ஸ்டோலன் – அதிர வைக்கும் திரைமொழி !

- தயாளன்

திரைப்பட விழாக்களில்  கொண்டாடப்பட்ட ஸ்டோலன் ( Hindi) தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் நுட்பமான திரை மொழியோடு எடுக்கப்பட்டுள்ளது. குழந்தை திருட்டை மையப்படுத்தி தேடல், தவிப்பு, ஏக்கம், மோதல்.. என்ற உணர்ச்சி கலவையோடு சொல்லப்பட்ட  பரபரப்பான படம்;

நாடு முழுவதும் பெரும் விவாதத்தை தூண்டியிருக்கிற ஸ்டோலன் படத்தின் கதை உண்மை சம்பவம் ஒன்றை தழுவி எடுக்கப்பட்டது. அசாமில் 2018-ல் இரு இளைஞர்களுக்கு நடந்த சம்பவத்தை மையமாக வைத்து திரைக்கதை வடிவமைக்கபட்டுள்ளது.

வட இந்திய ரயில் நிலையத்தில் ஒரு பெண் ஐந்து மாத கைக் குழந்தையுடன் காத்திருக்கிறாள். சற்றே கண் அயர்ந்த நேரத்தில் குழந்தையை இன்னொரு பெண் திருடிச் செல்கிறாள்.  அப்போது எதிரில் வரும் நபர் மீது மோதி விடுகிறாள். இவ்வளவுதான் கதை. இந்த சிறிய கதை அபாரமாக செதுக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் கரன் தேஜ்பால்.  முதல் சினிமாவே இப்படியா? என்று நம்ப முடியாத அளவுக்கு உயர் தரமான சினிமாவை காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இயக்குனர் கரன் தேஜ்பால்.

ரயில் நிலைய பரபரப்பில் துவங்கும் கதை பின்பு ஒரு ரோடு திரில்லராக மாறுகிறது. குழந்தையை தேடி அலையும் போது, போலிச் செய்தியால் தவறாக நினைத்து குழந்தையின் தாயையும் துணைக்கு வந்த நாயகர்களையும் துரத்துகிறது. ஒரு பக்கம் குழந்தையை திருடியவர்களை தேடுகிறார்கள். மறுபக்கம் கும்பல் தாக்குதலிருந்து தப்பிக்கவும் போராடுகிறார்கள். இதற்கு நடுவில் போலீஸ். இது நமக்கு நிகழ்ந்தால் எப்படி இருக்கும் என்கிற கனெக்‌ஷனை ஒவ்வொரு காட்சியிலும் உணர வைக்கிறார்கள்.

படத்தின் ஆகச் சிறந்த பலம் திரைக்கதை.  முதல் காட்சியில் துவங்குகிற கதை இறுதி ப்ரேம் வரை பரபரப்பாகவும் தொய்வின்றியும் பயணிக்கிறது. உண்மை நிகழ்வொன்றை படமாக்கும் போது அதன் நம்பகத் தன்மையில் எந்த சறுக்கலும் இருக்கக் கூடாது என்பதில் இயக்குனருக்கு இருந்த தெளிவும், மன உறுதியும் வியக்க வைக்கிறது. ஒரு காட்சி கூட வீணாக எழுதப்படவில்லை.

ஒரு காட்சியிலிருந்து அடுத்த காட்சிக்கு படம் நகரும் போது கதையின் முரணும், இணைவும் துல்லியமாக எழுதப்பட்டுள்ளது.  உதாரணத்திற்கு ரயில் நிலைய காட்சியில் குழந்தையை திருடும் பெண் மோதும் போது, குழந்தையின் குல்லா விழுந்து விடுகிறது. இதுவே கதையை நகர்த்துகிறது.  ரயில் நிலையத்தில் சந்தேகத்தின் பிடியில் இருவர் பிடிபடும் போது, அந்த காட்சி மொபைலில் படமெடுக்கப்பட்டு வாட்சப் மூலம் போலிச் செய்தியாக பரவுகிறது.  கதாபாத்திரங்களின் நோக்கம், அவர்களுள்ளான முரண், பின்பு பாத்திரங்களின் மனமாற்றம் படிப்படியாக வளர்த்தெடுக்கப்பட்டு இறுதியில் கதை முடிவுக்கு வரும் போது எதிர்பாராத திருப்பத்தில் முடிகிறது.

திரைக்கதை மட்டுமல்ல, அதன் உண்மைத் தன்மை மாறாமல் சாதாரண கச்சா (Raw) சினிமாவாக உருவாக்கப்பட்டிருப்பது இந்தப் படத்தின் சாதனை என்றே சொல்லலாம். நாயக பிம்பம் இல்லை, சண்டைக் காட்சிகள் இல்லை, டூயட் இல்லை, திட்டவட்டமான இறுக்கமான சட்டகங்கள் (Frames) இல்லை, அழகியலான ஒளியமைப்புகள் இல்லை… என்று சினிமா இலக்கணங்களை முழுவதுமாக உடைத்து உருவாகி இருக்கிறது ஸ்டோலன்.  கதையின் பெரும் பகுதி இரவில் நடக்கிறது. முழுக்க குறைந்த ஒளியில் படம் நகர்கிறது.  கதாபாத்திரங்களின் முகங்கள் கூட அவ்வளவு தெளிவாக நமக்கு தெரியவில்லை. ஆனாலும், படம் நம்மை பரபரப்பில் வைத்திருக்கிறது. காரணம், படத்தின் உருவாக்கத்தில் இயக்குனருக்கு இருக்கும் தெளிவும், மன உறுதியும் மட்டுமே.


கேமரா படம் முழுக்க ஆவணப்பட தன்மையிலேயே உலவிக் கொண்டே இருக்கிறது. நிலையான ஷாட்கள் மிக மிகக் குறைவு. கேண்டிட் வகை ஷாட்களால் படம் தொடர்ந்து பயணிக்கிறது. ஒரு ரோடு திரில்லருக்கு எப்படி கோணங்களையும், காட்சிகளையும் நிகழ்த்த வேண்டும் என்று பாடம் எடுக்கிறது ஸ்டோலன். பெரும்பாலான காட்சிகள் சிங்கிள் ஷாட்களால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மொத்த சினிமாவிலும் நாமும் ஒரு பாத்திரமாக மாறுகிற மேஜிக்கை நிகழ்த்துகிறது இஷான் கோஷின் ஒளிப்பதிவு.

படத்தில் வரும் சேஸிங் காட்சிகள் மிரட்டுகின்றன. மசாலா படங்களில் வரும் சேசிங் காட்சிகளை போல் வெறும் ஆக்‌ஷன் காட்சிகளாக இல்லாமல், உயிரை கையில் பிடித்துக் கொண்டு தப்பி ஓடும் மூவரின் மனநிலையையும் சூழலின் தீவிரத்தையும் அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.  போலிச் செய்தியால் ஒரு கும்பல் மனநிலை, எப்படி பாதிக்கப்பட்டவர்களை வேட்டையாடும் என்று நினைக்கும் போது படம் பல்வேறு அடுக்குகளில் நம்மை யோசிக்க வைக்கிறது.


முக்கிய பாத்திரங்களில் வரும் அபிஷேக் பானர்ஜி, ஷுபம் இருவரும் அட்டகாசமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.  வன்முறை கும்பலால் நார் நாராக கிழிக்கப்படும் காட்சியிலும், தனது சகோதரனுடன் ஏற்படும் முரண்பாட்டிலும் தனது அக உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார் அபிஷேக். அறச் சிந்தனையோடு உதவும் குணம் கொண்ட ஷுபம் பேராபத்தில் சிக்கிக் கொண்டாலும், பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்க வேண்டும் என்று துணிந்து செயல்படும் அவரது பாத்திரப் படைப்பும் அதை வெளிப்படுத்தி இருக்கும் திறனும் நேர்த்தி.

மொத்த படத்திலும் மிகச் சிறப்பாக நடித்திருப்பவர் திருடப்பட்ட குழந்தையின் தாயாக வரும் “ஜும்பா” மியா மால்சேர்.  குழந்தையை பறிகொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு, போராடி குழந்தையை மீட்பதற்காக அவர் நிகழ்த்தும் ஆவேசமும், போர்க்குணமும் கொண்ட உழைப்பாளி வர்க்க பெண்ணை காட்சியில் அனாயசமாக கொண்டு வருகிறார். மியாவின் நடிப்பில் இருக்கும் துடிப்பும் கண்களில் தெரியும் மிரட்சியும் அவரை தனித்துவம் வாய்ந்த நடிகையாக அடையாளம் காட்டுகிறது. குழந்தையின் தாயான தன் மீதே சந்தேகம் வரும் காட்சியில் வயிற்றை தூக்கி ஆப்ரேஷன் தழும்புகளை காட்டும் காட்சியில் அதிர வைக்கிறார். எப்படியாவது குழந்தை சம்பா தாய் ஜூம்பாவிடம் சேர்ந்து விட வேண்டுமே என்ற பதைபதைப்பை நமக்குள் விதைக்கிறது ஜூம்பாவின் தாய்மை.


படத்தின் காட்சிகள் நேர்கோட்டில் சென்றாலும், சில முக்கியமான இடங்களில் வெட்டி சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி, வெவ்வேறு உணர்வு கலவைகளை நமக்குள் ஏற்படுத்துகிறார் எடிட்டர்.  திரைக் கதையை தன்னுடைய எடிட்டிங்கால் மேம்படுத்தி இருக்கிறார். பெரும்பாலும் சிங்கிள் ஷாட்களால் படம் நகர்ந்தாலும் சரியான கட்டத்தில் துல்லியமான வெட்டுக்கள் மூலம் படத்தின் டெம்போவை நிலை நிறுத்துகிறார். தேவையான இடத்தில் அளவான இசை. கச்சிதமான மேக் அப், கலை இயக்கம் என்று எல்லா துறைகளும் பெரும் உழைப்பை செலுத்தி இருக்கின்றன.

படத்தின் இயக்குனர் கரன் தேஜ்பாலுக்கு இது முதல் படம். அவரது நேர்காணல் ஒன்றில், முதல் படமாக இப்படி ஒரு படத்தை ஏன் இயக்க வேண்டும் என்ற கேள்விக்கு “எனக்கு வேறு சாய்ஸ் இல்லை. என் முன்னால் இருந்தது ஒரே ஒரு வழி. அதுதான் இந்த சினிமா” என்கிறார்.  இந்த படம் மனிதம் குறித்த நம்பிக்கையையும் பிரக்ஞையையும் ஆய்கிறது. படத்தில் வன்முறையும், இரத்தமும் வழிந்தோடுகிறது. ஆனாலும், அது வன்முறையை ருசிக்க வைக்கவில்லை. மாறாக வன்முறையின் மீதான வெறுப்பை நிகழ்த்திக் காட்டுகிறது.  நீங்கள் படம் பார்த்தால் உங்களுக்கு வேறு ஒரு கதை இந்த சினிமாவில் தெரியலாம். அதுவே இந்த படத்தின் வெற்றி.

– தயாளன்
திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குனர்
தொடர்புக்கு : [email protected]

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time