கப்பல் வேலைக்காக 31 வருடங்கள் காத்திருப்பு!

-இளஞ்செழியன்

ஒரு வேலை கொடு என்று கேட்டு 31 வருடங்களாக தொடர்ந்து யாராவது போராட முடியுமா? சுமார் 18 வயதில் வேலை கேட்கத் தொடங்கி, 49 வயது வரை இப்போதும் நம்பிக்கையுடன் வேலை கேட்டு போராடிய வண்ணம் இருக்கிறார்கள் இவர்கள். இதென்ன விசித்திரம்? என அவர்களிடமே பேசினோம்;

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் மனித உரிமை போராளி அ. மார்க்ஸ் தலைமையில் பேராசிரியர்கள் சிவகுமார், திருமாவளவன் ஆகியோர் உடனிருக்க போராடுபவர்கள் பேசியதாவது;

நாங்க பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணிய காலத்தில கப்பல் துறைமுக வேலைக்காக சிவில் எஞினியரிங், மெக்கானிக் ஆகிய மூன்றாண்டு அரசாங்க பயிற்சிகளை சென்னை துறைமுகத்தில் பெற்றோம். பயிற்சி என்பது படிப்பு மட்டுமல்ல, களத்தில் துடிப்பாக பணியாற்றுதல். விமானம், ரயில், கப்பல் இதில் பணியாற்றுவதற்கு தனி பயிற்சி எடுக்க வேண்டும். அவை சிறப்பு பயிற்சி ஆக இருக்கும். 1991-1994 வருடம் கப்பல் இயந்திர தொழில்நுட்ப பிரிவில் வேலையில் சேர ஒன்றிய அரசு  150 நபர்களுக்கு  பயிற்சி கொடுத்தது. பயிற்சி கொடுக்கும்போதே உங்களுக்கு வேலை உறுதி என்ற வாக்குறுதியும் வழங்கியிருந்தது. அப்படி 1989 ஆம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்தவர்களுக்கு வேலை கொடுத்தும் உள்ளது ஒன்றிய அரசு. ஆனால் 1991 ஆம் வருடம் சேர்ந்த எங்களுக்கு இதுவரை வேளையில் சேர்க்கவில்லை.  இந்த வேலைக்கு கல்வி தகுதி 10ஆம் வகுப்பு என்பதால் பலர் பனிரெண்டாம் வகுப்பு கூட செல்லாமலே இந்த பயிற்சியில் கலந்து கொண்டு முடித்தோம்.  ஏனென்றால்,1994ஆம் வருடம் பயிற்சி முடித்தும் உங்களுக்கு சுமார் 40,000 சம்பளத்தில் வேலை என்றனர்.

கப்பல் இயந்திர தொழில்நுட்ப பிரிவு பயிற்சி என்பதால் துறைமுகத்தில் மட்டும்தான் வேலை செய்ய முடியும். வெளியே இதற்கான வேலைகள் இல்லை. ஆனால் பயிற்சி முடித்த எங்களுக்கு வேலை வழங்காததால் வாழ்க்கை முடங்கி உள்ளது. 10 ஆம் வகுப்பு போதும் என்று சொன்னதால் மேற்கொண்டு படிக்காமல் இந்த பயிற்சிக்கு வந்தோம். இதுவும் எங்கள் பின்னடைவாக போனது. வேறு வேலைக்கு செல்ல முடியாத சூழல் தான் உள்ளது.

தற்சமயம் சிறு சிறு வேலைகளை செய்து எங்கள் குடும்பத்தை காப்பாற்றி வருகிறோம். மத்திய அமைச்சராக கப்பல் துறைக்கு இருந்த TR பாலு, வாசன் போன்ற தமிழ்நாட்டை சேர்ந்த அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். உங்களுக்கு வேலை நிச்சயம் வழங்குகிறோம் என்று சொல்வார்கள். ஆனால் அப்படி சொல்லியே பல வருடங்கள் கடந்து விட்டது. மத்தியில் ஆளுகிற எந்த அரசியல் கட்சியும் எங்கள் வேலை விஷயத்தில் ஒன்று போலவே நடத்தியது. நடத்துகிறது.

ஏன் எங்களை வேலைக்கு எடுக்கவில்லை என்று கேட்டால் நிரந்த ஆள் எடுப்பதில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் எங்களுக்கு பிறகு பயிற்சியில் சேர்ந்த பலரை பணி வழங்கி உள்ளார்கள். 1995-1998 வருடத்தில்  39 நபர்களை முழு நேர பணியாயாளராக எடுத்து உள்ளனர்.  கடந்த 30 வருடங்கள் மேல் வேலை கேட்டு போராடி எங்களில் 17 நபர்கள் இறந்துவிட்டனர். போன வாரம் கிருஷ்ணா என்பவர் மன உளைச்சலில் இருந்தார். இன்று காலை பாஸ்கர் இறந்து உள்ளார். குரோம்பேட்டை மருத்துவமனையில் அவர் உடல் உள்ளது. மாலை அடக்கம் செய்ய உள்ளார்கள். அவர்கள் படத்தை இங்கு அ. மார்க்ஸ் திறந்து வைத்தார்.

இறந்தவர்களின் திருவுருவ படங்களை பேராசிரியர் அ. மார்க்ஸ் திறந்து வைத்தார்.மற்றும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி அனைவரும் செலுத்தினார்கள்.

அ. மார்க்ஸ் தன் உரையில், ’’பயிற்சி பெற்ற நபர்களின் துயரங்களை விளக்கி நிச்சயம் இவர்களுக்கு வேலை அளிக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருந்து போராட வேண்டும்’’ என்று கூறினார்.

பயிற்சி பெற்றவர்களில் ஒருவரான சூசை தன் பேச்சில் அவ்வப்போது ஒன்றிய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சர்கள் சென்னை வரும்போது எங்களுக்கு கட்டாயம் பணி ஆணை வழங்கப்படும் என உறுதி அளிப்பார்கள் ஆனால் வருடங்கள் தான் போனது. ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி முடித்து பணி வழங்காமல் சென்னை துறைமுகத்தால் ஏமாற்றப்பட்டு மன உளைச்சலால் மாண்டு போனவர்களின் எண்ணிக்கை பல நூறு ஆகும்.

விமான தொழில்நுட்பம் பயிற்சி முடித்தவர்கள் எப்படி வேறு வேலைக்கு செல்ல முடியாதோ அதே போல் தான் கப்பல் இயந்திரவியல் பயிற்சி முடித்து வேறு வேலைக்கு செல்வது கடினம். மீண்டும் மீண்டும் நாங்கள் இங்கேயே வரும் சூழல் உருவாகிறது.  எங்களுக்கு வேலை மறுத்த சென்னை துறைமுகம் 2014 வரை தொடர்ச்சியாக பயிற்சிக்கு ஆட்களை எடுத்து பயிற்சி வழங்கி வந்தது எதற்கு?

குறைந்த ஊதியத்தில் அதிக மனித வளத்தை பயன்படுத்தி எளிய செலவில் அதிக லாபம் ஈட்டுவதற்கு என்பதே நிர்வாகத்தின் நோக்கமாக இருந்து உள்ளது. 1995 ஆண்டில் இருந்து சென்னை துறைமுக நிர்வாகத்தில் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பிரிவில் சேர்க்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்டதற்கு தகவலை தர மாறுகிறது துறைமுக நிர்வாகம். இதன் மூலம் பணிக்கு ஆட்களை சேர்ப்பதில் ஊழல் முறைகேடு நடந்து இருக்கிறது என்ற முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம்.

சென்னை துறைமுகத்தில் ஏதாவது ஒரு பகுதியில் பொருத்தமான வேலை செய்ய ஆர்வமாக துறைமுக சேர்மனை சந்திக்க வரும் போது எங்களை சந்திக்காமல் அவமானப்படுத்தி திருப்பி அனுப்புகிறார்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு, ஒன்றிய அரசு, கப்பல் போக்குவரத்து அமைச்சர் எங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி எங்கள் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவை ஒன்றே முப்பது ஆண்டுகளாக போராடி வரும் எங்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் மன நிறைவை கொடுக்கும். என்றனர்.

இளஞ்செழியன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time