பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானதருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்த விவகாரத்தின் அதிர்வு இன்னும் தொடர்கிறது…லட்சக்கணக்கான ரசிகர்கள் வரக் கூடிய நிகழ்வில் எந்த முறையான திட்டமிடலும் இல்லை..
நிச்சயமாக இது போன்ற நிகழ்வுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் கூடுவார்கள் என யாராலும் ஊகிக்க முடியும். மைதானத்தின் கொள்ளளவு வெறும் 34,600 எனும் போது எந்த அடிப்படையில் அனுமதி தருவது? உள்ளே வர முடியாதவர்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த கலந்துரையாடல்கள் நிகழ்த்தக் கூடிய அளவுக்கு கூட அவகாசமில்லாமல் முதல் நாள் அறிவிப்பை தொடர்ந்து, விடிய,விடிய வெடிகள் வெடித்தும், மது பானங்களை குடித்தும் ஆடிப் பாடிய ரசிகர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்கவே காவல்துறை படாதபடுபட்டது. இந்த நிலையில் பேரணிக்கும், பொதுக் கூட்டத்திற்கும் முதலில் காவல்துறை அனுமதி தரவில்லை. பிறகு பேரணியைத் தவிர்த்துவிட்டு, கொண்டாட்டத்தை நடத்த அனுமதிக்கும் படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மூலம் அழுத்தம் தந்ததாகத் தெரிகிறது.
மைதானத்தைச் சுற்றி சுமார் 2.5 லட்சம் பேர் கூடியிருந்த நேரத்தில், மொத்தம் 1,600 போலீசார் மற்றும் பணியாளர்களே இருந்துள்ளனர். கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த களத்தில் தன்னார்வலர்கள் இறக்கப்பட்டு இருக்க வேண்டும்.
ஓரிடத்தை நோக்கி லட்சக்கணக்கானோர் வர நேரிடும் போது போக்குவரத்து நெரிசலையும் கவனத்தில் கொண்டு திட்டமிட்டு இருக்க வேண்டும். சம்பவத்தன்று பெங்களுர் லோக்கல் ரயில்களிலும், பேருந்துகளிலும் மூச்சுத் திணறும்படிக்கான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இங்கேயும் மயக்கமுற்று சிலர் கீழே விழுந்துள்ளனர். நல்வாய்ப்பாக இறப்புகள் ஏற்படவில்லை.
இந்த சம்பவம்குறித்த ஒன்பது கேள்விகளுக்கு பதில்களை வழங்குமாறு கர்நாடக உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இந்த கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தது மட்டுமல்ல, 56 பேர் காயமடைந்தனர். கூட்ட நெரிசல் மரணங்கள் குறித்து தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த பின்னர், பொறுப்பு தலைமை நீதிபதி வி. காமேஸ்வர் ராவ் மற்றும் நீதிபதி சி.எம். ஜோஷி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது .
இந்த சம்பவத்தை கவனத்தில் கொள்வதற்கான காரணம், துயரத்திற்கு வழிவகுத்த காரணங்கள், அதைத் தடுத்திருக்க முடியுமா?, எதிர்காலத்தில் இதுபோன்ற துயரங்களைத் தடுக்க என்ன தீர்வு? என்பதைக் கண்டறிவதே என்று பெஞ்ச் கூறியது.
கொண்டாட்டத்தின் போது எத்தனை பேர் கலந்து கொள்ளலாம், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, பொதுமக்கள் குறித்து முன்கூட்டியே மதிப்பீடு செய்யப்பட்டதா? என்று நீதிமன்றம் ஆடுக்கடுக்காக கேள்விகள் கேட்டுள்ளது.
ஜூன் 10 ஆம் தேதிக்குள் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, அவற்றுக்கான குறிப்பிட்ட பதில்களை வழங்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது, நீதிமன்றம்.
இதுபோன்ற நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு நிலையான இயக்க நடைமுறைசார்ந்த வழிகாட்டல்கள் (SOP) அரசாங்கத்திடம் இல்லை என்பதே அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து நீதிமன்ற பெஞ்ச் அரசாங்கத்திடம் கேட்டபோது, இது போன்ற பெரிய நிகழ்வுகளை நிர்வகிக்கவும், கட்டுப்படுத்தவும் அரசாங்கத்திடம் எந்த SOP-யும் இல்லை என்பதை அரசு அட்வகேட் ஷெட்டி ஒப்புக்கொண்டார், அதே நேரத்தில் அது ஒரு SOP-ஐ வெளியிடும் என்று நீதிமன்றத்திற்கு உறுதியளித்தார்.
கூடுதலாக நீதிபதி குன்ஹா அவர்களைக் கொண்டு தனி நபர் கமிஷன் விசாரணைக்கும் முதல்வர் சித்தராமையா உத்திரவிட்டுள்ளார்.
பெங்களூர் கிரிக்கெட் ரசிகர்கள் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் அரசின் உடனடி அதிரடி நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை..தான் என்றாலும், சில விவகாரங்கள் மனதை உறுத்துகின்றன.
எது நடந்தாலும் அதில் அரசியல் ஆதாயம் அடைய வேண்டும் என இயங்குபவர்களே அரசியல்வாதிகள்!
கிரிக்கெட்டில் ஆர்.சி.பி வெற்றியா? பல கோடி கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவை வென்றெடுக்க ஒரு பெருவிழா நடத்தி ஆதாயங்களை அள்ளிவிடணும்…என்பதாகவே அவசரகதியில் இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறையில் தயக்கத்தை மீறி ஆட்சியாளர்கள் அனுமதி தந்துள்ளனர். அதே சமயம் தற்போது காவல்துறையை பலிகடா ஆக்கிவிட்டனர். பெங்களுர் மாநகர காவல் ஆணையர் கூடுதல் ஆணையர், மத்திய மண்டல துணை ஆணையர் ஆகிய அத்தனை பேரையும் சஸ்பெண்ட் பண்ணி இருக்காங்க..!
முதல் நாள் இரவு முழுக்க நடந்த அதி உற்சாகம் மிகுந்த தீரா கொண்டாட்டத்திற்கு தந்த பாதுகாப்பிற்காக காவலர்கள் விடிய, விடிய விழித்திருந்தார்கள். ’அடுத்த நாளே விழா வேண்டாம்.’ என காவல்துறை அனுமதி தர மறுத்த போது, அழுத்தம் தந்து அனுமதி தர வைத்தவர் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தான்.
அதன் பிறகு ரோட் ஷோ ரத்து செய்யப்பட்டதை முறையாக அறிவிக்கவில்லை.
ஆர்.சி.பி.மார்க்கெட்டிங் தலைவர் நிகில் சோசலே, பி.ஆர்.ஒ விவேக் உள்ளிட்ட நால்வரை கைது செய்துள்ளனர். நியாயம் தான். ஆனால், இதன் ஓனரும் விசாரிக்கப்பட வேண்டியவரே. காரணம், பணியாளர்கள் முதலாளியின் கட்டளையைத் தான் நிறைவேற்றி உள்ளனர்.
ரொம்பச் சரி! பப்ளிக்கோட கொந்தளிப்புக்கு மதிப்பு கொடுக்க இந்த நடவடிக்கைகள புரிஞ்சிக்க முடியுது.
ஆனால், வெளியில் மிகப் பெரிய சோக நிகழ்வு நடந்துள்ளது. 13 பேர் கூட்ட நெரிசலில் இறந்துள்ளனர் என அறிய வந்தும், சரி, நிகழ்ச்சியை நீங்க நடத்துங்க.. அசம்பாவிதம் நடந்திருக்கு. என்ன ஏதுன்னு பார்த்து நடவடிக்கைகள் எடுக்கணும், பாதிக்கப்பட்டவர்களை நான் கவனிக்க வேண்டும் ..என பதறியடித்து எழுந்து செல்லாமல் நிகழ்ச்சி முடியும் வரை பரவச மனநிலையிலேயே இருந்தார் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் ஆளுநர் அவர்களும்!
லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களோடு இருந்த அந்த கொண்டாட்ட சூழலில் இருந்து விடுபட மனமில்லையோ என்னவோ..!
நிகழ்ச்சி முடியும் வரை எனக்கு தகவலே தெரியாது எனச் சொல்வதை எப்படி நம்பவது என தெரியவில்லை. காவல்துறை சொல்லத் தயங்கியதாம். நெருங்கிய கட்சி சகாக்கள் கூட சொல்லவில்லையாம். இந்த விஞ்ஞான நவீன உலகத்தில் நாடு முழுக்க நெரிசலில் இறந்தவர்கள் குறித்து பதறிக் கொண்டிருக்க.., நிகழ்ச்சியிலிருந்த முக்கியஸ்தர்கள் எதுவும் அறியாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.
Also read
நிகழ்ச்சி முடிந்தது தொடங்கி தற்போது வரை இறந்தவர்களின் சோகத்தில் உறைந்து கரையும் லைவ் ஷோக்களை போட்டி போட்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள் எல்லா அரசியல்வாதிகளும்…!
மற்றவர்களின் சாதனையிலும் அரசியல் ஆதாயம், சாவிலும் அரசியல் ஆதாயம்.
இது தான் இன்றைய அரசியலின் எழுதப்படாத இயங்குமுறையாகும்.
கிரிக்கெட் ரசிகர்களும் தங்கள் வெறித்தனமான கிரிக்கெட் மோகத்தில் இருந்து விடுபட வேண்டும்!
சாவித்திரி கண்ணன்
பனம் சம்பாதிப்பதை நோக்கமாக கொன்ட இந்த ஐ பி எல் லயே தடைசெய்யவேன்டும்