ஜெயலலிதாவின் தலையீடும், சிபிசிஐடியின் தர்மசங்கடமும்!

-எஸ். இர்ஷாத் அஹமது

தமிழகத்தை உலுக்கிய கொலைச் சம்பவம் இது. குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போனதும் மர்மம். கொல்லப்பட்டதும் மர்மம். திறமைசாலிகளான நம் தமிழக போலீசாருக்கு தரப்பட்ட அரசியல் அழுத்தங்களால் திசை மாறிய வழக்கு! ஒரு பெண்ணின் கொலைக்கு பெண் தலைமையிலான ஆட்சியில் கிடைத்த அநீதி;

கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் மீனாட்சி. இவர் குளித்தலையை அடுத்துள்ள  பணிக்கம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.  2004-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி காலை வழக்கம் போல வேலைக்கு சென்ற மீனாட்சி, மாலையில் வீடு திரும்பவில்லை. மர்மமான முறையில் காணாமல் போய்விட்டார். அவருக்கு திருமணமாகி கணவர், ஒரு பெண் குழந்தை இருந்தனர்.

அவரது கணவர் அளித்த புகாரின்பேரில், குளித்தலை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் போலீஸாரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மீனாட்சி என்ன ஆனார்?, அவரது டூ வீலர் என்ன ஆனது? என்பது குறித்து எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.

அவருக்கு வேறு யாருடனேனும் கள்ளத் தொடர்பு இருந்திருக்கலாம், சம்பவத்தன்று தனது காதலனுடன் அவர் ஓடிப் போயிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார்   விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால், மீனாட்சி வேறு யாருடனும் ஓடிப்போயிருக்க வாய்ப்பில்லை என அவரது கணவர் ஆணித்தரமாக தெரிவித்தார். அதற்கு காரணம், சம்பவத்தன்று ஆசிரியை மீனாட்சி வழக்கம்போல பள்ளிக்கு வந்து பணி செய்துள்ளார் என்பதும், மாலையில் பணி முடிந்து வீட்டுக்கு  புறப்பட்டுச் செல்கையில் மற்றொரு ஆசிரியையை தனது டூ வீலரில்  வருமாறு அழைத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

வேறு யாருடனும் ஓடிப்போக வேண்டும் என அவர் திட்டமிட்டிருந்திருந்தால் தனது டூ வீலரில் இன்னொரு ஆசிரியைக்கு லிஃப்ட் கொடுக்க முன்வந்திருக்க மாட்டார், அதுவும் டூ வீலருடன் அவர் ஓடிப் போயிருக்க மாட்டார் என்ற ரீதியில் நான் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் செய்தி வெளியிட்டேன்.

அதன் பின்னர், மீனாட்சி கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கிடையே, அதிமுகவைச் சேர்ந்த அப்போதைய குளித்தலை எம்எல்ஏ பாப்பா சுந்தரத்தின் நெருங்கிய உறவினர்   ஒருவர் ஆசிரியை மீனாட்சியின் அழகில் மயங்கி அவர் மீது ஒரு கண் வைத்திருந்ததாகவும், அவரே மீனாட்சியை  கடத்தியிருப்பதாகவும், அவரை எம்எல்ஏ பாப்பா சுந்தரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி போலீஸாரின் நடவடிக்கைகளிலிருந்து காப்பாற்றி வருவதாகவும் ஒரு  ஊர்ஜிதமாகாத தகவல் உலா வரத் தொடங்கியது.

ஆசிரியை மீனாட்சி மர்மமான முறையில் காணாமல் போன  சம்பவத்தில் ஆளுங்கட்சி எம்எல்ஏ பாப்பா சுந்தரத்திற்கு  தொடர்பு இருக்கக்கூடும் என்ற தொணியிலேயே அனைத்து பத்திரிகைகளும் எழுதின. ஓவ்வொரு வாரமும் இது குறித்த செய்திகளே வார இதழ்களில் இடம் பிடித்தன.

உள்ளுர் போலீஸார் விசாரணையில் எந்தவித துப்பும் கிடைக்காததாலும்,  இதில் ஆளுங்கட்சி எம்எல்ஏவின் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாலும்  உண்மையைக் கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஆசிரியை மீனாட்சியின் கணவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

ஜெயலலிதாவின் அதிரடி அறிவிப்பு;

இதையடுத்து,உயர்நீதிமன்றம் இதில் முறையான விசாரணை நடத்த உத்திரவிட்டது. இந்த உத்தரவின் பேரில், வேறு வழியின்றி, ஸ்ரீதர் என்ற ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு இவ் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார், முதல்வர் ஜெயலலிதா.

இத் தகவலை சட்டமன்றத்தில் அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, “குளித்தலை ஆசிரியை மர்மமான முறையில் காணாமல் போன சம்பவத்திற்கும் எனது கட்சி எம்எல்ஏ பாப்பா சுந்தரத்திற்கும் தொடர்பு இருப்பதை நிரூபிப்பதற்கான  எந்தவொரு ஆதாரமும் இல்லை என்பதை இங்கே திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்,” என கர்ஜித்தார். இதைக் கேட்டு அவரது கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக மேஜையில் பலமாகத் தட்டி ஆர்ப்பரித்தனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் இப்பேச்சு எனக்கு நியாயமற்றதாகத் தோன்றியது. இவ்வழக்கு விசாரணையை இப்போதுதான் சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. புலனாய்வு ஏஜென்ஸியான சிபிசிஐடி போலீஸார் இன்னும் விசாரணையை தொடங்கவே இல்லை. அதற்கு முன்னரே, தமிழக முதல்வர் ஜெயலலிதா இவ்வாறு சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது அப் புலனாய்வு ஏஜென்ஸியை மறைமுகமாக இன்ஃப்லூயன்ஸ் செய்வதற்கு ஒப்பாகும்.

ஒருவேளை, அவரது எம்எல்ஏவுக்கு எதிராக இவ்வழக்கில் ஏதேனும் ஆதாரம் கிடைத்தால்கூட, முதலமைச்சரின் கோபத்திற்கு ஆளாகக் கூடாதெனக் கருதி சிபிசிஐடி போலீஸார் அந்த ஆதாரத்தை அழித்துவிடக் கூடும் என பொது மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளதாக ஒரு செய்தியை அடித்து சென்னை அலுவலகத்திற்கு அனுப்பி விட்டு,  கட்டடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள எங்கள் அலுவலகத்திலிருந்து கீழே இறங்கி வந்து சாலையின் எதிர்புறம் உள்ள கடையில் டீ குடித்தவாறு ‘தம்’ அடித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது மற்றொரு செய்தியாளர் ஓடோடி வந்து “உங்களுக்கு சென்னையிலிருந்து ஃபோன். உங்களை டிஎன்ஜி உடனடியாக பேசச் சொன்னார்,” என்றார்.

ஜெயலலிதாவிற்கு எதிராக செய்தி போட முடியாது;

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் தலைமைச் செய்தியாளர் டி.என்.கோபாலன். எல்லோரும் அவரை டிஎன்ஜி என்றே அழைப்பர்.

நாம அடித்துள்ள செய்தியில் ஏதாவது பெரிய தவறு ஏற்பட்டுவிட்டதோ, அதற்கான விளக்கம் கேட்க கூப்பிடுகிறாரோ என்ற யோசித்தவாறு  மனதில் ஒருவித குழப்பத்துடன் எனது அலுவலகத்திற்கு விரைந்து அங்கிருந்த லேண்ட் லைன்  ஃபோனிலிருந்து அவரைத் தொடர்பு கொண்டேன். அக் காலக்கட்டத்தில் என்னிடம் மொபைல் ஃபோன் கிடையாது.

“குட் ஆஃப்டர்னூன், ஸார்,” எனக் கூறி என்னை அறிமுகப்படுத்திய அடுத்த நொடியே, “ஏம்ப்பா நீ நம்ம பேப்பர தினமும் ஓழுங்கா முழுசா படிக்கிறியா, இல்லையா?,” எனக் கேட்டார்.

அவர் எதற்காக இப்படி கேட்கிறார் என எனக்குப் புரியவில்லை. இருந்தாலும், ‘யெஸ், ஸார். தினமும் அதில் உள்ள எல்லா செய்திகளையும் முழுவதும் படிக்கிறேன், ஸார்,” என்றேன், மனதில் ஒருவித கவலை மற்றும் பதற்றத்துடன்.

“உன்னோட செய்திய பார்த்தா அந்த மாதிரி தெரியலியே. அப்படி நீ நம்ம பேப்பரை தினமும் ஒழுங்கா முழுசா படிச்சிருந்தீனா, இப்படி ஒரு செய்தி அடிச்சு அனுப்பியிருக்கமாட்டே,” என்ற டிஎன்ஜி, “நாம என்னைக்குப்பா ஜெயலலிதாவுக்கு எதிரா செய்தி போட்டிருக்கோம்?” என்றார், குரலில் ஒருவித ஆதங்கத்துடன்.

“ஓ.கே.ப்பா. உன்னுடைய செய்தியை படித்துப் பார்த்தேன். வெரி குட். ரொம்ப நல்லா அருமையா எழுதி இருக்கிற. நீ கேட்ட கேள்வியெல்லாம் சரிதான். என்ன செய்வது? நம்ம பத்திரிகையில் போட முடியாது. ஐ யம் வெரி ஸாரிப்பா,” எனக்கூறிவிட்டு ரிஸீவரை வைத்துவிட்டார்.

எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

அதன் பின்னர் சில வாரங்கள் கடந்த நிலையில் ஒருநாள்  இவ்வழக்கு குறித்து நான் மீண்டும் ஒரு செய்தி போட்டேன். சிபிசிஐடி விசாரணை தொடங்கி இத்தனை வாரங்கள் ஆகியும், ஆசிரியை மீனாட்சி இன்னும் உயிரோடு இருக்கிறாரா? அல்லது இறந்துவிட்டாரா? என்பது குறித்து கூட இதுவரை எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை என்பதை அச் செய்தியில் சுட்டிக் காட்டியிருந்தேன்.

இதனால் சிபிசிஐடி போலீஸார் என் மீது கடுங்கோபம் அடைந்தனர்.

சிபிசிஐடியின் அழைப்பு;

செய்தி வெளியான அன்று காலை 11 மணியளவில் எனது அலுவலகத்திற்குள் நுழைந்தேன். அங்கே எனது சீனியர் ஸ்ரீகிருஷ்ணா, புகைப்படக்காரர் அசோக்குமார் ஆகிய இருவரும் இருந்தனர். என்னைக் கண்டதும், “இர்ஷாத், உங்களுக்கு ஒரு ஃபோன் வந்தது. சிபிசிஐடி-யிலிருந்து சந்தானம் என்கிற  டிஎஸ்பி ஒருவர் பேசினார். உங்ககிட்ட பேசணும்னார். நீஙக வந்தவுடன் உடனடியா அவரிடம் பேசச் சொன்னார்,” எனக்கூறி, ஒரு லேண்ட் லைன் நம்பர் குறிக்கப்பட்டிருந்த சிறிய துண்டு பேப்பரை என்னிடம் கொடுத்தார்.

ஆசிரியை மீனாட்சி குறித்து ஏதவாது புது தகவல் கிடைத்திருக்குமோ எனக்கருதி, சிபிசிஐடி டிஎஸ்பி சந்தானத்திற்கு ஃபோன் போட்டேன். வழக்கமான நலம் விசாரிப்புக்குப் பின், ‘எங்க எஸ்.பி. மரியாதை நிமித்தமா உங்களை சந்தித்துப் பேச விரும்புகிறார். ஒரு அரைமணி நேரம் ஒதுக்கி எங்க அலுவலகத்திற்கு வந்திட்டுப் போக முடியுமா?,” எனக் கேட்டார் அந்த டிஎஸ்பி.

அன்று எனக்கு வேறு சில வேலைகள் இருப்பதால் அதற்கு மறுநாள் வந்து சந்திப்பதாக கூறினேன். ஆனால் சிபிசிஐடி எஸ்.பி. ஸ்ரீதர் அன்றைய தினம் இரவு  சென்னைக்கு செல்ல இருப்பதாகவும், இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்றும், எனவே, தற்போது உடனடியாக புறப்பட்டு வந்து அவரை சந்தித்துவிட்டு பரஸ்பர அறிமுகத்துக்குப் பின் பத்தே நிமிடத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்று விடலாம் என்றும்  கூறி, டிஎஸ்பி சந்தானம் கெஞ்சினார்.

அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டு, அத் தகவலை எனது சீனியர் ஸ்ரீகிருஷ்ணாவிடம் தெரிவித்தேன். நான் கூறிய தகவலைக் கேட்ட ஸ்ரீகிருஷ்ணா, சிறிது நேர யோசனைக்குப் பின்,  “இர்ஷாத், நீங்க அங்கே தனியா போகாதீங்க. எனக்கென்னமோ அது நல்லதாப்படல. எதுக்கும் நம்ம ஃபோட்டோகிராஃபர் அசோக்குமார கூட துணைக்கு அழைச்சிட்டுப் போங்க,” என அறிவுறுத்தினார்.

இதையடுத்து புகைப்படக்காரர் அசோக்குமார் என்னை அவரது மொபெட்டில் அழைத்துச் சென்றார்.

டிவிஎஸ் டோல்கேட்டிலிருந்து மத்திய பேருந்து நிலையம் வருகையில், மன்னார்புரம் நால்ரோட்டில் வலதுபுறம் ரோட்டோரத்தில் அமைந்திருந்த ஒரு பழங்காலத்து கட்டடத்தின் மாடியில் சிபிசிஐடி அலுவலகம் செயல்பட்டு வந்தது. அது என்ன அலுவலகம் என்பதற்கான போர்டெல்லாம் கிடையாது.

நாங்களிருவரும் மொபெட்டில் சென்று அங்கே இறங்கினோம். அப்போது அங்கே அலுவலகத்திற்கு வெளியே ஒரு அம்பாஸிடர் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அக் காரை கவனித்துவிட்ட அசோக்குமார், “ஸார், குளித்தலை எம்எல்ஏ பாப்பா சுந்தரம் வந்திருக்கிறார் என நினைக்கிறேன். இது அவரோட கார் தான். அவர் கிளம்பி போனதற்கப்புறம் நாம் உள்ளே போகலாம்,” என ஒரு யோசனை தெரிவித்தார்.

இதையடுத்து, நாங்களிருவரும் அங்கிருந்து புறப்பட்டு மன்னார்புரம் பகுதியில் செயல்பட்டு வந்த அப்போதைய சிட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள கடைக்குச் சென்று ஆளுக்கொரு டீ சாப்பிட்டு தம் அடித்துவிட்டு சுமார்  அரைமணி நேரத்துக்கு மேல் கடந்தபின் மீண்டும் சிபிசிஐடி அலுவலகம் வந்தோம்.

இப்போது குளித்தலை எம்எல்ஏ பாப்பா சுந்தரம் சிபிசிஐடி அலுவலகத்திலிருந்து மாடிப்படியில் கீழே இறங்கிக் கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் சாலையின் எதிர்புறம் நின்றவாறு அவரை கவனித்துக் கொண்டிருந்தோம். ஒருவழியாக அவர் காரில் ஏறி அமர்ந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றபின், நாங்கள் இருவரும் மாடிப்படி ஏறினோம்.

அங்கே சஃபாரி டிரஸ் அணிந்திருந்த  நான்கைந்து போலீஸார் வாசல் அருகே  நின்று பேசிக் கொண்டிருந்தனர். எங்களைக் கண்டதும், அவர்களில் ஒருவர், “யார் நீங்க? என்ன வேணும்?,” என கொஞ்சம் அதட்டலான குரலில் கேட்டார்.

எனது பெயரைக் கூறி, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் என நான் கூறியதும், அவர்களில் மற்றொருவர் “ஹலோ, மிஸ்டர் இர்ஷாத். நான் தான் உங்களுக்கு ஃபோன் செய்தது,” என எனக்கு கைகொடுத்து தன்னை முறையாக அறிமுகம் செய்து கொண்ட டிஎஸ்பி சந்தானம், எங்கள் இருவரையும் அவரது அறைக்கு அழைத்துச் சென்று டீ வரவழைத்துக் கொடுத்தார்.

பின்னர் எழுந்து சென்று நாங்கள் வந்திருக்கும் தகவலை அவரது எஸ்.பி.க்கு தெரிவித்து விட்டு மீண்டும் வந்து தனது இருக்கiயில் அமர்ந்தார். சிறிது நேரத்தில், எங்களிருவரையும் எஸ்.பி. அழைத்துவரச் சொன்னதாக மற்றொருவர் வந்து டி.எஸ்.பி.யிடம் கூறினார்.

நாங்கள் மூவரும எஸ்.பி.யின் அறைக்குள் நுழைந்தோம். சிபிசிஐடி எஸ்.பி. ஸ்ரீதர் அவரது இருக்கையில் அமர்ந்திருந்தார்.

எஸ்.பியின் மிரட்டல்;

“குட் ஆஃப்டர்னூன், ஸார், ” எனக் கூறியவாறு உள்ளே நுழைந்து எனது பெயரைக் கூறி அறிமுகப்படுத்தி கையை நட்புடன்  நீட்டினேன். அவரும் புன்னகைத்தவாறே தனது கையை நீட்டினார். இருவரும் பரபரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டோம்.

சிறிது நேரம் என்னைப் பற்றியும், எனது சொந்த ஊர் மற்றும் குடும்பத்தைப் பற்றியும்  பொதுவாக விசாரித்தார் எஸ்.பி. ஸ்ரீதர். அதன் பின்னர், அலுவலகத்திலிருந்து இங்கே புறப்பட்டு வர ஏன் இவ்வளவு தாமதம் என அவர் கேட்க, நாங்கள் முன்னமேயே வந்துவிட்ட தகவலைக் கூறி, குளித்தலை எம்எல்ஏ வந்திருந்ததால், இவ்வளவு நேரமாக வெளியே காத்திருந்துவிட்டு அவர் சென்ற பின்னர் தற்போது உள்ளே வந்ததாக யதார்த்தமாகக் கூறினேன்.

எனது பதிலைக் கேட்டதும் அவர் முகம் சட்டென மாறியது. “குளித்தலை எம்எல்ஏவா? நான் இவ்வளவு நேரமும் இங்கே தானே உட்கார்ந்திருக்கிறேன். அவர் இங்கே வரவே இல்லையே,” என தனது வலதுபுறம் அமர்ந்திருந்த டிஎஸ்பியை முறைத்தவாறு பதிலளித்தார் எஸ்.பி. ஸ்ரீதர்.

குளித்தலை எம்எல்ஏ இங்கே வரவே இல்லையே என டிஎஸ்பியும் ஒருவித பதற்றத்துடன் கூறினார். அவ்விருவரும் சேர்ந்து ஒரு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்கின்றனர் என்பது எனக்கு தெளிவாகப் புரிந்தது.

அதன்பிறகு அவரது பேச்சின் தோரணையே மாறியது. ஏதோ ஒரு கொலைக் குற்றவாளியை விசாரிப்பது போல, என்னிடம் விசாரணை செய்தார் எஸ்.பி.ஸ்ரீதர். “எம்எல்ஏ பாப்பா சுந்தரத்தின் உறவினருக்கு இதில் தொடர்பிருப்பதாக  உங்களுக்கு யார் சொன்னது?,” எனக் கேட்டார். பொதுமக்களிடம் அப்படி ஒரு பேச்சு இருப்பதாகக் கூறினேன். அதோடு, எனக்கு தகவல் அளித்தவரை காட்டிக் கொடுக்க முடியாது. அது பத்திரிகை தர்மம் அல்ல என்றும்  நான் பதிலளித்தேன்.

இதனால் கடுங்கோபமடைந்த எஸ்.பி.ஸ்ரீதர், “நான் நினைத்தால் இவ் வழக்கில் உங்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி உங்களையும் ஒரு குற்றவாளியாகச் சேர்த்து இப்பவே கைது செய்ய முடியும்,” என ஆங்கிலத்தில் கர்ஜித்தார்.

எனக்கு இப்போது ஒரு விஷயம் நன்றாகப் புரிந்துவிட்டது.

எனது செய்தியின் எதிரொலி;

எனது செய்தியின் எதிரொலியாக இன்று காலை அவருக்கு மேலிடத்தில் இருந்து நல்லா ‘டோஸ்’  விழுந்துள்ளது. அதனால் ஏற்பட்ட கோபத்தில் என்னை மிரட்டி இனி இது குறித்து செய்தி எதுவும் எழுதவிடாமல் தடுக்க நினைக்கிறார் என்பது எனக்குப்  புரிந்துவிட்டது.

எனவே, நான் “ஸாரி, ஸார். எனக்கு இன்னொரு அவசர வேலை இருக்கிறது. இன்னொரு நாள் சந்திப்போம்,” எனக் கூறியவாறு எழுந்தேன். அதற்கு அவர், “ஏய் மிஸ்டர், உட்காருங்க. விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது இதுபோல உங்க இஷ்டத்துக்கு பாதியில் எழுந்து செல்ல முடியாது,” என என்னை முறைத்தபடி ஆங்கிலத்தில் கூறினார்.

அதற்கு நான் கொஞ்சமும் அசராமல், “ஸார், மன்னிக்க வேண்டும். நீங்கள் என்னை மரியாதை நிமித்தமாக சந்திக்க விரும்புவதாக உங்க டிஎஸ்பி சொன்னதால் தான் நான் இங்கே வந்திருக்கிறேன். இதுபோல நீங்க என்னை ஒரு குற்றவாளியைப் போல விசாரிப்பீங்க என தெரிந்திருந்தால் இங்கே வந்திருக்கவே மாட்டேன்,” என ஆங்கிலத்தில் பதிலளித்தேன்.  இதனால் இன்னும் கோபமான எஸ்.பி.ஸ்ரீதர் அவரது வலதுபுறம் அமர்ந்திருந்த டிஎஸ்பியை கோபமாக ஒரு முறை முறைத்தார்.

அதைத் தொடர்ந்து, நான் எழுந்து நின்று கொண்டவாறு, “என்னை நீங்க விசாரிக்க நினைத்தால் முறைப்படி எங்க அலுவலகத்துக்கு சம்மன் அனுப்புங்க. அதுகுறித்து எனது உயரதிகாரிகள் மற்றும் எனது வழக்கறிஞரிடம் ஆலோசித்துவிட்டு அதன் பின்னர்  விசாரணைக்கு வருவேன். இப்போது விசாரணை என்ற பெயரில் என்னை நீங்க சட்டத்துக்குப் புறம்பாக மிரட்டுவது அநாகரீகமான செயலாகும். பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் செயல் ஆகும்,” என ஆங்கிலத்தில் கூறிவிட்டு, அவரது பதிலுக்கு காத்திராமல், அசோக்குமாருடன் கிளம்பி வந்துவிட்டேன்.

அவரது மிரட்டலுக்கு பயந்து நடுங்கி, ‘இனிமேல் ஆசிரியை மீனாட்சி வழக்கு குறித்து செய்தி எதுவும் போட மாட்டேன். தயவு செய்து என்னை மன்னிச்சு விட்டுவிடுங்கள’; என நான் கெஞ்சுவேன் என எஸ்.பி.ஸ்ரீதர் எதிர்பார்த்திருந்தார். நான் இப்படி எதிர்வினையாற்றுவேன் என அவர் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால், என்னை ஒன்றும் செய்யமுடியாத அவரது இயலாமையை நினைத்து  அவரது முகத்தில் கோபம் கொப்பளித்தது.

நான் அவரிடம் தைரியமாக பேசிவிட்டாலும், அடுத்து என்ன நடக்குமோ என மனதில் ஒரு அச்சம் ஏற்பட்டது. இதயம் படபடவென துடித்தது. மீண்டும் நாங்களிருவரும் இன்னொரு கடைக்குச் சென்று ஆளுக்கொரு டீ குடித்து ‘தம்’ அடித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு, அதன் பின்னர் அலுவலகம் வந்து, நடைபெற்ற சம்பவங்களை எனது சீனியர் ஸ்ரீகிருஷ்ணாவிடம் ஒன்றுவிடாமல் சொன்னோம்.

மீனாட்சி டீச்சரின் கணவருக்கு நேர்ந்த கொடூரம்;

அதன் பிறகும், ஆசிரியை மீனாட்சி வழக்கு குறித்து நான் தொடர்ந்து செய்தி எழுதி  வந்தேன். ஆசிரியை மீனாட்சி குறித்து ஒரு துப்பும் கிடைக்காத விரக்தியில், சிபிசிஐடி போலீஸார் மீனாட்சியின் கணவரை வரவழைத்து, மனைவியை கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடுவதாகக் குற்றஞ்சாட்டி, விசாரணை  என்ற பெயரில் அவரை தரையில் குப்புற படுக்க வைத்து அவரது தலையையும், இரு கால்களையும் போலீஸார் அமுக்கிப் பிடித்த நிலையில், அவரது முதுகில் மேலும் ஒருவரை அமரச்  செய்து, அவரது கால்களை மேலும் இருவர் தரையோடு தரையாக அமுக்கிப் பிடித்திருக்க, “மனைவியைக் காணோம் என இனிமேல் யார்க்கிட்டேயும் புகார் கொடுப்பியா?.. புகார் கொடுப்பியா?,” எனக் கேட்டவாறு அவரது இரண்டு பாதங்களிலும் லத்தியால் கண்மூடித்தனமாக அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

இதனால் அவர் நடக்க முடியாமல் பெரும் சிரமப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார்.

இது பற்றி தகவலறிந்த நான் இதை செய்தியாக   அடித்தேன். இச் செய்தியை படித்துப் பார்த்த எனது சீனியர் ஸ்ரீ கிருஷ்ணா பதறிவிட்டார்.

“இந்த செய்தி வேண்டாம், இர்ஷாத். தயவு செய்து இதை நீங்களே அழிச்சிடுங்க. ஏற்கெனவே சிபிசிஐடி போலீஸார் உங்க மேல ரொம்ப கோபமாக இருக்கிறாங்க. இப்போ ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், நிச்சயம் நம்ம நிர்வாகம் உங்களை காப்பாதாது. நீங்க என்னை விட வயசில மூத்தவர்.  நீங்க என்னோட அண்ணன் மாதிரி. உங்க நன்மைக்காதான் இதை சொல்றேன். தயவு செய்து இச் செய்தியை போட வேண்டாம்,” என மிகவும் அக்கறையோடு அறிவுறுத்தினார். அதையே புகைப்படக்காரர் அசோக்குமாரும் வழிமொழிந்தார். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அச் செய்தியை  நானே அழித்துவிட்டேன்.

இந்நிலையில், 2005-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி நான் தஞ்சாவூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டேன். அதன் பின்னர், அங்கிருந்தவாறு எப்போதாவது ஒருமுறை ஆசிரியை மீனாட்சி வழக்கு குறித்து செய்தி அனுப்பி வந்தேன்.

2006 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட பாப்பாசுந்தரம் தோல்வியடைந்தார். இந்நிலையில், ஆசிரியை மீனாட்சியை  பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்ததாக் கூறி குளித்தலையைச் சேர்ந்த சண்முகவேல், குமார் ஆகிய 2 பேரை 2006-ம் ஆண்டு  ஜுலை 4-ம் தேதி சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். சுமார் ஒன்றரை வருடங்கள் கழித்து வாழைத் தோப்பு ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த ஆசிரியை மீனாட்சியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சண்முகவேல், குமார் ஆகிய இருவரும் அதுநாள் வரை அக் கிராமத்தில் முகாமிட்டு விசாரணை மேற் கொண்டு வந்த சிபிசிஐடி போலீஸாருக்கு சமையல் வேலை செய்து, பசியாற அன்னமிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றஞ்சாட்டப்பட்ட அவ்விருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி, நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சண்முகவேல் 2014-ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி திடீரென இறந்து விட்டடார். தனக்கு வழங்கப்பட்டிருந்த பெட்ஷீட்டை பயன்படுத்தி அவர் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டுரையாளர்; எஸ்இர்ஷாத் அஹமது

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time