மு.க.முத்து தான் முதலில் கலைஞரின் அரசியல் வாரிசாக அறியப்பட்டார். திமுக மேடைகளில் கட்சியின் கொள்கை விளக்க பாடல்களை 1970 களில் பட்டிதொட்டியெங்கும் பாடியுள்ளார். எம்.ஜி.ஆருக்கு போட்டியாக சினிமாவில் களம் இறக்கப்பட்டார். ஆனால், பொல்லா குடிப் பழக்கம் அவர் வாழ்க்கை பாதையின் திசையை மாற்றி பெரும் வீழ்ச்சியைக் கண்டார்;
2006-ஆம் ஆண்டுவாக்கில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து, ‘மது போதைக்கு அடிமையாகி, குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, திருவாரூரில் சுய நினைவின்றி, அடிக்கடி அலங்கோலமான நிலையில், சாலையில் விழுந்து கிடப்பதாக’ வார இதழ் ஒன்றில் ஒரு கட்டுரை வெளியானது.
அப்போது நான் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளராகப் பணிபுரிந்து வந்தேன்.
மு.க.முத்து நடித்த திரைப்படங்களில் ஒரு படம் கூட நான் இது வரை பார்த்ததில்லை. ஆனால், அவர் நடித்த படங்களில் வரும் ‘காதலின் பொன் வீதியில்’, ‘மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ’, ‘மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி’ ஆகிய இனிமையான பாடல்கள் என்றென்றும் என் மனதைக் கவர்ந்தவை.
எம்ஜிஆர் திமுகவில் இருந்தபோது, அரசியலிலும் திரைப்படத்துறையிலும் கொடி கட்டிப் பறந்த காலக்கட்டத்தில், அவருக்குப் போட்டியாக கலைஞரால் திரைத்துறைக்குள் தள்ளப்பட்டவர் மு.க.முத்து என்ற பொதுவான ஒரு கருத்து உண்டு. அதை நிரூபிக்கும் வகையில், மு.க.முத்து நடித்த படங்கள் அனைத்திலும் அவரது நடை, உடை, பாவனைகள் அனைத்தும் அப்படியே எம்ஜிஆரை நம் மனக்கண்முன் கொண்டு வந்து நிறுத்தும்.
திமுக தலைவரின் மகன், முதலமைச்சரின் மகன், திரைப்பட நடிகர், பாடகர், பணபலம், செல்வாக்கு என இத்தனை சிறப்புகள் இருந்தும் தனது இளம் வயதில் ‘சேர்வாரோடு சேர்க்கை’ காரணமாக மது, மாது போன்ற தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி, அவரால் ஒரு சாதாரண மனிதனைப் போல கூட சமுதாயத்தில் ஒரு ‘அந்தஸ்துடன்’ வாழ முடியவில்லை.
மு.க.முத்து குறித்த செய்திகளால் எனக்கு ரொம்ப வருத்தம் ஏற்பட்டது. அவரை நேரில் சந்தித்து அவரது பள்ளி வாழ்க்கை, சினிமாத் துறையில் மறக்க முடியாத அனுபவங்கள் என அவரது வாழ்க்கையின் இன்னொரு அழகிய பக்கம் குறித்து செய்தி வெளியிட முடிவு செய்து திருவாரூர் சென்றேன்.
பஸ்சில் சென்று திருவாரூர் பேருந்து நிலையத்தில் இறங்கிய என்னை அப்போதைய திருவாரூர் மாவட்ட தினமணி செய்தியாளர் கல்யாணசுந்தரம் வரவேற்று, அவரது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். (கல்யாணசுந்தரத்தை அன்றுதான் முதன் முதலில் சந்தித்தேன். அன்று தொடங்கிய எங்களது நட்பு கடந்த ஆண்டு அவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறக்கும் வரை தொடர்ந்தது).
மு.க.முத்து அப்போது திருவாரூரை அடுத்த குளிக்கரை என்ற கிராமத்தில் ஒரு வீட்டின் பின்புறம் எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாத ஒரு மிகச் சிறிய குடிசையில் வசித்து வந்தார்.
நாங்கள் சென்றபோது மு.க.முத்து வீட்டில் இல்லை. குடிசை வீட்டிற்குள், அழுக்கடைந்த. கிழிந்த ஆடை அணிந்த ஒரு பெண், பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருந்தார். அப் பெண்ணுடன் தான் மு.க.முத்து தற்போது ‘குடித்தனம்’ நடத்தி வருவதாக அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் தெரிவித்தனர்.
“மு.க.முத்து எங்கே?,” என நண்பர் கல்யாணசுந்தரம் கேட்டதற்கு, அவர் வெளியே சென்றிருப்பதாக அப்பெண் பதிலளித்தார்.
எனவே, நாங்கள் இருவரும் அவரது வருகைக்காக அவ்வீட்டின் வெளியே ரோட்டில் காத்திருந்தோம். சுமார் ஒருமணி நேர காத்திருத்தலுக்குப் பின், “ஸார், அவர் வர்றார்,” என்றார் கல்யாணசுந்தரம்.
அவர் சொன்ன திசையில் திரும்பிப் பார்த்தேன். அங்கே ஒருவரும் எனது பார்வையில் படவில்லை.
‘எங்கே வர்றார்?’ என நான் கேட்டேன். “ஸார், தொப்பி அணிந்து ஒருத்தர் வர்றார் பாருங்க. அவர்தான் மு.க.முத்து,” என்றார் கல்யாணசுந்தரம்.
இப்போது அவர் என்னை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவர் எனதருகே நெருங்கியபோது திடீரென சாராய நெடி மூக்கைத் துளைத்து, குடலைப் புரட்டியது. வாந்தி வருவது போல குமட்டியது.
அவரது அலங்கோல நிலையைக் கண்ட எனக்கு ஒருகணம் தூக்கிவாரிப் போட்டது.
அதற்கு காரணம், அவர் ஒருகாலத்தில் திரைப்பட நடிகர் என்பதால் திரைப்பட ஸ்டில்களில் பார்த்த அவரது அழகிய உருவத்தை என் மனதில் நினைத்துக் கொண்டு நான் அவரை எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால். அவரோ பல நாட்களாக குளிக்காத, அழுக்கடைந்த, கசங்கிய ஆடைகள் அணிந்திருந்ததுடன், தலையில் அழுக்கடைந்த ஒரு தொப்பியும் அணிந்திருந்தார். அதனால் அவரை என்னால் சட்டென அடையாளம் காண முடியவில்லை. அவரா இவர்? என என்னால் நம்பவே முடியவில்லை.
ஒருவழியாக சுதாரித்துக் கொண்டு, அவரை வழிமறித்து, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை பேட்டி காண வந்திருப்பதாக கூறினேன். அவ்வளவு போதையிலும் அவர் ரொம்ப நிதானமாகவே இருந்தார். நாங்கள் சொன்ன தகவலை புன்முறுவலுடன் கேட்டுவிட்டு, எங்களை அக் குடிசை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
அங்கே உட்கார பாய் கூட இல்லை. அதனால் வெறுந் தரையில் தான் உட்கார்ந்தோம். குடிசையில் ஒரே ஒரு குண்டு பல்பு எரிந்து கொண்டிருந்தது. மின் விசிறிகூட இல்லை. அக் குடிசையில் எங்களுக்கு மின்விசிறி வசதிகூட இல்லாமல் அசௌகரியமாக இருப்பதற்காகவும், எங்களுக்கு குடிக்க டீ கூட தரமுடியாத தன்னுடைய நிலையையும் வருத்தத்துடன் கூறி, அதற்காக எங்களிடம் மன்னிப்பு கேட்டார் மு.க.முத்து.
என்னுடைய பெயரை கேட்ட மு.க.முத்து, மனதில் என்ன நினைத்தாரோ, தெரியவில்லை, தனக்கு நாகூர் ஆண்டவரை ரொம்ப பிடிக்கும் எனக்கூறி, ‘நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’ என்ற பாடலைப் பாடினார்.
பின்னர், எம்ஜிஆர் படத்தில் வரும் ‘உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக’ என்ற பாடலின் ஒருசில வரிகளையும், சிவாஜி படத்தில் வரும் ‘ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ’ என்ற பாடலின் ஒரு சில வரிகளையும் பாடினார்.
அதன் பின்னர், நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ‘சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப் பேருங்க’ என்ற பாடலை பாடிக் காட்டினார்.
ஏதோ பல ஆண்டுகள் பழக்கமானவர் போல எங்களிடம் எந்தவித தயக்கமும் இன்றி எங்களது முதல் சந்திப்பிலேயே கலகலவெனப் பேசினார். இன்று நினைத்தாலும் அக்காட்சி எனது கண் முன்னே தோன்றுகிறது.
“சென்னையில் எஸ்எஸ்எல்சி தேர்வில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, திருச்சி மெயின்கார்ட் கேட் அருகேயுள்ள ஒரு பள்ளியில் என்னை சேர்த்துவிட்டாங்க. ஆனால் அங்கேயும் நான் ஒழுங்கா படிக்கல. ஃபெயிலாகிட்டேன்,” என்றார் மு.க.முத்து.
“எனக்கும் எங்க அப்பாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நானும் எஸ்எஸ்எல்சியில் ஃபெயில். அவரும் எஸ்எஸ்எல்சியில் ஃபெயில். ஆனா அவர் வாழ்க்கையில் போராடி ஜெயிச்சு முதலமைச்சரா ஆகிவிட்டார். நான் தான் வாழ்க்கையிலும் தோற்றுவிட்டேன்,” என சிரித்தவாறே கூறினார். அப்போது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அவரது மனதில் உள்ள வலியை என்னால் உணர முடிந்தது.
“என்னை எப்படியாவது வாழ்க்கையில் முன்னுக்கு கொண்டு வரணும்னு எங்கப்பா ரொம்ப முயற்சி பண்ணினார். ஆனால் நான் தான் அவரது பேச்சைக் கேட்டு நடக்காம, அவருக்கு ஏமாற்றத்தையும், மன வருத்தத்தையும் ஏற்படுத்திவிட்டேன்,” எனக்கூறி வருத்தப்பட்டார் மு.க.முத்து.
சினிமாத் துறையில் நுழைந்தது குறித்து கேட்டதற்கு, ‘அதற்கும் எங்கப்பா தான் காரணம்,’ என்றார், மு.க.முத்து.
“எனக்கு சினிமாவில் நடிக்க கொஞ்சஞ் கூட விருப்பம் இல்லை. ஆனால், எங்க அப்பா தான் என்னை பெரியப்பா (எம்ஜிஆர்) மாதிரி ஆக்கணும்னு ஆசைப்பட்டு என்னை வற்புறுத்தி சினிமாவில் நடிக்க வெச்சார். ஆனா, எங்க பெரியப்பாவுக்கு என்மேல எப்பவுமே ரொம்ப பிரியம். எங்க அப்பாமீது அவருக்கு கோபம் இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாம நான் நடிச்ச ‘பிள்ளையோ பிள்ளை’ பட சூட்டிங்கிற்கு வந்திருந்ததோடு, படப்பிடிப்பை கிளாப் அடிச்சு தொடங்கி வச்சார் பெரியப்பா. நான் திரைத் துறையில் வெற்றி பெற்று பெரிய ஆளா வரணும்னு மனசார வாழ்த்தினார்,” என்றார் மு.க.முத்து.
எம்ஜிஆரை பெரியப்பா என்றே குறிப்பிட்டு, வார்த்தைக்கு வார்த்தை அவரை புகழ்ந்து பேசினார்.
“சிவாஜி சித்தப்பாவின் படங்களைவிட எனக்கு பெரியப்பா (எம்ஜிஆர்) நடிச்ச படங்கள் தான் ரொம்ப பிடிக்கும். அவர் நடிச்ச படங்களை பலமுறை ஸ்கூலுக்கு ‘கட்’அடிச்சிட்டு தியேட்டருக்குப் போய் பார்த்து ரசிச்சிருக்கேன்.
எங்க பெரியப்பாவுக்கும் என் மேல ரொம்ப பிரியம். அவரை நான் எப்போ சந்திச்சாலும், என்னை சிரித்த முகத்துடன் வரவேற்று ரொம்ப அன்பாக பேசுவார். ‘அப்பாவின் பேச்சைக் கேட்டு நடந்து வாழ்க்கையில் முன்னுக்கு வரணும்’னு எனக்கு அடிக்கடி புத்திமதி சொல்வார்,” என்றார் மு.க.முத்து.
“எங்க பெரியப்பா (எம்ஜிஆர்) இந்நேரம் உயிரோடு இருந்திருந்தா, இந்த அளவுக்கு என்னோட நிலைமை மோசமா ஆகியிருக்காது. அரசியல் என்ற சனியன் தான் எங்க அப்பாவையும், பெரியப்பாவையும் பிரிச்சிருச்சு,” எனக் கூறிவிட்டு கொஞ்ச நேரம் எதுவும் பேசமுடியாமல் அமைதியானார் மு.க.முத்து. அப்போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
தன்னுடன் ஜோடியாக நடித்தவர்களில் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவை ரொம்ப பிடிக்கும் எனக் கூறினார்.
‘லட்சுமி, மஞ்சுளா, வெண்ணிற ஆடை நிர்மலா ஆகிய மூவருமே ரொம்ப சீனியர் நடிகைகள். ஆனா, அதையெல்லாம் கொஞ்சங்கூட பொருட்படுத்தாம என்னோட படத்தில எனக்கு ஜோடியா நடிச்சாங்க. உண்மையிலேயே, அவங்களுக்கு ரொம்ப பெரிய மனசு” என்றார் மு.க.முத்து.
அதே போல, நடிகர் ரவிச்சந்திரன் தான் தனக்கு முதன் முதலில் ‘தண்ணியடிக்க’ கத்துக் கொடுத்ததாக கூறினார் மு.க.முத்து.
“நடிகர் ரவிச்சந்திரன் எங்க உறவினர். அவர் எனக்கு மாமா முறை வேண்டும். எனக்கு முதன் முதலில் தண்ணியடிக்க கத்துக் கொடுத்ததே அவர் தான். அன்னைக்கு குடிக்க ஆரம்பிச்சது தான் அதன் பிறகு, எவ்வளவோ முயற்சி செய்தும், என்னால் குடிப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. எனது வாழ்க்கையே நாசமாகிவிட்டது,” என்றார் மு.க.முத்து.
கலைஞர் உள்பட தனது நெருங்கிய உறவினர்கள் யாரும் தன்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை எனக்கூறி வருத்தப்பட்டு கண்ணீர் சிந்தினார்.
அவரது நிலையைக் கண்டு எனக்கு பரிதாபம் ஏற்பட்டது. என்னிடம் அப்போது சட்டைப் பையில் ரூ 300 இருந்தது. அதனால் அதில் ரூ100 கொடுக்கலாமா? என யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால், அதை அவர் ஏற்றுக் கொள்வாரா? என மனதில் ஒரு தயக்கம் இருந்தது.
இந் நிலையில், பேட்டி முடிந்து நானும் நண்பர் கல்யாணசுந்தரமும் எழுந்து கிளம்ப தயாரானோம்.
அப்போது சற்றும் எதிர்பாரா வகையில், “ஏதாவது பணம் இருந்தா கொடுங்க, ஸார்,” எனக் கேட்டார் மு.க.முத்து. இதை நாங்கள் இருவரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதனால் நான் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் ஒருவழியாக சுதாரித்துக் கொண்டு எனது சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்து அதில் ரூ200ஐ அவரிடம் கொடுத்தேன். ரூ100 கொடுத்தால் நாகரீகமாக இருக்காது எனக் கருதி ரூ200 கொடுத்தேன். ஆனால் அவர் மீதி 100 ரூபாயையும் தருமாறு கேட்டார்.
அதற்கு நான், “ பணம் தருவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்த பணம் நான் ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிச்சது. ஆனா நீங்க அதை தண்ணியடிக்க கேட்கிறீங்க. அதனால உங்களுக்கு கொடுக்க கொஞ்சம் தயக்கமாக இருக்கு. இந்த பணத்தை தண்ணியடிக்க பயன்படுத்த மாட்டேன் என நீங்க ஒரு உறுதி கொடுத்தீங்கன்னா நான் என்னிடமுள்ள மீதி 100 ரூபாயையையும் தருகிறேன்,” என என் மனதில் பட்ட கருத்தை தெரிவித்தேன்.
எனது வார்த்தைகளைக் கேட்டு சிறிது நேரம் சிரித்தபடியே அமைதியாக நின்றிருந்த மு.க.முத்து, ‘நிச்சயமாக இந்த பணத்தில் தண்ணியடிக்க மாட்டேன். சாப்பாடு தான் வாங்குவேன்,” எனக் கூறினார்.
அவரது வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும், ஒரு முதலமைச்சரின் மகன் என்னிடம் கையேந்தும் நிலையை நினைத்து மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால் என்னிடம் மீதம் இருந்த 100 ரூபாயையும் அவரிடம் கொடுத்தேன். அதை, அவர் சிரித்த முகத்துடன் தனது இருகைகளையும் நீட்டி வாங்கிக் கொண்டார்.
அங்கிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் வந்தடைந்த நான், இச் செய்தியை எனது அலுவலகத்தில் இருந்த மோடத்தில் அடித்து, திருச்சி அலுவலகத்துக்கு அனுப்பினேன்.
ஒரு மணி நேரம் கடந்த நிலையில், சென்னை அலுவலகத்திலிருந்து தலைமை செய்தியாளர் டி.என். கோபாலனிடமிருந்து எனக்கு ஃபோன். “இர்ஷாத், மு.க.முத்து பற்றிய உன்னோட செய்தியை படிச்சேன். ரொம்ப அருமையா இருக்கு. அனேகமா ‘ஆல் எடிஷன்ல’ முதல் பக்க செய்தியா போடலாம் என நினைச்சிருக்கேன்,” எனக் கூறிவிட்டு, “மு.க.முத்துவின் தற்போதைய நிலை குறித்து புகைப்படம் எதுவும் இருந்தால், அதை உடனடியாக அனுப்பு,” என்றார் டிஎன்ஜி.
என்னிடம் தற்போது மு.க.முத்துவின் புகைப்படம் எதுவும் இல்லை எனக் கூறிய நான், அதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறிவிட்டு, உடனடியாக நண்பர் கல்யாணசுந்தரத்தை தொடர்பு கொண்டு மு.க.முத்துவை புகைப்படம் எடுத்து அதை திருச்சி அலுவலகத்துக்கு நேரடியாக அனுப்புமாறு கூறினேன். ஆனால், தற்போது இருட்டி விட்டதால் போதிய வெளிச்சம் இல்லை, அதனால் படம் எடுக்க முடியவில்லை என்று கல்யாணசுந்தரம் கூறினார். அத்தகவலை நான் அலுவலகத்தில் தெரிவித்து விட்டேன்.
Also read
இந்நிலையில், அதற்கடுத்த ஒருமணிநேரம் கழித்து, மீண்டும் சென்னை அலுவலகத்திலிருந்து டி.என்.கோபாலனிடமிருந்து ஃபோன்.
“ஐ ஆம் வெரி ஸாரிப்பா. உன்னோட செய்தி ரெசிடென்ட் எடிட்டருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா, இந்த சமயத்தில இப்படி ஒரு செய்தியை போட்டா கலைஞர் கோவிச்சுக்குவார் என நம்ம சேர்மன் (மனோஜ்குமார்) சொந்தாலியா ரொம்ப ஃபீல் பண்றார். அதனால் உன்னோட இச்செய்தியை நம்ம பத்திரிகையில் போட வேண்டாம் என அவர் சொல்லிவிட்டார்,” எனக் கூறிய டிஎன்ஜி, “என்ன செய்வது? சில சமயம் இப்படியெல்லாமும் நடக்கும். இதுக்காக வருத்தபடாதீங்க. மனசை தளரவிடாதீங்க,” என ஆறுதல் கூறினார்.
அதைக் கேட்டு எனக்கு வருத்தம் ஏற்பட்டது. டிஎன்ஜி கூறியபடி, நான் ஆர்வமுடன் அனுப்பியிருந்த அச் செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பிரசுரமாகவில்லை.
கட்டுரையாளர்; இர்ஷாத் அகமது
மூத்த பத்திரிகையாளர்
குறிப்பு; கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் ஒரே மகன் மு.கமுத்து. பிறக்கும் போதே தாயை பறிகொடுத்தவர். கலைஞர் மறைவுக்கு பிறகு மு.க முத்து தந்தையின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திய செய்தி ஊடகங்களில் வந்தது. அப்போது கைத்தாங்கலாக இருவர் அவரை அழைத்து வந்தனர். பிறகு அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஏற்பாட்டில் உயர்தர சிகிச்சை பெற்று வரும் தகவலும் தெரிய வந்தது. சமீபத்தில் மு.க.முத்துவின் மகள் வழி பேத்தியான தாரணிக்கும், ஆகாஷ் பாஸ்கரன் என்ற சினிமா தயாரிப்பாளருக்கும் மிக விமரிசையாக திருமணம் நடந்தது. இத் திருமணத்தை முதல்வர் ஸ்டாலினும், அவரது மனைவியும் முன்னின்று நடத்தி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அருமையான செய்தி. பத்திரிகையில் வராத செய்தியை படிக்க கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
முக.முத்து தனக்கு கிடைத்த நல்லதொரு வாழ்க்கையை அவராகவே சீரழித்துக் கொண்டு
விட்டவர்.. மற்றவரை குறை சொல்லி ஒரு பிரயோசனமில்லை… ஆனால் அவரின் சினிமா கேரியரை சீரழிக்க அப்போது ஒரு குரூப்பே எம்ஜிஆர் உட்பட பின்புலததில் வேலை செய்ததாக ஒரு தகவல் அப்போது உலவியது…அதில் மாட்டிக் கொண்டவரால் மீள இயலவில்லை… பாவம்..
தமிழ்நாட்டில் கடை திறந்து சாராய வெள்ளத்தைப் பார்த்த கருணாநிதியின் மூத்த மகன் முத்து சாராயத்துக்கு அடிமை ஆகி விட்டார். கருணாநிதி குடும்பம் இன்னும் திருந்தவில்லை. சாராய ஆலைகள் திறந்தும் தமிழ்நாடு முழுவதும் கடைகள் திறந்தும் சாராயம் விற்கிறது. இந்தப் பாவம் அந்தக் குடும்பத்தைச் சும்மா விடாது