நாட்டில் வறுமை குறைந்ததாம்! பசி, பட்டினி மறைந்ததாம்! வல்லரசாகிவிட்டதாம்! எங்கெங்கும் சுபிட்சமாம்! புகழ் மாலைகள், கொண்டாட்டங்கள்! உண்மை என்ன? விளைந்த நன்மைகள் யாருக்கு? நாடு கண்ட வளர்ச்சி என்ன? கூட்டணி ஆட்சியில் செய்யப்படும் சமரசங்கள் என்னென்ன?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவையும், 11 ஆண்டுகால ஆட்சியையும் அலசுகிறது இத்தொகுப்பு.
நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி குறித்து அவரது நெருங்கிய கூட்டாளியும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா எக்ஸ் சமூக வலைத்தளத்தில்,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க 11 ஆண்டுகள் பொது சேவைக்கான உறுதியான முடிவுகள், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பொற்காலம். இந்த 11 ஆண்டுக்கால சேவையில், நாடு பொருளாதார மறுமலர்ச்சி, சமூக நீதி, கலாச்சார பெருமை மற்றும் தேசிய பாதுகாப்பின் புதிய சகாப்தத்தைக் கண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் ஊழலற்ற ஆட்சியை தந்துவிட்டதாக சொல்கிறார்கள்! ரபேல் விமானபேர ஊழல், துவாரகா எக்ஸ்பிரஸ் சாலைதிட்ட ஊழல், பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளில் நிகழ்ந்த ஊழல், பிரதம மந்திரியின் ஜன் ஆரோக்ய யோஜனாவின் முறைகேடுகள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் நடந்த கொள்ளை..என பலவற்றை பட்டியலிட முடியும். இப்படி ஒரு சில ஊழல்கள் வெளிப்படத் தொடங்கியதும் மத்திய கணக்கு தணிக்கை வாரியமான சி.ஏ.ஜியை தற்போது செயல்பட வழியில்லாமல் சிதைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
கூட்டாட்சி முறையை சிதைத்து மத்தியில் மித மிஞ்சிய அதிகார குவியலை கொண்டு, அந்தந்த மாநிலங்களின் சுயத்தை சுறையாட்டி வருகிறது மோடியின் அரசு. அரசின் விசாரணை அமைப்புகளை எதிர்கட்சிகளை நசுக்கும் ஏவல் நாய்களாக மாற்றி வருகிறது. எதிர்கட்சியில் உள்ள ஊழல்வாதிகள் பாஜகவுக்குள் இழுத்துக் கொள்ளப்பட்டவுடன் பரிசுத்தவான்களாக மாற முடியுமா?
பாஜகவின் தேசியத் தலைவர் ஜெ பி நட்டா, உலக பொருளாதாரத் தரவரிசையில் பத்தாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்தை நோக்கி இந்தியா முன்னேறியுள்ளது. வறுமைக்கோட்டில் இருந்து 25 கோடி ஏழைகள் மீண்டுள்ளதையும், கடுமையான வறுமை நிலையை 80 சதவீதம் ஒழித்திருப்பதாகவும் பட்டியலிட்டுள்ளார்.
இதற்கெல்லாம் மறுப்பு தெரிவிக்கும் விதமாக வளர்ச்சி என்ற கட்டுக்கதையை உடைத்து விரிவான அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஆய்வு பிரிவின் தலைவர் ராஜீவ் கௌடா, மஹிமா சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
பிரதம மந்திரி ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் 81 கோடி பேருக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் நிலை உள்ளது. சர்வதேச பட்டினி பட்டியலில் 127 நாடுகளில் இந்தியா 105 ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் பட்டினி என்பது மிகவும் தீவிரமாக உள்ளது. இந்தியாவில் மூன்றில் ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது.

கடந்தாண்டில் வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், அந்த நிதி உழவர்களின் பெயரால் யார் கைகளுக்கு போகிறது என்பது தான் முக்கியம். ஆகவே, உழவர்களின் நலனில் இது எப்படி தாக்கத்தை தான் ஏற்படுத்த முடியும்? நாட்டில் உள்ள உழவர்களில் 55 சதவீதம் பேர் கடனில் சிக்கி தவித்து வருகின்றனர். 19 கோடிக்கும் அதிகமான உழவர்கள் வங்கிகளுக்கு 33 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புடைய கடன்களை செலுத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதியில் நாடு உச்சத்தை தொட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து வரும் சூழலில், உலகத்தில் உள்ள ஆயுத ஏற்றுமதியும் செய்யும் முதல் 25 நாடுகளில் இந்தியா இடம் பெறவில்லை என காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
பக்கத்து நாடான சீனா இராணுவத்தில் நம்மைவிட வல்லமையோடு திகழ்கிறது. பொருளாதாரத்திலும் பொலிவாக உள்ளது. அண்டை நாடுகளுடனான உறவில் அதிக சக்தியோடு திகழ்கிறது. நமது பொருளாதாரம் சீன இறக்குமதி பொருட்களை நம்பி வாழ்கிற சூழலை உருவாக்கிவிட்டது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது, 35ஏ பிரிவுகளை ரத்து செய்ததை வரலாற்று முடிவு என மார்தட்டிக் கொள்கிறது மத்திய அரசு. ஜம்மு-காஷ்மீரில் 2019-2024 இடைப்பட்ட காலத்தில் மட்டும் 579 பயங்கரவாத தாக்குதல்கள் சம்பவம் அரங்கேறி, 168 பொதுமக்களும், 247 பாதுகாப்பு படை வீரர்களும் பலியாகியுள்ளனர். பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டது மூன்றடுக்கு பாதுகாப்பை தோல்வியுறச் செய்துள்ளது.
உலகத்தில் பெரும் பொருளாதார வளர்ச்சி பாய்ச்சலில் நாடு இருந்து வருவதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. ஆனால் 2020-21 கொரோனா தொற்றுநோய் காலத்திலிருந்து நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024-25 மிகவும் மந்தமாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. 11 ஆண்டுகளில் இல்லாத வகையில் நிலை மூலதனம் கடந்த நிதியாண்டில் 34 சதவீதமாக சரிந்துள்ளது.
நாட்டில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மேலும் இருப்பதை சுட்டிக்காட்டி உள்ள காங்கிரஸ் கட்சி, 40 சதவீத செல்வ வளங்களை ஒரு சதவீதத்தினர் ஆண்டு வருவதையும், 50 சதவீதம் பேர் நாட்டின் மூன்று சதவீத செல்வ வளங்களை கொண்டுள்ளதையும் சுட்டி காட்டியுள்ளது.
இந்த அறிக்கை போர் ஒருபுறம் இருக்க, கடந்த 10 ஆண்டுகளைப் போல பலமிக்க ஆட்சியின் அதீத நம்பிக்கையில் கடந்த மக்களவைத் தேர்தலின் போது 400க்கு மேல் வெல்வோம் என்ற முழக்கம் பொய்த்து போனது. இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி என பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக முழங்கத் தொடங்கினார். கூட்டணி கட்சிகளின் நிர்பந்தங்களுக்கு அடி பணிந்து, மத்திய அரசின் பட்ஜெட் பீகார் பட்ஜெட், ஆந்திர பட்ஜெட் என உருமாறி போனது.
மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை வலியுறுத்தின. ஆனால், இது சமூகத்தை கூறு போடும் எனக் கூறி, சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக முழங்கி வந்த பாஜக, ஒரு நாள் அதை தங்கள் அரசு அறிவிக்கும் நிலை வரும் என உணரவில்லை.
கடந்த பத்தாண்டுகளில் உழவர்களை பாதிக்கும் வேளாண் சட்டங்கள், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தான 370-ஆவது, 35ஏ பிரிவுகள் ரத்து போன்றவற்றை சுலபமாக நிறைவேற்றிய காலம் மலையேறிப் போனது. வக்ஃபு திருத்த மசோதாவை நிறைவேற்றும் போது இரு நாள் நள்ளிரவு கடந்த வாத விவாதங்களை நடத்திய பிறகு குறைந்த எம்பிக்களின் ஆதரவே கிடைத்தது.
‘டிஜிட்டல் உலகத்தை முழுமையாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் திட்டத்துடன் ஒலிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) வரைவு மசோதா 2023 இடம்பெற திட்டமிடப்பட்டது.இந்த வரைவு மசோதா கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்ற விமா்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, திரும்ப பெற வேண்டிய கட்டாயத்திற்கு பாஜக தலைமையிலான அரசு ஆளானது.
இதுபோல, மத்திய அரசின் 10 இணைச் செயலாளர்கள், 35 துணைச் செயலாளர்கள் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் நேரடியாக நியமனம் செய்ய மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஆக்ஸடில் வெளியிட்ட விளம்பரத்தை எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களை பெற்றது. பாஜகவின் கூட்டாளியான அமைச்சர் சிராத் பாஸ்வானே எதிர்த்த பிறகு அந்த விளம்பரத்தை திரும்பப் பெறும் கட்டாயத்திற்கு ஆளானது பாஜக அரசு.
வாஜ்பேயி அரசு கொண்டு வந்த 21 ஆண்டுகால புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை ஹரியாணா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் அறிமுகப்படுத்தின.
Also read
2019-ஆம் ஆண்டு புல்வமா தாக்குதல் அதைத் தொடர்ந்து, பாலகோட் தாக்குதல் போன்றவற்றின்போது, இருந்த வெளியுறவுக் கொள்கையில் பெருத்த மாற்றத்தை தற்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காண முடிகிறது. குறிப்பாக பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தவும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை பறைசாற்றவும் அனைத்துக் கட்சி எம்பிக்கள், கொண்ட ஏழு குழுக்கள் 33 நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. மூன்று குழுக்களுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் தலைமை வகித்ததும், இரண்டு குழுக்களுக்கு பாஜக எம்பிக்கள் தலைமை வகித்ததும் குறிப்பிடத்தக்கவை. இதுபோன்ற விவகாரத்தில் முதன்முறையாக ஏற்பட்டுள்ள மாற்றம் மோடியின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சமரசத்தை காட்டுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களை திடீர் மாற்றமாக கொள்ள முடியாது. மத்தியில் கூட்டணி அமைந்தால், மக்களாட்சி தூண்கள் எவ்வாறு வலுப்பெறும் என்பதை நீதித்துறையில் ஏற்பட்டுள்ள நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுவதாக இருந்தாலும், மற்றொரு தூணாக விளங்கும் ஊடகங்களில் இத்தகைய மாற்றம் ஏனோ ஏற்படவில்லை. மத்தியில் கூட்டணி அரசு அமைந்ததால் நரேந்திர மோடியின் பிம்பம் ஓரளவுகலையத் தொடங்கியுள்ளது. எனினும், இவை வெளியில் தெரிந்து, விவாதிக்கபடாமல் போக ஊடகங்கள் உறுதுணையாக உள்ளன.
விக்கிரமாத்தன்
Leave a Reply