மாற்றுத் திறனாளிகளின் மறுக்கப்படும் உரிமைகள்!

-     பீட்டர் துரைராஜ்

இந்திய அளவில் 12 கோடியாகவும்,தமிழகத்தில் சுமார் 16 லட்சமாகவும் உள்ள மாற்றுத் திறனாளிகள் சந்திக்கும் பிரச்சினைகள்,சவால்கள் ஆகியவற்றை நம்மில் பெரும்பாலோர் உணர்வதில்லை, பொருட்படுத்துவதில்லை. நம் ஒவ்வொருக்கும் அவர்களை அரவணைக்க வேண்டிய கடமை உள்ளது. சமூகத்திற்கும்,அரசுக்கும் மாற்றுத் திறனாளிகள் சந்திக்கும் பிரச்சினைகளை, மனக்குமுறல்களை நினைவூட்டுகிறது இந்தக் கட்டுரை.

” அனகாபுத்தூரில் இருந்து பாரிமுனைக்கு மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாகனங்களோடு செல்லும்வகையில்  இரண்டு சிறப்பு பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகம் இயங்கிவந்தது. இப்போது அதனை நிறுத்தி விட்டது. ஒரு அரசு நிறுவனமே இப்படி இருந்தால் தனியார் நிறுவனங்களும், தனிநபர்களும் எங்கள் எப்படி எங்களை  நடத்துவார்கள் ” என்பதை நீங்களே அவதானித்துக் கொள்ளுங்கள் என்று ஒரு மாற்றுத் திறனாளி கூறினார்.வருடம்தோறும்  டிசம்பர் மூன்றாம் நாள்  “உலக மாற்றுத்திறனாளி  நாள் ” கடைபிடிக்கப்படுகிறது. அவர்கள் கண்ணியமாக வாழ உரிய வசதிகளை நாம் செய்து இருக்கிறோமா   ?

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின்  தலைவர் சிம்மச்சந்திரனிடம் பேசும்போது ” 1981 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நாள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் கொரானாவை காரணம்காட்டி தமிழக அரசு இந்த ஆண்டு இதனை கொண்டாடுவதை நிறுத்தி விட்டது. கொரொனா இதைவிட அதிகமாக இருந்தகாலத்தில் கோட்டையில் கொடியேற்றி சுதந்திர நாளைக் கொண்டாடினார்கள்.  டிசம்பர் ஒன்றாம் நாள் வருடந்தோறும் நீளந்தாண்டுதல், ஓட்டப்பந்தயம்,  குண்டு எறிதல் போன்ற பல விளையாட்டுப் போட்டிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்துவார்கள். அதையும் இந்த ஆண்டு நிறுத்திவிட்டார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு நன்கு பணிபுரிந்த நடத்துநர், ஓட்டுநர், மருத்துவர், மாவட்ட ஆட்சித்தலைவர், வேலைவாய்ப்பு நல்கிய நிறுவனம் போன்றவைகளை இனங்கண்டு வருடந்தோறும் வழங்கும் விருதுகளையாவது தமிழக அரசு வழங்கியிருக்கலாம்” என்று வேதனையோடு சொன்னார்.

பத்திரிகையாளராக இருக்கும் மாற்றுத் திறனாளியான சிங்கராயன் பேசும்போது “மாற்றுத் திறனாளிகள் தடையின்றி நடமாடும் சூழலை நாம் உருவாக்க வேண்டும். பேருந்துகளில், புறநகர் மின்சார இரயிலில் கூட மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் வசதி இல்லை. கடைகளுக்கு, கோவில்களுக்கு, சுற்றுலாத் தலங்களுக்கு இயல்பாக செல்லும் சூழல் வர வேண்டும். ஆங்காங்கே மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்வான பாதை அமைத்து உருவாக்கப்பட்டுள்ள சிறப்புக்  கழிவறைகள் அசுத்தமாக உள்ளன; சில இடங்களில் துடைப்பம்,பினாயில் போன்ற பொருட்களை வைக்கும் அறையாக அவை பயன்படுத்தப்படுகின்றன. மாற்றுத் திறனாளி கள் உரிமைச் சட்டம் கறாராக  அமலாகும் வகையில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும். ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி தொண்டு நிறுவனங்களுக்குப் போகிறது. நேரடியான பயனாளிகளுக்கு, குறிப்பாக கிராமப் புறங்களில் உள்ள பயனாளிகளுக்கு போவதில்லை.

மாற்றுத் திறனாளிகள் கையால் இயக்கும் வண்டியை வைத்து எவ்வளவு தூரம் பயணிக்கமுடியும் என்று நீங்களே சொல்லுங்கள். இயந்திரத்தால் இயங்கும் வண்டியை அரசு கொடுத்தால், அதில் பயணித்து  வேலைக்குச்  செல்லமுடியும். மனவளர்ச்சி குன்றியவர்களின் நிலை இதைவிட மோசமாக இருக்கிறது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் சுமை பெற்றோர்களின் மீது, குறிப்பாக தாய்மீது விழுகிறது. வயது அதிகமாக, அதிகமாக அவர்களை பராமரிப்பது சிரமம்; பெற்றோர்களுக்குப்  பிறகு மனவளர்ச்சி குன்றியவரை அவரோடு பிறந்தவர்கள் பார்க்க மாட்டார்கள். இவர்களை பராமரிக்க மாவட்ட அளவில் இல்லங்களை அரசு உருவாக்க வேண்டும்” என்றார் சிங்கராயன்.

மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளிகளை ஐக்கியா(AIYKA) நிறுவனம் நடத்தி வருகிறது. அதன் இயக்குநரான பார்வதி விஸ்வநாத் பேசும்போது “இப்போது சராசரியாக 2.2 சதவீத மக்கள் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை மீறுபவர் களை தண்டிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்.  மாவட்ட அளவில் குழுக்களையும், இதற்கென தனியான நிதியையும் மாநில அளவில் ஏற்படுத்த வேண்டும் என்பது 2016 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம். ஐநாவின்  இணக்கவிதிகளுக்கு ( UNCRPD- United Nations Convention on the Rights of Persons with Disabilities) ஏற்ப இந்திய அரசு இந்தச் சட்டத்தை இயற்றியுள்ளது.

தங்கள் குழந்தைகளுக்கு மனவளர்ச்சி குறைவாக உள்ளதை சில பெற்றோர்கள் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். இதனால் ஆரம்ப கட்டத்திலேயே அவர்களுக்கு பயிற்சி அளிப்பது தாமதமாகிறது. பெற்றோர்களின் சிரமத்தை இந்த சமூகம் தனது சிரமமாக பார்க்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு உடற்பயிற்சி அளிப்போர் (Physiotherapy), தொழிற்பயிற்சி அளிப்போர் (Occupational therapy)  போன்றவர்களை முறைப்படுத்த எந்த சட்டமும் இல்லை. இவர்களுக்கு கொடுக்கும் தொகை மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு பெருத்த சுமையாகும். எனவே 10 கி.மீ.தூரத்திற்குள்  ஒரு சிறப்பு பள்ளியையாவது அரசு அமைக்க வேண்டும் ” என்றார் பார்வதி விஸ்வநாத்.

” மாற்றுத் திறனாளித்துறை ஆணையாளர் பதவி தமிழ்நாட்டில் ஓராண்டுக்கு மேலாக காலியாக உள்ளது.இந்தியாவில் உள்ள 12 கோடி மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய ஆணையராக ஒரு மாற்றுத் திறனாளிதான் உள்ளார்.15 ஆண்டுகளுக்கு மேலாக  மாற்றுத் திறனாளிகள் மத்தியில் பணிபுரிந்தவர்களைத்தான் கர்நாடகா,ஒரிசா, மகாராஷ்டிரா அரசுகள் ஆணையராக நியமித்துள்ளன. இதேபோல தமிழக அரசும் மாற்றுத்திறனாளியைத்தான் ஆணையராக நியமிக்க வேண்டும். 40 % ஊனமுள்ளவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 11,80,000  மாற்றுத் திறனாளிகள் உள்ளதாக அரசு சொல்கிறது. ஆனால் 16 இலட்சத்திற்கும் அதிகமான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், கணக்கெடுப்பு தவறாக உள்ளது,எனவே,விடுபட்டவர்களை சேர்க்க வேண்டும்.

சமூக நலத்துறையின்கீழ் மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் அமைக்கப்பட்டு உள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் 1500 ரூபாய் இந்த வாரியம் மூலம் வழங்கப்படுகிறது. தெலுங்கானா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் மாதம் மூவாயிரம் ரூபாய் தருகிறார்கள். தமிழக அரசு இதனை உயர்த்த வேண்டும். ஆனால் வாரியக் கூட்டம் நான்கு ஆண்டுகளாக நடக்கவில்லை.

இன்றைக்கு ஏதாவது ஒரு மாற்றுத் திறனாளி தி.தகர் சென்று, தனியாக பொருள் வாங்கிவர முடியுமா ? மா.சுப்பிரமணியன் மேயராக இருந்த போது மாற்றுத்திறனாளி மெரினா கடற்கரை சென்றுவரும் வகையில் தனியாக சாலை போட்டிருந்தார். இப்பொழுது அதை பயன்படுத்த முடியாது. எல்லா மாநகராட்சி திருமண மண்டபங்களுக்கும்  முதல் மாடிக்கு படிக்கட்டுகளில்தான் செல்ல வேண்டும். சென்னை மாநகராட்சி ஆணையாளர்தான் எல்லா கட்டடங்களும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றவகையில் உள்ளனவா என்று சரிபார்க்க வேண்டிய அதிகாரி என்பதுதான் இதில் விநோதமானது.

நான் கொரிய நாட்டிற்கு சென்றிருந்தேன்.அங்கு எல்லா பொருள்களுக்கும் 50 சத கழிவு மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்கிறார்கள்.மீதியை அரசு வியாபாரிகளுக்கு கொடுத்துவிடும்.

இந்தியாவில்  வேலைவாய்ப்பில் 4 சத இடஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்க வேண்டும். தனியார் நிறுவனங்களும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும். இவை சரிவர அமலாகின்றனவா என்பதைக் கண்காணிக்க மாவட்டம்தோறும் வேலைவாய்ப்புக் குழு அமைக்க வேண்டும். அதே போல போக்குவரத்துக்கு என தனியான குழு அமைக்க வேண்டும். இவை எதுவும் இப்போது அமைக்கப்படவில்லை. நாங்கள் இது போன்ற உரிமைகளை நிலைநாட்ட நீதிமன்றம் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு ?  அதில் எவ்வளவு செலவு செய்து இருக்கிறார்கள் என்று அரசு வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும் ” என்றார் சிம்மசந்திரன்.

41 சதம் மாற்றுத்திறனாளிகள் திருமணம் ஆகாமல் உள்ளனர். பார்வைக்கோளாறு, செவித்திறன், மனவளர்ச்சி என 21 விதமான குறைபாடுள்ளோர் மாற்றுத்திறனாளிக்கு உரிய பலனைப் பெறலாம். இதில் மூன்றில் ஒரு பங்கினருக்கே  அடையாள அட்டை உள்ளது. யாருக்கு எது நடக்கும் என சொல்ல முடியாது. திடீரென்று ஒரு விபத்து நடந்தால், நாம் கூட மாற்றுத்திறனாளியாக மாறிட நேரலாம். எனவே அவர்களை மனதில் வைத்து கட்டடங்களை வடிவமைப்போம்.அவர்களை கண்ணியமாக நடத்துவோம்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time