அதற்குச் சமமான எண்ணிக்கையில் இங்கிருந்து போகிறார்கள்.  அதே சமயம் இதே திருப்பூரில் ஆயிரக்கணக்கான  வேலையில்லாத இளைஞர்கள் இருக்கிறார்கள். வட மாநில தொழிலாளர்களுக்கு சொற்ப  சம்பளத்தைக் கொடுத்து ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வரை வேலை வாங்குகிறார்கள். ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி, இரண்டு குழந்தைகளுக்கு தேவைப்படும் உணவு, உடை, வீட்டு வாடகை, கல்வி, மருத்துவம் இவைகளைக் கணக்கிட்டு சம்பளம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கீழ்  குறையக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. இதனை உச்சநீதிமன்றமும் ஒப்புக் கொண்டுள்ளது.  குறைந்தபட்ச சம்பளம் எவ்வளவு என்பதை முதலாளி ,தொழிற்சங்கம், அரசு அதிகாரிகள் என கூடி முடிவெடுக்கிறார்கள். குறைந்தபட்ச சம்பளத்தை வட மாநில தொழிலாளர்களுக்கு முதலாளிகள் வழங்குவதில்லை.

மாநிலம் விட்டு மாநிலம் வந்து பணியாற்றும் தொழிலாளர்களை முறைப்படுத்த புலம் பெயர் தொழிலாளர்கள் சட்டம் (1979) உள்ளது. இதனை அரசு அமலாக்குவதில்லை. அதன்படி அடையாள அட்டை போன்றவைகளைத் தருவதில்லை. வருகின்ற தொழிலாளர்கள் பற்றிய விவரங்கள் தமிழ்நாட்டிலும் இல்லை. எந்த மாநிலத்தில் இருந்து வருகிறார்களோ, அந்த மாநில அரசிடமும் விவரம் இல்லை. கொரோனா காலத்தில், பீகார் உள்ளிட்ட பல  மாநிலங்களில் இருந்து எங்கள் கட்சிக்காரர்கள் தொலைபேசி வழியாக  எங்கள் சங்கத் தலைவரை கேட்டுக் கொண்டதன் பேரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்தோம். ஆனால், அரசிடம் இவர்கள் பற்றிய விவரங்கள் இல்லை.

வட மாநில தொழிலாளர்களை அழைத்து வரும் முகவர்கள், முதலாளிகளிடம் கமிஷன் வாங்கிக் கொண்டு சென்று விடுவார்கள்.  அவர்களை ஆட்டு மந்தைகளைப் போல ஒரு கூரையில் குடிவைத்து வேலை வாங்குவார்கள். எந்தச் சட்டங்களும் அமலாவதில்லை. வாரத்திற்கு ஒருமுறை, வாகனத்தில் அவர்களை அழைத்து வந்து, சந்தையில் விட்டு தேவை பொருட்களை வாங்க வைத்து, பிறகு அழைத்துச் செல்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஆறு இலட்சம் தொழிலாளர்கள் திருப்பூரில் இருப்பதாக கருதுகிறோம். உண்மையான கணக்கு என்ன என்பது யாருக்கும் தெரியாது. இவர்களில் இரண்டே முக்கால் இலட்சம் பேருக்கு மட்டுமே இஎஸ்ஐ, வருங்கால வைப்பு நிதி உள்ளது. தொழிலாளர் துறைக்கு புகார் கொடுத்தால், பெயர் என்ன, எந்தக் கம்பெனியில் வேலை செய்கிறார்கள் என்ற விவரத்தை எங்களிடமே கேட்கிறார்கள். அப்படியானால், தொழிலாளர் துறைக்கு என்ன வேலை?

ஒரு சில குற்றங்கள், வடமாநில தொழிலாளர்களால் நடைபெற்றால், அதைச் சரி வர கண்டுபிடித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதில்லை. இது ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையாக மாறிவருகிறது. பிரபலமானவர்கள் வீட்டில், ஏதேனும்  இதுபோல நடந்துவிட்டால், பிழைக்க வந்திருக்கும் ஒட்டுமொத்த வடமாநில தொழிலாளர்களுக்கும் பாதிப்பு வருமோ என அஞ்சுகிறோம்.

டிக்கெட் விலை அதிகம் என்பதால் சினிமா கொட்டகைகளுக்கு போக முடியாது. எனவே, ஞாயிற்றுக் கிழமைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் அலைவதைப் பார்க்கலாம். எனவே, பொழுது போக்கிற்காக நவீன வசதிகள் கொண்ட பூங்கா அமைக்க வேண்டும்.

இவர்களுக்காக தொழிற்சங்கம் அமைக்க நீங்கள் முயற்சி செய்யவில்லையா?

அவர்களோடு பேசுவது ஒரு பெரிய பிரச்சினை. இந்தி தெரிய வேண்டும். இவர்களுக்காக ஒருமுறை இந்தியில் துண்டறிக்கை தயார் செய்து, அவர்களிடம் கொடுத்தால், வங்காளம் தான் தெரியும் என்றார்கள். பீகார், மே.வங்காளம், சத்தீஸ்கர், உ.பி. என பல மாநிலங்களில் இருந்து இங்கு வருகிறார்கள். சமீபத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டார்கள் என்ற வதந்தி பரவி, தொழிலாளர்கள் கும்பல், கும்பலாக வெளியேறிய போது அவர்கள் குடியிருப்புக்குச் சென்று நாங்கள் பேசினோம். இந்தி தெரிந்த, ஏஐடியுசி தேசியச் செயலாளர் வகிதா அவர்களிடம் பேசி நம்பிக்கை அளித்தார்.  அப்போது பீகார் மாநிலத்தில் இருந்து ஐஏஎஸ் அதிகாரிகளும் வந்தார்கள். புலம் பெயர் தொழிலாளர்களுக்கான கருத்தரங்கை திருப்பூரில் ஏஐடியுசி நடத்தியுள்ளது.தொடர் முயற்சிகள் மேற்கொள்கிறோம்.

தொழிற்சங்கத் தலைவர் என்.சேகர்

இவர்களைச் சங்கத்தில் திரட்டுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. எல்லா தொழிற் சங்கங்களுமே இந்தச் சவாலை கவலையோடும், அக்கறையோடும் எதிர்கொள்கின்றன. தமிழ்நாட்டில் எங்கள் சங்கம் 1957 முதல் செயல்பட்டு வருகிறது. நான் 2015 ஆண்டு முதல் திருப்பூர் பனியன் பேக்டரி லேபர் யூனியன் ஏஐடியூசி சங்கத்தில் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறேன். பத்தாண்டுகளுக்கு முன்பு 11,000 பேர் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால், இப்போது 5,000 பேர் மட்டுமே எங்கள் சங்கத்தில் உள்ளனர். ஏறிவரும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி   வேண்டும் என்று, இதே திருப்பூரில் 127 நாட்கள் வீரஞ்செறிந்த வேலைநிறுத்தம் சுப்பராயன் அவர்கள் தலைமையில் அனைத்து சங்கங்கள் சார்பில் நடைபெற்றது.  அதுபோன்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் குறைந்து போனதும், தொழிலாளர் உரிமைகளைப் பெறுவதற்கு தடையாக உள்ளது.

இப்போது நாளொன்றுக்கு பனியன் தொழிலாளர்கள் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் ?

நாளொன்றுக்கு ரூ. 525 பெறும் வகையில் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். அதாவது, மாதத்திற்கு கிட்டத்தட்ட ரூ.13,000 வரை வரும். வீட்டு வாடகையே குறைந்தது ரூ.5,000 வரும். இந்நிலையில் கணவன்- மனைவி இருவருமே வேலை செய்ய நேரிடுகிறது. நீண்ட நேர ஷிப்டில் வேலை செய்வதால், பல உளவியல் பிரச்சினைகள் வருகின்றன. தற்கொலைகள் அதிகரிக்கின்றன. வீடு கிடைப்பது முக்கியப் பிரச்சினையாகி வருகிறது. எனவே தொகுப்பு வீடுகளை அரசு கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

1957 இந்திய தொழிலாளர் மாநாட்டின் முடிவின்படியும், பொருளாதார வல்லுநர் அக்ராய்டு விதிப்படியும், உச்சநீதிமன்றம் ரப்டகாஸ் வழக்கில் கொடுத்த தீர்ப்பின்படியும் மாதமொன்றுக்கு குறைந்தது ரூ. 26,000 சம்பளம் தேவை. இதைப் பெறும் வகையில் இயக்கத்தையும், சட்டப் போராட்டத்தையும் நடத்த உள்ளோம்.

சட்டங்களில் இருந்து தப்பிக்க முதலாளிகள் பீஸ் ரேட் அடிப்படையிலும் இன்னும் சொல்லப்போனால், வீட்டிலேயே கட்டிங் மட்டும் வெட்டிக் கொடுத்து குறைந்த கூலிக்கு வேலை வாங்குகிறார்கள். பீஸ் ரேட்டில் வேலை செய்தால் கிராஜீடி கிடையாது; போனஸ் கிடையாது என தொழிலாளர்களையே பேச வைத்தது தான் முதலாளிகளின் சூழ்ச்சி. இதைப் பற்றி எல்லாம் தொழிலாளர் துறை கவலைப்படுவதில்லை. பீஸ் ரேட் வேலைக்கும் சட்டப்படி போனஸ் தரவேண்டும்.

உங்களுக்கு பனியன் தொழிலோடு எப்படி தொடர்பு வந்தது?

நான் என்னுடைய 11 வயதில்,  டேமேஜ் பிசிர் வெட்டுதல் செய்யும் வேலையை,  ஒரு ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்தேன். பிறகு கட்டட வேலை செய்தேன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 23 ஆண்டுகளாக முழுநேர ஊழியராக இருக்கிறேன். 2015 ஆம் ஆண்டு முதல் பனியன் பேக்டரி லேபர் யூனியன் ஏஐடியூசி சங்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கிறேன். எனவே தேவையை ஒட்டி தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இங்கிருக்கும் பல்வேறு பிரச்சினைகளால், மதுரை, திண்டுக்கல், சென்னை, கோவை போன்ற தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களுக்கு திருப்பூரில் இருக்கும் ஆலைகள்  செல்லத் தொடங்கி உள்ளன. அதே போல பீகார், ஒரிசா, ஆந்திரப் பிரதேச அரசுகளும், மானியம், நிலம் போன்ற சலுகைகளை தருவதாக வாக்குறுதிகளைக் கொடுத்து இங்கிருக்கும் தொழிற்ச்சாலைகளை அலேக்காக தங்கள் மாநிலங்களுக்கு அள்ளிச் செல்கின்றன. தமிழக அரசு சுதாரித்துக் கொண்டு இந்த தொழிலை காப்பாற்ற வேண்டும்.

பேட்டியும், தொகுப்பும்; பீட்டர் துரைராஜ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time