அரசின் வரவு-செலவை வெளியிடும் சி.ஏ.ஜியை சிதைக்கும் பாஜக அரசு;

ச. அருணாசலம்

திருடன் கையில் சாவி கிடைத்தால், அவன் வாயிற் காவலனை கட்டிப் போட்டு விட்டுத் தன் கைவரிசையை காட்ட ஆரம்பிப்பான்! அது போலவே பாஜகவின் ரபேல் விமான ஊழல் தொடங்கி பலவற்றை அம்பலப்படுத்திய கணக்கு தணிக்கை அமைப்பான சி.ஏ.ஜியை கட்டிப் போட திட்டமிடுகிறது பாஜக அரசு;

இந்திய அரசின் தலைமை கணக்குத் தணிக்கையாளர் – சி ஏ ஜி – அண்மையில் ஒரு டெண்டரை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

சமீபத்தில் இந்த சி ஏ ஜி அமைப்பே, பொதுத்துறை மற்றும் உள்ளாட்சி துறை தணிக்கையை செய்வதற்கு தனியார் சி ஏ (ஆடிட்டர் நிறுவனங்கள்) நிறுவன அமைப்புகளை நியமிப்பதற்காக விண்ணப்பங்களை கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது!

இதை கண்டித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குடியரசு தலைவர் முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த முயற்சியை உடனடியாக கைவிடவும் கோரியுள்ளார்.

ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் பொறுப்பில் உள்ளோரும் மக்களின் பணத்தை அறிவிக்கப்பட்ட நோக்கங்களுக்காக செலவு செய்கிறார்களா? என்பதும் அதை முறையாக செலவு செய்கிறார்களா? என்பதையும் கண்காணித்து கண்டு பிடித்து, தவறு நேர்ந்தால் அதன் காரண காரியங்கள் மற்றும் பொறுப்பினை சுட்டிக்காட்டுவதே சி ஏ ஜி ஏற்படுத்த பட்டதன் நோக்கமாகும்.

இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், (Comptroller and Auditor General (CAG) of India) மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசு நிதி உதவியை பெறும் அமைப்புகளின் வரவு செலவுக் கணக்கைச் சரிபார்ப்பதற்கான  சுயாதீன அதிகாரத்துடன் இந்திய அரசிலமைப்பின்  கீழ் நிறுவப்பட்ட ஓர் அதிகார அமைப்பாகும். இதன் தலைவர் குடியரசு தலைவருக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். மத்திய அரசு சி.ஏ.ஜியை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த முடியாது.

அரசுடமையாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் வெளித் தணிக்கையாளராகவும் சிஏஜி செயல்படுகிறது. தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கைகள் நாடாளுமன்ற/மாநிலச் சட்டப்பேரவைகளில் வைக்கப்பட்டு பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இந்தியா முழுமைக்கும் 58,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது சி.ஏ.ஜி!

நேர்மையுடனும் , கண்டிப்புடனும் விருப்பு வெறுப்பின்றி அரசின் நிதி ஆதாரங்களை முறையாக தணிக்கை செய்யும் சி ஏ ஜி யின் பணி, அரசமைப்பு சட்டம் கொடுத்துள்ள ஒரு பாதுகாப்பு முறையாகும் .இந்த பணியினை தனியார் சி ஏ அமைப்புகளுக்கு ஏன் ஏலம் விட வேண்டும்?

ஊழல்களும், ஊதாரித் தனமும் மலிந்துவிட்டன என்ற சித்திரத்தை வரைந்து , குறிப்பாக அன்றைய சி ஏ ஜி திருவாளர் வினோத் ராயின் “தணிக்கை அறிக்கையால்” 2014ல் ஆட்சியை பிடித்த பாஜகவும், மோடி அரசும் இன்று சி ஏ ஜி யின் பொறுப்புகளை, அதிகாரங்களை தவிடு பொடியாக்க ஏன் துடிக்கிறார்கள்?

அன்று வினோத் ராயின் ஊக அறிவிப்பால் லாபமடைந்தவர்களும், அதை ஊதி பெருதாக்கி அத்துடன் காமன்வெல்த் ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு போன்ற சி ஏ ஜி அறிவித்த “குற்றச்சாட்டுகளால்” ஊழல் மலிந்த உ பி ஏ அரசு என மன்மோகன் சிங் அரசை சாடியவர்கள் இன்று சி ஏ ஜி என்ற அமைப்பை பல்லில்லா பாம்பாக மாற்ற நினைப்பது ஒரு நகை முரணாகும்.

தனியார் அமைப்புகளின் மீது என்ன மோடி அரசுக்கு திடீர் காதல்?

தான் எடுக்கும் முடிவை கேள்வி கேட்பதை மோடி என்றுமே விரும்பியதில்லை.

குஜராத் சட்ட சபையில்மோடி குஜராத் முதல்வராக இருந்த காலகட்டத்தில்– 2009-2011

காலத்திற்கான சி ஏ ஜின் தணிக்கை அறிக்கை முன்வைக்கப்பட்டது. இதில் 17,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக அறிக்கை தெரிவித்ததும் அதில் பெரும்பங்கான 12,400 கோடி முறைகேடு குஜராத் அரசு பெட்ரோலியம் கார்ப்பரேசன் (GSPC) நடந்துள்ள நிதி ஒதுக்கீட்டில் உள்ளது என்றும் அறிக்கை சுட்டி காட்டியது.

அறிக்கையின் மீது பேச முனைந்த நான்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் குண்டு கட்டாக சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்,

மன்மோகன் சிங் அரசின் ஊழலையும் காங்கிரஸ் கட்சியின் தில்லி அரசின் ஊழலையும் எதிர்த்து மேலும் கீழுமாக குதித்த நரேந்திர மோடியும், பாஜகவும் சிஏஜி என்ற அமைப்பின் அறிக்கைகளை அன்று உபயோகித்து கொண்டார்களே ஒழிய, உண்மையில் சுதந்திரமான சிஏஜி அமைப்பையோ, அதன் உண்மைத்தன்மை பற்றியோ என்றும் அக்கறை காட்டியதில்லை என்பதை மேற்கூறிய செய்தி காட்டும்.

சுய அதிகாரம் படைத்த அமைப்பு எதுவாயினும் , தேர்தல் ஆணையம், சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன், சி பி ஐ, லோக்பால் நீதிமன்றம், மனித உரிமை கழகம், போன்ற எந்த சுயாதீன அமைப்புகளும் தனது கண்ணசைவை மீறி செயல்படக் கூடாது என்று எண்ணுபவர் மோடி என்பது உண்மை.

இந்தியாவில் பத்திரிக்கை உலகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை “ஆபரேஷன் சிந்தூரின்” போது அகில உலகமும் புரிந்து கொண்டது.

நீதிபதிகள் நியமனத்திலும், நீதித்துறை விவகாரங்களிலும் மோடி அரசின் செயல்பாடு குறித்து நீண்ட கட்டுரையே எழுதலாம் .

அவற்றில் நுழைந்தவர்கள் அதிகார வர்க்கத்தினரையும் (bureaucracy) தமது கைப்பாவையாக மாற்றுவதோடன்றி , அனைத்து அமைச்சக அதிகாரங்களை பிடுங்கி பிரதமர் அலுவலகத்தில் அதிகாரங்களை குவித்திருப்பதையும் நாடு அறிந்துள்ளது.

இராணுவத்தினரின் மீதும் மோடி அரசின் தலையீடு அரசமைப்பு முறையிலோ, அல்லது அரசியல் ஆதாயம் கருதாமலோ இல்லை என்பதை சமீபத்திய நிகழ்வுகள் (இந்தியா-பாக். நான்கு நாள் போர்) நமக்கு உணர்த்துகின்றன.

இந்த நிலையில் எதிர் பாராமல் கொசு கூட தன்னை கடித்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் மோடி அரசு சி ஏ ஜியின் பல்லை பிடுங்க, சி ஏ ஜி மூலமே அறிக்கை விட்டுள்ளது.

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது

2014 க்கு பின் சிஏஜி யின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்பதை ஒவ்வொரு பட்ஜெட் கூட்டத்ன்தொடர் துவக்கத்தில் வளமையாக அந்த ஆண்டின் பட்ஜெட் தாக்கல் செயவதற்கு முன்பு நிதி செலவினங்குறித்த சி ஏ ஜி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் முறை கைவிடப்பட்டதிலிருந்து நாம் அறிய முடியும்.

2014-க்கு முன்னர் அனைவராலும் புலியாக பாவிக்கப்பட்ட சி ஏ ஜி அமைப்பு மோடி ஆட்சிக்கு வந்த பின்பு பூனையாக மாறி முனங்க ஆரம்பித்தது.

இந்திய பொருளாதாரத்தையே புரட்டி போட்ட “முட்டாள்தனமான” பணமதிப்பிழப்பு (Demonetisation) நடவடிக்கையின் பாதிப்பும், இழப்பையும் பற்றி அறிக்கை சமர்ப்பிக்காத சி ஏ ஜியை அறிஞர் பெருமக்கள் கண்டித்தனர்.

ரஃபேல் விமான ஊழல் குறித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை வெகுகாலம் தள்ளி போட்ட சிஏஜி அமைப்பு, இறுதியில் பல தகவல்களை மறைத்தே (redacted) நாடாளுமன்ற பார்வைக்கு வைத்தது.

பணமதிப்பிழப்பு குறித்த அறிக்கையும், ரஃபேல் ஊழல் குறித்த தணிக்கையும் 2019 தேர்தலுக்குப் பின்னரே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அதுமட்டுமின்றி, சி ஏ ஜி யின் தணிக்கை அறிக்கைகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வந்துள்ளது.

2015-2016————- 188 தணிக்கை அறிக்கைகள்

2016- 2017————-150 தணிக்கை அறிக்கைகள்

2017-2018————— 98. தணிக்கை அறிக்கைகள்

2018-2019————— 73 தணிக்கை அறிக்கைகள்.

2019 முதல் 2023 வரை உள்ள ஆண்டுகளில் சராசரியாக 22 தணிக்கை அறிக்கைகளே

சமர்ப்பிக்கப்பட்டுள்ளன, குறைந்து வந்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

2023-ல் சமர்ப்பிக்க பட்ட அறிக்கையில் ஆயுள். மான் யோஜனாவின் முறைகேடும் துவாரகா எகஸ்பிரஸ் ஹைவே ஊழலும் ஆகும்.

ஒரு கி.மீ க்கு ரூ 18.2 கோடி என்ற நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேலாக ஒரு கி மீட்டருக்கு ரூ 205 கோடி நிதின் கட்கரி தலைமையிலான அமைச்சகம் செலவிட்டது , ஊழல் புரிந்தது அம்பலமானது,

பிரதம மந்திரியின் ஜன் ஆரோக்ய யோஜனாவின் முறைகேடுகளும் இந்த தணிக்கையில் அம்பலமானது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் நடந்த கொள்ளை, அயோத்தியா கோவில் கட்டுமானத்தில் நடந்த கொள்ளை… என பலவித ஊழல்கள் பற்றி சி ஏஜி அறிக்கையில் வெளிவந்தன.

ஜி 20 மாநாட்டிற்கான ஊதாரிதனமான செலவுகளும், ஊழல்களும் சற்றே வெளியே எட்டிப் பார்த்தன.

இவற்றையெல்லாம் “ தவறுதலான கணிப்புகள் “ (erroneous calculation) என்று கடந்து போக மோடி அரசு முயன்றது, மக்களை திசை திருப்பியது.

சி ஏ ஜி என்ற அமைப்பின் – சுயாதீன அமைப்பின்- கட்டமைப்பையே மாற்றிவிட்டால் தலைவலி தீர்ந்துவிடும் என்று எண்ணியே இப்பொழுது பொதுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை தணிக்கை செய்ய தனியார் ஆடிட்டர்களை நியமிக்க மோடி அரசு முன்வந்துள்ளது.

உயர்நிலை மற்றும் இடைநிலை அதிகார மட்டத்தில் லாட்டரல் எண்ட்ரியை அறிமுகப்படுத்தி, ஊக்குவிக்கும் மோடி அரசு, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதிலும் லேட்டரல் எண்ட்ரியை அறிமுகப் படுத்தி உள்ளது.

இதை தொடர்ந்தே சி ஏ ஜி அமைப்பையும் சிதைக்க தனியார் ஆடிட்டர் அமைப்புகளை உள்ளே நுழைக்க முயற்சி நடக்கிறது.

மேலைநாடுகளிலும் அமெரிக்காவிலும் கூட தனியார் நிறுவனங்கள் புகழ்பெற்று , மதிப்புடன் திகழ்வதாக இவர்கள் கூறலாம். அதற்காக Deloitte, Price Waterhouse Coopers , Ernst &Young , KPMG போன்ற நிறுவனங்களை உதாரணமாக காட்டி, ”தனியார் நிறுவனங்கள் சாலச்சிறந்தது” என்றும் வாதிடுவார்கள். ஆனால், இந்த புகழ்பெற்ற நிறுவனங்கள் தணிக்கை செயவதனால், இவைகளை அமர்த்திய நிறுவனங்களில் முறைகேடுகள் தவிர்க்கவோ, வெளிச்சத்திற்கு வரவோ இல்லை என்பதே உண்மை.

சத்யம் கம்யூட்டர் ஊழல் முதல் அதானி குழும ஊழல் வரை மேற் கூறிய புகழ்பெற்ற நிறுவனங்களின் தணிக்கையிலேயே இருந்தன என்பதும் இந்நிறுவனங்கள் இந்த குழுமங்களில் நடந்த ஊழல் முறைகேட்டை கண்டுபிடிக்க இயலவில்லை என்பதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, குறைபாடுகளை கண்டுபிடிப்பதை விட, குறைகளை மறைப்பதிலேயே மூளையை செலுத்தும் ஆடிட்டர் நிறுவனங்கள் பொதுத் துறை நிறுவனங்களையும், உள்ளாட்சி அமைப்புகளையும் தணிக்கை செய்ய அனுமதித்தால் நேர்மையும், நாணயமும் மறைந்துவிடும், ஊழல் மலிந்து ஆளுவோர் கொள்ளையடிக்க உதவிடும் என்பது கம்ப சூத்திரமன்று , அப்பட்டமான உண்மை.

மக்களை முட்டாளாக்கும் இந்த முயற்சி ஆபத்தானதும் கூட!

பல்பிடுங்கப்பட்ட சுயாதீன அமைப்புகள் – சி ஏ ஜி உடபட- அனைத்தும் சுதந்திரமாக செயல்பட ஏதுவான சூழலும் பாதுகாப்பும் வேண்டும்,

சுயாதீன அமைப்புகளின் தலைமை பொறுப்புகள் நேர்மையானவர்களை அடைய வேண்டும்.

அதற்கு நாடாளுமன்றத்தின் கண்காணிப்பும் , அதிகார பரவலும் அவசியம் என்ற விழிப்புணர்வு வேண்டும்.

மோடி அரசு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்வரை இவை எட்டாக்கனவுகளே!

கட்டுரையாளர்;  ச. அருணாசலம்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time