காதல் , குடும்பப் பிரச்சினை, சொத்து தகராறு ஆகியவற்றில் காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகள் சிலவும், கட்ட பஞ்சாயத்து அரசியல்வாதிகளும் எப்படி கைக்கோர்த்து செயல்பட்டு வருகின்றனர் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சி; பூவை ஜெகன் மூர்த்தி மாட்டிக் கொண்டார். மற்ற கட்சிகளின் கட்டப் பஞ்சாயத்து பேர் வழிகள் சிக்குவார்களா?
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து சட்டப்படி பதிவு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பெண்ணின் வீட்டாருக்கு உடன்பாடில்லை.. தன்னை மீறி மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை வனராஜா, காதல் ஜோடிகளை பழிவாங்கத் திட்டமிடுகிறார்.
தேனி மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் மணிகண்டன் என்பவர் உதவியுடன் கொடைக்கானலைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண்ணின் அறிமுகம் வனராஜாவுக்கு கிடைக்கிறது. இவர் போலிஸ்துறையில் கான்ஸ்டபிளாக முன்பு இருந்தவர். இந்த மகேஸ்வரி தனக்கு நெருக்கமான ஏடிஜிபி ஜெயராமிடம் மேற்படி விவகாரத்தை கொண்டு போய் இந்த விவகாரத்தை முடித்துக் கொடுத்தால் பெண்ணின் தந்தை கணிசமாக பணம் தர தயாராக உள்ளதை கூறியவுடன் ஏடிஜிபி பூவை ஜெகன்மூர்த்தியுடன் பேசி இருவரும் சேர்ந்து திட்டம் தீட்டித் தான் ஜோடியை கடத்த திட்டம் தீட்டுகின்றனர்.
மகேஷ்வரியிடம் காரியத்தை ஒப்படைக்கின்றனர். இவர்களின் ஏற்பாட்டின் பெயரில் கூலிப்படையினர் மூலம் அந்த இளைஞரின் வீட்டிற்கு சென்று காதல் ஜோடியை கடத்த முயன்ற போது காதல் ஜோடி வீட்டில் இல்லாத காரணத்தால்.. மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த அந்த இளைஞரின் தம்பியான சிறுவனை கடத்தினார்கள். கடத்தலுக்கு பயன்பட்டதே ஒரு காவல்துறை வாகனம் தான். TN 06 G 0606 என்ற எண் கொண்ட அந்த போலீஸ் வாகனத்தை மகேஷ்வரிக்கு தந்தவர் ஏடிஜிபி ஜெயராம் என்பதில் தான் காவல்துறையின் உயர் நிலையில் எவ்வளவு கறை படிந்தவர் இத்தனை காலமாக இயங்கி உள்ளார் என்பது தெரிகிறது. இது போல எத்தனை சம்பவங்களை இவர் நிகழ்த்தி இருப்பாரோ..?
பையனின் குடும்பதார் அளித்த புகாரின் பேரில் லோக்கல் காவல்துறை களத்தில் இறங்கிய பிறகு தான் பற்பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகின்றன. சக போலீஸ் அதிகாரி சம்பந்தட்டது என்பதால் கமுக்கமாக விசாரணையை முடித்து முதலில் ஜெகன் மூர்த்தியை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
மடியில் கனம் இருந்ததால் அச்சப்பட்ட ஜெகன் மூர்த்தி ஆதரவாளர்களை திரட்டி வழக்கம் போல கெத்து காட்டி இருக்கிறார். பிறகு போலீசுக்கு தெரியாமல் அஞ்சி தலைமறைவாகி கோர்ட்டில் ஜாமீன் கேட்டுள்ளார். ஆனால், அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் தன் படை பலம் நீதிபதிக்கும் தெரிய வேண்டும் என அவர் வீட்டை சுற்றி ஆட்களை போட்டுள்ளார். இது நீதிபதியை சங்கடப்படுத்தி கோபம் கொள்ள வைத்துள்ளது.
அதனால் தான் பூவை ஜெகன் மூர்த்தியை நேரில் வரவழைத்து அடுக்கடுக்காக கேட்டுள்ளார்;
இது என்ன படப்பிடிப்பு தளமா? இவ்வளவு ஆட்களை சேர்த்து ஏன் கூட்டம் கூட்டுகிறீர்கள்! உங்களுடைய செயலால் நீதிபதி அஞ்சிவிடுவார் என நினைத்தீர்களா? இப்படி நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கபடும். உங்களை ஓட்டு போட்டு சட்டமன்றத்திற்கு அனுப்பிய மக்கள் தங்களின் குரலாக நீங்கள் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என அனுப்பினார்களா? இப்படி கட்டப் பஞ்சாயத்து செய்ய அனுப்பினீர்களா? நீதிமன்றம் நினைத்திருந்தால் 10 நிமிடங்களில் உங்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்க முடியும். உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மதிப்பளித்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி தனியாகத்தான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
நீதிபதியின் ஒவ்வொரு கேள்விக் கணையும் மக்கள் மனதில் இருந்தவை. இது போன்ற அரசியல்வாதிகளை பார்த்து என்றாவது நெஞ்சை உலுக்குவது போல யாராவது நிஜத்திலே கேட்கக் கூடாதா? என்று நீண்ட காலமாக இருந்த தவிப்பு!
காதல் திருமணங்கள் பலவற்றில் இது போல அராஜக அரசியல்வாதிகளின் தலையீடு என்பது பல காலங்களாகவே இருக்கிறது. இதில் தன் சாதிக்கு ஆதரவாக கண்ணை மூடிக் கொண்டு அராஜகம் செய்பவர்களும் உண்டு. அல்லது சாதியைக் கடந்து பணம் பறிக்கும் வாய்ப்பாக சட்டத்தை துச்சமாக மதிப்பவர்களும் உள்ளனர். இந்த வழக்கை பொறுத்த வரை பெண் வீட்டார் தந்த பணத்திற்காகத் தான் பூவை ஜெகன் மூர்த்தியும் சரி, ஏடிஜிபி ஜெயராமும் செயல்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.
மேஜரான ஆணும், பெண்ணும் காதலித்து திருமணம் செய்ய முடிவெடுத்தால் அதை ஒன்று அங்கீகரிக்கலாம். அல்லது அவர்களிடம் இருந்து விலகி நிற்கலாம். ஆனால், அந்த இருவரை பிரிப்பதற்கான அதிகாரம் கோர்ட்டுக்கே கிடையாது என்றால், காவல்துறைக்கும் இல்லை என்பது தெளிவு.
தமிழ்நாட்டில் இது போன்ற காதல் விவகாரங்களில் போலீஸார் பணபலம் அல்லது சாதிபலம் உள்ளவர்கள் பக்கம் சாய்ந்து பல நேரங்களில் அநீதிகள் அரங்கேறக் காரணமாக இருந்துள்ளனர் என்பது வருத்தம் தரும் உண்மை. ஆனால், அதையும் கடந்து நேர்மையாகவும், மனிதாபிமானத்துடனும் சாதி பலம் பணபலம், அரசியல் பலம் இவற்றுக்கு அடிபணியாமல் செயல்படும் காவலர்களும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றனர்,.
சரியான துணையை தேர்ந்தெடுப்பதற்கான தெளிவையும், புரிதலையும் தங்கள் பிள்ளையிடம் ஏற்படுத்தி, வளர்க்கும் பெற்றோர்கள் இது போன்ற விவகாரங்களை அறிவுபூர்வமாகவும், நிதானமாகவும் தான் அணுகுவார்கள். அந்தக் கடமையைச் செய்ய மறந்த பெற்றோர்கள் விளைவுகளின் விபரீதத்தை அனுபவிக்க நேர்கிறது.
இந்தச் சூழ்நிலைகளில் தங்களிடம் உள்ள பணபலத்தால் கட்டப் பஞ்சாயத்து சாதியத் தலைவர்களையோ, ரவுடிகளையோ, அராஜக அரசியல்வாதிகளையோ நம்பி செய்யக் கூடாத செயல்களை செய்யும் பெற்றோர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடமாகட்டும்.
Also read
அதே போல காதல் விவகாரங்களில், குடும்ப விவகாரங்களில், சொத்து தகராறு போன்றவற்றில் ஈடுபடும் கட்டப் பஞ்சாயத்து அரசியல் தலைவர்களுக்கும் மேற்படி விவகாரம் ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். பூவை ஜெகன்மூர்த்தி கையும், களவுமாக மாட்டிக் கொண்டார். ஆனால், இதில் மாட்ட வேண்டியவர்கள், சிறைக் கம்பிகளின் பின்னால் தள்ளி பூட்ட வேண்டியவர்கள் தமிழ் நிலவெளியெங்கும் வலம் வந்து கொண்டு தான் உள்ளனர். தங்களிடம் உள்ள ஆள்பலத்தை அலறவிடுவது இவர்களின் வாடிக்கை. சட்டத்தின் முன்பு, நீதியின் முன்பு, அறத்தின் முன்பு இந்த ஆள்பலத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்பது மட்டுமல்ல, அதுவே அவர்களுக்கு பின் அடைவாகிவிடும் என்பதையும் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட அராஜகத்தில் ஈடுபடுபவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தால் என்பதில்லை, அமைச்சராகவோ, முதல்வராகவோ இருந்தால் கூட அது தண்டிக்கப்பட வேண்டிய தவறு தான்.
ஒரு சட்டவிரோதச் செயலை செய்ய காவல்துறையின் உயர் அதிகாரி ஏ.டி.ஜி.பி ஜெயராமன், பூவை ஜெகன் மூர்த்தியின் உதவியை நாடி உள்ளதும், ஒரு கட்சித் தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அறியப்பட்ட பூவை ஜெகன் மூர்த்தியின் வழிகாட்டலில் இந்த கடத்தல் நடந்துள்ளதும் பெரும் தலைக்குனிவாகும். ஏடிஜிபி ஜெயராம் கைதாகி சஸ்பெண்ட் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டு உள்ளார். இது போதுமானதல்ல, இந்த வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் சட்டப்படி எடுக்கப்படும் உறுதியான நடவடிக்கைகள் மட்டுமே இது போன்ற கட்டப் பஞ்சாயத்து அரசியல்வாதிகளுக்கும், காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளுக்கும் பாடமாக இருக்கும். தவறுகள் தொடராமல் இருக்கவும் வழி வகுக்கும்.
சாவித்திரி கண்ணன்
Leave a Reply