மகன் அன்புமணியிடம், அப்பா ராமதாஸின் உண்மையான எதிர்பார்ப்பு என்ன? எதைப் பெறுவதற்கு இந்த முட்டல், மோதல்கள்..? நிஜமாகவே இவர்கள் இருவரும் கடுமையாக முரண்படுகிறார்களா..? இவர்கள் ஒன்றிணையும் வாய்ப்புகள் உண்டா? இல்லையா…? இதோ ஒரு அப்பட்டமான ‘ஸ்கேன் ரிப்போர்ட்’ ;
சுயநலம் மேலோங்கிய ஒவ்வொரு தலைவரும் தன் இறுதி நாளில் இத்தகைய அவமானங்களில் இருந்து தப்ப முடியாது. ஏனென்றால், அவர்கள் எதை விதைத்தார்களோ.., அதைத் தான் அறுவடை செய்து வருகின்றனர்.
இந்த அருவருக்கதக்க – முற்றிலும் சுயநலமுள்ள இந்த இருவரின் – சண்டை இந்த நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த விதத்திலும் பயனற்றது.
ராமதாஸ்- அன்புமணி பிரச்சினை பொது வெளியில் தொடர்ந்து விவாதிக்க வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் கொண்டதல்ல. முற்ற முழுக்க அலட்சியப்படுத்த வேண்டிய ஒன்று என நான் உறுதியாக நம்புகிறேன்.
எனினும், இந்த விவகாரம் பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு சில காத்திரமான படிப்பினைகள் தருகிறது என்பது மட்டுமல்ல, இந்த சண்டையின் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான உண்மைகளை சுட்டிக் காட்டவே இந்தக் கட்டுரையில் நான் சிலவற்றை கவனப்படுத்துகிறேன்.
டாக்டர் ராமதாஸ் தன் சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தமில்லாதவராகவே பொதுத் தளத்தில் தான் தந்த வாக்குறுதிகளைத் தானே மீறியவர். ”என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்”. ”நாங்கள் ஊழல் செய்தால் எங்களை முச்சந்தியில் வைத்து சவுக்கால் அடியுங்கள்” ”நான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் என் தாயுடன் உறவு கொள்ளத்தக்க கொடுங் குற்றமாகும்…” இப்படி எண்ணற்ற வகையில் பேசி, தான் பேசியதை தானே மீறி, ‘நான் நம்பகமான தலைவரல்ல’ என்பதை அப்பட்டமாக நிறுவியவர் என்று நமக்கெல்லாம் தெரியும்.
அப்படிப்பட்டவர் தன் மகனிடம் நீதி, நேர்மை, நியாயங்களை எதிர்பார்த்து அது பொய்த்து போனதால் இன்று முரண்படுகிறாரா? தொண்டு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை மகனிடம் காண முடியவில்லையே என கலக்கம் கொண்டாரா?
கிடையாது, கிடையவே கிடையாது.
”35 வயதில் என் மகனை கேபினெட் அமைச்சராக்கியது என் தவறு தான்” என 25 ஆண்டுகள் கழித்து தான் ராமதாஸ் சொல்கிறார்…!
இந்த 35 வயதிற்கு முன்பாகவே வாஜ்பாய் அமைச்சரவையில் பொன்னுசாமியும், தலித் எழில்மலையும், சண்முகமும் இருந்த போது, ”அவர்களை சும்மா பெயருக்கு அமைச்சராக்கி, அவர்களை பின்னிருந்து நிர்பந்தித்து, கோடிக் கோடியாக பணம் சம்பாதிக்கிறார் அன்புமணி. உங்கள் மகனை கட்டுப்படுத்தி வையுங்கள்” என வாய்பாயே அழைத்து கடிந்து கொண்ட பிறகும், தன் மகனுக்கு வாதாடி மல்லுக்கட்டி, கேபினெட் அமைச்சர் பொறுப்பு வாங்கிய உத்தமர் தான் ராமதாஸ்.
”ஐயோ இப்படி பொதுச் சொத்தை சூறையாடும் பிள்ளையை அமைச்சராக்குகிறோமே என அப்போது அவருக்கு மனம் உறுத்தவில்லையே..?’’
”மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு, வரலாறு காணாத வசூல் வேட்டை நடத்துகிறார்” என வட நாட்டு ஊடகங்கள் எல்லாம் அன்புமணி குறித்து எழுதி, எழுதி மாய்ந்தனவே அப்போது கூட, ‘மகனை கேபினெட் அமைச்சராக்கியது தவறு’ என்று ராமதாசுக்கு குற்ற உணர்வு தோன்றவில்லையே…? தோன்றி இருந்தால், இன்று பாஜக தலைமை கண்டு அஞ்சி மண்டியிட்டு உங்கள் மகன் கூட்டணி வைக்கக் கோரி கதறி இருக்க வாய்ப்பில்லையே…!
‘தன் வாரிசுக்கு இடையூறாக கட்சியில் திறமைசாலிகள் யாரும் இருக்கக் கூடாது’ என எத்தனை பேரை வேட்டையாடி வெளியேற்றினார் ராமதாஸ். ஆனால் தற்போதோ, ”அரசியலில் வாரிசு என்பது கிடையாது” என திருவாய் மலர்கிறார். உடனே, அவரே தான் பேசியதற்கு முரணாக, ”அன்புமணியை கட்சியை விட்டு வெளியேற்ற நான் என்ன முட்டாளா? இன்னும் ஓரிரு ஆண்டுகள் பொறுமை காத்திருந்தால் நானே அவருக்கு முடிசூட்டுவிழா நடத்தியிருப்பேன்…’’ என்கிறார்.
அதாவது, தன்னை அவமானப்படுத்தினாலும், நெஞ்சிலே குத்தினாலும், உயிருள்ள தன்னை உதாசினம் செய்துவிட்டு, உற்சவராக்கி ஏமாற்றினாலும், எல்லாமே அய்யா தான் என சொல்லிக் கொண்டே தன்னை அதள பாதாளத்தில் தள்ளினாலும், மகனே இந்தக் கட்சியின் அடுத்த தலைவர். 2026 தேர்தலுக்கு பிறகு அன்புமணி பொறுப்பில் விடுகிறேன் என்கிறார், ராமதாஸ்.
ஆக, பாதிக்கப்பட்டவரே, பாதிப்புக்கு உள்ளாக்கியவரை விட்டால் தனக்கு நாதியில்லை என்கிறார் என்றால்,
”மகனே, 2026 தேர்தல் தான் நான் கடைசியாக சந்திக்கும் தேர்தலாக இருக்கக் கூடும். ஆகவே, அது வரையிலேனும் கூட்டணி பேரத்தில் பொட்டி வாங்கும் அதிகாரத்தில் இருந்துவிட்டு போகிறேனே…”
என்பது தான் அவர் மகனுக்கு விடுக்கும் வேண்டுகோள். இதைத் தான் அவரது வார்த்தைகளில் , ”இன்னும் ஓரிரு ஆண்டுகள் இக்கட்சிக்கு தலைவராக இருக்க எனக்கு உரிமை இல்லையா?” என்றெல்லாம் கேட்டு புலம்புகிறார்.
மேலும், அன்புமணிக்கு போட்டியாக சகோதர்கள் யாரும் இல்லை. ஆகவே, ”அதிகாரத்தை அவரே ஓட்டுமொத்தமாக குவித்து வைத்துக் கொள்ளாமல், குடும்பத்திற்குள் சகோதரிகளின் பிள்ளைகளுக்கு கொஞ்சமேனும் பங்கிட்டு கொடு” என்கிறார் ராமதாஸ்.
ஆக, இது முழுக்க, முழுக்க பொது வாழ்வில் கிடைக்கும் பொருளாதாரம், அதிகாரம் போன்ற பலாபலன்களை பங்கிட்டுக் கொள்வதில் குடும்பத்திற்குள் நடக்கும் சண்டை அவ்வளவே!
அன்புமணியோ, இந்த புலம்பல்கள் எதற்கும் பதில் சொல்லாமல், பாஜக தலைமை சொல்லிக் கொடுத்தபடி நடை பயணம் சென்று மக்களை சந்திக்க போகிறாராம்…!
இத்தனை ஆண்டுகாலம் ஏசி அறையில் இருந்து கொண்டே சொகுசு அரசியல் செய்து வந்த அன்புமணி அவர்கள், ராமதாஸ் கூறியபடி, ’உழைக்க தயார் இல்லாதவர், தற்போது தான் மக்கள் ஞாபகம் வந்து நடை பயணமாகப் பார்க்கப் போகிறாராம்…!
வன்னிய மக்கள் சுயமரியாதை உள்ளவர்கள், உழைத்து வாழும் உத்தமர்கள். கஞ்சி குடிக்கும் நிலையிலும் கவுரவத்தை இழக்காதவர்கள், நேருக்கு நேராக பொட்டில் அறைந்தது போல தவறுகளை தட்டிக் கேட்கும் குணம் கொண்டவர்கள். இவையெல்லாம், நான் நீண்ட நாட்கள் இவர்களோடு பழகி உணர்ந்த உண்மைகள். வெறும் புகழ்ச்சியில்லை.
Also read
அன்புமணி நடைபயணத்தில் அவரை முச்சந்தியில் நிறுத்தி, வன்னிய மக்கள், ”உன் தந்தை வைத்த குற்றச்சாட்டுகளுக்கு உன் பதில் என்ன..?” எங்களை பகடை காயாக்கி உங்கள் குடும்பம் சேர்த்த செல்வங்கள் என்னென்ன…? போன்ற தங்களது ஏமாற்றம், கோபம், இவர்களின் துரோகம்.. ஆகியவை குறித்து கேட்கப் போகும் கேள்விகளுக்கு அவர் என்ன பதில் சொல்லப் போகிறார்? எனப் பார்ப்போம்.
‘சமூகநீதி என்ற சாக்லேட்டை காட்டி, வெறும் கையை சப்பவைத்து விட்டு, அதிகார அரசியலின் ஆதாயங்களை முழுக்க, முழுக்க அனுபவித்துக் கொண்டு, மதவாத, பாசிச சக்திகளுடன் கைக் கோர்த்து, தமிழ்நாட்டை படுகுழிக்குள் தள்ளுவது குறித்து அப்பவிற்கோ, மகனுக்கோ சிறிதளவும் குற்ற உணர்வில்லை’ என்பதை நாம் கவனத்தில் கொள்வோமாக!
ஆக, இந்த அப்பா – மகன் சண்டையில் வெல்லப் போவது யார்? என்றால், அது பணமும், அதிகாரமும் தான்! தோற்றுக் கொண்டிருப்பது தமிழக மக்கள் தாம்!
சாவித்திரி கண்ணன்
கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்
1) தலைவராக முன்னாள் அமைச்சரை நியமித்து விட்டு, தான் வெறும் நிறுவனத் தலைவராக மட்டுமே பொறுப்பேற்றுக் கொண்டார். (இதில் கவனிக்க வேண்டியது, தலைவருக்குள்ள அதிகாரம் நிறுவனத்தலைவருக்கு கிடையாது.)
2) ஏற்கனவே மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது அவர் சம்பாதித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளீர்கள் அது கவனத்தில் கொள்ள வேண்டியது.
3). தனது மகள்கள் குடும்பத்திற்கு ஏதாவது பலமாக சென்று சேர வேண்டும் என்று நினைக்கிறார் நிறுவனர். அதன்படி முடிவெடுத்து, புதிய பொறுப்பு ஒருவருக்கு தரப்பட்டது.
4) முன்னாள் அமைச்சருக்கு இதில் உடன்பாடில்லை.
இதையும் சேர்த்துத்தான் இத்தனை நாள் படங்களும் செய்திகளும்.
சகோதரி குடும்பத்தார் உள்ளே வருவது சுத்தமாக அன்புமணிக்கு புடிக்கவில்லை.. தன் மனைவிய முன்னிலைப்படுத்த நினைக்கிறார்..
இவரின் சிண்டு பாஜக வசம் உள்ளதால் அந்த கூட்டணியத்தான் விரும்புகிறார்.. இதில் குழப்பம் உள்ளது.. ராமதாசுக்கு கூட்டணி பேரம் தொகுதிகள் மற்றும் முக்கியமா பொட்டி இதை முடிவு செய்யும் அதிகாரம் தனக்கு தேவையென மகனிடம் மல்லுக் கட்டுகிறார்.. தலைவரா இருந்தா மட்டுமே முடியும்.. ஆனா அப்பாவம் புள்ளயும் சேர்ந்து ஏதோ ஒரு நாடகத்த நடத்துகிறார்களோ எனத்தோன்றுகிறது..