விவசாயிகளுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசின் தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் திட்டத்தை எதிர்த்து இந்தியாவெங்கும் விவசாய அமைப்புகள், இடதுசாரிக் கட்சிகள் போர் முழக்கம் செய்து கொண்டுள்ளனர். ஆனால், இந்த அநீதியை தமிழக அரசு கச்சிதமாக மத்திய பாஜக அரசின் உத்தரவுக்கு இணங்க செய்து கொண்டுள்ளது;
மத்திய பாஜக அரசின் விவசாயக் கொள்கையை எதிர்ப்பதாக திமுக தொடர்ந்து சொல்கிறது. ஆனால், தற்போது தமிழக விவசாயிகள் மற்றும் விவசாய சங்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் நெல் கொள்முதலை தனியார் கைகளுக்கு மாற்றும் காரியத்தை செய்கிறது.
விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் நோக்கம் கொண்ட மத்திய அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தை அமல்படுத்த முனைவது, வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் கார்ப்பரேட் ஆதரவு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஆகியவற்றை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.
இது நாள் வரை தமிழ்நாடு முழுவதும் உழவர்களிடமிருந்து நெல் கொள்முதல் செய்து வந்தது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தான். ஆனால், தற்போது இந்த வருடம் பிப்ரவரி மாதம் அதிரடியாக தமிழக அரசு தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்கள் தவிர திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தனியாருக்கு அந்தப் பொறுப்பை தாரை வார்த்துவிட்டது.
இவ்வாறாக உழவர்களிடம் ரூ.1000 கோடி மதிப்புள்ள நெல்லை கொள் முதல் செய்த தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையமும் அதன் சார்பில் நெல் கொள்முதல் செய்த தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பும் இது வரை உழவர்களுக்கு பணம் தராமல் மூன்று மாதங்களாக ஏமாற்றி வருகிறது. இதனால், தமிழகம் முழுமையிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வட்டிக்கு கடனை வாங்கியும், நகை அடகு வைத்தும் விவசாயம் செய்து நெல்லை கொண்டு வந்து கொடுத்தால் அணம் தராமல் இழுத்தடித்து விவசாயிகளை வாட்டி வதைப்பதா?
விவசாயிகள் உற்பத்தி செய்திடும் நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்து இந்திய உணவுக் கழகத்திற்கு ( FCI ) கொடுத்து வரும் நிலையில், தற்போது மத்திய அரசு தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் ( NCCF ) மூலம் நெல் கொள்முதல் செய்வது விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் நேரடியாக நெல் கொள்முதல் செய்வதில் என்ன தப்பு? இப்படிக் கேட்பவர்கள், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் என்ற அமைப்பு பொதுத்துறை நிறுவனம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கேட்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், இது உண்மையில் ஒரு கூட்டுறவு நிறுவனம் அல்ல. இந்த கூட்டுறவு இணையம் என கருதப்படும் இதில் இடைத்தரகர்கள், தனியார் வியாபாரிகள்..போன்றோர் தான் ஆதிக்கம் செய்கின்றனர்.
மேலும் நெல் கொள்முதல் நிலையங்கள், அங்கிருக்கும் எடைக் கருவிகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் நமது தமிழக அரசினுடையது. எந்த உள்கட்டமைப்புகளும், முதலீடுகளுமோ இல்லாமல் வெறும் கையில் முழம் அளக்கும் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு அனுமதி அளிப்பது எதற்காக? சந்தேகமே இல்லாமல் இது நாளடைவில் நெல் கொள்முதலை முழுக்க முழுக்க தனியார் மயமாக்கும் முயற்சியாகும்.

இந்த அணுகுமுறையால் மாநில அரசு வழங்கி வரும் ஊக்கத் தொகையும் இனி உழவர்களுக்கு கிடைக்காது. நிறுத்தி விடுவார்கள். இது விவசாயிகளை பாதிக்கும். கடந்த மூன்றாண்டுகளாகவே திராவிட மாடல் அரசு நெல் கொள் முதலை தனியாருக்கு தரப் போகும் செய்தியை பரப்பி வந்தது. விவசாயிகளும் கடும் எதிர்வினை புரிந்து வந்தனர். ஆயினும், தற்போது துணிந்து இந்தக் காரியத்தை செய்கிறது தமிழக அரசு. இனியும் திமுகவானது பாஜகவை எதிர்ப்பதாக பம்மாத்து நாடக வசனம் பேசினால் விவசாயிகள் எப்படி நம்புவார்கள்?
Also read
ஏற்கனவே தனியார்கள் அடிமாட்டு ரேட்டுக்கு நெல்லை வாங்குவதால் தான் விவசாயிகள் அரசின் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வருகின்றனர். அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வைப்பது, மூட்டைக்கு ரூ 45 லஞ்சம் வாங்குவது..போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்ட போதிலும் கொள் முதல் செய்யப்படும் நெல்லுக்கான பணத்தை தராமல் இழுத்தடிப்பதோ, ஏமாற்றுவதோ இல்லை என்ற நம்பிக்கையில் தான் வருகின்றனர். ஆனால், அந்த நம்பிக்கையில் தற்போது இடியை இறக்கி உள்ளது திராவிட மாடல் அரசு.
இதற்கு முன்னதாக, கிராம நிர்வாக அலுவலர் தரும் அடங்கல் இருந்தால் போதுமானது. அடங்கலைக் காண்பித்து, நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை விற்கலாம் என்ற நிலையை மாற்றி, தனியார் பயிர் காப்பீட்டு நிறுவனங்களிடம் பயிர்காப்பீடு செய்திருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற நிலையை தமிழக அரசு எடுத்தது.
தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பயிர் காப்பீடு என்ற பெயரில் பகல் கொள்ளை நடத்துகிறார்கள். நஷ்ட ஈடு அவர்களிடம் பெற முடிவதில்லை என்ற அனுபவங்களை கண்ட பிறகு பாஜக ஆளும் குஜராத்திலேயே அந்த மாநில அரசு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை அனுமதிப்பதில்லை எனும் போது, திராவிட மாடல் அரசு ஒன்றிய அரசின் நிர்பந்தத்திற்கு பணிந்து தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் விவசாயிகளை சூறையாடிக் கொழுக்க துணை போவது ஏன்? என கொந்தளித்தனர். தற்போது அடுத்தக்கட்ட தாக்குதலாக நெல் கொள்முதலே தனியார் கைகளுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
சாவித்திரி கண்ணன்

















Leave a Reply