தக் லைஃப்:  இது விமர்சனம் அல்ல.. எச்சரிக்கை!

-டி.வி.சோமு

மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்த ‘தக்லைப்’ தந்துள்ளதோ, மிகுந்த அதிர்ச்சியை! ஆகச் சிறந்த இயக்குனரும், உலக மகா கலைஞனும் இந்தப் படத்தின் வழியே சினிமா ரசிகர்களுக்கும் , சமூகத்திற்கும் சொல்லும் செய்தி என்ன.? தக்லைப் குறித்து பலரும் பேச மறுக்கும் விசயங்களை கவனப்படுத்தவே இந்த கட்டுரை;

நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, இயக்கம்… இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.  இந்தத் திரைப்படம் சொல்ல வருவது என்ன என்பது தான் முக்கியம்.

படம் சொல்லும் இரண்டே விசயங்கள்;

வன்முறையைக் கொண்டாடுவது, பெண்ணடித்தனத்தை போற்றுவது. இவை தான்.

முதல் விசயத்துக்கு வருவோம்…

படம் முழுக்க நூற்றுக்கணக்கான கொலைகள், நாயகர்கள் கமல் மற்றும் சிம்பு தலா நூறு கொலைகளுக்கு மேல் செய்கிறார்கள். இவர்களே இப்படி என்றால் வில்லன் மட்டும் தக்காளித் தொக்கா? அவர் நூற்றுக்கு மேல் கொலைகள் செய்கிறார்.

தலையில் – கழுத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, கழுத்தை அறுத்து கொல்வது, கத்தியை தலைக்குள் விட்டு… அய்யோ இதற்கு மேல் வேண்டாம்.

3 விநாடி கற்பனை விளம்பரத்தில் கூட ‘சித்தரிக்கப்பட்ட  காட்சிகள்’ என்று வெளியிடுவார்கள். ஆனால், படம் நெடுகிலும் உள்ள இந்த வன்முறைகளை, கொடூரங்களை கொண்டாடுவது போலவே காட்சிகள் அமைத்து இருக்கிறார்கள்…!

ரசித்து கொலை செய்வது, ஸ்டைலாக பிறரை தாக்குவது… இப்படி…!


இது போன்ற காட்சிகள் மக்களிடையே – குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமே!

ஆனால் சினிமாக்காரர்கள், “படத்தைப் பார்த்து வன்முறையில் யாராவது இறங்குவார்களா, கொலை செய்வார்களா?” என்று கேட்கலாம்.

அதற்கு சில சம்பவங்களைச் சொல்லியே ஆக வேண்டி இருக்கிறது.

டெல்லி, ஜகாங்கீர்புரி பகுதியில் ஷிபு என்பவர், கொல்லப்பட்டுக் கிடந்தார். கொலையைச் செய்தது, மூன்று சிறுவர்கள். கத்தியால் கொடூரமாகக் குத்திக் கொலை செய்திருந்தனர்.அந்த கொடூரத்தை  வீடியோவாகவும் பதிவு செய்து வைத்திருந்தனர் சிறுவர்கள். காவல்துறை விசாரணையில், “புஷ்பா போன்ற, கேங்ஸ்டர் படங்களைப் பார்த்தோம்.  கொலை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து, பெரிய டான் ஆக திட்டமிட்டோம்” என அழுதனர் சிறுவர்கள்.

சண்டிகர் நகரில், ஐந்து வயது வயது சிறுமி காணாமல் போய்விட்டார். அந்த சிறுமியின் பெற்றோருக்கு அலை பேசிய ஒருவன். ‘இருபது லட்ச ரூபாய் வேண்டும். இல்லாவிட்டால்  சிறுமியை கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டினான். அலை பேசியை டிரேஸ் செய்த காவல்துறையினர் அந்த கடத்தல்காரனை கண்டுபிடித்தனர். சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பதினாறு வயது சிறுவன்!

“சினிமாக்களில் வரும் கடத்தல் காட்சிகளைப் பார்த்துப் பார்த்து, இது பணம் சம்பாதிக்க எளிய வழி என நினைத்து செய்தேன்” என்று அழுது புலம்பினான் சிறுவன்.

சேலத்தில்  ஆலமரத்துக்காடு என்ற சிறிய ஊர். நாற்பது வயது பெண்ணை சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி  கொலை செய்தனர். விசாரணையில் சிக்கிய முரளி, விஜயகுமார் ஆகிய இளைஞர்கள் “கொலை செய்துவிட்டு  தப்பிப்பது எளிது என சினிமாக்களைப் பார்த்து செய்து விட்டோம்” எனக் கதறினர்.

பெரிய திரையில், ரசித்து, ரசித்துக் கொல்வதாகக் காட்டப்படும் காட்சிகள் இளம் மனங்களை எப்படி மனதைப் பாதிக்கும் என்பதற்கு மிகச் சில உதாரணங்களே இந்த சம்பவங்கள்.

இது போன்ற காட்சிகள் ‘தக்லைஃப்’ படத்தில் நிரம்பி இருக்கின்றன.

அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லாத போது, கமல் சில நல்ல படங்களையும் கொடுத்தார்.

நம்மவர்,ஹேராம், அன்பே சிவம்.. போன்ற சில படங்களைச் சொல்லலாம்.

இன்று அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவர்… ராஜ்யசபா எம்பி.
அவர், இளைஞர்கள் மனதில் வன்முறையை விதைக்கலாமா?

தக்லைஃப் மட்டுமல்ல.. அகில இந்தியாவிலும் தாதா படங்கள் நிரம்பி வழிகின்றன.

அதில் ஒன்றை மட்டும் இப்போது சுட்டிக் காட்ட வேண்டியது அவசியமாகிறது.

கே.ஜி.எஃப் 2 என்ற  கன்னட படம், மிகப்பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு பல மொழிகளில் இந்தியா முழுதும் வெளியானது.  அதாவது ‘பான் இண்டியா’ படம்.

அதில் ஒரு தாதா,  நவீன துப்பாக்கியை வைத்து சி.பி.ஐ. அலுவலத்தையே தகர்க்கிறான். பல காவலர்கள் கொல்லப்படுகிறார்கள். இதைப் பார்க்கும் இளைஞர்களுக்கு, நாட்டின் உயரிய விசாரணை அமைப்பான சி.பி.ஐ. மீது.. ஏன், காவல் துறை மீதே எப்படி மதிப்பு வரும்?

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, ராக்கியை பிடிக்க உத்தரவிடுகிறார் புதிதாக பொறுப்பேற்கும் பெண் பிரதமர். இதை அறிந்த ராக்கி, பெண் பிரதமரை சந்திக்க நாடாளுமன்றத்துக்கே வருகிறான். வரவேற்பறையில் கால் மேல் கால் போட்டு அமர்கிறான். உடனடியாக பிரமதரிடமிருந்து உள்ளே வரும்படி அழைப்பு வருகிறது. அருகில் இருப்பவரிடம் சிறிது நேரம் வேண்டுமென்றே பேசிவிட்டு பிரதமர் அறைக்குள் நுழைகிறான் தாதா ராக்கி.

அங்கே, பிரதமரின் மேசையில் பூலோக உருண்டை இருக்க, அதை கைகாளால் சுற்றிக்கொண்டே, எடக்கு மடக்காக பிரமதரிடம் பேசுகிறான். அதாவது, ஒரு நாட்டின் பிரதமரை விட, தாதா உயர்ந்தவன் என்கிற எண்ணத்தை விதைக்கும் காட்சி இது.

இதைவிடக் கொடுமையான காட்சி ஒன்று உண்டு.

நாடாளுமன்றத்தில் துப்பாகியோடு புகுந்து, ராஜ நடைபோட்டு வருகிறான், தாதா விக்கி. பெண் பிரதமர் பயந்து நடுங்குகிறார். மெல்ல நடைபோடும் ராக்கி, அங்கே இருக்கும் முன்னாள் பிரதமரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறான். இந்தியாவின் அரசியல் சாசனப்படி உயர் மதிப்பு பெற்றது நாடாளுமன்றம். அதையே இழிவு செய்வது போன்ற காட்சி இது. நாடாளுமன்ற ஜனநாயகம் மீது விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், சட்டப்படி நாட்டில் உயர் அமைப்பு அது தான். அதையே அவமானப்படுத்தும்படியான காட்சி!

நாடாளுமன்றத்தை விட ஒரு தாதா உயர்ந்தவன் என்பது போன்ற இந்த காட்சிகளால், இளைஞர்கள், சிறுவர்கள் திசை மாற மாட்டார்களா..? தேசத்திற்கே ஆபத்தை ஏற்படுத்தும் விசயமல்லவா இது!

இதைவிடக் கொடுமை… இந்த கே.ஜி.பி. 2 படம்தான், கன்னடத்தில் சிறந்த படம் என்று அந்த வருடம் தேசிய விருது பெற்றது. ஊடகங்களிலேயே ஆகப்பெரும்போலோர் இதை உணர்வதாக இல்லை என்பது கூடுதல் வேதனை.

தற்போது தக்லைஃப் குறித்தும்கூட, “இது கதை.. இன்னின்னார் இப்படி இப்படி நடித்து இருக்கிறார்கள்… ஒளிப்பதிவு அப்படி..” என்றெல்லாம் எழுதி, பேசுகிறார்களே தவிர, இப்படம் விதைக்கும் வன்முறை குறித்து எவரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

மீண்டும் தக்லைஃப் வருவோம்.

இப்படத்தின் இன்னொரு ஆபத்து.. பெண்ணடிமைத் தனம்.

பொதுவாக திரைப்படங்களில் வில்லன் தான் பல பெண்களை அடிமையாக வைத்திருப்பான். இதில் நாயகன், “காதல்” என்கிற பெயரில் ஒரு பெண்ணை “துணையாக” வைத்து இருக்கிறான்.

அதாவது சக்திவேல் தாதா. அவன் மனைவி ஜீவா. இவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் மகள்.

ஆனாலும், சக்திவேலுக்கு  இந்திராணி என்கிற நடன மாது மீது மையல்.

இது சக்திவேல் மனைவிக்குத் தெரிந்து, கோபத்தில், தனது தாலியைக் கழற்றிவிடுகிறார். பிறகு சக்திவேலின் மாய்மால பேச்சில் மயங்கி தாலியை அணிந்து கொண்டு அவனுடன் சல்லாபிக்கிறார். அது மட்டுமல்ல, கணவனின் காதலியிடம், “இதோ பார் என் தாலி.. நான் தான் ஒரிஜினல்” என்கிறார்.

அதாவது, ‘கணவன் தவறு செய்தாலும்பரவாயில்லை… தனக்கே முதல் மரியாதை’ என்பதாக எண்ணத்தை வெளிப்படுத்துகிறாள்.

இன்னொரு பக்கம்,  அந்த “காதலி” இந்திராணிக்கு வருவோம். அவர் சக்திவேலின் காதலி அல்லவா… ஒரு கட்டத்தில்  சக்திவேலின் வளர்ப்பு மகனின் காதலி ஆகிவிடுகிறாள்..! அதை நினைத்து நினைத்து குமைந்து போகிறாள்..!

இவர்களுக்குள் உதட்டு முத்த காட்சி, சரசங்கள், ஆபாச நடனங்கள்…!

எப்படி இப்படி எல்லாம் இந்த முதிய வயதில் யோசிக்க முடிகிறதோ கமலுக்கும், மணிரத்தினத்துக்கும்!

“ரங்கராய சக்திவேல் நாயக்கர்” என்று தேவையில்லாமல் சாதிப் பெயர் ஒட்டுதல் வேறு.

இவை எல்லாவறறையும் விட நமக்கு எழும் கேள்வி இதுதான்…

சாதாரண படைப்பாளிகள் இணைந்து குறைந்த பட்ஜெட்டில் எளிய மக்கள் குறித்த படங்களை அளிக்கிறார்கள். அவை வெற்றி பெறவும் செய்கின்றன.

பெரிய ஹீரோக்கள், இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் போன்றோர் ஏன் எப்போதும் தக்குகள், கேங்ஸ்டர்கள், டான்கள் எனப்படும் அடியாள் கூட்டத் தலைவர்கள் பற்றிய படங்களையே அளிக்கிறார்கள்..? சிந்தனை வறண்டு விட்டதா…?

அந்த அடியாட்களின் வாழ்க்கையை நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன…?

ரசிகர்கள் சிந்திக்க வேண்டிய நேரம்.

கட்டுரையாளர்; டி.வி.சோமு

மூத்த பத்திரிகையாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time