கட்டணமில்லாமல் கடவுளை தரிசிக்க முடியாது என்ற சூழ்நிலைமைகள் உருவாகிக் கொண்டுள்ளதா…? வருமானமே பிரதானம் என கோயில்கள் செயல்பட்டால் அவமானமே பக்தர்களுக்கு கிடைக்கும் பரிசாகிவிடாதா..? அருள் தேடிச் செல்லும் இடத்தில் நெஞ்சில் இருள் கூடி இருப்பவர்கள் அதிகாரம் செய்தால் என்னாவது..?
கோயில் நுழைவு போராட்டமா?
இப்போதும் தேவைப்படுகிறதா?
இதென்ன விந்தை? என்று முதலில் ஆச்சரியம் ஏற்பட்டது!
பின்பு தான் கோயில் வியாபார சந்தையாக்கப்பட்டதால், ஏற்பட்டுள்ள விபரீதம் எனப் புரிந்தது.
இராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் தான் இந்த கோயில் நுழைவு போராட்டம் நடந்துள்ளது. உள்ளுர் மக்கள் கட்டண தரிசன வரிசையில் செல்லும்படி நிர்பந்திக்கப்பட்டதால் இந்த போராட்டமாம்!
இந்த கோவிலுக்கு இந்தியாவின் பல பகுதிகளீல் இருந்து அதிக வெளியூர்காரர்கள் வருவதால் தினசரி கோவிலுக்கு வரும் உள்ளூர் மக்களுக்கென ஒரு நுழைவு வழியை பல ஆண்டுகளாக ஏற்படுத்தி, அது பயன்பாட்டில் இருந்த நிலையில், அதிரடியாக அற நிலையத் துறை அந்தப் பாதையை உள்ளுர் மக்களுக்கு மறுத்து, ”கட்டணப் பாதையில் வாங்க, ஆனால், கட்டணம் தரத் தேவையில்லை” எனக் கூறியுள்ளனர்.
‘கட்டணம் தரத் தேவையில்லை’ என்றாலும், அப்பகுதியில் கூட்ட நெரிசல் மிக அதிகமாக உள்ளது. அப்பகுதியில் சென்று மிக நீண்ட நேரம் வரிசையில் நிற்பதால் அன்றாடம் கோவிலுக்கு வரும் உள்ளுர்வாசிகள் சாமி தரிசனத்திற்காக நீண்ட நேரம் காத்திருப்பு தினசரி நிகழும் பட்சத்தில் அவரவர் பணிக்கு செல்வதில் அதீத தாமதம் ஏற்படுகிறது. காலங்காலமாக காலையில் எழுந்ததும் குளித்து திருநீறுபூசி கோவிலுக்கு வந்து சாமியை வழிபட்ட பிறகு, தங்கள் அன்றாட கடமைகளை செய்வது இராமேஸ்வரம்வாசிகளின் தொன்று தொட்டு இருந்து வரும் – பாட்டன், முப்பட்டன் காலத்து – வழக்கமாகும். அதற்கு தடை போடாதீர்கள். மேலும், கோவில் பிரகாரத்தை சுற்றி வருவதற்கும் பல கம்பி தடுப்புகள் வைத்து தடை ஏற்படுத்தியுள்ளனர் என்பது உள்ளூர்வாசிகள் வேதனை.
பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. ஆனால், அறநிலையத் துறை பிடிவாதமாக இருக்கிறது. வெளியூர்வாசிகள் வருவதால் வருமானம் குவிகிறது. உள்ளுர்வாசிகள் கோவிலுக்கு வருவதால் வருமானம் குறைகிறது என்ற தன்மையில் அறநிலையத் துறை அதிகாரிகள் கருதுகிறார்கள் என்பது மக்கள் வைக்கும் குற்றச்சாட்டு.
அதனால் கோவில் நுழைவு போரட்டத்தை கட்சிகள், இந்து இயக்கங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலப் பேரவை உருவாக்கி நடத்தியுள்ளனர். ஆயினும், இதில் மக்களோடு மக்களாக கலந்து தங்கள் ஆதரவை தந்துள்ளனர் உள்ளுரில் உள்ள திமுக தவிர்த்த அனைத்து கட்சியினரும். அந்த வகையில் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, தேமுதிக ,மக்கள் நீதி மையம் என பலரும் களம் கண்டு போராடி இருக்கும் செய்தி கவனத்திற்கு உரியதாகும்.
மக்கள் நல பேரவை சார்பில் கோயிலில் உள்ளுர் மக்களுக்கான வழித் தடத்தில் தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி, மேற்கு கோபுர கோயில் வழியாக தடுப்புகளை தாண்டி 500-க்கும் மேற்பட்டவர்கள் போராடியுள்ளனர். காவல் துறையினர் மூன்று இடங்களில் தடுப்புகள் அமைத்து தடுப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் பெண்கள், பெரியவர்கள் உள்ளிட்டோர் தடுப்புகளை தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல முயன்று கைதாகியுள்ளது அலட்சியபடுத்தக்கூடியதல்ல.
விரைவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீரங்கம் கோவில், திருசெந்தூர் முருகன் கோயில், தஞ்சை பெரிய கோவில்… போன்றவற்றிலும் உள்ளுர்வாசிகள் கிளர்ந்து எழுந்து போராடக் கூடிய சூழ்நிலைகள் ஏற்படலாம். கோவில் வர்த்தகமயமாக்கப்பட்டதன் விளைவாகத் தான் இதை பார்க்க வேண்டியுள்ளது. சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்த்து பணம் ஈட்ட வேண்டும் என்ற முனைப்பினால் உள்ளூர்வாசிகளுக்கு தங்கள் சொந்த மண்ணின் கோயிலே அன்னியப்படுத்தப்படுகிறது.
தங்கள் வீட்டு விஷேசம் என்றாலும், துக்கம் என்றாலும் மக்கள் நாடுவது கோவிலைத் தான். ஏழை, எளிய உள்ளுர் மக்கள் தங்கள் திருமணங்களை கோவில்களில் தான் நடத்துகின்றனர். ராமேஷ்வரத்தை பொறுத்த வரை உள்ளுர்வாசிகள் இறந்தால் கோவிலுக்கு சென்று தீர்த்தம் வாங்கி அமரர் உடலில் தெளிக்காமல் அடக்கம் செய்யமாட்டார்கள். இதற்கான நடைமுறைகளில் எந்தச் சிக்கலும் இருக்கக் கூடாது. இது போன்ற விவகாரங்களில் எந்த ஆட்சியாளர்கள் தடை ஏற்படுத்தினாலும் அவர்கள் மீது மக்கள் கடும் கோபம் கொள்வார்கள்.
கோவில் என்பது சாதாரண மக்கள் தங்கள் உள்ள சாந்திக்காக செல்லும் புகழிடமாகும். வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாத தங்கள் மனவேதனைகளை அவர்கள் ஆண்டவனிடத்தில் கூறி அவனிடம் சரணடைந்து ஆறுதல் பெற்றுச் செல்கின்றனர். இதனால் பல அசம்பாவிதங்கள் தவிர்க்கபடுகின்றன. ஒவ்வொரு கோயிலும் உள்ளுர்வாசிகளின் மனநலக் காப்பகம் என்றால், அது மிகையில்லை.
Also read
இந்த விவகாரத்தில் அற நிலையத் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மட்டத்தில் ஒரு முடிவை எட்ட முடியாது. மக்கள் உணர்வு சம்பந்தப்பட்டது. அறநிலையத் துறை அமைச்சர் உள்ளுர் திமுக தலைவர்களிடம் நிலவரத்தைக் கேட்டறிந்து துரிதமாக செயல்பட வேண்டும்.
தங்கள் சொந்த மண்ணிலே தாங்கள் காலம் காலமாக வழிபட்டு வரும் சாமியை தரிசிப்பது என்பது அந்த மக்களின் அடிப்படை உரிமையாகும். அந்த உணர்வை மதித்து அவர்களை வழக்கம் போல அனுமதிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகும்.
சாவித்திரி கண்ணன்
நீங்கள் எழுதியது அனைத்தும் உண்மை தான். ஆனால் உங்கள் கருத்து மதவாத சகதிகளுக்கே துணை செய்யும்.ஒரு எளிய உழைப்பாளி வாழ்வில் வழிபாடு,கோயில் தரிசனத்திற்கான நேரம் ஏது? எவ்வளவு ?அவர்களை கோயிலுக்கு அனுப்புவது தான்
நமது நோக்கம் என்றால் அது பாஜக வுக்கே
உதவும்.உங்கள் பதிவுப்படி மக்கள் நலக்கூட்டணியில உள்ளனர்!-
நெய்வேலி பாலு