விமான நிலையம் அமைப்பதற்கு பரந்தூர் பகுதியை தேர்வு செய்திருப்பது தவறான முன் உதாரணம் மட்டுமின்றி, இயற்பியல் நிகழ்வுகளுக்கும் எதிரானது.இந்தப் பகுதிகளின் இயற்கை வளங்களை பட்டியலிட்டு பார்க்கும் போது இது மீண்டும் மீட்டெடுக்க முடியாத பேரிழப்பு என்பது உறுதியாகிறது;
பசியாறுதல் என்பதே இயற்பியல் நிகழ்வில், ஓர் உயிரினத்தின் முதல் நிவர்த்தி. அதனால் தான் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகும். இந்நாளில் உணவே மருந்து என்றும், அதை நஞ்சு இல்லா விவசாயத்தின் மூலமே அடைய முடியும். இந்தியாவில் அதன் முதுகெலும்பாக நிலைத்து நிற்பது விவசாயம் தான்.
பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட வேண்டிய நூறு சதவிகித நிலங்களில், விவசாய நிலங்கள் 63.86 சதவிகிதம் என்றும், அதில்
47.46 சதவிகிதம் நீர்ப்பாசனம் கொண்டவை என்றும்
சொல்கிறது தமிழக அரசின் TIDCO நிறுவனம்.
ஒரு மரம் வெட்டினால் பத்து மரங்கள் நட்டுவைக்க வாய்ப்புள்ளது.
ஆனால், ஒரு ஏரியை அழித்து விட்டு அதனை ஈடுகட்ட பத்து ஏரியை உருவாக்கிட முடியுமா ? பத்துக்கும் மேற்பட்ட ஏரிகளை அழித்து விட்டு, நூறு ஏரிகளையல்ல, மீண்டும் பத்து ஏரிகளைக் கூட உருவாக்க முடியாது. சுமார் 1,500 ஏக்கர் நீர் ஆதாரங்களை அழித்து விட்டு, பரந்தூர் விமான நிலையம் கட்ட துடிப்பவர்கள் அதே போன்ற இயற்கைச் சூழலை மீண்டும் உருவாக்கி பாதுகாத்திட முடியுமா?
இன்று நிலத்தடி நீர்வளங்களை இழந்து நாளை என்னாகுமோ? என்கிற நிலையில இருக்கும் தலைநகர் சென்னையில், தமிழ்நாடு நீர் வள (R1) துறை அரசாணை நிலை எண். 15,, நாள். 28-03-2023 -ன் படி, வருவாய்த்துறை நிர்வாகத்திற்கு கீழான மொத்தம் உள்ள 30 பிர்காவில் 26 பிர்கா (குறுவட்டம்) பகுதிகள் நிலத்தடி நீர் அதிக சுரண்டலுக்கு ஆளானவை. இது போன்ற பகுதிகளில் போர்வெல் போட்டு தண்ணீர் எடுப்பதற்கு பல கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.
அதே சமயம் பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களையும் சேர்த்தே மொத்தமுள்ள 112 பிர்காக்களில் ஏழு பிர்கா பகுதிகள் தான் அதிக நீர் சுரண்டலுக்கு ஆளானவை. அதாவது, சென்னை மாவட்டத்திற்கு நேர் எதிராக, இம்மூன்று மாவட்டங்களில் நிலத்தடி நீர் வளம் மேம்பட்டு கிடக்கின்றன என்கிறது இந்த அரசாணை.
அமேசான் வளங்களுக்கு இணையான இயற்கையிலான நீர் வளமும் அதன் வடிகாலும், நில மேற்பரப்பு SURFACE WATER நீர் வடிவமைப்பும் தான், இதற்கான அடிப்படை காரணம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
இந்த சூழ்நிலையில், இன்றைய திமுக அரசு, உள்கட்டமைப்பு மேம்பாடு என்கிற பெயரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் WETLAND இயற்கை வளங்களை அழித்து, விமான நிலையத்தை கட்ட முன்வருவது போல் நாளை திருவள்ளூர், செங்கல்பட்டு அல்லது வேறு ஒரு மாவட்டங்களில் இது போன்ற திட்டங்களை செயல்படுத்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நீர், நில இயற்கை வளம் கொண்ட பகுதிகளை அழிக்க முன்வந்தால் நாம் அதை எப்படி தடுத்திட முடியும்?
காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் கண்ணுக்கு தெரிந்த நீர் நில இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால், கண்ணுக்கு தெரியாத நிலத்தடி நீர் பாதிப்புகள் சென்னையில், மேலும் மேலும் அதிகமாகி உப்பு நீர் தலைநகர் முழுவதையும் ஆக்கிரமித்து விடும். தரமான நீர் வளத்தின் எல்லை சுருங்கச் சுருங்க சீர்கெட்ட நீரின் எல்லை விரிவடையும்.
இக்கட்டுரைபை படிக்கும் நீங்கள், நிலத்தடி நீர்வளம் சார்ந்து எந்த நிலையில் வாழ்ந்து வருகின்றீர்கள் என்பதை கீழ்கண்ட Link -ல் கொடுக்கப்பட்டுள்ள அரசாணை மூலம் உறுதி செய்து கொள்ள முடியும்.
Open in APP:
https://s.wps.com/i8GKkUALGN5v
தமிழகத்தில் கடந்த கால ஆட்சியாளர்கள் தங்களது அரசின் கொள்கை முடிவாக உருவாக்கப்பட்ட அரசாணை நிலை எண்கள்
168 / 27-03-2000 மற்றும்
396 / 23-06-2006 மற்றும்
555 / 26-08-2006 மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நீர் நில வள நிலங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டன. அதற்கே இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இது தான் தமிழக ஆட்சியாளர்களின் கடந்த கால வரலாறு.
தற்போதைய பரந்தூர் பகுதியில் இருந்து 50 முதல் அறுபது கி.மீட்டர் அருகில் 145 ஏக்கர் பரப்பளவு கொண்ட கரிக்கிலி பறவைகள் சரணாலயம் மற்றும் நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் என இரண்டு பறவைகள் சரணாலயங்கள் உள்ளன.
ஆந்திர மாநில எல்லை ஒருபுறமும், மூன்று என்பதிலிருந்து நான்காக விரிவாகும் விமான நிலையங்களை மறுபுறமும், பள்ளிக்கரணை 3,081 ஏக்கர் சதுப்புநில காடுகளை இன்னொருபுறமும் கொண்ட பரந்தூர் பகுதியின் நீர் நில இயற்கை வளங்களை இன்று வரை ருசித்துக் கொண்டிருந்த ஜீவராசிகள் குறிப்பாக பறவைகள் இனி தங்கள் வழித்தடங்களையும், வாழ்விடங்களையும் இழப்பதை எப்படி ஈடு செய்ய முடியும்? என்பதை சம்மந்தப்பட்டவர்கள் தான் தெளிவு படுத்த வேண்டும். இதற்கு சுற்றுச் சூழல் சட்டவிதிகளை எல்லாம் தூக்கி எறிந்து அனுமதி தருகிறார்கள் என்றால், இதன் பின்னணியில் உள்ள பொறுப்பின்மையை என்னென்பது?
இந்த மண்ணும், அதில் வாழும் மக்களும் மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளுக்கும் நாம் பொறுப்புடையவர்களாக இருக்க வேண்டும்.
உலக வெப்பநிலை 1.6°C அதிகமாக உயர்ந்துள்ளது என்றும் இது மேலும் உயர்ந்தால், பூமி மீளமுடியாத சேதத்தை எதிர்கொள்ளும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
அதே சமயம், வெப்பத்தை 1°C குறைப்பதன் மூலம் கார்பன் வெளியேற்றத்தை 7% குறைக்கலாம் என்றும், நிலையான விவசாய நடைமுறைகளே மண் ஆரோக்கியத்தையும், கார்பன் பிரித்தலையும் மேம்படுத்த உதவுகின்றன என்றும் விஞ்ஞானிகள் விவரிக்கின்றனர்.
ட்ரோபோஸ்பியர் (Troposphere): என்பது வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு ஆகும். பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 10-18 கிமீ உயரம் வரை பரவியுள்ள இந்த அடுக்கில் தான் நாம் வாழ்கிறோம். வானிலை நிகழ்வுகள், மேகங்கள், மழை, புயல் போன்றவை இந்த அடுக்கில் நிகழ்கின்றன.
கடல், ஏரி, குளம், ஆறு போன்றவற்றில் உள்ள கண்களுக்கு தெரிந்த நீர் ஆவியாகி, மேகங்களாக உருமாறி பின்னர் நீர்த்துளிகளாக ஒடுக்கமடைந்து, நமக்கு மழையாக கிடைக்கிறது.

மேலும், நீர் ஆவியாகுதல் முறைக்கு, விவசாயம் உட்பட மரங்களும், தாவரங்களும், செடி கொடிகளும், இலை வழியாக, கண்ணுக்கு தெரியாத தண்ணீரை, வளிமண்டலத்தில் வெளியிட்டும், மழை பொழிவிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. விவசாயம் உட்பட மரங்கள், தாவரங்கள், செடிகொடிகள் முதலானவை!
ஒன்று, வேர் மூலம் நீரை உறிஞ்சி, இலையூடாக நீராவிப் போக்காக வெளியேற்றும் ஒரு நிகழ்வின் மூலம் மழைப்பொழிவு ஏற்படும்.
இரண்டாவதாக, காற்றின் ஈரப்பதத்தை அதிகரிப்பதால், மேகங்கள் உருவாகி மழைப்பொழிவு ஏற்படும்.
மூன்றாவதாக, சுற்றுச்சூழல் ஈரப்பதம் அதிகரிப்பதால், சுற்றுச்சூழலின் வெப்பநிலையும் குறையும்.
Also read
விவசாயத்தை ஒரு முதனிலைத் தொழிலாக மட்டுமே இன்றைய ஆட்சியாளர்கள் அளவிடுகிறார்கள். அதனால்தான் அதனுள் புதைந்து கிடக்கும் ஏராளமான ரகசியங்களை உற்று நோக்க மறுக்கின்றனர்.
பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு,காற்று மற்றும் ஆகாயம் முதலானவை மனித உடலுக்கும், பிரபஞ்சத்திற்கும் அடிப்படை. இதில் ஏதோ ஒன்றின் அழிவு, உலகின் அழிவு.
வருசம் ஒரு லட்சம் கோடி கடன் வாங்கும் திராவிட மாடல் திமுக அரசு, யாருடைய பொருளாதாரத்தை மேம்படுத்த பரந்தூரில் விமான நிலையம் கட்ட துடிக்கிறது ?
ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்த்த. பாஜக அரசுக்கு பரந்தூர் விமான நிலையம் குறித்து பேசுவதற்கு தகுதி இருக்கா? இதையும் நாளை அதானிக்கு தூக்கி கொடுக்கத் தானே செய்வார்கள்? ஆக. இத்தனை பேரழிவும் ஒரு தனி நபர் ஆதாயத்திற்காகத் தான் என்பது தான் இதில் உள்ள துயரத்தில் எல்லாம் பெரும் துயரமாகும்.
அ. வை. தங்கவேல்
குளித்தலை ஆசிரியை விவகாரம் :இர்ஷாத் அகமது பதிவு அருமை.அரசியல்வாதிகளால் போலீசார் கைகள் கட்டப்பட்டு இருப்பதை அம்பலப்படுத்துகிறது.