இந்திய வரலாறு முன்பின் காணாத வகையில் விவசாயிகள் போராட்டம் தலை நகர் டெல்லியை உலுக்கிக் கொண்டுள்ளது!
எந்த அரசியல் கட்சியையும் தங்கள் போராட்ட மேடையில் அனுமதிக்காமல் விவசாயிகள் என்ற ஒற்றை அடையாளத்துடன் போராடி வருகின்றனர்.
கட்சி, சாதி, மதம், இனம், பணம், அந்தஸ்து, கெளரவம் என எதுவும் அவர்களை பிரிக்கவில்லை! குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக மதத்தின் பெயரால் மக்களை பிரித்து, ஆட்சி அதிகாரத்தை அடைந்த பாஜகவிற்கு விவசாயிகள் எந்த அடையாளங்களையும் பொருட்படுத்தாமல் ஒன்றுபட்டுள்ளது பேரதிர்ச்சியை தந்துள்ளது.
அதனால்,பாஜகவும் அவர்களின் ஆதரவாளர்களும் இந்தப் போராட்டத்தை எவ்வளவு இழிவுபடுத்த முடியுமோ, அவ்வளவுக்கு செய்கின்றனர்.பெண்கள் பெருமளவு அணி திரண்டு இந்த போராட்டங்களுக்கு பல்வேறு மா நிலங்களிலும் இருந்து வந்த வண்ணம் உள்ளனர். பெண்கள்,குழந்தைகள் அணிதிரண்டுள்ளதன் சமூக பின்னணிகள், காரணங்கள் அசாதாரணமானவை…
அதிலும் குறிப்பாக இந்த போராட்டத்தில் பங்கெடுத்த ஒரு வயதான பாட்டி கையில் தடி ஊன்றி நடக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியதோடு, சர்வதேச மீடியாக்களின் கவனம் பெற்றது. இதனால்,கோபத்திற்காளான பாஜகவினர் இரு பாட்டிகளின் புகைப்படங்களைக் காட்டி, ’’இதே பாட்டி தான் ஷாகின்பாக் போராட்டத்திலும் கலந்து கொண்டது பாருங்கள்’’ என்று போட்டதோடு, ’’இந்த பாட்டி போராட்டக்காரர்களுக்கு தினக் கூலி அடிப்படையில் கிடைப்பார், கொஞ்சம் பணம், துணிமணி, சாப்பாடு தந்தால் போதும்’’ என்று கிண்டலத்து சமூக வலைதளங்களில் பரப்பினார்கள். கங்கனா ரனாவத் போன்ற பாஜக ஆதரவு பிரபல சினிமா நட்சத்திரம்,கெளரவ் பிரதான் உள்ளிட்ட பலர் இந்த பாட்டியை டிவிட்டரில் கொச்சை படுத்தினார்கள்!
ஆனால், இது குறித்து வட இந்திய ஊடகங்கள் களத்தில் இறங்கி, ’’இந்த இரு பாட்டிகளுமே வெவ்வேறானவர்கள்..! அது மட்டுமின்றி, சுயமரியாதையுள்ள இரு வேறு தளத்திலுள்ள போராளிகள். இவர்கள் தங்கள் கடும் உழைப்பால் வாழ்பவர்கள்’’ என விசாரித்தறிந்து வெளி உலகிற்கு தெரிவித்துள்ளன. இதையடுத்து காவல்துறையினர் நேற்றைய தினம் அந்த பாட்டி போராட்டத்திற்கு புறப்பட்டு வரும் வழியில் அவரை சுற்றி வளைத்துவிட்டனர்.
பாட்டி காரணம் கேட்டபோது, ’’நீங்கள் மிகவும் வயதானவர்.இந்த கொரானா காலகட்டத்தில் நீங்கள் போராட்ட களத்திற்கு வருவது சரியல்ல, திரும்பி போய்விடுங்கள்..’’ என அவரை நிர்பந்தித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டுவிட்டனர். பாட்டி பேட்டி தந்தால் மானம் போய்விடும் என்ற காரணத்திற்காகவே இப்படி போலீசை ஏவி அவரை மடக்கிவீட்டுக்கு அனுப்பிவிட்டனர் என எல்லோரும் பேசுகிறார்கள். எப்படியோ தள்ளாத வயத்திலும், அரசையே தள்ளாட வைத்துவிட்டது பாட்டியின் போராட்டகுணம். கோலூன்றி நடக்கும் பாட்டிக்கு செங்கோல் வைத்துள்ள அரசு அஞ்சிடும் சூழல் பாஜகவின் புழுகுனி கூட்டத்தால் தான் ஏற்பட்டது.
உண்மையில், வேறு சில வயதான மூதாட்டிகள் கூட இந்த விவசாயப் போராட்டத்திற்கு வந்துள்ள தகவல்களை வட இந்திய ஊடகங்கள் கவனப்படுத்தி வருகின்றன! மகாராஷ்டிராவில் இருந்து துளசி பாபுபகத் என்ற 82 வயது ஏழை மூதாட்டி ரயிலில் டிக்கெட் இல்லாமல் தன்னோடு மேலும் இரு மூதாட்டிகளை அழைத்து வந்துள்ளார்.அவரிடம் ஊடகத்தினர் பேசிய போது, ’’என் கையில் பணமில்லை.பக்கத்து வீட்டில் ரூபாய் இரு நூறு கடன் வாங்கித் தான் வந்துள்ளேன். என் உடம்பு 1,500 கிலோமீட்டர் பயணத்திற்கு ஏற்றதல்ல,என்றாலும் எங்கள் அடிப்படை உரிமைகளை மறுத்து அடிமடியிலே கைவைக்கிற அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே வந்துள்ளோம்’’ எனக் கூறியுள்ளார்.
AIKSCC என்ற விவசாய அமைப்பு நாட்டின் 23 மாநிலங்களில் இருந்து சுமார் ஒரு லட்சம் விவசாயிகளை திரட்டிச் சென்று போராடிவருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த மூன்று பெண்கள், ’’நாங்கள் பஞ்சாபிலிருந்து ரயிலில் நின்று கொண்டே நெருக்கியடித்து வந்துள்ளோம். எங்க பணத்தை சூறையாடி, கார்ப்பரேட்டுகளுக்கு தருகிற அரசை நான் என கடைசி மூச்சு உள்ளவரை எதிர்ப்போம்’’ எனக் கூறியுள்ளனர். ஆக,விவசாயிகள் போராட்டத்தில் பஞ்சாப், மகாராஷ்டிராவின் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் வீரம் செறிந்தவர்களே என நிருபணமாகியுள்ளது.
Also read
குறிப்பாக குழந்தைகள் தொடங்கி பெருந்திரளான பெண்கள் தன்னிச்சையாக அணிதிரண்டு வெவ்வேறு மாநிலங்களில் இருந்து போராட வந்துள்ளதானது, இந்த போராட்டத்தின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. ஆனால்,விவசாயக் கூலி வேலைகளில் பெருமளவு பெண்களே ஈடுபடுகின்றனர் என்ற உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது. மொத்த விவசாயக் கூலிகளில் 74% பெண்களே! ஆனால், அதிக புறக்கணிப்பிற்கு ஆளாகிவருவதும் அவர்களே! நாட்டின் விவசாய நிலங்களில் 12% மட்டுமே பெண்கள் பெயரில் உள்ளது. நாட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ள பல லட்சம் விவசாயிகளின் விதவை மனைவிகளும் கணிசமாக இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விவசாயப் போராட்டத்தில் நாம் குறிப்பாக கவனிக்க வேண்டியது இந்த மூன்று வேளாண் சட்டங்கள் மட்டுமல்ல, பல்வேறு காரணங்கள், துரோகங்கள், ஏமாற்றங்கள் பல்லாண்டுகளாக விவசாயிகளை அழுத்தி வந்துள்ளன. அவை இந்த மூன்று வேளாண் சட்டங்கள் ஏற்படுத்தியுள்ள கொந்தளிப்பில் பொங்கி பிரவாகமெடுத்து வெடித்து கிளம்பியுள்ளன.ஏற்கனவே நொந்து,வாடி வதங்கியுள்ள விவசாயிகளை மேலும்,மேலும் மோசமாக வஞ்சிக்கும் வண்ணம் பாஜக அரசு கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்துவிட்டதை அவர்களால் தாங்க முடியவில்லை. பாஜக அரசு தன்னை சுயபரிசீலனைக்கு உட்படுத்திக் கொண்டு திருத்திக் கொள்ளாவிட்டால், கார்ப்பரேட்டுகளுக்காக தன் அரசாங்கத்தையே காவு கொடுக்க துணிந்த அரசு என்ற பழி வரலாற்றில் ஒரு களங்கமாக பதிந்துவிடும்!
‘அறம்’சாவித்திரி கண்ணன்
Leave a Reply