அமெரிக்க – இஸ்ரேல் கூட்டணியை எதிர்க்கத் துணிந்த ஈரான்!

-ச.அருணாச்சலம்

டிரம்ப் ஆழந்தெரியாமல் காலை விடுகிறார். ஈராக், லிபியா, சிறியாவைத் தொடர்ந்து ஈரானைத்  அழிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார். அதே சமயம் இஸ்ரேலின் அடியாளாக அமெரிக்கா போரில் இறங்கினால், அது மேற்கு ஆசியப் பகுதியை மட்டும் பாதிக்காது, உலகம் முழுவதையுமே பாதிப்புக்கு உள்ளாக்கும்;

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஈரான் மீது ஜூன் -13 ந்தேதி அதிரடி தாக்குதல் நடத்தி ஈரானின் ராணுவ தலைமை தளபதி மற்றும் ஆறு அணு விஞ்ஞானிகளை கொன்று இன்றுடன் ஒரு வாரமாகிறது.  அமெரிக்காவுடன் ஈரான் அணுசக்தி பயன்பாடு குறித்து பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கையில், இஸ்ரேல் பல நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஈரானின் மீது தாக்குதல் நடத்தியது கிரிமினல் குற்றமாகும் .

இதனால், அதிர்ச்சியுற்ற ஈரான் சுதாரித்துக் கொண்டு எதிர்த் தாக்குதல்களை இஸ்ரேலின் மீது தொடுத்துள்ளது.

நெதன்யாகுவின் முடிவு திடீர் முடிவு அல்ல, இன்று நேற்று எடுத்த முடிவும் அல்ல;

இது இருபது ஆண்டுகளுக்கு முன்னாலேயே எடுத்த முடிவு. மத்திய கிழக்கு பகுதியில் ஆதிக்க மிக்க ஒரே நாடாக இஸ்ரேலை மாற்றுவதற்கு தடையாக இருக்கும் நாடுகளில் ஈரான் முதன்மையானது. அந்த நாட்டை வீழ்த்த அன்று(1995) வகுத்த திட்டம் தான் அணு ஆயுத ஒப்பந்தம் (கிளிண்டன் ஆட்சியின் போது போடப்பட்ட ஒப்பந்தம்) அமெரிக்காவின் பல தடைகளை கடந்து, ஈரான் நிமிர்ந்து நிற்கையில், மேற்கு ஆசியாவில் இஸரேலின் ஆதிக்கம் முழுமை பெறாது என்பதால் ஈரானை சண்டைக்கிழுத்து பலவீனப்படுத்தி அழிக்க அன்றிலிருந்து காய் நகர்த்துகிறது இஸ்ரேல். இன்று டிரம்ப் ஆட்சியில் இருப்பதால், அவரை இழுத்து போரில் தள்ளினால் ஒரே கல்லில் இரு மாங்காய்கள் என இஸ்ரேல் எண்ணியே இப்போரில் இறங்கியுள்ளது.

இந்த வம்பான தாக்குதலை பல நாடுகள் கண்டித்த போது, வெள்ளையர் நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் ஜெர்மனி ஆகிய நாடுகள் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேலை கண்டிக்கவில்லை என்பதை விட, அத்தாக்குதலை நியாயப்படுத்தினர். ஈரானின் அணு ஆலைகளை மூட வேண்டும் , ஈரான் யுரேனியம் தயாரிப்பதை அனுமதிக்க முடியாது என்ற பல்லவியை மீண்டும் பாட ஆரம்பித்துள்ளனர். அதே சமயம் ஈரான் மீதான தாக்குதலை ரஷ்யா, சீனா,லாவோஸ் போன்ற நாடுகள் கண்டித்துள்ளன.

1995 ஆண்டு முதலே ஈரான் மீது அமெரிக்காவின் பொருளாதார தடை இருந்த போதும், தனது நாட்டின் வளர்ச்சிக்காக ஈரான் அணு சக்தி சுத்திகரிப்பை மேற்கொண்டது. இது ஒரு நாட்டின் இறையாண்மை சார்ந்த விடயமாகும். மேலை நாடுகளின் அடியாளான (agent) இஸ்ரேல் நாடு , திருட்டுத் தனமாக அணு ஆயுதத்தை தயாரித்து வைத்துள்ள நிலையில், அணு ஆயுத பரவல் சட்டத்தை (NPT) ஏற்றுக் கொண்டு கையெழுத்திடவும் மறுத்து வருகிறது.

ஆனால், ”ஈரான் அணு சக்தியை உபயோகிக்க கூடாது” என மேலைநாடுகள் வலியுறுத்துவது அப்பட்டமான இரட்டை வேடமாகும்.

1995ல் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரானை வற்புறுத்தி, – ‘ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் ஈரான் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடைகளை (sanctions) விலக்குவோம்’ எனக் கூறி, – ஈரானை அணு உற்பத்தி ஒப்பந்தத்தில் கையொப்பமிட வைத்தன. இதை (Nuclear Agreement)ஐ Joint Comprehensive Plan Of Action – கூட்டு நடவடிக்கை திட்டம் எனக் கூறப்பட்டது.

ஈரானுக்கு இழைக்கப்பட்ட துரோகம்;

இதனையொட்டி ஈரான் அணு ஆயுத பரவல் தடுப்பு சட்டத்தில் கையொப்பமிட்டது, அணு சுத்திகரிப்பை நிறுத்தியது, தனது அணு உற்பத்தி கூடங்களை சர்வதேச அணுசக்தி கழகத்தின் கண்காணிப்புக்கு (IAEA) உட்படுத்த ஒப்புக் கொண்டது. ‘அணு ஆயுதங்கள் தயாரிப்பது இல்லை’ என்பதையும் ஏற்றுக் கொண்டது.

இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது 2015ல், அமலுக்கு வந்தது 2016ல். ஆனால், உறுதி கூறப்பட்ட பொருளாதார தடை நீக்கத்தை மேலை நாடுகள் அமல்படுத்தவில்லை. 2018ல் டிரம்ப் இந்த ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக வெளியேறி மேலும் பல பொருளாதார தடைகளை ஈரான் மீது விதித்தார். பைடன் அரசு பொறுப்புக்கு வந்த பின்னர் தடைகளை அகற்றுவோம் என கூறினாலும், நான்கு ஆண்டுகளில் 2020-2024வரை அது நடக்கவில்லை .

# அணு ஆயுதங்கள் தயாரிக்க மாட்டோம் என ஈரானின் உறுதி மொழிக்கு பிறகும்,

# சர்வதேச அணுசக்தி கழகம் (IAEA) பல சோதனைகள் நடத்தி ஈரான் அணுஆயுதம் தயாரிக்கவில்லை, அதற்கான ஆதாரம் ஏதுமில்லை என்று கூறிய பின்பும்,

# அமெரிக்க உளவு நிறுவனமான சிஜஏ அமெரிக்க செனட் விசாரணையில், ஈரானிடம் அணு ஆயதங்கள் இல்லை, தயாரிக்கும் முயற்சிகளும் இல்லை என சமீபத்தில் கூறிய பின்பும்,

‘பொய்யன் நேதன்யாகு’ பரப்பும் பொய்களை டிரம்ப்பும், மேலை நாடுகளும் “உண்மை” என உலகினர் காதில் பூ சுத்துகின்றனர் . மேலும், ‘ஈரான் சரணடைய வேண்டும்’, ‘ஈரான் அணு ஆலைகளை மூட வேண்டும் இல்லையெனில், அவற்றின் மீது குண்டுவீசி தகர்ப்போம்’, ‘சரண்டையாவிட்டால் ஈரானின் தலைவரை (அயத்துல்லா காமெனி) கொலை செய்வோம்என கொக்கரிப்பது என்ன நியாயம்?

நாம் கற் காலத்தில் இருக்கிறோமா அல்லது இருபத்தோறாம் நூற்றாண்டில் இருக்கிறோமா? அமெரிக்கா உலகின் முதல் ஜனநாயக நாடு என்ற பெருமை கொள்ள அருகதை உள்ள நாடா?

ஒரு வாரத்திற்குள் ஈரானை முற்றிலும் நிலைகுலையச் செய்து விடலாம் என்ற நப்பாசையில் தாக்குதலை தொடுத்த கிரிமினல்  நேதன்யாகு இன்று இந்த போரை நடத்த அமெரிக்காவை நம்பி இருக்கிறார். அதனால் தான் டிரம்ப் நாளுக்கொரு நிலைப்பாடும், நேரத்திற்கொரு சமிக்ஞையும் கொடுத்த வண்ணமிருக்கிறார்.

மினி காசாகவாக மாறியுள்ள டெல் அவீவ்;

டெல் அவீவிலும் ஏனைய இஸ்ரேல் நகரங்களிலும் மக்கள் பதுங்கு குழிகளில் ஒளிந்திருக்க சோரோக்கோ மருத்துவ வளாகத்தின் அருகே இருந்த இஸ்ரேலின் ராணுவத் தலைமையகம் மீதும், இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாத்தின் தலைமையகத்தையும் இஸ்ரேலின் பங்கு வர்த்தக மையத்தையும் தாக்கியுள்ளது ஈரானின் ஏவுகணைகள். காசாவை நினைவூட்டும் ஒரு மினி காசாகவாக டெல் அவீவ் மாறியுள்ளது என தகவல்கள் கூறுகின்றன. ஏழாவது நாள் தாக்குதல் முடிவில் இஸ்ரேலின் சேதங்களை புகைப்படம் எடுத்துச் செய்திகளை வெளியிட இஸ்ரேல் ஆட்சியாளர்கள் தடை விதித்துள்ளனர். இதை மீறியதாக 12க்கும் அதிகமான பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் விமானத் தளங்கள் தாக்குதலுக்குள்ளானதால் அனைத்து விமானங்களையும் சைப்ரஸ் நாட்டிற்கும், கிறீஸ் நாட்டிலும் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஹைபா துறைமுகமும் ஹைபா நகரமும் தாக்குதலில் பெருமளவு சேதமுற்று, இஸ்ரேலுக்கு தேவையான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் பழுதாகி இருள் சூழ்ந்துள்ளதாக தெரிகிறது.

எஃப்35 விமானங்கள் ஆறு இதுவரை ஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது, ஈரான் வீசும் ஏவுகணைகளை எதிர்கொள்ளும் ஆரோ குறுக்கீட்டு சாதனங்களின் (interceptors) இருப்பு கடுமையாக குறைந்துள்ள நிலையில், இஸ்ரேலின் தாக்கு பிடிக்கும் சக்தி கேள்விக்குள்ளாகி இருக்கிறது.

வீழ்த்த முடியாத ஈரான், வீழப் போகும் இஸ்ரேல்;

ஒப்பீட்டளவில் ஈரானிடம் ஏராளமான ஏவுகணைகள் கைவசம் உள்ளன. இஸ்ரேல் தாக்கி அழித்தாக கூறியனவற்றை கழித்தாலும், ஈரானிடம் ஏவுகணைகள் கையிருப்பும் தயாரிக்கும் சக்தியும் ஏராளமாக இருக்கிறது. இஸ்ரேலின் நிலையோ இதற்கு நேர்மாறாக உள்ளது. போர் முடிவுக்கு வராமல் நீடிக்குமானால், இஸ்ரேலால் தாக்குபிடிக்க முடியாது என்பது வல்லுனர்கள் (மேற்கத்திய வல்லுனர்கள் உட்பட) அனைவரின் கருத்துமாகும். இதனடிப்படையில் தான் நேற்றுவரை ஊசலாடிக் கொண்டிருந்த டிரம்ப் இன்னும் இரு வார காலத்தில் போரில் குதிப்பதை பற்றி முடிவு எடுக்கப்படும் என பட்டும் படாமல் அறிவித்துள்ளார்.

பிரிட்டன் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட , அடுத்த நாட்டு ராணுவ தலைவர்களை, விஞ்ஞானிகளை கொலை செய்ததை கண்டிக்காமல் ஈரானில் ஆட்சி மாற்றத்தை (Regime Change) பற்றிப் பேசுவது அவர்களின் காலனி ஆதிக்க மனப்பான்மையை தோலுரித்து காட்டுகிறது. இத்தகைய “போலிகளின்” கூட்டத்தில் கலந்து கொள்ளத் தான் மோடி தாவித் தாவி கனடா சென்றார் என்பது இந்தியாவின் சரிவை காட்டுகிறது!

அமெரிக்காவில் டிரம்புக்கு வலுக்கும் எதிர்ப்பு;

அமெரிக்காவில் டிரம்பை தேர்ந்தெடுத்த மக்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவை மீண்டும் உன்னதமாக்குவதற்கும் (Make America Great Again-MAGA) இந்த போருக்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழுப்பி உள்ளனர். டிரம்ப்பின் ஆதரவாளர்கள் ஸ்டீவ் பான் போன்ற பிரபலங்கள் இந்த போரை நிராகரிக்கின்றனர், இது அமெரிக்காவின் போரல்ல , இஸ்ரேலின் போர், நமக்கும் அதற்கும் என்ன தொடர்பு? என கேள்வி கேட்கின்றனர்.

அமெரிக்க வாக்காளர்களில் 69% மக்கள் இந்த போரில் அமெரிக்க இறங்க கூடாது என்கின்றனர்.

டொனால்டு டிரம்ப் தனக்கு வாக்களித்த மக்களின் குரலுக்கு செவி மடுப்பாரா? அல்லது தேர்தலுக்காக தனக்கு பணத்தை அள்ளி கொட்டிய ஜியோனிஸ்ட் யூத முதலாளிகளின் சொல்லை கேட்பாரா? என்று தெரியவில்லை!

மேற்காசியாவில் 19 அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளன, இவற்றில் ஏறத்தாழ 40,000 அமெரிக்க வீர்ர்கள் உள்ளனர். ஈரானுடன் மோதினால் இஸ்ரேல் டாங்குகளும் இஸ்ரேல் படையினரும் பல நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஈரானில் கால் பதிக்கப் போவதில்லை. அமெரிக்க படைகள் தான் அதை செய்ய வேண்டும் . அமெரிக்க படைகள் பலியாவது அமெரிக்காவில் டிரம்பை வீட்டுக்கு அனுப்பி விடும் .

ஈரானை ஒருவேளை அமெரிக்கா தாக்கி எதைச் சாதிக்க போகிறது? ஆட்சி மாற்றமா? அணு உற்பத்தி நிறுத்தமா? அணு உற்பத்தி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதானே இருந்தது, பின் எதற்கு இந்த தாக்குதல் எதற்காக இஸ்ரேலை காப்பாற்ற அமெரிக்கா இறங்க வேண்டும்?

ஈரானின் ஆன்மீக தலைவர் அயத்துல்லா காமெனி ஒரு வேளை கொல்லப்பட்டால்.. எதிர்பார்ப்புகள் பொய்க்கலாம்! எதிர்பாராததும் நடக்கலாம்!

ச.அருணாச்சலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time